Body Acne - உடல் பரு!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இது முகப் உடல் பரு!


சம்மர் சங்கடங்கள்


முகத்தில் பருக்கள் வரும் எனத் தெரியும். உடலிலும் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெயில் காலத்தில் முகம் மட்டுமல்ல... முதுகு, மார்பு பகுதிகளிலும் பருக்கள் (Body acne) தோன்றி பாடாகப்படுத்துபவை என்பதையே பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

மேல்தோள்பட்டை பகுதிகளில் தோன்றும் பருக்களை மறைக்க முடியாமல் பல நேரங்களில், பெண்கள் எதிர்கொள்ளும் சங்கடத் தருணங்களை சொல்லி மாளாது. உடற்பருக்கள் (Body Acne) வருவதற்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைக்கிறார் சரும நோய் மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

“முகப்பருக்களைப் போலவே உடலில் தோன்றும் பருக்களும் 12 வயது முதல் பருவ ஹார்மோன்கள் மாற்றத்தினால் வருபவை. பல நேரங்களில் சங்கடங்களை எதிர்கொள்ளும் பதின்ம வயதினர் மனச்சோர்வுக்கு உள்ளாகின்றனர்.

மனித உடலில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள சருமத்தில் ஆயிரக்கணக்கான துளைகளைக் கொண்ட நுண்ணிய மயிர்கால்கள் இருக்கின்றன. மயிர்கால்களின் அடிப்புறத்தில் சீபம் என்னும் மெழுகு போன்ற திரவத்தை (Sebum) உற்பத்தி செய்யும் Sebaceous சுரப்பிகள் உள்ளன.

சருமத்தின் ஈரத்தன்மையைத் தக்கவைக்க சீபம் இன்றியமையாதது. என்றாலும், அதிகப்படியாக சுரக்கும் சீபம் மற்றும் இறந்த செல்கள் ஒன்று திரண்டு சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துக் கொள்ளும் போது பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. வியர்வையினால் உடலில் சேரும் அழுக்கோடு, வெளிப்புற மாசுகளும் சேர்ந்து சருமத் துளைகளை அடைத்துக் கொள்ளும் நிலையில் பாக்டீரியா தொற்று மோசமடைந்து பருக்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும்.

முக சருமத்தைக் காட்டிலும் உடல் சருமம் தடிமனாகவும், பெரிய துளைகளோடு இருப்பதால் உடற்பருக்களை போக்குவது சற்று கடினமான காரியம். உடலை துணியால் மூடிவிடுவதால் சுரக்கும் சீபம் சருமத்தில் அப்படியே தங்கிவிடுகிறது.

முகம், முதுகு, மார்பு மற்றும் தோள்பட்டையின் மேற்பகுதி என முடி அதிகம் உள்ள இடங்களில் உடற்பருக்கள் தோன்றுகின்றன. இறந்த செல்கள் தலையில் உள்ள மயிர்கால்களை அடைத்துக் கொள்வதால் சிலருக்கு பொடுகுத் தொல்லை இருக்கும்.

தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு தோள்களில் முடி படர்வதால் தோள்பட்டை, முதுகுப் பகுதிகளில் பருக்கள் அதிகமாக காணப்படும்.ஆன்ட்டி பாக்டீரியல் சோப் போட்டு குளித்துவிட்டு மென்மையான டவல் அல்லது ஸ்பான்ஜ் கொண்டு துடைத்து விட்டால் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். சிலர் தலைமுடியில் எண்ணெய் தடவி அதிக நேரம் ஊறிக் குளிப்பார்கள்.

தலைக்குக் குளிப்பதற்கு அரை மணிநேரம் முன் எண்ணெய் தடவி, மெடிக்கேட்டட் ஷாம்பு போட்டு குளித்து, பின் துவட்டினால் பொடுகு நீங்கிவிடும். இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத போது ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை சாப்பிட பரிந்துரைப்போம். பருக்களில் சீழ் படிந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு Sebaceous சுரப்பிகளை சுருங்கச் செய்யும் Isotretinoin என்னும் மருந்தை உட்கொள்ள பரிந்துரைக்கிறோம். இது சீபம் சுரப்பை கட்டுப்படுத்தக்கூடியது.

மருத்துவரின் ஆலோசனைப்படியே இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று எச்சரிக்கும் செல்வி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கூறுகிறார்...“இறுக்கமான சிந்தெடிக் ஆடைகள் அணியக்கூடாது. குறிப்பாக வெயில் காலங்களில் மிகவும் தளர்வான காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.

சாக்லெட், இனிப்பு, பால் மற்றும் பால் பொருட்கள் தவிர, அதிக கிளைசெமிக் உள்ள உணவுகளை (High glycemic index foods) தவிர்க்க வேண்டும். எண்ணெய் பண்டங்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மாதுளம்பழம், மீன் எண்ணெய் மற்றும் சோயா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நீர் அதிகமாக பருக வேண்டும். சர்க்கரைக்குப் பதில் தேன், பனங்கற்கண்டு போட்ட மூலிகை டீ குடிக்கலாம். சமச்சீர் உணவை எடுத்துக் கொள்ளும் போதும், அடிப்படையில் சுகாதாரமான பழக்கங்களை கடைப்பிடிக்கும் போதும் உடற்பருக்கள் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்...”

முதுகு, மார்பு மற்றும் தோள்பட்டையின் மேற்பகுதி என முடி அதிகம் உள்ள இடங்களில் உடற்பருக்கள் தோன்றுகின்றன. இறந்த செல்கள் தலையில் உள்ள மயிர்கால்களை அடைத்துக் கொள்வதால் சிலருக்கு பொடுகுத் தொல்லை இருக்கும். தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு தோள்களில் முடி படர்வதால் தோள்பட்டை, முதுகுப் பகுதிகளில் பருக்கள் அதிகமாக காணப்படும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.