Beware of WORKAHOLISM -வேலையே போதையாகும் சிந்தனை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வேலையே போதையாகும் சிந்தனை

‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். தெய்வமாக நினைக்கிற அந்த விஷயமே ஒருவருக்கு எமனாகுமா?

ஆகிறது. ஒரு தொழிலை நடத்துகிறவர் தன் தொழிலின் மீது காட்டும் ஈடுபாட்டைவிட, அக்கறையைவிட, அங்கே வேலை பார்க்கிறவர்களின் ஈடுபாடு சமீப காலங்களில் அதிகரித்து வருவதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.‘ஆல்கஹாலிக்’ என்பது மது அடிமைத்தனம். ‘ஒர்க்கஹாலிக்’ என்றொரு வார்த்தையும் உண்டு. அதாவது, செய்கிற வேலையே போதையாகி, அதற்கு அடிமையாகிக் கிடப்பது. சும்மா இருப்பது எப்படி அழிவுப்பூர்வமான செயலோ, வேலையே கதியாகக் கிடப்பதென்பது அதைவிட அபாயமான செயல்!
சாந்தினியும் சந்திரனும் கம்பீரமான தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் பிளஸ் டூ படிக்கிறான். சாந்தினி ஒரு பிரபல கல்லூரியில் பேராசிரியர். சந்திரன் ஒரு பெரிய நிறுவனத்தின் ஹெச்.ஆர். துறைத் தலைவர். உளவியல் படித்த இருவருமே வேலை நேரம் போக மீதி நேரத்தில் உளவியல் ஆலோசனை செய்கிறவர்கள்.

25 வருட திருமண வாழ்க்கையில் இவர்களுக்குள் ஒரு சின்ன மனஸ்தாபம் கூட வந்ததில்லை. காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் முடித்தவர்களுக்கு, 35 ஆண்டுகளாகியும் அந்தக் காதல் குறையாமல் இருந்ததை அவர்கள் அறிந்தவர்கள் பார்த்து மெச்சியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அன்யோன்ய தம்பதியரின் வாழ்க்கையில் திடீர் புயல்.

கணவனும் மனைவியுமாக என்னை சந்திக்க வந்தார்கள்... ‘‘வாழ்க்கையில எல்லாமே முடிஞ்சு போச்சு மேடம்... சாகறதைத் தவிர வேற வழியில்லை. மூணு மாசமா வீட்ல பயங்கர பிரச்னை. எங்க ரெண்டு பேருக்கும் எப்பப் பார்த்தாலும் சண்டை. நிம்மதியே இல்லை. எங்க சண்டையைப் பார்த்து எங்க பையன் ரொம்ப அப்செட் ஆகறான்.

‘ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க’னு கத்தறான். எத்தனையோ பேரோட பிரச்னைகளுக்கு கவுன்சலிங் பண்ணி சரியாக்கி இருக்கோம். இப்ப எங்களுக்கே பிரச்னை வரும்னு நினைக்கலை. நான் ஏமாந்துட்டேன். என் ஹஸ்பெண்ட் எனக்கு துரோகம் பண்ணிட்டார்...’’ என அழுதபடியே அவரது பிரச்னைக்கான காரணத்தையும் விளக்க ஆரம்பித்தார்.

‘‘வினோதினி என்னோட ஸ்டூடன்ட். அவ இளங்கோனு ஒரு பையனை லவ் பண்ணினா. அவன் ரெண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. ஆனா, நல்ல குணம். கடுமையான உழைப்பாளி.

வினோதினியோட அம்மா, அப்பாவுக்கு இதுல விருப்பமில்லை. என்கிட்டயும், என் கணவர்கிட்டயும் புலம்பி, அவளுக்கு கவுன்சலிங் பண்ணி, மனசை மாத்தச் சொல்லிக் கேட்டாங்க. நாங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசினோம். ‘எனக்கு உருவமோ, அழகோ முக்கியமில்லை. நான் இளங்கோவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். யாரும் என் மனசை மாத்த முடியாது’னு உறுதியா சொன்னா.

‘இது பொருந்தா காதல்னு எனக்கும் தெரியும். வினோவுக்கு நான் ஏற்றவன் இல்லைனு அவகிட்டயே சொல்லிட்டேன். ஆனாலும், அவ கேட்கற மாதிரி இல்லை. இப்போதைக்கு இந்த விஷயத்தைப் பெரிசுபடுத்த வேண்டாம். அவ முதல்ல படிப்பை முடிக்கட்டும். அது வரை என்னால அவளுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. படிப்பை முடிச்சதும் அவகிட்ட மறுபடி பேசிப் பார்க்கலாம்’னு சொன்னான் இளங்கோ.

