Breastfeeding Benefits for Mom - தாயையும் காக்குமே தாய்ப்பால்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,628
Location
chennai
#1
தாயையும் காக்குமே தாய்ப்பால்!


தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது... குழந்தையின் வளர்ச்சி தொடங்கி, நிமோனியா, நீரிழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும் உன்னத பணிகளைச் செய்வதுடன், அன்னைகளின் உடல்நலத்திலும் பெரும் பங்கு வகிப்பது... இத்தகைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார் தாய்ப்பால் ஆலோசகர் டாக்டர் ஜெய ஸ்ரீஜெயகிருஷ்ணன்.குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதால், அம்மாக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்... எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜுரம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராது என்கிற விஷயங்கள் பலரும் அறிந்தவையே. அவற்றைக் கடந்து தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் சீம்பால் முக்கியத்துவம் நிறைந்தது. பிரசவத்துக்குப் பின், இது சில நாட்களே வரும். குழந்தையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் இப்பாலில், கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் ஏராளமாக உள்ளன. இயற்கையான நோய்த்தடுப்பு சத்தாக திகழும் இப்பால், எளிதில் செரிக்கக் கூடியது. குழந்தைகள் சிரமம் இன்றி மலம் கழிக்கவும் உதவுகிறது. சீம்பால் குழந்தையின் இரைப்பை குடல் பாதையைச் சீராக்குகிறது. வயிற்றைப் பாதிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. குறிப்பாக, வெள்ளை ரத்த அணுக்களைக் (Leukocytes) காப்பதில் சீம்பால் சிறந்து விளங்குகிறது.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தரப்படும் தாய்ப்பால் சுகாதாரம் நிறைந்ததாக இருக்கும். குழந்தை குடிப்பதற்கு ஏற்ற தன்மையில் இருக்கும். இதனால் குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை நீர், பழச்சாறு மற்றும் செயற்கை உணவுப்பண்டங்கள் கொடுக்கத் தேவையே இல்லை. பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கோ அது குறைவு. குழந்தைகள் வளர்ந்து வரும் நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட நிலையில் வரும் புற்றுநோயையும் தாய்ப்பால் கட்டுப்படுத்துகிறது. பவுடர் பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு 8 மடங்கு அதிகம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளைவிட, ரத்த அழுத்தம் அதிகமாகவும் வாய்ப்புகள் அதிகம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை குறையும். பால் தரும் தருணங்களில் தாயின் உடலில் வெளிப்படும் Oxcytocin என்ற ஹார்மோன் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவு. தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டியிருக்காது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாக இருக்க மாட்டார்கள். ஆஸ்துமா, வீசிங், சரும நோய்கள் தாக்குவதும் குறைவு. நிற்பது, நடப்பது, பேசுவது போன்ற செயல்கள் எந்த தடையும் இல்லாமல் சரியாக நடைபெறும். நுண்ணறிவு அளவு அதிகமாக இருக்கும்.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்குப் பால் புகட்டலாம். ஒவ்வொரு தடவையும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பால் தரலாம். பால் குடித்த பின்னர், அரை மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை மீண்டும் கேட்டாலும் கொடுக்கலாம். இது போல ஒரு நாளில் பல தடவை குழந்தை கேட்கும் போதெல்லாம் தரலாம். பால் புகட்டும் போது குழந்தைஉடன் பேச வேண்டும். இந்தப் பழக்கம் தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பைப் பலப்படுத்தும். பயண நேரங்களில் சிரமம் இல்லாமல், பால் கொடுப்பதற்கு வசதியாக ஃபீடிங் ஏப்ரன், சால்வை, பிரத்யேக உடைகள் விற்கப்படுகின்றன.
தாய்மார்களுக்குக் காய்ச்சல் இருக்கும்போதும் பால் புகட்டலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் புகட்டலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும் வைக்கலாம். அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம். பால் கொடுக்கும் காலகட்டத்தில், தாயின் உடலில் இருந்து அதிக அளவு நீர்த்தன்மை குறையும். அதை ஈடுகட்ட, குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஜூஸ், பால், மில்க்*ஷேக் முதலான திரவ உணவுகளை தாய் அருந்துவது நல்லது. 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும். ஏழாவது மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன்
அரிசிக்கஞ்சி கொடுக்க வேண்டும்.

