Children Stories - சிறுவர் கதைகள்

Raja Nanthana

Friends's of Penmai
Joined
Nov 3, 2011
Messages
248
Likes
510
Location
Mumbai
#1
முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.கவலைப்படாதே சகோதரா!

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.
"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.
அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.
அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.
அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.
அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!
கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.
அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!ஆசைக்கும் எல்லை உண்டு

ஒரு காட்டிலாகா அதிகாரிக்கு, அழகான ஒரு மகள் இருந்தாள்.
ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டில் ஓடியபோது, அவளை ஒரு சிங்கம் பார்த்தது. அதற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அது நேரே காட்டிலாகா அதிகாரியிடம் சென்று, தனக்கு அவர் மகளைக் கல்யாணம் செய்து வைக்கும்படி கேட்டது.
அதிகாரிக்கு சிங்கத்திடம் பயம். அதனால், "நோ" சொல்ல முடியவில்லை. "என்ன செய்யலாம்" என்று யோசித்தார். அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது.
அவர் சிங்கத்தைப் பார்த்து, "காட்டு ராஜா......காட்டு ராஜா....என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவளுக்குப் பயம் தெளிந்துவிடும்! அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்!" என்று சொன்னார்.
அந்தப் பெண்மீது கொண்ட ஆசையால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டிலாகா அதிகாரி, முதலில் அதன் பற்க€ப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.
பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் ஆயிற்று! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, அதை "அடி, அடி" என்று அடித்து விரட்டினார்.
கடை நிறைய இருக்கும் ஐஸ்கிரீம் எல்லாவற்றையும், தானே சாப்பிடவேண்டும் என்றும் சின்னப் பிள்ளைகள் ஆசைப்பட்டால் நடக்குமா?
அதுபோல, நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, "தப்பித்தோம்....பிழைத்தோம்" என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
மூன்று கதைகளுமே முத்தானவை. சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் மிகவும் பொருத்தமான கதைகள். அதுவும் கிணற்றுத்தவளை கதை மிகவும் அருமை. சிங்கம் அழகான மனிதப்பெண்ணை திருமணம் செய்ய நினைத்து ஏமாந்து போன கதை கூட நன்றாக இருந்தது மொத்தத்தில் எல்லாமே நல்லறிவு புகட்டும் கதைகள். வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி
 

Raja Nanthana

Friends's of Penmai
Joined
Nov 3, 2011
Messages
248
Likes
510
Location
Mumbai
#3
தொப்பை கரைச்சான் லேகியம்
திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.
"குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்றான் மட்டி.
"வயிறு இவ்வளவு பெரியதாய் இருக்கிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப் போகிறதா?" என்று ஆச்சரியப்பட்டான், மூடன்.
"குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!" என்று பயம் காட்டினான் மடையன்.
"ஐயையோ!" என்று அலறிய பரமார்த்தர், "இதற்கு என்ன செய்வது?" என்று கேட்டார்.
"சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்" என்று யோசனை சொன்னான் மண்டு.
"வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!" என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள்.
உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான்.
"குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்" என்றபடி கீழே குதித்தான்.
எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், "சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்" என்று அனுப்பி வைத்தார்.
காட்டுக்குச் சென்ற சீடர்கள், "தொப்பை கரைச்சான் மூலிகை" எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார்.
அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான்.
"முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?" என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.
கோபம் கொண்ட முனிவர், "எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!" என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்!
முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள்.
சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். "நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!" என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, "சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.
முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர்.
எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான்.
அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். "எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்" என்று பரமார்த்தரை வேண்டினார்கள்.
"பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது.
முட்டளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது.
"குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!" என்று கூறினான், மட்டி.
பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார்.
"குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!" என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும்.
பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர்.
அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.
நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. "ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!" என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர்.
தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள்.
மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார்.
இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!" என்று ஆணையிட்டான்.
சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது.
"குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது" என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.
"லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!" என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
தொப்பை கரைச்சான் லேகியம் கதை படித்து விழுந்து விழுந்து சிரித்தோம் சிரித்தோம். மிக்க நன்றி ராஜ நந்தனா
 

