Chronic fatigue syndrome-தீரா சோர்வு தீருமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தீரா சோர்வு தீருமா?

பணியும் பிணியும்

வேலை இன்மை, வருமானம் இன்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்றெல்லாம் பிரச்னைகள் ஒரு காலத்தில் வரிசைகட்டின. இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கோ அந்த வேலையே பிரச்னையாக மாறியுள்ளது. வேலைக்குச் சேர்ந்த சில வருடங்களில் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள் என்கிறது சமீபத்திய சர்வே.

அதீத வேலையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் `க்ரோனிக் ஃபட்டிக் சிண்ட்ரோம்’ (Chronic fatigue syndrome) என்னும் தீரா சோர்வுக்கும் உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், பிரச்னையை தீர்க்கும் முறைகள் என விவரிக்கிறார் மனநல மருத்துவர் ஜெயக்குமார்...

``க்ரோனிக் ஃபட்டிக் சிண்ட்ரோம் பிரச்னையை நீண்டகாலமாக உடலில் இருக்கும் களைப்பு என சுருக்கமாக சொல்லலாம். அவ்வளவு எளிதில் நீங்காத களைப்பு எனவும் வகைப்படுத்தலாம். சாதாரணமாக களைப்பு அல்லது சோர்வு உடலில் இருந்தால் போதிய ஓய்வு எடுத்தால் சரியாகி
விடும். ஆனால், இவ்வகை பிரச்னையில் எத்தனை மணி நேரம் ஓய்வெடுத்தாலும் உடலில் சோர்வு இருந்து கொண்டே இருக்கும். இதனால் வேலையில் முழுமையான கவனத்துடன் ஈடுபட முடியாது.உடலானது ஏதாவது வைரஸ் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் போது வரும் சோர்வைதான் பொதுவாக `க்ரோனிக் ஃபட்டிக் சிண்ட்ரோம்’ என்போம். உடல் வலியுடன் முதுகுவலி, தொண்டை வலி, நிணநீர் நாளங்கள் பெரிதாதல் ஆகிய பிரச்னைகளும் சேர்ந்து இருக்கும். தூக்கம் சரியாக வராது.


மருந்து, மாத்திரைகளும் இந்தப் பிரச்னையை உடனடியாக தீர்க்காது. மன அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாதவர்களுக்கும் க்ரோனிக் ஃபட்டிக் சிண்ட்ரோம் ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முன்பெல்லாம் வெளிநாடுகளில் மட்டுமே இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்தார்கள்.

அதிலும் 40 முதல் 50 வயது உள்ளவர்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். இப்போதோ நமது இளைஞர்கள்தான் இந்தப் பிரச்னைக்கு அதிகம் உள்ளாகிறார்கள். ஆனால், இப்போது மிகு வேலையின் காரணமாக ஏற்படும் மனச்சோர்வையும் க்ரோனிக் ஃபட்டிக் சிண்ட்ரோம் என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இந்த இரண்டும் வேறு வேறு என புரிந்து கொள்ள வேண்டும். எல்லா வற்றையும் ஒன்றுபடுத்த முடியாது.

வேலையால் ஏற்படும் மன அழுத்தம் அல்லது சோர்வை சரி செய்வது எளிதாகும். ஃபட்டிக் சிண்ட்ரோமில் உள்ள அறிகுறிகள் மிகு வேலையால் வரும் சோர்விலும் இருக்கும். எந்த வேலையும் செய்யாத இளைஞர்களுக்கும் இத்தகைய தீராத களைப்பு இப்போது உடலில் வருகிறது.

மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களை இளம் வயதிலேயே பழகி விடுவது ஒரு முக்கிய காரணம். இரவெல்லாம் தூங்காமல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக இணையதளங்களையும் போர்னோகிராபி தளங்களையும் பார்த்து கண்விழித்துக் கிடப்பதும் தீராத சோர்வுக்கான காரணமாக அமைந்து விடுகிறது.