வினோதினியோட பெற்றோர்கிட்டயும் இதையே சொல்லி அவ படிப்பை முடிக்கிற வரைக்கும் அமைதியா இருக்கச் சொன்னோம். படிப்பையும் முடிச்சிட்டா. ஒரு வேலையிலயும் சேர்ந்துட்டா. அப்பவும் அவளோட காதல் மாறலை. இந்த இடைப்பட்ட காலத்துல இளங்கோ, படிப்படியா முன்னேறி, சொந்த வீடு, கார், சொந்த பிசினஸ்னு வளர்ந்திருந்தான். ‘அடுத்த ஒரு மாசத்துல அவனை கல்யாணம் பண்ணியே ஆகணும்...

அம்மா, அப்பா எதிர்த்தாலும் கவலையில்லை’ங்கிற நிலைமைக்கு வந்துட்டா வினோதினி. நானும் கணவரும் வினோதினிகிட்டயும் இளங்கோகிட்டயும் மாறி மாறி பேசி, கவுன்சலிங் பண்ணிட்டிருந்தோம்.ஒருநாள் என் கணவரோட போன் அடிச்சது. நான்தான் எடுத்தேன். அந்தப் பக்கம் பேசினது ஒரு பெண் குரல். ‘எவ்ளோ நேரமா போன் பண்றேன்... அப்படி என்னதான் பண்ணிட்டிருக்கீங்க’னு கேட்கறா.

அது வினோதினியோட குரல்தான்கிறதுல எனக்கு சந்தேகமில்லை. என் கணவர் எத்தனை பெரிய பொசிஷன்ல எவ்வளவு கவுரவமான ஒரு வேலையில இருக்கிறவர்... அவரைப் போய், அதுவும் அவர்கிட்ட உதவி எதிர்பார்த்திட்டிருக்கிற ஒரு சின்னப் பொண்ணு இப்படி அதிகார தொனியில பேசறாளேனு எனக்கு உறுத்தல்...

உடம்பெல்லாம் எரியுது. இதைப் பத்தி என் கணவர்கிட்ட விசாரிச்சபோது, அவர் அதை பெரிசாவே எடுத்துக்காததுல எனக்கு இன்னும் கடுப்பு. அவ அடிக்கடி போன் பண்றதும், என் குரல் கேட்டா கட் பண்றதும் அடிக்கடி தொடர்ந்தது.

ஒருநாள் என் கணவரோட மொபைலை எடுத்துப் பார்த்திட்டிருந்தேன். அதுல காதல் ரசம் சொட்டச் சொட்ட ஒரு கவிதை... அவளுக்கு அனுப்பியிருக்கார்னு தெரிஞ்சது. எனக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு... காதலிச்சு கல்யாணம் பண்ணின ஒருத்தர்...

இத்தனை வருஷங்களுக்குப் பிறகு அதுவும் தன் மகள் வயசுல உள்ள ஒரு பெண்ணோட இப்படி தப்பா பழகறார்ங்கிறதை என்னால தாங்கிக்கவே முடியலை. அந்தக் கவிதையைக் காட்டி என் கணவர்கிட்ட விசாரிச்சப்ப, அது அவர் இளங்கோவுக்காக எழுதினதுனு சொன்னார். வினோதினி மேல காதல் எதுவும் இல்லைனும் சொன்னார்.

ஆனாலும், என்னால நம்ப முடியலை. ‘உங்களுக்கு அவ மேல காதல் இல்லைன்னா, அவ போன் பண்ணும் போதெல்லாம் ஓடிப் போய், பதைபதைப்போட எடுக்காதீங்க’னு சொன்னா கேட்க மாட்டேங்கிறார். நடுராத்திரியில போன் பண்ணினாலும், போனை எடுத்துட்டு தனியா போய், ரொம்ப நேரம் பேசறார். விவாகரத்து பண்றதையும் சாகறதையும் தவிர எனக்கு வேற வழியே தெரியலை...’’ - நடந்தது மொத்தத்தையும் சொல்லி நிறுத்தினார் சாந்தினி.

சந்திரனிடம் தனியே பேசிய போது, அவரும் வினோதினியின் மேல் தனக்கு காதல் என்றெல்லாம் எதுவும் இல்லை என்பதை உறுதியாகச் சொன்னார். இளங்கோ கேட்டுக் கொண்டதற்கேற்ப, அவர் சார்பாக வினோதினிக்கு எழுதி அனுப்பிய கவிதைதான் அது என்பதையும் சொன்னார். உதவி கேட்கிற வினோதினியை தன்னால் அலட்சியப்படுத்த முடியாது என்றார்.

இருவரிடமும் பேசிய பிறகு இவர்களது பிரச்னைக்கான வேர் புரிந்தது. ‘ஒர்க்கஹாலிசம்’ எனப்படுகிற தொழில் போதைதான் காரணம். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மீறி, அந்த வேலையை ஒரு போதை மாதிரி நினைத்துச் செய்கிற மனநிலையில் இருந்தார் சந்திரன்.

