Cost of the smile..?

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
புன்னகை என்ன விலை?

அழகுக்கு அழகு சேர்ப்பது புன்னகை. பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக இன்று பலரும் அழகு சிகிச்சைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். இது தேவையா, அவசியமா, பாதுகாப்பானதா என்கிற கேள்விகள் முதலில் முக்கியம். ஃபேஷியல், ப்ளீச்சிங், ஸ்பா வரிசையில் இப்போது புதிதாக… டீத் ஒயிட்டனிங்! பற்கள் கொஞ்சம் மஞ்சளாக இருந்தால் கூட, உடனே பல் மருத்துவமனைகளிலோ, அழகு நிலையங்களிலோ வரிசையில் நிற்கிறார்கள். இப்படி செயற்கையாக பற்களை வெள்ளையடிப்பது சரியா? இது ஆரோக்கியமானதா?

பொதுவாக பற்கள் அனைவருக்கும் வெள்ளையாக இருக்காது. முத்துபோன்ற வெண்மை, அரை வெண்மை, வெளிர் மஞ்சள் (Pearl white, half white, pale yellow) என நிறங்கள் மாறுபடும். பல் முளைக்கும்போது ஏ1 ஷேடில் இருக்கும். வயதாகும்போது அது ஏ3 ஷேட் வரை குறையும். அதாவது, எனாமல் என்ற பல்லின் மேல்பகுதி நீங்கி, அடுத்த பகுதியான டென்டின் (dentin) தெரியத் தொடங்குவதே பற்களின் நிறமாற்றத்துக்குக்் காரணம். நரைமுடி வருவது எப்படி இயல்பான விஷயமோ… அதுபோல பற்கள் நிறம் குறைவதும், கொஞ்சம் மஞ்சளாக இருப்பதும் இயல்பானதே. இது நோயும் அல்ல. நோயின் அறிகுறியும் அல்ல.

ஏன் பற்கள் நிறமிழக்கிறது?

மனவேதனை, நீண்ட நாட்களுக்கு மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் பற்களின் நிறம் குறையலாம். சிலவகை ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கருவுற்ற பெண்கள் உட்கொள்வதால் குழந்தைக்கு பற்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. தண்ணீரிலோ, பாலிலோ ஃப்ளோரைடு (fluoride) அளவு அதிகரிக்கும்போது ஃப்ளோரோசிஸ் (Fluorosis) என்ற நோய் ஏற்படுவதாலும் பல்லின் நிறம் மாறும். தவிர பல்சொத்தை, பற்சிதைவு, காயங்கள் மற்றும் விபத்துகள், புகைப்பழக்கம், சர்க்கரைப் பொருள்கள் அதிகம் எடுத்துக் கொள்வது, குளிர்பானங்கள், டார்க் சாக்லெட், ஒயின், காபி, டீ குடித்தல், பற்களைப் பராமரிக்கத் தவறுதல் போன்றவை பற்களின் நிறம் மாறுவதற்கான காரணங்கள்.

டீத் ஓயிட்டனிங் அவசியமா? யார் யார் செய்து கொள்ளலாம்?

காரை பற்கள், கறை படிந்த பற்கள் மற்றும் ஃப்ளுரோசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு டீத் ஒயிட்டனிங் அவசியம். சிரிப்பதற்கே முடியாமல் தங்களது தன்னம்பிக்கையின் அளவு குறைந்துபோய் பற்களில் கறையோடு வருபவர்களுக்கு ஒயிட்டனிங் அவசியம். ஒயிட்டனிங் என்பது பற்களின் கறையை மாற்றி செயற்கையான முறையில் வெள்ளையாக மாற்றும் சிகிச்சை.

எப்படிச் செய்யப்படுகிறது?

