Beware of color pencils, paints for kids!

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,737
Location
The World
#1
ஒளிந்திருக்கும் எமன் உஷார்... உஷார்!

ஸ்கூல் புராஜெக்ட், விளையாட்டு பொம்மைகள், வீட்டுச் சுவர்...
''அம்மா... எங்க ஸ்கூல்ல புராஜெக்ட் கொடுத்திருக்காங்க. அழகா ஒரு வீடு செஞ்சுட்டு வரணுமாம்...''
''அதுக்கென்ன செல்லம், செஞ்சுட்டா போச்சு. ஏங்க... நம்ம புள்ளைக்கு புராஜெக்ட் செய்யணுமாம். பெயின்ட், பிரஷ் இன்னும் என்னென்ன வேணுமோ, எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க.''
- குட்டிக் குழந்தைகள் இருக்கும் பெரும்பாலான இல்லங்களில், இன்றைக்கு இந்த உரையாடல் சர்வசாதாரணம். அதேசமயம், இப்படி பெயின்ட்டை பயன்படுத்தி செய்யப்படும் மாதிரி உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வைத்து பள்ளிக்கூடங்களில் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, உடலில் பல்வேறு பிரச்னைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்!
ஐ.நா சபை அண்மையில் வெளியிட்ட அந்த அறிக்கையைப் படித்தால்... இதை நீங்களும் நிச்சயமாக உணர முடியும்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் உயிர்களுக்கு மேல்!
''பெயின்ட் பூசப்பட்ட பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, பெயின்ட்டில் கலக்கப்படும் காரீயத்தின் நச்சுத்தன்மை, குழந்தைகளின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. காரீய விஷத் தன்மை காரணமாக உலகமெங்கும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.
இது தொடர்பாக அர்ஜென்டினா, சிலி, எத்தியோப்பியா, கானா, உருகுவே உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் தயாரிக்கப்படும் பெயின்ட்டை எங்கள் குழு ஆராய்ச்சி செய்தபோது, உரிய அளவுக்கும் அதிகமாக காரீயம் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. காரீயம் சேர்க்கப்பட்ட பெயின்ட் காரணமாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 99 சதவிகித குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். காரீயத்துக்கு மாற்றுப் பொருட்கள் பல இருந்தாலும், பெயின்ட் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்பதற்காக காரீயத்தை அதிக அளவில் சேர்க்கிறார்கள். குறிப்பாக... மஞ்சள், சிவப்பு நிற பெயின்ட்களில் காரீயம் அதிகளவில் சேர்க்கப்படுகிறது.''
- இதுதான் ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் சாரம். தற்போது, உலகளவில் 30 நாடுகளில் பெயின்ட் தயாரிப்பில் காரீயம் சேர்ப்பதை நிறுத்திவிட்டனர். ஆனால், காரீயம் கலக்கும் நாடுகளின் எண்ணிக்கைதான் அதிகம். வழக்கம்போல, இப்படிப்பட்ட சுற்றுச்சூழல், சுகாதாரக் கொடுமைகளை அனுமதித்து, வேடிக்கை பார்க்கும் இந்தியாவும் இந்த நாடுகளில் ஒன்று என்பது நம் சாபம்!
நாசமாகும் நரம்பு மண்டலம்!
''இன்றைக்கு 100-க்கு 99 சதவிகித பள்ளிகூடங்களில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படற புராஜெக்ட் வேலைகள் எல்லாமே முக்கியமா பெயின்ட் பயன்படுத்தற வகையிலதான் இருக்கு. ஆனா, இந்த காரீய கொடுமை பத்தி ஆசிரியர்களுக்கோ... பெற்றோர்களுக்கோ கொஞ்சம்கூட விழிப்பு உணர்வு இல்லைங்கறது கொடுமை'' என்று வேதனையை வெளிப்படுத்தும், சென்னை யைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரும் ஓய்வுபெற்ற மருத்துவப் பேராசிரியருமான செல்வராஜ், தொடர்ந்தார்...
