Best fertility foods to help you conceive - குழந்தை பேறுக்கான நல்லுணவு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தை பேறுக்கான நல்லுணவுவீட்ல விசேஷமா? என்றால் தீபாவளி, பொங்கல் என்று அர்த்தமில்லை. மனைவிக்கு மசக்கையா என்று தான் அர்த்தம். அந்த அளவிற்கு, நம் கலாச்சாரத்தில், மகப்பேறுக்கு ஒரு தனி பெருமைக்குரிய இடம் உண்டு. திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே ”இன்னும் தள்ளிப்போகலையா?”, என்ற கேள்வி தாயிடம் இருந்து தவிப்பாய் வருவது இன்டெர்நெட் காலத்திலும் இடம் பெறுவது உண்டு.

குழந்தைப்பேற்றிற்கான வழி செய்யும் உணவு வகைகளும் உண்டா என்ன?

அழகான ஆரோக்கியமான குழந்தைப்பேற்றிற்கு அடுப்பங்கரையும் உதவும் என்றால், நமுட்டுச் சிரிப்புடன், “அட,அங்கேயுமா?” என அவசரமாய்க் கற்பனை செய்ய வேண்டாம். அஞ்சறைப் பெட்டியின் அறிவியல் தம்பதியரின் உடல் நலம் காத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றிட பெரிதும் உதவிடும். எப்படி?

கருத்தரிப்பு ஒரு அற்புதமான நிகழ்வாய்த் தம்பதியரிடம் ஏற்படவேண்டும். முந்தைய தினம் முற்றத்துச் செம்பருத்தி மொட்டு எப்போது மலர்ந்தது எனத் தெரியாமல் அதிகாலையில் ஆச்சரியமாய்க் கண்கள் விரித்து மகிழ்வது போல, கருத்தொத்து, அன்பில் திளைக்கும் அவர்தம் தாம்பத்ய உறவில், கருத்தரிப்பும் நிகழ வேண்டும். அது தான் இயல்பு. இன்பமும் கூட.”காலை பில்” காலாவதியானதாலோ, கணக்குப் பார்த்து கணக்கு பார்த்து, இன்றையிலிருந்து பத்து நாளைக்குச் சேர்ந்தால் சாத்தியப்படுமாமே என ஐ.எஸ்.ஒ.9001 சட்டதிட்டங்களில் குழந்தைக்கு முயல்வதிலோ சிறப்பு இல்லை. மலரினும் மெல்லியது காமம் என்பதை புரிந்து மகிழ்வதில் நிகழும் கருத்தரிப்பிற்கு நிச்சயம் கூடுதல் பொலிவும் பயனும் உண்டு.

திருமணமான புதிதில் தம்பதியர் தத்தம் உறவினரின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்லும் வழக்கம் நகர்ப்புறங்களில் தொலைந்து விட்டது. அந்த விருந்திலேயே துவங்கி விடும் மகப்பேறிற்கான சிறப்பு உணவுத் தேர்வு. தலைவாழையில் துவங்கி கும்பகோணம் வெற்றிலையில் முடியும் அந்த சிறப்புணவின் ஒட்டுமொத்த குறிக்கோள், புதுபெண்ணை மசக்கைக்குத் தள்ளுவது தான்.

கருத்தரிக்கும் அந்த கணத்திலேயே இரத்தத்தில் ஃபோலிக் ஆசிட் எனும் உயிர்சத்து சரியான அளவில் இருப்பது குழந்தைக்கு முதுகுத் தண்டுவட பிரச்னையில்லாமல் இருக்க உதவும் என்கிறது இன்றைய விஞ்ஞானம். தாமரை தண்டில் நிறைந்து உள்ளது இந்த ஃபோலிக் அமிலச் சத்து. எள், வெண்டைக்காய், கீரைகள், மாமிச உணவுகளும் ஃபோலிக் சத்து நிறைந்தது தான். இது கருத்தரிக்க விழையும் பெண்மணிகள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது.

பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக இன்று கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலி சிஸ்டிக் ஓவரி”, என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.

இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும். சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது.
மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும். சிறிய வெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிட உதவும்.

பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு ’அகர் அகர்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சீராக்கிட உதவிடும். இரத்த்தில் தைராய்டின் அளவு இருப்பதை மட்டும் வைத்து எனக்கு ’ஹைப்போ’ வாக்கும் என்பது தவறு. உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசித்து மருத்துவம் செய்வித்துக் கொள்வது அவசியம். அதிகம் கடுகு, முட்டைகோஸ் எடுப்பதும் தைராய்டு அளவைக் குறைக்கக் கூடும் என்கிறது இன்றைய ஆய்வுகள்.

கீரைகள்- குழந்தைப்பேறினை உருவாக்க உதவிடும் ஒரு மிகச் சிறந்த உணவு. தினசரி ஏதேனும் ஒரு கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதில் சோம்பல் வேண்டவே வேண்டாம். குறிப்பாய் பசலை,முருங்கை, அரைக் கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்று சித்த மருத்துவ பாட்ல் கூருகிறது. மகவிற்கு ஏங்கும் மக்கள் வீட்டில் இக்கீரைகளை பாசிப்பயறு, பசு நெய் சேர்த்து சமைத்து உண்ணத் தவறக் கூடாது.

ஆண்களின் விந்து அணுக்கள் குறைவு, விந்து அணுக்களின் இயக்கம் குறைவாக இருத்தல், அமைப்பு சரியாக இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதித்தால், உணவில் அதிக முளைகட்டிய பயறு வகைகளும், இலவங்கப்பட்டை, சாதிக்காய், போன்ற நறுமணப் பொருட்களும் நிறைய சேர்க்க வேண்டும். தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப்பருப்பு, இவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினைகளைக் குறைக்க கண்டிப்பாக உதவிடும். போகம் விளைவிக்கும் கீரைகள் என சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவேளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றை கண்டிப்பாய்ச் சமைத்து சாப்பிட வேண்டும்.

புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவிற்கு விந்து அணுக்களை அதிகரிக்கவும் இதன் இயக்கத்தை கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கிறது இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்.
கூடியவரை வீட்டில் தயாரித்த, எண்ணெய் சத்து அதிகமில்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முதலிடம் கொடுங்கள். ரெடிமேட் உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது. குழந்தைப்பேறு நெடு நாளாகத் தள்ளிப் போகும் மகளிர், கொத்துமல்லி கீரை 2ஸ்பூன் அளவில்,1/4 ஸ்பூன் அளவில் வெந்தயம் சேர்த்து இளங்காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் விஷயமல்ல கருத்தரிப்பு என்பது. யாகம் வளர்த்து ராமன் பிறக்கும் வித்தையும் இப்போதில்லை. சரியான உணவு, ஏதும் குறையிருப்பின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை எல்லாவற்றிற்கும் மேலாக சந்தோஷமான மனநிலை மற்றும் குடும்பச்சூழல், தேவைக்கேற்ற தனிமையும், நாளை நானும் நிச்சயம் தாய்மையடைவேன் எனும் நல்ல நம்பிக்கை இவையும் தேவை. இவை இருந்தாலே இயல்பாய் அது நிகழும். மகிழ்ச்சியும் மலரும்!
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.