Bionic Heart - உயிர் காக்க வந்தாச்சு பயோனிக் இதயம்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உயிர் காக்க வந்தாச்சு பயோனிக் இதயம்!

இதயம்... நம் உயிர் காக்கும் உறுப்பு. சராசரியாக 300 கிராம் எடையுள்ள இதயம், நாளொன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது. ஒரு வருடத்தில் 31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்ப் செய்கிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக இருந்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம்மட்டுமே.

இதயம் ஒரு தசை வீடு. அதில் மேல்பக்கம் இரண்டும் கீழ்ப்பக்கம் இரண்டுமாக மொத்தம் நான்கு அறைகள் உள்ளன. மேலறைக்கு ‘ஏட்ரியம்’ என்றும் கீழறைக்கு ‘வெண்ட்ரிக்கிள்’ என்றும் பெயர். நீண்ட தசையாலான ‘இடைச்சுவர்’ ஒன்று இதயத்தின் நடுவில் செங்குத்தாக அமைந்து, இதய அறைகளை வலது, இடது எனப் பிரிக்கிறது.

இச்சுவர் ‘மேலறை இடைச்சுவர்’ என்றும், ‘கீழறை இடைச்சுவர்’ என்றும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இரண்டு மேலறைகளுக்கு இடையில் ‘மேலறை இடைச்சுவர்’ அமைந்துள்ளது. இது மேலறைகளை வலது, இடது எனப் பிரிக்கிறது. இரண்டு கீழறைகளுக்கு இடையில் ‘கீழறை இடைச்சுவர்’ உள்ளது. இது கீழறைகளை வலது, இடது எனப் பிரிக்கிறது.

மேற்புறம் வலது பக்கமுள்ள அறை ‘வலது ஏட்ரியம்’ எனவும், இடது பக்கமுள்ள அறை ‘இடது ஏட்ரியம்’ எனவும், கீழ்ப்புறம் வலது பக்கமுள்ள அறை ‘வலது வெண்ட்ரிக்கிள்’ எனவும், இடது பக்கமுள்ள அறை ‘இடது வெண்ட்ரிக்கிள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இதயத்தில், வலது மேலறைக்கும் வலது கீழறைக்கும் இடையில் குறுக்காக ஒரு தசைப் பிரிசுவர் அமைந்துள்ளது. இதில் ஒரு துளையுள்ளது. இது சிறப்புத் தசை நார்களாலான, மூன்று மடிப்புகளைக் கொண்ட வால்வு மூலம் மூடித் திறக்கப்படுகின்றது.

இந்த வால்வுக்கு ‘மூவிதழ் வால்வு’ என்று பெயர். இதன் மூலம் வலது மேலறையும் கீழறையும் தொடர்பு கொள்கின்றன. இதைப் போலவே இடது மேலறைக்கும் இடது கீழறைக்கும் இடையில் குறுக்காக ஒரு தசைப் பிரிசுவர் அமைந்துள்ளது. இந்த இடைச் சுவரிலும் ஒரு துளையுள்ளது. இதுவும் சிறப்புத் தசைநார்களாலான, இரண்டு மடிப்புகளைக் கொண்ட வால்வு மூலம் மூடித் திறக்கப்படுகின்றது. இந்த வால்வுக்கு ‘ஈரிதழ் வால்வு’ என்று பெயர். இதன் மூலம் இடது மேலறையும் இடது கீழறையும் தொடர்பு கொள்கின்றன.

இதயத்தின் வலது பாதியில் ஆக்ஸிஜன் இழந்த சிரை ரத்தமும், இடது பாதியில் ஆக்ஸிஜன் கலந்த தமனி ரத்தமும் உள்ளன. இவற்றில் முதலாவதாகக் கூறப்பட்டதை ‘அசுத்த ரத்தம்’ எனவும், இரண்டாவதாகக் கூறப்பட்டதை ‘சுத்த ரத்தம்’ எனவும் அழைக்கிறார்கள். இவ்விரு ரத்தங்களும் கலந்துவிடாமல் இருக்கவும், ரத்தம் ஒரே திசையில் பயணிக்கவும் மேற்சொன்ன இடைச் சுவர்களும், வால்வுகளும் உதவுகின்றன.