''புராஜெக்ட்களுக்காக பெயின்ட்டை பயன்படுத்துற குழந்தைகளுக்கு நரம்பு மண்டலம் கடுமையா பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கு. 5 வயசுக்கு கீழ இருக்குற குழந்தைகளுக்கு சீக்கிரமே நரம்பு மண்டல பாதிப்பு வந்துடும். இதன் காரணமா வலிப்பு, ரத்தசோகை, வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் மாதிரியான பிரச்னைகளும் வரும். 'இதுக்கெல்லாம் முக்கிய காரணம், காரீயம்தான்’னு நிறைய ஆராய்ச்சியில நிரூபிச்சுருக்காங்க. பெயின்ட்டை முகரும்போதோ, உடல் பகுதியில படும்போதோ பாதிப்பை ஏற்படுத்தும். ஆனா... கொஞ்சம்கூட யோசிக்காம, பெயின்ட்டை பயன்படுத்துறோம்... பயன்படுத்துறதை ஊக்குவிக்கிறோம்'' என்ற டாக்டர், தன் அனுபவத் திலிருந்து ஒரு நிகழ்வைச் சொன்னார்.
''இருபது வருஷத்துக்கு முன்ன, ஐந்து வயதுக் குழந்தையை நிமோனியா, கடுமையான வயிற்றுவலினு மருத்துவமனையில் சேர்த்தாங்க. தொடர்ந்து சிகிச்சை கொடுத் தும் குணமாகல. பிறகு, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தப்ப... எலும்பு, நரம்பு எல்லாம் வெள்ளை வெளேர்னு இருந்துச்சு. பிறகு, ரத்தப் பரிசோதனை செய்தப்பதான் குழந்தையோட உடல்ல காரீயம் கலந்திருக்கிறது உறுதியாச்சு. பிறகு, தீவிர சிகிச்சை கொடுத்து, உடல்ல இருந்த காரீயத்தை வெளியேத்தி குழந்தையைக் காப்பாத்தினோம்.
சாதாரணமா, பெரியவர்களுக்கு 45 மைக்ரோ கிராம், குழந்தைகளுக்கு 5 மைக்ரோ கிராம் அளவுக்கு மேல் ரத்தத்தில் காரீயம் கலந்திருந்தா பிரச்னைதான். குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுவலி, மயக்கம், மந்தநிலை, வாந்தி மாதிரியான பிரச்னைகள் வந்தா, குழந்தையின் ஹிஸ்ட்ரியை வெச்சு (குழந்தை யின் வீடு இருக்கும் இடம், அதன் சுற்றுப்புறச் சூழல், சாப்பிடும் உணவு, பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை) ரத்தத்தில் காரீயம் கலந்திருக்க வாய்ப்பிருக்கானு கண்டுபிடிக் கலாம். காரீயம் கலந்திருந்தா, உடனடியா சிகிச்சை கொடுத்து, அந்த காரீயத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேத்தி, பெரிய அளவிலான பாதிப்புகளைத் தவிர்க்கலாம்'' என்று சொன்னார் டாக்டர்.
ஊனமாக்கும் காரீயம்!
காரீயம், கர்ப்பிணிகள் மீது நடத்தும் தாக்குதல் பற்றி பேசிய, சென்னையைச் சேர்ந்த 'கருப்பை சிசு நிபுணர்’ இந்திராணி சுரேஷ், ''பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்குத் தரப்படும் புராஜெக்ட்களை பெரும்பாலான வீடுகளில் அம்மாக்கள்தான் பக்கத்திலிருந்து முழுமையாக செய்து கொடுக்கிறார்கள். குழந்தையையும் அருகில் வைத்துக் கொண்டுதான் செய்வார்கள். இந்த அம்மாக்களில் அதிகமானோர்... இரண்டாவது/மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்தவர்களாக இருப்பதற்கும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில், புராஜெக்ட் தயாரிப்பின்போது பயன்படும் பெயின்ட்டில் உள்ள காரீயமானது முகர்தல், உடல் பகுதியில் படுதல் போன்ற வழிகளால் குழந்தையையும், கர்ப்பிணியையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் எளிதில் பாதிக்கவே செய்யும்.
