Check food at home & avoid adulteration - கலப்பட உணவிலிருந்து காப்பாற்றி&#2965

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கலப்பட உணவிலிருந்து காப்பாற்றிக்கொள்வது எப்படி?


அக்கு ஹீலர்
அ.உமர் பாரூக்


நவீன உணவுகளின் ரசாயனக் கலப்பு பற்றி அறிந்து வந்தோம். விதவிதமான ரசாயனங்கள் உடலைக் கெடுக்கும் என்று தெரிந்தும், வேறு வழியின்றி அவற்றைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாமே நம்மை மாற்றிவிட்டோம். நூல்கண்டை சிக்கலாக்கி, அதனுள்ளே வலியச் சென்று சிக்கிக்கொள்வதைப் போல ஆகிவிட்டது இப்போதைய வாழ்க்கைமுறை!

எந்த உணவுப் பொருளை எடுத்தாலும் அதன் ரசாயனக் கலப்பு குறித்து பயந்து தவிக்கும் அளவுக்கு கலப்படமும் வியாபாரமும் கைகோர்த்திருக்கின்றன. நம் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள என்னதான் வழி?
முதலில் நாம் செய்ய வேண்டியது - எளிமையாகக் கிடைக்கிறது என்பதற்காக முழுக்க முழுக்க பாக்கெட் உணவுகளுக்கும், இன்ஸ்டன்ட் தயாரிப்புகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும். நம்மால் முடிந்தவரை உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வீட்டிலேயே ரெடி செய்து கொள்வது நல்லது. வாய்ப்பில்லாத அரிதான நேரங்களில் மட்டும் பாக்கெட் உணவுகளைப் பயன்படுத்தலாம். நாம் பார்த்த பொருட்களின் பாதிப்பிலிருந்து எவ்வாறு தப்புவது என்பதை ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

முதலில் அயோடின் உப்பு. அயோடின் பற்றாக்குறை இல்லாத எல்லோருக்கும் அயோடின் கலந்த உப்பே கிடைக்கிறது. தேவையற்ற அயோடின் கலப்பைத் தடுக்க - அயோடின் உள்ள உப்பை வாங்கியவுடன் ஒரு பெரிய தட்டு அல்லது வாய் அகன்ற பாத்திரத்தில் பரப்பி, அதனை காற்று படுமாறு வைத்து விட வேண்டும். உப்பின் இயல்பான மணம் வருகிற வரைக்கும் இவ்வாறு வைக்கலாம். அல்லது உப்பினை லேசான சூட்டில் வறுத்துப் பயன்படுத்தலாம். இந்த முறைகளில் அயோடின் உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் தன்மையை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அடுத்தது - ஃப்ளூரைடு பேஸ்ட்கள் மற்றும் ஹெர்பல் பேஸ்ட்கள் என்ற பெயரில் சீக்ரெட் ஃபார்முலாக்களின் மூலமாக நம் உடல்நலத்தைக் கெடுக்கும் தயாரிப்புகள். இதற்கு மாற்றாக, பல் துலக்குவதற்கு நம் முன்னோர்களைப் போல மரக்குச்சிகளைக் கூட தேடி ஓட வேண்டியதில்லை. பல்பொடிகளைப் பயன்படுத்தி பல் துலக்கலாம். எந்த பல்பொடி மிகவும் நல்லது? மிகப்பெரிய நிறுவனங்களின் பல்பொடிகளை விட, உங்கள் ஊர்களில் கிடைக்கும் சாதாரண பல்பொடிகளே போதுமானவை. சர்வோதயா, காதி பவன் போன்ற கிராமத் தொழில் சார்ந்த அரசு நிறுவனங்களிலும், அவற்றின் பொருட்களை விற்கும் கடைகளிலும் நல்ல பல்பொடிகள் கிடைக்கின்றன.

அப்புறம் - நூடுல்ஸ். குழந்தைகளுக்குப் பிடித்த நூடுல்ஸை வீட்டிலேயே தயாரிக்கலாம். கடைகளில் கிடைக்கும் சேமியாவை வாங்கி, நம் சொந்தத் தயாரிப்பில் நூடுல்களை சமைக்கலாம். நம்முடைய பாரம்பரிய நூடுலான இடியாப்பத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். தினசரி உணவாக இருக்கும் நூடுல்ஸை படிப்படியாக மாற்றி சிறுதானிய உணவுகளை பழக்கப்படுத்தலாம்.

அடுத்தது - பாலில் உள்ள கலப்படங்கள். பாலின் வெண்மைக்கு, கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துகளுக்கு என்று ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இப்போது முழுக்க முழுக்க செயற்கையாகத் தயாரிக்கப்படும் சிந்தடிக் மில்க்கும் வந்து விட்டது. பிற உணவுக் கலப்படத்தை விட, பால் கலப்படம் நம்மை அதிகம் பாதிக்கும். ஏனெனில் பாலின் பயன்பாடு நம் வீடுகளில் அதிகம். தினமும் குறைந்தது இரண்டு வேளையாவது நாம் பாலையோ, பால் கலந்த உணவுகளையோ அருந்துகிறோம். குழந்தைகள் முதல் நோயுற்ற முதியோர்கள் வரை எல்லோருக்குமான உணவு அது! இந்நிலையில் பால் கலப்படம் குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் வேகமெடுத்துள்ளன. பாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற குரல்கள் ஆய்வாளர்கள், மருத்துவர்களிடையேயிருந்து எழுந்துள்ள நிலையில், பாலுக்கு மாற்று என்ன?

