Caring for Elderly Parents - வயதான பெற்றோரை உதாசீனப்படுத்தும் ப&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வயதான பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகள்
ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் அவர்களது உலகமே பெற்றோர்தான். பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், பல ஆண்டு தோளில் தூக்கி வளர்த்த தந்தை இவர்கள்தான் அந்த குழந்தைக்கு எல்லாமே... எந்த உலகிலும் பெற்ற தாய்க்கு நிகர் அவரே, தந்தைக்கு நிகர் அவரே... இவர்களுக்கு பின்னர்தான் மற்ற உறவுகள். இதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள் பெரியவர்கள்.


பட்டினியாக கிடந்தாலும் பிள்ளைக்கு பால்கொடுப்பவள் தாய். குழந்தை முகம் வாடாமல் இருக்க தன்னை அர்ப்பணிப்பவன் தந்தை. ஒரு குழந்தை பிறந்து பெரியவன் ஆகும்வரை அவர்களை பெற்றோர் வளர்க்க படும்பாடு சொல்லி மாளாது. குழந்தையாக இருக்கும்போது அந்த குழந்தையை பராமரிக்க கஷ்டப்பட வேண்டும்.

பின்னர் வளரும்போது நோய் நொடியில் இருந்து காத்து வளர்க்க வேண்டும். குழந்தைக்கு சிறு காய்ச்சல், தலைவலி என்றால்கூட பெற்றோர் முகம் வாடி வதங்கிவிடும். மருத்துவமனை சென்று வைத்தியம் பார்த்து அந்த குழந்தை குணமாகி சிரிக்கும்போதுதான் அந்த பெற்றோரின் வாடிய முகம் மலர்கிறது.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற வைர வரிகளுக்கு ஏற்ப பெற்றோருக்கு குழந்தைகள் மரியாதை கொடுத்து வளர வேண்டும். அந்த குழந்தை பள்ளியில் படித்து பெரியவனானதும் அவன் சாதனைகள் செய்யும்போது பெற்றோரின் மகிழ்வுக்கு அளவேது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான அன்பு என்பது எந்த சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டதில்லை.

பிள்ளைகளை பெற்றோர் பூப்போல பாதுகாத்து வளர்த்தாலும் அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தாய், தந்தையை கவனிக்கிறார்களா? என்றால் இல்லை என்ற பதில்தான் அதிகமாக வருகிறது. பெற்ற மகன் படித்து வேலைக்கு சென்று தந்தைக்கு பணம் அனுப்புகிறான். ஆனால் அந்த தந்தைக்கோ அல்லது தாய்க்கோ சரியான உணவு கிடைக்கிறதா? என்பதை கவனிக்க தவறிவிடுகிறான்.

வாழ்க்கையையே பிள்ளைகளுக்காக அர்ப்பணித்த தந்தையை அவர்களது இறுதி காலம்வரை கண்கலங்கவிடாமல் பார்க்கவேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை. ஆனால் இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை.

முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம். தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள். பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக்கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விழித்து ஈ, எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள்.

தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து ஆளாக்குகிறார்கள். அந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு? தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே.

அந்த பெற்றோர் வயதாகும்போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே. அப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில்லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள்.

நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா? வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையடைகிறார்கள். ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள்.

அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள். பொதுவாக முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத்தானே செய்வோம்.

அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதற்கு அவதூறான வர்த்தைகளால் பேசக்கூடாது. பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள். அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை.

ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த்து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே! தாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள்.

எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி என்று ஒவ்வொரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே! அப்படிப்பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே! பல இடங்களில் பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சனை உள்ளது.

பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை.

ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும். இன்று நம் பெற்றோரை நலமாக கவனித்துக்கொண்டால் நாளை நம்மை நம் குழந்தைகள் கவனிப்பார்கள் என்று எண்ணுதல் வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு வழிகாட்டியாய் இருப்பவர்கள் பெற்றோரே.