இப்படி இருப்பவர்கள் வேலைக்கு சென்றாலும் அதில் கவனத்தை செலுத்த முடியாமல் திண்டாடுவார்கள். இவர்களுக்காகவே சில சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தகவல் தொடர்பில்லாத காடுகளில் அல்லது மலைவாழிடங்களில் நடக்கும் இந்த முகாம்களில் இணைய தொடர்புகள் எதுவும் இருக்காது. செல்போன் பயன்படுத்த முடியாது. யோகா, தியானம் என இயற்கை சூழ்நிலைகளில் சொல்லிக் கொடுப்பதால் அவர்களது மனமும் அமைதியாகி, உடலுக்கு போதுமான எனர்ஜியும் கிடைக்கிறது.

அதன் பிறகு வேலைக்கு திரும்பினால் கூட அடுத்த ஆறு மாதம் வரை எனர்ஜியுடன் வேலை செய்வார்கள். இதுபோன்ற முகாம்களில் இளைஞர்கள் கலந்து கொள்வதன் மூலம் தேவையற்ற கவனச் சிதறலை தடுக்க முடியும்.சில வருடங்கள் மூளையை பயன்படுத்தி செய்யும் வேலைகளை தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்யும் இளைஞர்கள் எந்த வேலையும் செய்ய முடியாதபடி ஆகிவிடுவார்கள்.

வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருப்பார்கள். ஆழ்ந்த மனச்சோர்வின் காரணமாக வேறு வேலைக்கு போகக் கூட பயப்படுவார்கள். உடலில் கழுத்துவலி, முதுகு வலி, உடல் சோர்வு போன்றவை இருக்கும். இதையும் க்ரோனிக் ஃபட்டிக் சிண்ட்ரோம் என சொல்பவர்கள் அதிகம். ஆனால், இதன் பெயர் `பர்ன்அவுட் சிண்ட்ரோம்’ (Burnout syndrome). அளவுக்கு மீறிய வேலைகளை பல மணி நேரங்கள் குறைந்த வருடங்களில் செய்வதால் வரும் பிரச்னை இது.

மனரீதியாக தீர்ந்து போனவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் படைப்பு ரீதியாக எந்த புதிய யோசனையும் இல்லாமல் போய்விடும். இந்தப் பிரச்னை உடையவர்கள் வேலைக்கு கொஞ்சம் விடுமுறை எடுத்துக் கொண்டு தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படியும் அந்த வேலை சரிவரவில்லையெனில் தங்களுக்கு பிடித்த வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்வது நல்லது. மனம் சார்ந்த பிரச்னைகள் இருப்பின்
அவர்களுக்கு `Cognitive behavioral therapy’ கொடுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம்.

11 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்களும் மிகுந்த மனச்சோர்வை அடைகிறார்கள். சம்பளம் அதிகம் என்பதால் பலரும் இதை பொருட்படுத்துவது இல்லை.

இவர்கள் வேலை நேரத்தை கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். எந்தப் பிரச்னை என்றாலும் மேலதிகாரிகளிடம் பேசி உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். உடல் ரீதியான மருத்துவப் பரிசோதனைகளையும் தகுந்த இடைவேளையில் செய்து கொள்வதும் அவசியம்.

உடல்ரீதியாக தீராத களைப்பு வருகிறது எனில் எதனால் பிரச்னை வருகிறது என காரணம் கண்டுபிடித்து உடனடியாக அதற்கான சிகிச்சையையும் எடுத்துக் கொள்வது நல்லது. வேலைக்கான நேரத்தையும், தனக்கான தனிப்பட்ட நேரத்தையும் சரியாக பிரித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 8 மணி நேர தூக்கமும், முறையான உடற்பயிற்சியையும் தினமும் வழக்கப்படுத்திக் கொள்வதும் அவசியம்’’ என்கிறார் டாக்டர் ெஜயக்குமார்.

வேலைக்கான நேரத்தையும், தனக்கான தனிப்பட்ட நேரத்தையும் சரியாக பிரித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 8 மணி நேர தூக்கமும், முறையான உடற்பயிற்சியையும் தினமும் வழக்கப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.