Raja Nanthana

Friends's of Penmai
Joined
Nov 3, 2011
Messages
248
Likes
510
Location
Mumbai
#5
[h=3]பூதம் காத்த புதையல்[/h]பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
தூக்கத்தில், "ஆகா! தங்கம்! வெள்ளி! வைடூரியம்!" என்று உளறிக் கொண்டு இருந்தார், பரமார்த்தர்.
திடுக்கிட்டு எழுந்த சீடர்கள், குரு உளறுவதைக் கண்டு அவரை தட்டி எழுப்பினார்கள்.
தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பரமார்த்தர், "புத்தி கெட்டவர்களே! ஏன் என்னை எழுப்பினீர்கள்? அற்புதமான கனவு ஒன்று கண்டு கொண்டு இருந்தேன். கெடுத்து விட்டீர்களே!" என்று சீடர்களைத் திட்டினார்.
உடனே எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு கனவா? என்ன கனவு கண்டீர்கள்?" என்று கேட்டார்கள்.
பரமார்த்தர், சிறிது நினைவுபடுத்தி, "புதையல்! புதையல்!" என்று கத்தினார்.
"புதையலா? எங்கே? எங்கே?" என்று குதித்தார்கள், சீடர்கள்.
பிறகு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "சீடர்களே, இந்த அறையின் பின்னால் உள்ள தோட்டம் தான் என் கனவில் வந்தது. தோட்டத்தின் சனி மூலையில் ஒரு பானை நிறைய பொன்னும் வெள்ளியுமாய்க் கிடக்கிறது!" என்று மெல்ல கூறினார்.
"அடேயப்பா! பானை நிறைய தங்கமா?" என்று மகிழ்ச்சியால் கீழே விழுந்து புரண்டான் மட்டி.
"குருவே! இந்தப் புதையலை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?" என்று கேட்டான் மூடன்.
அதற்குள் முட்டாள், "நம் குருவுக்குப் பெரிய குதிரையாக, அழகான குதிரையாக வாங்கலாமே!" என்று பதில் சொன்னான்.
"நாம் கூட ஆளுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொள்ளலாம்!" என்று மகிழ்ந்தான் மட்டி.
"குருவே! இந்த இடம் சரியில்லை. இதை இடித்து விட்டு ராஜாவுக்குப் போட்டியாக அரண்மனை கட்ட வேண்டும்!" என்று யோசனை சொன்னான் மூடன்.
"இனிமேல் நமக்குக் கவலையே இருக்காது. தினமும் வடையும் பாயாசமுமாகச் சாப்பிடலாம்!" என்று குதித்தான், மடையன்.
"குருவே! அப்படியானால் நாம் எல்லோரும் இப்போதே ஓடிப்போய் அந்த இடத்தைத் தோண்டிப்பார்ப்போம்" என்றான் முட்டாள்.
"ஆமாம்! அதுதான் நல்லது. பகலில் தோண்டினால் ஊர் பூராவும் தெரிந்து விடும். அப்புறம் எல்லோரும் பங்கு கேட்பார்களே!" என்றான் மடையன்.
"மடையன் சொல்வதும் சரிதான். வாருங்கள், எல்லோரும் போய் இப்போதே தோண்டுவோம்!" என்று தோட்டத்துக்குப் போனார்கள்.
வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றான், முட்டாள்.
யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்து விட்டு, தம்முடைய கைத்தடியால் ஓர் இடத்தில் வட்டமாகக் கோடு போட்டார், பரமார்த்தர். உடனே மட்டியும் மடையனும் வேகம் வேகமாக அந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரம் ஆனதும், "கை எல்லாம் வலிக்கிறதே!" என்று மூச்சு வாங்க உட்கார்ந்து விட்டனர்.
"குருவே! புதையலை விடக்கூடாது!" என்றபடி மூடனும், மண்டுவும் தொடர்ந்து பள்ளம் பறித்தார்கள்.
நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக் கொண்டே இருந்தபோது, திடீரென்று வெள்ளையாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.
"ஆ! புதையல்! புதையல்!" என்று குதித்தபடி இன்னும் வேகமாகத் தோண்டினான், மட்டி.
உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டுப் பார்த்தார். உருண்டையாக ஏதோ ஒன்று கிடைத்தது.
எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப் பார்த்தார்கள்.
பரமார்த்தரின் கையில் இருந்தது ஒரு மண்டை ஓடு!
அவ்வளவுதான்! "ஐயோ! ஐயோ!" என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்து ஓடினார்கள்.
 

Raja Nanthana

Friends's of Penmai
Joined
Nov 3, 2011
Messages
248
Likes
510
Location
Mumbai
#6
[h=3]தண்டச் சோற்றுத் தடிராமன்கள்[/h]
எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.
"நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும்
ஒருநாள், "நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?" என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன்.
இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். "மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!" என்று புளுகினார்.
சீடர்களும், "ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்" என்று ஒத்து ஊதினார்கள்.
அதைக் கேட்ட மன்னன், "அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டான்.
மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர்.
அதைப் பார்த்த அரசன், "சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?" என்று கேட்டான்.
முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. "இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?" என்று கேட்டான்.
"மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது" என்று விளக்கினார் பரமார்த்தர்.
"இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் மடமன்னன்.
"மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்" என்றார் குரு.
"நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!" என்றான் மூடன்.
அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன்.
மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும்
மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை.
"வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான்.
"சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது
"அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!" என்றான் மண்டு.
"இதை வேண்டுமானால் செய்யலாம்!" என்றான் மடமன்னன்.
பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன.
எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன.
அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர்.
பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான்.
அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.
 

