Breast milk will not make your baby clever - அறிவாளி குழந்தை வேண்டுமா.அவசியம&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
அறிவாளி குழந்தை வேண்டுமா... அவசியம் கொடுங்க தாய்ப்பால்!
''தாய்மையின் கொடை, குழந்தையின் வரம்... தாய்ப்பால்! ஆரோக்கியமான, அறிவான குழந்தைக்கு... இந்த நீர் ஆகாரம்தான் ஆதாரம். இயந்திரத்தனமாக தாய்ப்பால் கொடுப்பதைவிட, அதன் சிறப்பு அறிந்து, கொடுக்க வேண்டிய கால இடைவெளி அறிந்து, அமர வேண்டிய பொஸிஷன் பின்பற்றி, பாலுடன் அன்பான ஸ்பரிசமும் கலந்து என தாய்ப்பால் புகட்டும்போது... அதன் சிறப்பும் பலனும் பல மடங்கு கூடுகிறது!''

- மருத்துவராக மட்டும் இல்லை, அம்மாவாகவும் அனுபவித்துப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஆனந்தி. பிரஸ்ட் ஃபீடிங் பற்றி ஆனந்தி பகிர்ந்த தகவல்கள், அம்மாக்கள், அம்மாவாகப் போகிறவர்கள்... ஆகியோரின் அன்பான கவனத்துக்கு...

''தாய்மார்களுக்கு இயற்கை அளித்திருக்கும் அற்புதமான உடல் தகவமைப்புதான் தாய்ப்பால். கரு தரித்தவுடனேயே அதற்கான உடல் மாற்றங்கள் ஆரம்பிக்கும். மார்பகத்தில் இருக்கும் பால் சுரப்பிகள் மெல்ல விரிய, மார்பகமும் விரிவடையும். குழந்தை சுலபமாக தாய்ப்பால் குடிக்க, கர்ப்ப காலத்திலேயே மார்பகக் காம்புகள் வெளிநீட்ட ஆரம்பிக்கும். இந்த இயற்கை மாற்றங்களுடன் மார்பகக் காம்புகளைச் சுத்தம் செய்வது... ஒருவேளை, அவை உள்ளிருந்தால் வெளியே எடுத்து நீவி விடுவது என தாய்ப்பால் புகட்ட, கர்ப்பிணிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுகப்பிரசவம் எனில்... குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள்ளாகவும், சிசேரியன் எனில்... நான்கு மணி நேரத்துக்குள்ளாகவும் தாய்ப்பால் புகட்டிவிட வேண்டும். பிரசவித்த தாய்மார்களுக்கு, முதன் முதலில் சுரக்கும் சீம்பால் (Colostrum), 10 முதல் 40 மில்லியே இருக்கும். ஆனால், அதில் அடங்கியுள்ள சத்துக்களுக்கும், அது தரவல்ல நோய் எதிர்ப்புச் சக்திக்கும் இணை எதுவும் இல்லை. எனவே, தாயின் உடல்நிலைச் சோர்வு, குழந்தையின் அழுகை என எக்காரணம் கொண்டும் தவறவிட்டுவிடாமல், சீம்பாலை கட்டாயமாகக் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.

பொதுவாக, பிறந்த குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பால் புகட்ட வேண்டும். அதற்குத் தேவையான பால் இயற்கையாகவே தாயின் உடலில் சுரக்கும். 'எனக்குப் பால் பத்தல’ என்கிற கவலை, மூடத்தனம். ஏனெனில், இரட்டைக் குழந்தைகளாக இருந்தால்கூட தேவையான பாலை சுரக்க வைக்கும் தகவமைப்பு, இயற்கையின் ஆச்சர்ய வரம். அதனுடன் சத்தான ஆகாரம், மகிழ்ச்சியான மனநிலை என இருப்பது, அந்தப் பால் சுரப்பை அடுத்தடுத்த மாதங்களிலும் அந்தத் தாய்க்குத் தொடர வைக்கும். மாறாக, 'பால் பற்றாக்குறை' என்று சொல்லி தாய்ப்பால் தவிர்த்து பவுடர், பசும்பால் என்று கொடுக்கும்போது... தாய்ப்பால் சுரப்பு குறைவதுடன், பாட்டிலைக் கழுவுவது,
புகட்டுவதில் சரியான
சுகாதாரம் இல்லாமல் போவது போன்ற காரணங்களால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படலாம் ஜாக்கிரதை'' என்று எச்சரித்த ஆனந்தி, தொடர்ந்தார் தாய்ப்பாலின் தன்மையைப் புரியவைக்கும் தகவல்களோடு...