‘குடித்தால் ஆரோக்கியம் கெட்டுப் போகும்... தொடர்ந்து குடித்தால் உயிருக்கே உலையாக அமையும்’ என்பது குடிப்பவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஆனாலும், அவர்களால் குடியை நிறுத்த முடியாது.

அப்படித்தான் இந்த வேலை தரும் போதையும். அடுத்தவருக்கு கவுன்சலிங் கொடுக்கிற தன்னுடைய வேலையின் மீது சந்திரனுக்கு அளவுகடந்த நேசம். அது ஒரு கட்டத்தில் போதையாக தலைக்கேறிய நிலையில்தான், இன்னொருவரின் காதலியை தன் காதலியாக பாவித்து, காதல் கவிதை எழுதும் அளவுக்குத் தூண்டியிருக்கிறது.

வேலை உண்டாக்கிய அந்த போதை உணர்வு தான், எந்த நேரம் வினோதினி போன் செய்தாலும் உடனே பதறியடித்து எடுத்துப் பேசச் செய்திருக்கிறது. அங்கே வினோதினியின் மனநிலையோ வேறு மாதிரி யோசித்திருக்கிறது. காதலன் கேட்டுக் கொண்டதற்காக சந்திரன் எழுதித் தந்த கவிதை என்பது தெரிந்தாலும், அதை அவள் ஒரு உதவியாகப் பார்க்காமல், சந்திரனுக்கும் தன் மேல் ஏதோ ஈர்ப்பு இருக்குமோ என நினைத்திருக்கிறாள். நீண்ட நேரம் மணி அடித்தும் போனை எடுக்காதபோது எரிந்து விழுந்ததும், கண்ட நேரத்துக்கும் போன் செய்து தொந்தரவு செய்ததும் அதன் தொடர்ச்சிதான். சந்திரனுக்கும் சாந்தினிக்கும் இதைப் புரிய வைத்தேன்.

நினைத்த போதெல்லாம் வினோதினி போன் செய்த போதே, சந்திரன் அதை நாசுக்காக கண்டித்து தவிர்த்திருக்கலாம். எந்நேரமும் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என அனுமதி அளித்ததன் விளைவு, தான் மட்டுமே சந்திரனுக்கு முக்கியம், தனக்கு மிஞ்சிதான் மற்ற விஷயங்கள் என்று வினோதினிக்கு தவறான சிக்னலை கொடுத்திருக்கிறது. அதே போல இளங்கோ தன் சார்பாக காதல் கவிதை எழுதித் தரச் சொல்லிக் கேட்டபோது, அது தன் வேலையில்லை என நிராகரித்திருக்கலாம். அல்லது தன் மனைவியின் பெயரைப் போட்டு எழுதிக் கொடுத்து, ‘நீ வேண்டுமானால் உன் காதலியின் பெயரை மாற்றி எழுதிக் கொள்’ எனச் சொல்லியிருக்கலாம்.

எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்கிற நினைப்பும், தான் நேசித்த வேலையின் மேல் கொண்ட அளவுகடந்த பற்றும்தான் இவை எல்லாவற்றுக்குமே அடிப்படைக் காரணம் என விளக்கினேன். அவர்களது அன்யோன்யத்திலோ, காதலிலோ எந்தக் குறையும் இல்லை. போதையாக மாறிப் போன வேலை நினைப்பிலிருந்து சற்றே விலகி இருக்கக் கற்றுக் கொண்டாலே எல்லாம் சுமுகமாகும் எனப் புரிய வைத்தேன்.


பயிற்சி


எந்த விஷயத்திலும் ஈடுபாடே இல்லாமல் இருப்பது எப்படித் தவறானதோ, அதே போன்றதுதான் எந்த விஷயத்திலும் கொள்கிற அதீத ஈடுபாடும். ஒவ்வொருவருக்கும் அம்மா, அப்பா, மனைவி, கணவர், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, வேலை செய்கிற இடத்தில் ஊழியர், நண்பர் எனப் பன்முகம் இருக்கும். இப்படி எல்லா முகங்களுமே ஒருவருக்கு போதையைத் தருவதில்லை. ஏதோ ஒன்று மட்டும் அதிக ஈடுபாடு கொள்ளச் செய்யும். போதையாக மாறும். அப்படிப்பட்ட இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை, உறவு, நட்பு என எல்லாவற்றிலும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

அதைத் தாண்டி, இரவும் பகலும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தின்பால் போதை கொள்ளும்போது, அது ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கச் செய்யும். அப்போது வாங்குகிற அடி மிகப் பலமானதாக இருக்கும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்காவிட்டாலும் பரவாயில்லை... அதை போதை தருகிற இன்பமாக நினைக்காமல் இருந்தாலே வாழ்க்கையில் பல விஷயங்கள் கைநழுவிப் போகாது.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
அடக்கடவுளே .....இந்த மாதிரி எல்லாம் கூடவா ஆகிடுவாங்க . நினைச்சே பார்த்ததில்லை . புது விஷயம் இது .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.