Raja Nanthana

Friends's of Penmai
Joined
Nov 3, 2011
Messages
248
Likes
510
Location
Mumbai
#7
[h=3]வாழ்க இராமர் - வாழ்க சீதை[/h]
ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர்.
"ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?" என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர்.
குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, "நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்" என்றனர்.
"வெளியூருக்கா? ஏன்?" என்று கேட்டான், மட்டி.
"இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதால் என்ன பயன்? வெளியூருக்குப் போனால்தான் அங்கிருக்கும் மக்களும் பார்ப்பார்கள். அப்போதுதான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும்" என்றான், திருடரில் ஒருவன்.
"ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன்" என்று பாராட்டினார், பரமார்த்தர்.
ஆனால், மட்டிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. "இதை நீங்கள் திருடிக் கொண்டு போகிறீர்கள்" என்றான்.
அதைக் கேட்ட திருடர்கள், "சே, சே! திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக் கொண்ட போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்?" என்று கேட்டனர்.
"ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்!" என்று ஒப்புக் கொண்டான் மட்டி.
மறுபடியும் சாமி சிலைகளைப் பெயர்த்து எடுத்தனர், திருடர்கள்.
அவர்கள், கஷ்டப்படுவதைக் கண்ட மடையன் "குருதேவா! இவர்களுடன் சேர்ந்து நாமும் கொஞ்சம் தூக்கி விடலாமே" என்று கேட்டான்.
"ஓ! தாராளமாக உதவி செய்வோம்" என்று சொல்லியவாறு சிலைகளைத் தூக்கப் போனார் குரு.
ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர்.
"குருவே! இவ்வளவு காலமாக இந்தச் சாமி சிலைகள் நம் ஊரில் இருந்தன. இப்போது வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகின்றன. ஆதலால் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும்" என்றான், முட்டாள்.
"யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், "சீக்கிரம் செய்யுங்கள்" என்று அவசரப்படுத்தினர்.
பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லியபடியே பூசை செய்தார். சீடர்களும் சிலைகளின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர்.
பூசை முடிந்ததும் கோயிலுக்கு வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக நினைத்தனர், திருடர்கள்.
அப்போது பரமார்த்தரும், மட்டி, மடையன், முட்டாள் ஆகிய மூன்று சீடர்களுக்கும் உற்சாகம் அதிகம் ஆயிற்று.
"சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே!" என்று காட்டுக் கத்தலாகக் கத்தினார்கள்.
அவர்கள் கத்துவதைக் கண்ட திருடர்களுக்குப் பொறுமை போய் விட்டது.
"அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே" என்று திட்டினார்கள்.
"சத்தம் போட்டால் என்ன தப்பு?" என்று கேட்டான் மடையன்.
குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, "முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!" என்று உண்மையைக் கூறினர்.
அதைக் கேட்டுப் பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
"என்ன? திருடிக் கொண்டு போகிறீர்களா?" என்றபடி மயங்கி விழுந்தான், முட்டாள்.
"ஐயோ, திருடர்கள்! திருடர்கள்!" என்று கத்தினான், மட்டி.
அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன்.
பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார்.
பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்கள் சென்றனர்.
உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர்.
"அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப் போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள். தூங்கி எழுந்ததும் சிலைகளை எங்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்" என்று கட்டளை இட்டனர்.
அவர்களைப் பார்த்த பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர்.
"சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே? என்ன செய்வது?" எனக் கேட்டான் மண்டு.
"நம்மால் காவல் காக்க முடியாது. தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். அதனால் நேராக மன்னரிடமே கொண்டு அரண்மனைக்குப் போனார்கள்.
அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர்.
மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், "சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதனால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன்" என்றான்.
குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.
 

Raja Nanthana

Friends's of Penmai
Joined
Nov 3, 2011
Messages
248
Likes
510
Location
Mumbai
#8
[h=3]நடப்பது எல்லாம் நன்மைக்கே![/h]காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.
சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.
ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி "ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.
நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. "பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!" எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.
சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.
"ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்" என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.
சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக "நொண்டி ராஜா" என அழைத்தன.
இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.
உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.
சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.
வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.
தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், "நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்", என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.
கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.
இதைக்கண்டு வருந்திய அவர்கள், "இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. "எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது" என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.
"நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். "நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது" என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.
உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, "சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்" என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, "அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.