கர்ப்பக் காலத்தில் எதையாவது தின்றுகொண்டே இருக்க ஆசை வரும். குறிப்பாக, சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் சுண்ணாம்பை சிலர் நக்குவார்கள். சில பெண்கள் பெயின்ட் அடிக்கும்போது, அருகிலிருந்து அதன் வாசனையை முகர்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இதன் மூலமாகவும் காரீயம், உடலுக்குள் சென்று, கருவில் உள்ள சிசுவையும் பாதிக்கும். கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சோர்வு வருவதோடு, சில உறுப்புகள் வளராமலோ அல்லது குறைபாட்டுடனோ குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. காரீயம் சார்ந்த பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், கர்ப்பக் காலங்களில் மிக கவனமாக இருக்க வேண் டும்'' என்று எச்சரிக்கை தந்தார்.
இந்தக் கொடுமை பற்றி பேசிய சமூக ஆர்வலரும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான பூமா, ''காரீயம் பத்தின தகவலை கேட்டதிலிருந்தே அதிர்ச்சியா இருக்கு. இதைப் பத்தின விழிப்பு உணர்வை, எல்லாருக்கும் கொடுக்கறதோட, இது மாதிரியான பாதிப்பு உண்டாக்கக்கூடிய பொருட்களை அரசாங்கம் உடனே தடை செய்ய ணும். அதுதான் என்னை மாதிரியான பெற்றோர்களோட கோரிக்கை'' என்றார் கோபத்துடன்.
காரியத்தில் மட்டுமல்ல... இனி, 'காரீய'த்திலும் கவனமாயிருங்க!
காரீய பாதிப்பிலிருந்து தப்பிக்க..!
* விலை குறைவாக இருக்கிறதே என்று வீட்டுச் சுவருக்கு தரமற்ற பெயின்ட் அடிக்க வேண்டாம்.
* பென்சில், க்ரையான், வாட்டர் கலர் போன்றவற்றில் தரமற்ற பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கித் தரக்கூடாது.
* வீட்டில் பெயின்ட் அடிக்கும்போது, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெயின்ட் அடித்து முடித்த சில நாட்களுக்குப் பிறகே... அந்த இடங்களில் அவர்களை அனுமதிக்க வேண்டும்.
* பெயின்ட் அடித்த பொம்மைகள், பேட்டரி செல்கள், பென்சில், கலாய் பூசிய பாத்திரங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மண், சால்ட்ரிங் பொருட்கள் போன்ற எது கிடைத்தாலும் குழந்தைகள் வாயில் வைக்கும். இவற்றில் கலந்திருக்கும் காரீயம், நேரடியாக உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து வயிற்று வலி தொடங்கி, உயிர் பலி வரை கொண்டு போய் நிறுத்திவிடும்.
'எங்களுக்குத் தெரியாதே!’
'சென்னை, தி சைல்டு ஸ்மித் அகாடமி பள்ளி’யின் முதல்வர் இந்திராதேவியிடம் பேசியபோது, ''குழந்தைகளோட அறிவு வளர்ச்சிக்குத்தான் புராஜெக்ட் செய்யச் சொல்றோம். அவங்களும் பெயின்ட் எல்லாம் பயன்படுத்தி செய்றாங்க. ஆனா, அந்த பெயின்ட்ல காரீயம் கலந்திருக்கு... அது குழந்தைகளோட உயிருக்கு பாதிப்பை விளைவிக்குதுங்கறதெல்லாம்... நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது'' என்று அதிர்ச்சி காட்டியவர்,
''இப்படிப்பட்ட ஆபத்தான பொருட்களை பெயின்ட்டில் கலந்து தயாரிக்கறதுக்கு எப்படித்தான் மனசு வருதோ தெரியல. கட்டாயம் இதுபோன்ற பொருட்களை அரசாங்கம் தடை செய்யணும். இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்கள் இன்னும் என்னென்ன இருக்கு என்பது பத்தின விழிப்பு உணர்வையும் அரசாங்கம் ஊட்டணும். அப்போதான் இதுமாதிரியான ஆபத்துகள்ல இருந்து நாம தப்பிக்க முடியும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் இனியாவது விழிப்பா இருந்து, தரமான பொருட்களா வாங்கி பயன்படுத்தறது பத்தி குழந்தைகளுக்கு சொல்லணும்'' என்றதோடு, ''எங்கள் பள்ளிக்கூடத்துல இதைப் பத்தின விழிப்பு உணர்வை நிச்சயமா ஏற்படுத்துவேன்'' என்றார்.