ரசாயனங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சை இது. மருத்துவர் மட்டுமே இதைச் செய்ய முடியும். யாருக்குத் தேவை என்பதை மருத்துவர்தான் முடிவு செய்வார். பல் சிகிச்சைக்காக வரும் பலர் பற்களை வெண்மை யாக்குவது பற்றி எங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் அவர்கள் அனைவருக்கும் அதைப் பரிந்துரைப்பது இல்லை. டீத் ஒயிட்டனிங்கை அழகு நிலையங்களில் செய்துகொள்வது தவறானது. இன்டர்நெட்டில் படித்து, ‘ப்ளீச்சிங் கிட்’ வாங்கி தாங்களே முயற்சிப்பதும் ஆபத்தில் முடியும்.

பற்களை அழகாக பாதுகாப்பது எப்படி?

டீத் ஒயிட்டனிங் செய்வதற்குப் பதில், ஆண்டுக்கு இருமுறை பற்களை கிளீனிங் செய்துக் கொள்ளலாம். கிளீனிங் செய்வதால் பற்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. பற்களும் சிறிது வெள்ளையாக மாறும். பற்களைச் சுத்தம் செய்வதினால் பற்சிதைவு, பற்குழி, எனாமல் நீங்குதல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். பற்களில் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளையும் கிளீனிங் முறை குறைக்கும்.

கிளீனிங் செய்த சில நாட்களுக்கு சூடான மற்றும் குளுமையான பொருள்களை சாப்பிட்டால், பற்கூச்சம் ஏற்படும். இதனால் பயப்பட வேண்டாம். நீண்ட நாட்களாகக் காரை படிந்த பற்களில் கிளீனிங் செய்யப்பட்ட பிறகு பற்களின் மேல் பகுதியில் (surface) உமிழ்நீர் படும்போது கூச்ச உணர்வு ஏற்படும். பிறகு பற்கூச்சம் ஏற்படுவது தானாக நின்றுவிடும். இதற்காக சென்சிட்டிவ் டூத் பேஸ்ட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதயத்தில் இருந்துவரும் புன்னகையே பிறரை ஈர்க்கும். புன்னகைக்கும் பற்களின் வெண்மை அல்ல!

‘ஸ்மைலி’ டிப்ஸ்

‘ஒரே வாரத்தில் வெள்ளைப் பற்கள்’ விளம்பரங்களை பார்த்து, சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் பேஸ்ட்களை பயன்படுத்தக் கூடாது. அதில் ப்ளீச்சிங் ஏஜென்ட் (Bleeching agent) கலந்திருப்பதால், சில நாட்களிலே பற்கள் வெண்மையானது போலத்தெரியும். நாளடைவில் எனாமல் நீங்கி பற்கள் சேதமடையவே வாய்ப்புகள் அதிகம்.

ஜெல், நிறைய கலர் அடங்கிய பேஸ்ட்களைப் பயன்படுத்தாமல், வெள்ளை நிறமான கீரீம் பேஸ்ட்களையே பயன்படுத்துங்கள்.அதிக நேரம் பல் தேய்ப்பதாலும், அதிகமான பேஸ்ட் பயன்படுத்துவதாலும் பற்கள் வெள்ளையாகாது. எனாமல் மட்டுமே நீங்கும். 3-5 நிமிடங்கள் வரை பல் தேய்த்தாலே போதும்.

ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்ப்பதுடன் அதற்குப் பயன்படுத்தும் பேஸ்ட் பட்டாணி அளவில் இருந்தாலே போதும்.

பற்களுக்கு எதிரியான புகைப்பழக்கம், சர்க்கரை, கலர் நிறைந்த (பானங்கள், ஸ்வீட்ஸ், சாக்லெட், சாட் உணவுகள்), கோலா பானங்கள், ஐஸ் வாட்டர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், ஒயின் ஆகியவற்றைக் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

சாக்லேட், சர்க்கரை கலந்த உணவைச் சாப்பிட்ட பின் அரை மணி நேரத்துக்குள் பழங்களைச் சாப்பிட வேண்டும். இதனால் பற்களில் ஒட்டியிருக்கும் சர்க்கரைப் படலம் நீங்கிவிடும்.

நிறைய நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். இதனால் பற்களில் காரை படிவது தவிர்க்கப்படும். பால் பொருட்கள், தண்ணீர், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள், நட்ஸ் ஆகியவை பற்களுக்கு நன்மை செய்யும்.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.