Cleanser and it's Uses-கிளென்சர்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கிளென்சர்
அழகுக்கு ஆசைப்படாதவர்கள் அரிதினும் அரிதானவர்கள். ஆசைப்படுகிற எல்லோருக்கும் அழகு சாத்தியப்படுவதில்லை. அதற்காக மெனக்கெடுபவர்களைத்தான் அழகு ஆராதிக்கும். ஒருநாள் அலுப்புப்பட்டுக் கொண்டு மேக்கப்பை கலைக்காமல் தூங்கினால் அடுத்த நாள் காலையில் துருத்திக் கொண்டு நிற்கும் பரு, அலட்சியத்தை உணர்த்தும்.இரண்டு நாட்களுக்கொரு முறை அலசப்படாத கூந்தலில் பொடுகும், பிசுபிசுப்பும் சேர்ந்து கொண்டு அரிப்பாகவும் முடி உதிர்வாகவும் காட்டிக் கொடுக்கும்.இப்படித் தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு பாகத்தையும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பராமரிப்பு என்பது மிக மிக முக்கியம். அழகுப் பராமரிப்பு பற்றிப் பேசப் போகிற இந்த நேரத்தில், அழகு சாதனங்கள் ஒவ்வொன்றின் தேவை, அவை யாருக்கு எப்படிப் பயன் படும், எப்படித் தேர்ந்தெடுப்பது, எப்படி உபயோகிப்பது என்கிற அடிப்படைத் தகவல்களையும் அவசியம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சருமப் பராமரிப்பின் முதல் ஸ்டெப்பான கிளென்சிங் முதல் நகங்களை அழகாக்கும் நெயில்பாலீஷ் வரை உச்சி முதல் பாதம் வரையிலான அழகுக்குப் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகப் பேசப் போகிற பகுதி இது. ஒவ்வொரு பெண்ணும் அவசியம் பத்திரப்படுத்த வேண்டிய அழகுப் பெட்டகமும் கூட!


‘‘அழகுப் பராமரிப்பில் இதுவே முதல் படி. சருமத்தை சுத்தப்படுத்துவதையே கிளென்சிங் என்கிறோம். விலை உயர்ந்த பட்டுப்புடவையை எப்படிக் கையாள்வீர்கள்? அதைவிட மென்மையாகக் கையாளப்பட வேண்டியது உங்கள் சருமம். அதற்கு கிளென்சிங் மிக மிக அவசியம்’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா. கிளென்சர் பற்றிய ஏ டூ இஸட் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவர்.

கிளென்சர் என்றால் என்ன?

கிளென்சர் என்பது சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதுடன் நமது மேக்கப், வியர்வை, தூசி, எண்ணெய் ஆகியவற்றையும் நீக்குகிறது. சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, மேல்பூச்சாகப் பூசப்படுகிற அழகு சாதனங்கள் சருமத்தினுள் சீராக ஊடுருவிப் பரவவும் வழி செய்கிறது. சருமத்தை கிளென்ஸ் செய்வதுதான் அழகுப் பராமரிப்பில் அவசியமானதும் முதன்மையானதுமான செயல். ஆனால், முறையாக கிளென்ஸ் செய்யப்படாத சருமம், ரொம்பவும் வறண்டு போகவோ, சருமத்தில் அதிக எண்ணெய் பசையை ஏற்படுத்தவோ, பருக்கள், கட்டிகளை உருவாக்கவோ கூடும்.

கிளென்சரின் பலன்கள் என்ன?

இறந்த செல்கள், பழைய மேக்கப், வியர்வை, அழுக்கு மற்றும் எண்ணெய் பசை ஆகியவற்றை நீக்குவதுடன், அந்தத் துவாரங்களைத் தளர்த்தி, கரும்புள்ளிகளை அகற்றி, சருமத் துவாரங்கள் அடைபடுவதைத் தவிர்க்கிறது. முறையான கிளென்சிங் மூலம் அதிகமான வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும். அதிக எண்ணெய் வழிகிற சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படும். சருமத் துவாரங்கள் திறந்து கொள்வதால் நன்கு சுவாசிக்க முடியும்.

நாம் சருமத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவு சருமம் தளர்ச்சி யில்லாமல், இளமையுடனும் அழகுடனும் இருக்கும். எனவே, உங்கள் சருமத்தை அழகாக இளமையாக வைத்துக் கொள்ள ஆசைப்பட்டால், கிளென்சிங் செய்வதிலிருந்து அதற்கான பராமரிப்பைத் தொடங்குங்கள்.

எப்படி உபயோகிக்க வேண்டும்?

சிறிது கிளென்சரை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் தடவுங்கள். 5 நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்யவும். இந்த மசாஜை நெற்றியிலும் மற்றும் டி ஸோன் எனப்படுகிற நெற்றி முதல் மூக்கு வரையிலான பகுதியிலும் செய்யவும். இந்த இடங்களில் எண்ணெய் பசையும் மாசும் அதிகம் தேங்கக்கூடிய இடங்கள் என்பதால் இப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். பிறகு ஈரமான பஞ்சினால் துடைத்து விட்டு சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தாலோ, அதிக வறட்சியாக இருந்தாலோ கிளென்சர் தடவி ரொம்ப நேரம் மசாஜ் செய்ய வேண்டாம். அதிகபட்சமாக 2 நிமிட மசாஜ் போதுமானது.

கிளென்சிங் செய்ய என்னவெல்லாம் தேவை?

தலைக்கான பேண்ட், பஞ்சு, ஒரு அகலமான கிண்ணம், உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ற கிளென்சர், சுத்தமான தண்ணீர் மற்றும் ஃபேஷியல் டிஷ்யு.

கிளென்சரில் எத்தனை வகை?