இன்று நாம் நம் பெற்றோரை உதாசீனப்படுத்தினால் நாளை அது நமக்கு வந்து சேரும். மற்ற குழந்தைகளை விட எனது குழந்தை எப்போதும் சிறந்தவனாக இருக்கவேண்டும். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்” என்ற மனநிலைதான் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வயதான காலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கூட சில பெற்றோரிடம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் குழந்தைகள் வளர்ந்த பின்னர் பெற்றோர்களின் தியாகத்தை மறந்துவிடுவதால் தான் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. தனது குழந்தையின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இரவு பகலாக வேலைப்பார்த்து சம்பாதித்த தந்தையும், கண்துஞ்சாது கவனித்துக்கொண்ட தாயும், அவர்களின் வயதானகாலத்தில், ஒருசேர சேர்ந்து வாழமுடியாத நிலை தான் இன்றைக்கு இருக்கிறது.

ஒரு மகன் வீட்டில் தாயும் இன்னொரு மகன் வீட்டில் தந்தையும் தஞ்சமடையவேண்டிய அவலத்தைக் காணமுடிகிறது. இதில் உடல்நலத்துடன் இருக்கும் தாய்க்கு மகன்கள் மத்தியில் ஏக “மதிப்பு” இது பாசத்தினால் அல்ல. தாய் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், தங்கள் வீட்டு வேலையை செய்வார், சமையலை பார்த்துக்கொள்வார், குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார் என்பதற்காகத்தான்.

அதுவும் கணவனும் மனைவியும் வேலை பார்ப்பவர்கள் என்றால் உடல்நலமுள்ள தாய் சம்பளம் கொடுக்காத பணியாளாக மாற்றப்பட்டு விடுவதை காணமுடிகிறது. அதுபோல குழந்தையை பள்ளியில் கொண்டு விட்டு கூட்டிவர, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தர என தந்தையை பயன்படுத்திக்கொள்ளும் நிலையும் இன்றிருக்கிறது.

வயதான பெற்றோரால் எந்த பயனும் இல்லையென்றால் அவர்களின் புகலிடம் முதியோர் இல்லமாகிவிடுகிறது. அதிலும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் உயர்பதவிக்கு வந்து அவர்களுக்கு திருமணமும் முடிந்துவிட்டால் தனது பெற்றோரை வீட்டில் வைத்திருக்க மகன் விரும்புவதில்லை.

தனது “சமூகஅந்தஸ்து”க்கு அழுக்கான பெற்றோர் தன்னுடன் இருப்பது சரியாக இருக்காது என நினைப்பவர்கள் பலர். இத்தகைய சூழ்நிலைகள் மாற்றப்பட வேண்டும். திருமணமாகி மனைவி என ஒருவள் வந்தாலும் தன் பெற்றோரை கவனிப்பதை முதன்மையாக கொள்ள வேண்டும். இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "முதியோர் பாதுகாப்பு சட்டப்படி மாவட்டம் தோறும் முதியோர் நலன் பேணும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு கலெக்டர் தலைவர் முதியோர் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமலாக்க சமூகநலத்துறையில் தனி அதிகாரி நியமிக்கலாம். குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்தியது போல முதியோர் இல்லங்களையும் முறைப்படுத்திட வேண்டும். முதியோர் தரும் மனுக்களை பெற ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு எஸ்.ஐ. நியமிக்கவேண்டும்.

வரும் தலைமுறையினர் மத்தியில் முதியோர்களை மதித்தல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிகஅவசியம்" என்றார். தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற வைர வரிகளுக்கு ஏற்ப பெற்றோருக்கு குழந்தைகள் மரியாதை கொடுத்து வளர வேண்டும்.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: Caring for Elderly Parents - வயதான பெற்றோரை உதாசீனப்படுத்தும் &#29

இன்றைய நிதர்சனங்கள் இவையே
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.