மஞ்சளிலும் காரீயம்!
பிரபல கல்லூரி ஒன்றில் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருக்கும் வேதியியல் நிபுணர் ஒருவர், காரீயம் பற்றி சொன்ன தகவல், நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பேசிய அவர், ''பெயின்ட்டின் பளபளப்பு, நீண்ட ஆயுள் போன்ற வற்றுக்காகத்தான் காரீயம் கலக்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே, அதற்கு ஒரு வரையறை வகுக்கப்பட்டது. ஆனால், பல நிறுவனங்கள் அதையெல்லாம் பின்பற்றுவதில்லை.
நாம் உணவில் சேர்க்கும் மஞ்சளில்கூட காரீயம் கலக்கப்படுகிறது. மஞ்சள் தரமான தோற்றத்தில் காட்சியளிப்பதற்காக, அறுவடை செய்யப்பட்ட மஞ்சளின் மீது காரீயத்துகள்களைத் தெளிக்கிறார்கள். தோட்டத்தில் உள்ள மஞ்சள், கடைகளில் விற்கப்படும் மஞ்சள்தூள் ஆகியவற்றை ஆய்வு செய்து இதைக் கண்டுபிடித்தோம். உணவுக்கான மஞ்சளில் 'கர்கமின்’ என்ற மூலப்பொருள் இருக்கும். இது உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்புக் காரணியாகவும், மூளைச் சிதைவு போன்றவை ஏற்படாமல் இருக்கவும் பயன்படுகிறது. ஆனால், காரீயம் தெளிக்கப்பட்ட மஞ்சளில் இந்த கர்கமின் குறைவான அளவில்தான் இருக்கும். 'கர்கமின்' இல்லாத மஞ்சள்... சாப்பிட ஏற்றதல்ல என்பதோடு, அதைப் பயன்படுத்துவதால் வேறுவிதமான உபாதைகளுக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது'' என்று சொன்னார்.
எது தரமான பெயின்ட்?
''தரமான பெயின்ட் என்பதை எப்படிக் கண்டறிவது?’' என்று சென்னையைச் சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் சரவணனிடம் கேட்டபோது, ''பெயின்ட்டை பொறுத்தவரை, அதில் கலந்துள்ள பொருட்கள் இந்த இந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித விதிமுறைகளும் நம்நாட்டில் சரிவர வகுக்கப்படவில்லை. தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பெயின்ட் தயாரிப்பில் உள்ள சில நிறுவனங்கள், தாங்களாகவே முறைப்படி அதைத் தயாரிக்கின்றன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் உயிரினங்களுக்கு பாதிப்புகளை விளைவிக்கக் கூடிய பொருட்களை அளவுக்கு அதிகமாக பெயின்ட்டில் கலப்பதுதான் நடைமுறையாக இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் பெயின்ட் தயாரிப்புக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு கட்டாயமாக கடைபிடிக்கப்படுகின்றன. இங்கிலாந்து போன்ற நாடுகளில் அளவுக்கு அதிகமாக காரீயம் கலக்கப்படும் பெயின்ட்டுக்கு தடையே விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நம் நாட்டிலும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டால்தான், அதனால் வருகிற பாதிப்புகளிலிருந்து நாம் தப்பிக்க முடியும்'’ என்று சொன்னார்!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#2
Good info friend.

:thumbsup​
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Thanks Rudhraa for cautioning the parents. Will be very useful.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.