பால் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம். பால் இல்லாத டீ, காபி என குடிக்கலாம். சுக்குமல்லி காபி, லெமன் டீ, இஞ்சி டீ, புதினா டீ... இப்படி பல வகைகளைத் தயார் செய்யலாம். ஆனால் இவற்றையும் இன்ஸ்டன்ட் பவுடர்களாக வாங்கி, மறுபடியும் சிக்கலை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. பாலை தவிர்க்கவே முடியாது என்று நாம் நினைக்கும் குழந்தைகளுக்கு உள்ளூரில் கிடைக்கும் பசும் பாலை வாங்கி, அதிக தண்ணீர் கலந்து கொடுக்கலாம். மூன்று வயதிற்கு மேல் திரவ உணவுகளைக் குறைத்துக்கொண்டு திட உணவுகளைப் பழக்கும்போது பாலை முழுமையாக நிறுத்தி விடுவது நல்லது.

அதே போல குளிர்பானங்களுக்கு மாற்றாக, வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர், பழ ஜூஸ்களைக் குடிக்கலாம். எண்ணி முடிக்க முடியாத அளவிற்கு பழ வகைகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து விதவிதமான பழரசங்களை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம். சமையலுக்குத் தேவையான மஞ்சள், மிளகாய், மசாலா பொடிகளை வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது கலப்படங்களில் இருந்து நம்மைக் காப்பது மட்டுமல்ல, நமக்கேற்ற சுவையிலும் இருக்கும்.

உங்கள் பகுதியில் கிடைக்கும் செக்கு எண்ணெயை சமையலில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடல்நலத்தையும், உள்ளூர் வணிகத்தையும் பாதுகாக்கலாம். மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு, பரோட்டாவிற்கு பதில் கோதுமை பரோட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிடத் துவங்குங்கள். இப்போது பல நகரங்களில் கோதுமை பரோட்டா கிடைக்கிறது. வீட்டில் தயாரிப்பதும் எளிது.

பழங்களின் ரசாயனக் கலப்பிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, நம் பகுதியில் விளையும் கொய்யா, வாழை போன்ற மிகப்பெரிய சந்தை இல்லாத பழங்களைப் பயன்படுத்துவது. குளிரூட்டப்பட்ட அங்காடிகளில் பளபளவென விற்கப்படும் பழங்களுக்கு சற்றும் குறைவில்லாத சத்துக்கள் இவற்றிலும் உண்டு என்பதை நம்பத் தொடங்குங்கள். இரண்டாவது வழி, நாம் வாங்கும் எல்லா பழங்களையும் உப்பு நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்வது. இந்த இரண்டாவது வழி வெளிப்புற ரசாயன பூச்சுகளில் இருந்து நம்மைக் காக்கும். அதேபோல, காய்கறிகளையும் கழுவிவிட்டுப் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்புற ரசாயனங்களின் பாதிப்பைக் குறைக்கலாம். ஆனால் முழுமையான தீர்வு, ரசாயனம் பயன்படுத்தப்படாத காய்கறிகளை வாங்குவதுதான். வீடுகளில் வாய்ப்புள்ளவர்கள் சிறிய அளவில் மாடித்தோட்டம் அமைத்துக் கொள்ளலாம். சமையலில் அதிகமாகப் பயன்படும் சில வகைக் காய்கறிகளை தொட்டிச் செடிகளாக வளர்ப்பதன் மூலம் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

மாடித்தோட்டம் மூலமாக நமக்கு நல்ல காய்கறிகள் கிடைப்பது மட்டுமல்ல, நம் குழந்தைகளின் இயற்கை அறிவும் மேம்படும். இன்றைய மெட்ரிகுலேஷன் குழந்தைகள் ‘அரிசி எந்த மரத்தில் காய்க்கும்’ என்று கேட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் இப்படியான கேள்விகளிலிருந்து ஒரு தொட்டிச் செடியின் மூலம் விடுபட்டு விடுவார்கள். உலக மக்களுக்கு உணவின் மூலமாக உடல்நலத்தைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளை கற்றுத் தந்த நம் தொண்மைச் சமூகம் - இப்போது நவீன உணவுகளில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு மோசமான நிலை?

நம் முன்னோர்கள் ஒவ்வொரு உணவுப் பொருளையும் அதன் தன்மை அடிப்படையில் பிரித்து, உடல்நலத்திற்குப் பயன்படுத்தினார்கள். உதாரணமாக, ஜலதோஷம் உள்ளவர்களுக்கு இஞ்சி, துளசி போன்ற பொருட்களைக் கொடுப்பது. இப்படி உணவுப் பொருட்களை அவர்கள் கண்மூடித்தனமாகத் தந்து விடவில்லை. எந்த அடிப்படையில் உடலோடு உணவை இணைத்துப் பார்த்தார்கள் என்பது ஒரு ரகசிய ஃபார்முலா. அதனைப் பற்றிய தெளிவில்லாமல் வெறும் குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லதல்ல. வாருங்கள்... நம் தாத்தா, பாட்டியின் உணவு ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.
(தொடர்ந்து பேசுவோம்...)

"குளிரூட்டப்பட்ட அங்காடிகளில் பளபளவென விற்கப்படும் பழங்களுக்கு சற்றும் குறைவில்லாத சத்துக்கள் நம் ஊரில் விளையும் எளிய நாட்டுப்பழங்களிலும் உண்டு என்பதை நம்பத் தொடங்குங்கள்."
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.