இதயம் துடிக்கும்போது வலது கீழறையிலிருந்து அசுத்த ரத்தம் நுரையீரல் தமனிக்குச் செல்கிறது. நுரையீரல் தமனி இதயத்தை விட்டு வெளியேறியதும், வலது நுரையீரல் தமனி, இடது நுரை யீரல் தமனி என்று இரு கிளைகளாகப் பிரிந்து முறையே வலது நுரையீரல், இடது நுரையீரல் ஆகியவற்றுக்குச் செல்கிறது. அங்கு அவை மேலும் சிறு கிளைகளாகப் பிரிந்து, தந்துகிப் பின்னல்களாகின்றன. இவற்றுக்குள் ரத்தம் செல்லும்போது, நுரையீரல் காற்றறைகளிலிருந்து ஆக்ஸிஜன் ரத்தத்திற்கு வந்தடைகிறது; ரத்தத்திலிருந்து கார்பன் டை ஆக்ஸைடு நுரையீரல் காற்றறைகளுக்குச் செல்கின்றது. இதனால் ரத்தம் சுத்தமாகின்றது.

பின்பு இந்த சுத்த ரத்தமானது தந்துகிப் பின்னல்களிலிருந்து நுண்சிரைகளில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து நுரையீரல் சிரைகளுக்கு அனுப்பப்படுகின்றது. வலது நுரையீரலிலிருந்து இரண்டு நுரையீரல் சிரைகளும், இடது நுரையீரலிலிருந்து இரண்டு நுரையீரல் சிரைகளுமாக மொத்தம் நான்கு நுரையீரல் சிரைகள் இதயத்தின் இடது மேலறைக்கு வருகின்றன. இவற்றின் மூலம் இடது மேலறைக்கு வருகின்ற ரத்தம், மேலறை சுருங்கும்போது, இடது கீழறைக்குச் சென்று, கீழறை சுருங்கும்போது, அங்கிருந்து மகாதமனி வழியாக உடல் உறுப்புகள் எல்லாவற்றுக் கும் முறையாகச் செல்கிறது. இதனால் உடலியக்கம் சீராகச் செயல் பட்டு உயிர் காக்கப்படுகிறது.

இத்தனை ஆச்சரிய அமைப்புகள் அடங்கிய இதயம் நோய்களால் பாதிக்கப்படும்போது அதைச் சரி செய்ய ஆரம்பத்தில் மருந்துகள் உதவின. பிறகு அறுவைச் சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்தன. சமீபத்தில் செயற்கை இதயத்தைப் பொருத்தும் சிகிச்சைகள் தொடங்கப்பட்டன. இப்போது இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘பயோனிக் இதயம்’ வந்துள்ளது. ‘பைவேக்கார்’ (BiVACOR) என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குயின்ஸ் லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் டாக்டர் டேனியல் டிம்ஸ் 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கிய கருவி இது.

இதன் செயல்பாடு குறித்து அவர் என்ன செல்கிறார்?

‘‘இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இதயங்களில் பலூன் மாதிரியான அமைப்புகள் இருக்கும். அவை பேட்டரியிலிருந்து கிடைக்கிற மின்சாரத் தூண்டலால் விரிந்து சுருங்கி ‘பம்ப்’ செய்து ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும். ஆனால், ‘பைவேக்கார்’ கருவியில் சிறிய சக்கரம் போன்ற இரண்டு டிஸ்குகள் மின்காந்தத் தூண்டலால் சுழலும் விதமாக அமைத்துள்ளோம். இவை ஒரு நிமிடத்துக்கு 2 ஆயிரம் முறைவீதம் வேகமாகச் சுழலும்.

அப்போது ஒரு டிஸ் கிலிருந்து ரத்தம் உடலுக்குச் செல்லும், மற்றொரு டிஸ்க்கானது உடலிலிருந்து ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும். இப்படி மாறிமாறி இவை செயல்படும்போது ரத்த ஓட்டம் சீராக நிகழ்கிறது. பழங்காலத்தில் கிணற்றுத் தண்ணீரை இறைக்கச் சுழலும் காற்றாடி போன்ற இயந்திரத்தைப் பயன்படுத்தினார்கள். அதுபோலவே இது இயங்குகிறது.

பொதுவாக செயற்கை இதயக் கருவிகளில் ரத்தம் உறைந்துவிடும் ஆபத்து உண்டு. இதில் அப்படி நேராது. அடுத்து இதில் உள்ள டிஸ்க்குகள் ஒன்றையொன்று உரசிக்கொள்வதில்லை. இதனால் தேய்மானம் காரணமாக இதில் பழுது ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. ஒரு கருவி குறைந்தது பத்தாண்டுகள் வரை வேலை செய்யும். இதில் கிடைக்கின்ற மிகப்பெரிய நன்மைகள் இவை. உலகில் இதயமாற்றுச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உயிர்காக்கும் இயந்திரமாக விரைவிலேயே இது உதவும்’’ என்கிறார் டேனியல் டிம்ஸ்.



டாக்டர் கு.கணேசன்


 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.