''சீம்பாலுக்கு அடுத்து சுரக்கும் பால், 'ஃபோர் மில்க்’ (foremilk), எனப்படும். அதையடுத்து வருவது 'ஹைண்ட் மில்க்’ (hindmilk). இவை இரண்டும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. ஃபோர் மில்க் என்பது, குழந்தையின் தாகத்தைத் தணிப்பதற்காகத் தண்ணீராக இருக்கும். அடுத்து வரும் சற்று அடர்த்தியான கொழுப்பு, புரதம் என அனைத்துச் சத்துக்களும் அடங்கிய ஹைண்ட் மில்க், குழந்தைக்குத் தேவை யான ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும். குறிப்பிட்ட கால இடைவெளியிலோ... குழந்தை அழும்போதோ... தாய்ப்பால் கொடுக்கலாம். அதை அருந்திய பின்னரும் குழந்தை அழுகிறது என்றால், பசி தவிர வேறு ஏதோ பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தாயின் ஆரோக்கியம்தான், சேய்க்குப் பால் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்பதால், தாய்ப்பால் புகட்டுவதற்கு முன் தாய் ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது பால் அருந்துவது நல்லது. மேலும் பாலூட்டும் தாய்மார்கள் இயல்பாக எடுத்துக் கொள்வதைவிட, அதிகமாக 500 கிராம் கலோரிகள் மற்றும் 25 கிராம் புரதம் கிடைப்பது போல உணவு முறைகளை அதிகப்படுத்த வேண்டும். தினமும் கீரைகள், காய்கறிகள், பருப்பு, அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை என்று சாப்பிடலாம். பெரும்பாலான இந்தியத் தாய்மார்கள் ரத்தச் சோகையுடன் இருக்கிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். எனவே, இரும்புச்சத்து மாத்திரையையும் டாக்டரின் ஆலோசனையின் கீழ் எடுத்துக் கொள்ளலாம்'' என்ற ஆனந்தி, 'பால் புகட்டுவதற்கு சரியான பொஸிஷன் எது?' என்பது பற்றியும் விளக்கினார்.

''சரியான பொஸிஷனில் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டாவிட்டால், அதன் சுரப்பு குறைந்துவிடும். சரியான பொஸிஷனுக்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். அமைதியான, காற்றோட்டமான அறையில் பால் புகட்ட வேண்டும். சிசேரியன் ஆன தாய்மார்கள் ஆனாலும், படுத்த நிலையில் குழந்தைக்குப் பால் கொடுக்கவே கூடாது. நேராக அமர்ந்து, குழந்தையை மடியில் வைத்து, இடது மார்பில் பால் கொடுப்பதாக இருந்தால், கையை 'எல்' வடிவத்தில் வைத்து, குழந்தையின் தலையைத் தாங்கிக் கொள்ள வேண்டும். வலது கையால் தலை முடியைக் கோதி விடுவது, காதை மென்மையாக வருடுவது, உடலை வருடுவது போன்ற 'மதர்லி டச்’ கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மார்புக் காம்புகளை மட்டும் குழந்தையின் வாயில் வைத்தால் சரிவரப் பால் வராது, அந்த ஏமாற்றத்தில் குழந்தை அதைக் கடிக்கும், இதனால் 'கிராக் நிப்பிள்’, அதாவது காம்பில் புண் ஏற்பட்டு, இன்ஃபெக்ஷனாகி வலியும் உண்டாகும். இதைத் தவிர்க்க, மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கறுப்புப் பகுதியையும் குழந்தை சப்புமாறு கொடுக்க வேண்டும். இரண்டு பக்க மார்பிலும் மாற்றி மாற்றி பால் புகட்ட வேண்டும். குழந்தை பால் குடிக்கக் குடிக்கதான் பால் ஊறும் என்கிற அறிவியல் உண்மையை தாய்மார்கள் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.

'பிரஸ்ட் மில்க் ஃபார் பிரெய்ன் குரோத்', 'கவ் மில்க் ஃபார் பாடி குரோத்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். 'தாய்ப்பால் குழந்தையின் அறிவுக்கு', 'பசுவின் பால் ஆரோக்கியத்துக்கு' என்பதுதான் இதற்கு அர்த்தம். குழந்தை அறிவில் சிறந்து வளர, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் புகட்ட வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவாக திட உணவுகளை ஆரம்பிக்கலாம். எனினும், இரண்டு வயது வரை மற்ற உணவுகளோடு தாய்ப்பாலும் கொடுத்து வருவது சிறந்ததே. குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், 'பிரெஸ்ட் பம்ப்’ கொண்டு பால் எடுத்து. ஸ்டெரிலைஸ்டு பாத்திரத்தில் ஃப்ரிட்ஜில் வைத்துவிடலாம். இது 24 மணி நேரத்துக்குக் கெடாமல் இருக்கும். தாய், அலுவலகம் முடித்து வரும்வரை, வீட்டில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பாளர், சங்கு மூலம் அந்தப் பாலை குழந்தைக்கு கொடுக்கலாம்'' என்று வழிகாட்டிய ஆனந்தி, தாய்ப்பால் புகட்டுவதால் பெண்களுக்குக் கிடைக்கும் 'மெட்டர்னல் பெனிஃபிட்’ பற்றியும் சொன்னார்.

''பிரசவமான பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு இருக்கும். இதனை 'போஸ்ட் பார்ட்டம் ப்ளீடிங்’ என்பார்கள். பிரசவத்தின் காரணமாக விரிந்திருக்கும் கர்ப்பப்பை, தாய்ப்பால் புகட்டும்போது சுருங்கி, பழைய நிலைக்குத் திரும்புவதால் இந்த ரத்தப்போக்கு நின்றுவிடும். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அதிகப் பருமனும் தாய்ப்பால் புகட்டும்போது தானாகக் குறைந்துவிடும். கொழுப்புச் சத்துக் குறைவதுடன், கருமுட்டை (ஓவரி) புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்!'' என்று முடித்தார் டாக்டர் ஆனந்தி! தாய்ப்பால் புகட்டும் அறிவியலும் கலையும் புரிந்ததா மம்மீஸ்?!

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.