சில குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் உள்ள புரோட்டீன் ஒத்துக்கொள்ளாது. இதனால் வாந்தி வரும். அப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஒரு வயது வரை குழந்தைகளுக்குக் கண்டிப்பாக உப்பு, சர்க்கரை கொடுக்கக் கூடாது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைத் தரலாம். சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு 3 வயதுவரை பால் கொடுப்பார்கள் ஒரு கட்டத்தில் குழந்தையே பால் குடிப்பதை நிறுத்திவிடும். அப்படி நிறுத்தாத பட்சத்தில், குழந்தையின் கவனத்தை மாற்ற வேண்டும். பால் அருந்துவதை நினைவுப்படுத்தும் அறை, உடை, நாற்காலி போன்றவை குழந்தையின் பார்வையில் படா மல் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்லலாம். இதன் காரண மாக பால் குடிக்கும் எண்ணம் குறையும்.’’

"பால் புகட்டும் போது குழந்தைடன் பேச வேண்டும். இந்தப் பழக்கம் தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பைப் பலப்படுத்தும்."
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,628
Location
chennai
#2
தாய்மையே அழகு!

தாய்ப்பால் சந்தேகமும் தீர்வும்


‘தாய்ப்பால்’ மனிதர் உணரும் முதல் பசியின் உணவு. முதல் ருசியும் அதுதான். குழந்தை முதன்முதலில் தனக்கான ஒரு உறவைத் தேடி, உறுதி செய்வது தாய்ப்பாலை அருந்தும் போதுதான். பாதுகாப்பான உணர்வு, அரவணைப்பு, அன்பு, கருணை போன்ற பண்புகளையும், தாயின் கதகதப்பிலிருந்து குழந்தை உணரத் தொடங்கும். இயற்கையின் படைப்பாகச் சுரக்கும் தாய்ப்பாலில் சத்துக்களோடு, அன்பும் கலந்து ஊட்டப்படுகிறது.

முதன்முறையாக ஒரு தாய் தன்னை முழுமையாக உணரும் தருணம், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தை பசியாறும் நிமிடம்தான். குழந்தை பெற்ற வலியை மறந்து, குழந்தையின் பசியைப் போக்கும் ஒவ்வொரு தாயும் தாய்மையின் சிறந்த உதாரணமே. பேறுகால விடுமுறை முடிந்துகூட தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் சில பெண்களுக்கு தாய்ப்பாலை சேகரித்துவைக்கும் சில பிரத்யேக பொருட்கள் வந்துவிட்டன. இந்தக் கண்டுபிடிப்புகள் ஒருவகையில் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.


பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவது தாய்ப்பால். “பிறந்த ஓர் ஆண்டு வரை குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும். அதிலும், முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்” என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

இது குழந்தையின் உரிமையும்கூட. ஒவ்வொரு ஆண்டும் தாய்ப்பாலின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளும் நோக்கில், ஆகஸ்ட் முதல் வாரம் உலகத் தாய்ப்பால் விழிப்புஉணர்வு வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, வேலை செய்யும் இடத்திலேயே, குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும் உரிமை வேண்டும் எனும் மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

இன்று உலக அளவில், 38 சதவிகிதக் குழந்தைகளுக்கு மட்டும்தான் முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் முழுமையாகப் புகட்டப்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதை, 2025-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எளிதில் கிடைக்கக்கூடிய, செரிக்கக்கூடிய உணவாக தாய்ப்பால் இருக்கிறது. தாய்ப்பாலில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் நிறைவாக உள்ளன. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் வளர்ச்சி அடைந்திருக்காது. அதனால், தாய்ப்பாலே குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.

குழந்தை பிறந்ததும் முதலில் சுரக்கும் வெளிர் மஞ்சள் (பழுப்பு) நிறப் பாலுக்கு கொலஸ்ட்ரம் (Colostrum) என்று பெயர். அதிக ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதால், கட்டாயம் இதைக் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். தாய்ப்பாலில் இம்யூனோ குளோபுளின் (Immunoglobulin) என்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. முதல் 10 நாட்களுக்கு இதன் அளவும் அதிகமாக இருக்கும். பிறந்த மூன்று மாதங்களில், குழந்தையின் எடையை இரண்டு மடங்கு அதிகரிக்க, தாய்ப்பாலால் மட்டும்தான் முடியும். குழந்தையின் ஒரு வயது வரை தந்தால், அதன் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமானதாக அமையும்.

குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அந்தக் குழந்தைகளுக்கு இன்னும் அதிக அளவில் தாய்ப்பால் புகட்ட வேண்டும். குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தாலும், தாய்ப்பால் கொடுப்பதால் ஒன்றும் ஆகாது. குழந்தையைத் தொற்றுகளிடமிருந்தும் நோய்களிடமிருந்தும் தாய்ப்பால் காக்கும். அம்மாவுக்கும் குழந்தைக்குமான உறவு மேம்படும். குழந்தை, தன் தாயிடம் பால் குடிப்பதால், அம்மாவின் அரவணைப்பும் கதகதப்பும் குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரும். குழந்தை நிம்மதியாகத் தூங்க, உறுதுணையாக இருக்கும்.


தாய்ப்பால் கொடுப்பதில் பெண்களுக்குச் சில சந்தேகங்களும், தவறான கருத்துகளும், தேவையில்லாத பயங்களும் உள்ளன.

தாய்ப்பால் கொடுப்பதால் அழகு போய்விடும் என்ற கருத்து தவறானது. தாயாக இருப்பதே அழகுதான். ஒரு குழந்தையைச் சுமந்து அதற்குத் தேவையானவற்றை அளித்து, தன் ரத்தத்தையே பாலாக மாற்றி உணவாகக் கொடுக்கும் ஆற்றல், பெண் இனத்துக்குத்தான் உண்டு. குழந்தை வயிற்றில் இருக்கும் போது, உடல் எடை கூடியிருக்கும். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால், எடை குறைந்து மீண்டும் பழைய கட்டுடலைப் பெறலாம்.

தற்போது, பாலூட்டும் தாய்மார்களுக்கு எனப் பிரத்யேக உள்ளாடைகளும், ஆடைகளும் கிடைக்கின்றன. எளிதில் குழந்தைக்குப் பால் கொடுக்க வசதியாக, ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றை அணிவதால் மார்பகங்கள் தளர்வாவது பெருமளவு தடுக்கப்படும்.

தாய்ப்பாலிலேயே அதிக அளவு நீர்சத்துக்கள் உள்ளன. எனவே, தனியாக நீர் தரத் தேவை இல்லை. குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை, தாயிடமிருந்து கிடைக்கும் பாலே குழந்தைக்குப் போதுமானது. வேறு எந்த உணவும் வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.

குழந்தை பிறந்த முதல் இரண்டு வயது வரை, தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குறைந்தது ஒரு வருட காலம் கொடுப்பது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது. தற்போது, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, மகப்பேறு விடுமுறைகள் மூன்று மாதங்களே கொடுக்கப்படுவதால், ஆறு மாதங்கள்கூட தாய்ப்பால் கொடுப்பது இல்லை. குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதற்காக குறைந்தது ஆறு மாதங்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றனர்.

குழந்தைக்கு மூன்று மாதங்கள் முடிந்துவிட்டதே, இனி குழந்தைக்குக் கஞ்சி கொடுக்கலாமே எனச் சிலர் குழந்தைக்கு இணை உணவைத் தருகின்றனர். இதுவும் தவறு. குழந்தை வளர்கிறதே, பசிக்குத் தேவையான பாலைத் தர வேண்டுமே எனும் எண்ணம் மட்டும் போதும். குழந்தைக்குத் தேவையான பால் சுரந்துகொண்டே இருக்கும். மனரீதியான எண்ணங்களே உடல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும். இதைத்தான் குழந்தை அழுதால், பால் சுரக்கும் என்பார்கள்.

குழந்தை அழுவதைப் பொருத்து, பசியின் தேவையை அறிந்து கொள்ளலாம். இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பால் கொடுக்கலாம். அதுவும், 25 நிமிடங்கள் வரை ஒவ்வொரு முறையும் பொறுமையாகப் பால் கொடுப்பது நல்லது. நீண்ட நேரமாகப் பால் கொடுக்கும்போது, குழந்தையின் பசி தீர்ந்து, நன்கு தூங்கத்தொடங்கும். குழந்தைத் தூங்கும்போது, அதன் வளர்ச்சி நல்லபடியாக நடக்கும்.தாய்ப்பாலை சேகரிக்கலாம்

ஆறு மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் வரலாம். வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப்பாலை, பாட்டிலில் சேகரித்து ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பாலை, குழந்தைக்குக் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், பால் சேகரித்த பாட்டிலை ஒடும் தண்ணீரில் (Running tap water) காண்பித்து, குளிர்ச்சியைப் போக்க வேண்டும். ஃப்ரீசரிலிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலை, சூடு செய்வதோ மீண்டும் குளுமைப்படுத்துவதோ கூடாது.

