Beautiful Nose - ஆ.. அச்.. அழகான மூக்குக்குள் ..

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
மனித முகத்தை அழகாக்கி, முழுமைப்படுத்திக்காட்டுவது மூக்கு. முகத்திற்கு நடு நாயகமாக அமைந்து, எல்லோரையும் ஈர்க்கும் உறுப்பாக அது இருப்பதால்தான் பெண்கள் அதன் அழகுக்கு முத்திரை பதிப்பதுபோல் மூக்குத்தி அணிந்துகொள்கிறார்கள். மூக்கைப் பார்த்து அவர் எந்த நாட்டை சேர்ந்தவர், எந்த மாநிலத்தை சேர்ந்தவர், ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியும்.
மேலோட்டமாக பார்த்தால் அழகுக்கு முக்கியத்துவம் கொண்டதாக தோன்றும் மூக்கு, உடற்கூறுபடி பார்த்தால் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. மூக்கின் வடிவம் பெரும்பாலும் தாத்தா, அப்பா, அம்மாவைப் போன்று பாரம்பரிய அடையாளமாக காணப் படும். கருவிலே வளரத் தொடங்கிவிடும் மூக்கு, பிறந்த பின்பும் கிட்டத்தட்ட 18 வயது வரை வளரும்தன்மை கொண்டது.
மனிதன் உயிர் வாழ அடிப்படை யான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே உருவாகிறது. நடுச்சுவர் எலும்பு மூக்கை இரு பாகமாக பிரிக்கிறது. மேல் பாகத் தில் `நேசல் போன்' என்ற எலும்பு உள்ளது. உள்பக்க குழாய் போன்ற அமைப்பின் இரு பக்க மும் தசை இடம்பெற்றிருக்கிறது. இந்த தசை `ஏ.சி' மெஷின்போல் செயல்படும். அதாவது சுவாசிக் கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலையை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும். இந்த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத் தில் பெரிதாகும். ஜலதோஷம் ஏற்படும்போது தொற்றுக்கிருமிக ளின் தாக்குதலால் தசை வீங்கி விடும். காற்று செல்லும் வழியை அடைத்து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக்கடைப்பு என்கிறோம்.
மூக்கின் இருபுறத்தையும், கண்க ளின் மேல் பகுதியையும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம். இது எலும்பால் ஆன `ஏர்பில் கேவிட்டி' என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழு வழுப்பாக்கும் திரவம் சுரக்கும். கிருமித் தொற்று எதுவும் இல்லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும். ஆ...அச்... என்ற தும்மலோடு ஜலதோஷம் வந்தால், அந்த திரவத்தின் அடர்த்தி அதிகரிக்கும். வெளியே வராமல் சேர்ந்து, சைனஸ் பகுதியை அடைத்து தொந்தரவு தரும். இதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் கொடுப்போம். இந்த தொந்தரவு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் சரியாகிவிட வேண்டும். சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அந்த காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை தரவேண்டும்.
ஜலதோஷத்திற்கு முறையான சிகிச்சை பெறாமல் கிருமித் தொற்று அதிகரித்து, அது நாள்பட `இன்பெக்டிவ் சைனசைட்டீஸ்' ஆக மாறியிருக்கலாம். உணவாலோ, சுற்றுப்புற சூழலாலோ, வேறு காரணங்களாலோ அலர்ஜி தொடர்புடைய `ரைனோ சைனசைட்டீஸ்' தோன்றும். அடிக்கடி தும்மல் ஏற்படுதல், தலை பாரம், மூக்கு ஒழுகுதல், காதில் அரிப்பு, கண்ணில் நீர் வழிதல் போன்றவை இதன் அறிகுறியாகும். இதற்கு சரியான சிகிச்சையை பெறாவிட்டால் மூக்கின் உள்ளே தசை வளர்ந்து, மூக்கை அடைக்கும். சிலருக்கு மூக்கின் பின்பகுதியில் வளரும் தசை, வாயின் பின்பகுதி வரை வளர்ந்து அதிக தொந்தரவு தரும்.
இந்த நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிய பொதுவாக எக்ஸ் ரே எடுக்கப்படுவதுண்டு. சி.டி.ஸ்கேன் எடுத்தால் மூக்கின் மேல் எலும்பு, நடுச்சுவர், தசை வளர்ச்சி, சைனஸ் பாதிப்பு போன்ற அனைத்தையும் கண்டறிந்து துல்லியமான சிகிச்சை பெறலாம். சைனஸ் பகுதியில் சளி அடைப்பு இருந்தால் `என்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி' தேவைப்படும். லேசர் சிகிச்சையும் கொடுக்கலாம். அலர்ஜியால் உருவான பாதிப்பு என்றால், மருந்து- மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குறட்டை! இதன் கொர்.. கொர்.. ஓசை இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறா விட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும். தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது சிறுவர் சிறுமியர்கள் மைதானங்களுக்கு சென்று ஓடி ஆடி விளையாடுவ தில்லை. உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறை குண்டாகிவருகிறது. எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்' தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.
ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்துவிடும். இது இயல்பான, இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.
குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.
இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவை களால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பாடுகளும் பாதிக்கும். ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும்.
குறட்டை விடுபவர்களுக்கு அதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக `ஸ்லீப் ஸ்டெடி' செய்யவேண்டும். வீட்டிலே அவர்களை தூங்க வைத்து `பாலி சோம்னா கிராபி' என்ற கருவி மூலம் பாதிப்பை அளவிடலாம். ஆஸ்பத்திரியில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து, `ஸ்லீப் எம்.ஆர்.ஐ.' செய்து குறட்டையின் பாதிப்பை அறிந்து அதற்கு தகுந்தபடியும் நவீன சிகிச்சைகள் கொடுக்கலாம்.
சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி' என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது.
குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும். பஞ்சுவைத்த தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும்.
நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். அதனால் மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றுவிடவேண்டும். நோய் வரும் முன்பு காக்கும் விழிப்புணர்வும் மனித சமூகத்திடம் வளர வேண்டும்.
கட்டுரை :
டாக்டர் ரவி.கே.விஸ்வநாதன்,
Ms, fics, DLo, Do.
(காது, மூக்கு, தொண்டை நிபுணர்)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.