நார்மல் ஸ்கின் கிளென்சர் இது மிகவும் பிரபலமான கிளென்சர் வகை. சாதாரண வகை சருமத்துக்கு திரவ வடிவிலான கிளென்சர் மற்றும் சோப் ஜெல்கள் பொருத்தமாக இருக்கும். சாதாரண சருமத்துக்கு கிளென்சிங் ஷீட்டுகளையும் உபயோகிக்கலாம். இவ்வகை கிளென்சர்களில் உள்ள பெட்ரோலாட்டம், தண்ணீரில் கரைந்து, முகம் கழுவியதும் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைக்கும். சாதாரண சருமம் உள்ளவர்கள், கிளென்சருடன் வரும் லூஃபா (உடம்பு தேய்த்துக் குளிக்க உபயோகிக்கிற நார் அல்லது வலை) உபயோகித்தும் சருமத்தை கிளென்ஸ் செய்யலாம்.

டிரை கிளென்சர்ஸ் வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் கிளென்சர் உபயோகித்தால் அது சரும வறட்சியைக் குறைக்கும். முகத்துக்கும் சரும மடிப்புகளுக்கும் மட்டும் கிளென்சர் உபயோகிப்பது நல்லது. லிக்யுட் கிளென்சர் அடங்கிய கிளென்சிங் ஷீட்டுகளும் இப்போது கிடைக்கின்றன. அதுவும் வறண்ட சருமத்தைக் காக்கும்.

ஆயிலி ஸ்கின் கிளென்சர் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தண்ணீர் கலந்த கிளென்சர் அல்லது எண்ணெய் பசை சருமத்துக்கான டீப் கிளென்சர்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இது எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தும். சோப் ஜெல்களும் சற்றே ஸ்ட்ராங்கான லிக்யுட் கிளென்சர்களும் எண்ணெய் பசையான சருமத்துக்கு உதவும். பருக்கள் உள்ள சருமத்துக்குப் பயன்படுத்தும் கிளென்சர்களை எல்லாம் எண்ணெய் பசை சருமத்துக்கும் பயன்படுத்தலாம்.

காம்பினேஷன் ஸ்கின் கிளென்சர் சரியான பி.ஹெச். பேலன்ஸ் உடைய நுரை தரக்கூடியதும், ஜெல் வடிவிலானதுமான கிளென்சர் அல்லது லோஷன் வடிவிலான கிளென்சர்கள் காம்பினேஷன் முதல் வறண்ட சருமம் வரை பொருத்தமாக இருக்கும். சென்சிடிவ் ஸ்கின் கிளென்சர் வாசனை மற்றும் பிரிசர்வேட்டிவ் போன்றவை சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களை எளிதாக பாதிக்கும். இவர்கள் Cleaning Grains எனப்படுகிற துகள்கள் உள்ள கிளென்சர்களை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். சரியான பி.ஹெச். பேலன்ஸ் உள்ள கிளென்சர்கள் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்குப் பொருந்தும். திரவ வடிவிலான கிளென்சரையும் பயன்படுத்தலாம்.

அக்னே கிளென்சர்ஸ் அக்னே கிளென்சர்ஸ் என்பவை முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய், மேக்கப், வியர்வை, தூசு ஆகியவற்றை நீக்குவதற்கு உதவுகிறது. இந்த வகை கிளென்சரை உபயோகிப்பதன் மூலம் பருக்களுக்காக உபயோகிக்கிற அழகு சாதனங்களும் சருமத்தினுள் நன்கு ஊடுருவும். அதே நேரம் இந்த கிளென்சரை அளவுக்கதிகமாக உபயோகித்தால் சருமம் வறண்டு, பாதிக்கப்படும். பருக்கள் உள்ளவர்கள் இந்த கிளென்சரை ஒரு நாளைக்கு அதிக பட்சம் 2 முறைக்கு மேல் உபயோகிக்க வேண்டாம்.

ஆன்ட்டி பாக்டீரியல் கிளென்சர் இந்த வகை கிளென்ஸர் மருத்துவ தன்மை நிறைந்தது. இதில் டிரைக்ளோசன் என்கிற முக்கிய பொருள்தான் கிளென்சிங் தன்மைக்கு பிரதானமாக உதவுகிறது. சருமத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பு தேவைப்படுகிற வேலைகளில் இருப்பவர்களுக்கு இந்த கிளென்சர் பலனளிக்கும். அதிக பருக்கள் உள்ளவர்களுக்கான வகை வகையான ஆன்ட்டி பாக்டீரியல் கிளென்சர்கள் இப்போது கிடைக்கின்றன.

மைல்ட் கிளென்சர் உங்கள் சருமம் எரிச்சலுடனும் பாதிப்புடனும் இருந்தால் நீங்கள் மைல்ட் கிளென்சர்களை பயன்படுத்தலாம். பருக்கள் உள்ளவர்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமான மைல்ட் கிளென்சர்களும் கிடைக்கின்றன. எண்ணெய் பசை அற்றதும், Non Comedogenic தன்மை கொண்டதுமான கிளென்சர்கள் இவர்களுக்கு பரிந்துரைக்கப்படுபவை.

கிளென்சர் உபயோகப்படுத்தும் முறை, வீட்டிலேயே தயாரிக்கிற கிளென்சர்.... இன்னும் பல கிளென்சர் தகவல்கள் அடுத்த இதழிலும்!

வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் கிளென்சர் உபயோகித்தால் அது சரும வறட்சியைக் குறைக்கும்.

அதிக பருக்கள் உள்ளவர்களுக்கான வகை வகையான ஆன்ட்டி பாக்டீரியல் கிளென்சர்கள் இப்போது கிடைக்கின்றன. பருக்கள் உள்ளவர்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமான மைல்ட் கிளென்சர்களும் கிடைக்கின்றன.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.