ஒருமுறை சேகரித்துவைத்த பாட்டிலைத் திறந்து, குழந்தைக்குக் கொடுத்துவிட்டால், மீண்டும் மூடி ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. நிறைய பாட்டில்கள் வாங்கிவைத்து, அதில், ஒருவேளை குழந்தைக்குத் தேவைப்படுகிற பாலை மட்டும் சேமிக்கலாம். இப்படிச் சேமிக்கும் பாலை, ஒன்றிரண்டு வாரம் வரை ஃப்ரீசரில்வைத்துப் பயன்படுத்தலாம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,628
Location
chennai
#3
தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி

தனது குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாகவும், முதல்வனாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தாய்க்கும் ஏற்படும் கனவு. அதற்காக எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்வாள். பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வியோடு தனியாக ஒரு படிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, நன்றாக வளர வேண்டும் என்பதற்காக சத்தான மாத்திரைகள், டானிக்குகள் என்று சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் இதிலே கொட்டுகின்றனர் பெற்றோர்கள்.

வளரும் குழந்தைகளுக்கு இத்தனை மெனக்கெடும் தாய்மார்கள், அது குழந்தையாய் இருக்கும் போது கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் போதும், வலுவான ஆரோக்கியமான குழந்தையை வளர்த்திருக்கலாம். அவர்கள் சிரத்தை எடுக்க மறந்தது தாய்ப்பால் ஊட்டுவதைத்தான். எல்லா உயிரினங்களிலும் மேன்மையானதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதன்தான், தாய்ப்பால் விஷயத்தில் விலங்குகளைவிட மோசமாக நடந்து கொள்கிறான். எந்த விலங்கும் தனது குட்டிக்கு போதுமான அளவு பால் கொடுக்க மறுப்பதில்லை.

மனித இனத்தின் பெண் மட்டும்தான் தன் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறாள். பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்கத் தேவையில்லை. போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க வேண்டியதில்லை. என் குழந்தை ஆரோக்கியமாக வளர சத்தான தாய்ப்பால் வேண்டும். அதை என் குழந்தைக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும் என்று மனதார நினைத்தாலே போதும்.

பால் சுரக்கத் தொடங்கும். குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சிசேரியன், உடல்நிலை சரியில்லை என்று பிறந்த சில நாட்கள் பால் கொடுக்கவில்லை என்றால் தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அதனால் சிசேரியன் என்றாலும் மயக்கம் தெளிந்த பின் பால் கொடுக்கலாம். குழந்தை உறிஞ்ச, உறிஞ்ச பால் அதிக அளவில் சுரக்கத் தொடங்கிவிடும். குழந்தையின் பசியை அறிந்து இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலுட்ட வேண்டும்.

பால் குடித்த ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பால் சுரந்துவிடும். தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி. அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும். கலப்படமற்றது, சுத்தமானது. எளிதில் ஜீரணமாகும். குழந்தையின் மலம், சிறுநீர் வெளியேற்றத்திலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். முதலில் வரும் சீம்பால்தான் குழந்தைக்கு வரும் எல்லா நோய்களிலிருந்தும் காப்பாற்றுகிறது. உடலாலும், மனதாலும் குழந்தை முழு வளர்ச்சியடையும். பார்வைக் கோளாறு ஏற்படாது.

வைட்டமின் டி இருப்பதால் எலும்பை பாதிக்கும் ரிக்கட்ஸ் எனும் நோய் வராது. தன்னம்பிக்கை கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைத்திறன் கூடும். இவற்றோடு தாயின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே குழந்தைக்கு போய்ச்சேரும். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நன்மைகள் ஏராளம். மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படாது.

பிரசவத்திற்குப்பின் அதிகமாக வெளியேறும் ரத்தப் போக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நின்று விடும். தாய்ப்பால் கொடுக்கும் வரை கணவருடன் கூடினாலும் கருத்தரிக்காது. இது இயற்கை தரும் குடும்பக் கட்டுப்பாடு. இத்தனையும் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள். எனவே, தாய்ப்பாலை கொடுங்கள். பால் கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்து போகும் என்ற ஆதாரமற்ற வதந்தியை நம்புவதைவிட தாய்ப்பால் கொடுத்து வலிமையான பாரதத்தை உருவாக்குவது, இளம் தாய்மார்களின் கையில் தான் இருக்கிறது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,628
Location
chennai
#4
எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?


அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.

இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம். இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும்.

குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. அதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது? அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது... பாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,628
Location
chennai
#5
பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?


குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது... இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..

அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை. அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை.

அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது. அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.