Before and After Brain Death-மூளைச்சாவுக்கு முன்னும் பின்னும்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மூளைச்சாவுக்கு முன்னும் பின்னும்
என்ன நடக்கிறது?
பொதுவாக இறப்பு என்பதை நாம் எதை வைத்து கணிக்கிறோம்? இதயத்துடிப்பு நின்று விட்டால் இறந்ததாகப் பொருள் கொள்வது நம் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பார்வை. இதயத் துடிப்பு நின்று விடுவதற்கு முன்பே மூளை முற்றிலுமாக செயலிழந்து விடுவதற்கு பெயர் மூளைச்சாவு. அன்றாட செய்தித்தாள்களில் ‘சாலை விபத்தில் வாலிபருக்கு மூளைச்சாவு’ என்பது போன்ற செய்திகளை அதிகம் வாசித்திருப்போம். அப்படியாக, தலையில் ஏற்படும் பலத்த அடி காரணமாக மூளைச்சாவு ஏற்படுகிறது.உடலின் அத்தனை அசைவுகளுக்குமான கட்டளைகள் மூளையிலிருந்தே பிறக்கின்றன. அப்படி இருக்கையில் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், அவரது மற்ற உறுப்புகளை தானமாக பெற்று தேவைப்படுபவர்களுக்கு பொருத்துவது தவிர்த்து, வேறு எதுவும் செய்ய இயலாது. 2008ம் ஆண்டு, சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஹிதேந்திரன் என்கிற பள்ளி மாணவனின் இதயம் அபிராமி என்கிற சிறுமிக்கு பொருத்தப்பட்டதை இங்கே நினைவு கூறலாம். மூளைச்சாவு குறித்து மேலும் விரிவாக விளக்குகிறார் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எல்.முருகன்...

“மூளை என்பது நரம்பு மண்டலத்தின் தலைமையகம். சுவாசம், உணர்ச்சிகள், செயல்பாடுகள் என எல்லாமே மூளையின் கட்டுப்பாட்டில்தான் நடந்து வருகின்றன. மூளையில் இருக்கும் லட்சக்கணக்கான நுண்ணிழைகளில் ஏற்படும் சிறு பாதிப்புகள் கூட மனநலம் தொடர்பான பல பிரச்னைகளுக்கு காரணமாகலாம்.

தலையில் ஏற்படுகிற பலத்த அடியே மூளைச்சாவுக்கு மிக முக்கியக் காரணம். அதனால்தான் விபத்துக்கு உள்ளானவர்களுக்கே அதிக அளவில் மூளைச்சாவு ஏற்படுகிறது. அதிக மாத்திரைகள் உட்கொள்ளுதல், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, விஷம் குடித்தல் ஆகியவற்றின் காரணமாகவும் மூளைச்சாவு ஏற்படலாம். அவை மிகவும் அரிதானவை.

மூளைச்சாவை உறுதிப்படுத்துவதற்காக சில வழிமுறைகளை மேற்கொள்கிறோம். நோயாளியின் கண்ணில் டார்ச் அடிக்கும் போது கருவிழிக்குள் இருக்கும் கண்மணி (Pupil) சுருங்குகிறதா என சோதிப்போம். சுருங்கினால் மூளைச் செயல்பாட்டில் இருப்பதாகப் பொருள். சுருங்காத நிலையில், தலையை இரு புறமும் திருப்பிப் பார்க்கும் Doll Eye Movement மேற்கொள்வோம். தலையை எந்தப் புறம் திருப்பினாலும் கண் ஒரே நிலையில் இருந்தால் மூளை செயலிழந்து விட்டதாக பொருள்.

அடுத்ததாக நோயாளிக்கு வலி கொடுத்து உணர்ச்சிகள் இருக்கிறதா எனச் சோதிப்போம். நோயாளியின் காதில் குளிர்ந்த நீர், சூடான நீரை ஊற்றும்போது எந்த வித அசைவுகளும் இல்லாதிருந்தால், அடுத்த கட்டமாக Apnea Testஐ செய்வோம். மூளை செயலிழந்து விட்டாலும், சில நிமிடங்கள் வரையிலும் இதயம் செயல்பாட்டில் இருக்கும். மூளைச்சாவு ஏற்பட்டவர்களால் சுவாசிக்க முடியாது. ஆக்சிஜன் கிடைக்கப் பெறாததால் சிறிது நேரத்தில் இதயமும் தன் செயல்பாட்டை இழந்து விடும்.

இப்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டாலும் வென்டிலேட்டரின் மூலம் செயற்கை சுவாசத்தால் இதயத்துக்கு ஆக்சிஜன் அளித்து செயல்பட வைக்க முடியும். வென்டிலேட்டர் வழியாக சென்று கொண்டிருக்கும் ஆக்சிஜன் இணைப்பை குறிப்பிட்ட கால அளவுக்கு துண்டித்து விடுவோம். அப்படியும் நோயாளி சுவாசிக்கவில்லையென்றால் அடுத்த 6லிருந்து 12 மணி நேரத்துக்குள் இன்னுமொரு முறை இதே சோதனையை மேற்கொள்வோம். அப்போதும் சுவாசிக்கவில்லை என்றால்தான் மூளைச்சாவு உறுதியாகும்.

ஒரு மருத்துவர் மட்டும் சோதிக்கும் நிலையில் ஏதேனும் தவறு நேர வாய்ப்பிருப்பதால் இரண்டாம் கட்ட பரிசோதனையை வேறொரு மருத்துவர் மேற்கொள்வார். இருவர் சோதித்தும் சுவாசம் திரும்பாத நிலையில்தான் மூளைச்சாவு உறுதியாகும்.மூளைச்சாவு உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், கிட்டத்தட்ட அது இறப்புதான். இனி அவரால் எந்தக் காலத்திலும் எழுந்து வர முடியாது. மூளை இறந்தாலும் இதயம், கல்லீரல், கணையம், கண் மற்றும் பிற பாகங்கள் உயிர்ப்போடுதான் இருக்கும்.

அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்தால் அவ்வுறுப்புகள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். மூளைச்சாவு ஏற்பட்டு சில மணி நேரங்களுக்குள் இவையெல்லாம் நடந்தால் மட்டுமேதான் மற்ற உறுப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். உடல் முழுதும் நோய்த்தொற்று உள்ளவர்களின் உறுப்புகளை பயன்படுத்த முடியாது” என்கிறார் முருகன்.மூளைச்சாவு என்பது நோய் அல்ல... விபத்து.

சாலைப் பயணம் தொடங்கி நமது அன்றாட செயல்பாடுகள் அனைத்திலும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுதல் மட்டுமே மூளைச்சாவு ஏற்படாமல் இருப்பதற்கான வழி!மூளைச்சாவு உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், கிட்டத்தட்ட அது இறப்பு தான். இனி அவரால் எந்தக் காலத்திலும் எழுந்து வர முடியாது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.