Does drinking milk causes cold? - பால் குடித்தால் சளி பிடிக்குமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#1
பால் குடித்தால் சளி பிடிக்குமா?

டாக்டர் கு. கணேசன்

பால் குடித்தால் சளி பிடிக்கும் என்று பொதுவாகச் சொல்கிறார்கள். இது சரியா?

சரியில்லை.

பால் குடிப்பதற்கும் சளி பிடிப்பதற்கும் தொடர்பில்லை. என்றாலும், இந்த நம்பிக்கை காலம்காலமாக மக்களிடம் இருந்துவருகிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தண்ணீர் கலக்காத பாலைக் குடித்ததும், அதிலுள்ள ஒருவித கொழுப்புப் பொருள் நாக்கிலும், தொண்டையிலும் பிசுபிசுப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது. இதைத்தான் மக்கள் ‘சளி’என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

சளி எப்படி உருவாகிறது?
மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய இடங்களில் ‘கோழைப் படலம்’ (Mucus membrane) என்ற அமைப்பு இருக்கிறது. இது ‘மியூசின்’ (Mucin) எனும் திரவத்தைச் சுரக்கிறது. சாதாரணமாகப் பார்ப்பதற்கு இது பளிங்கு மாதிரி இருக்கும்; பிசின் மாதிரி ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. சுவாசப் பாதை வறண்டுவிடாமல் இருக்க இதுவே உதவுகிறது. காற்றில் கலந்து வரும் தூசு, கிருமிகள் போன்றவை இதில் ஒட்டிக்கொள்வதால், காற்று சுத்தமாகி நுரையீரலுக்குள் செல்கிறது. இப்படி, நம்முடைய இயல்பான சுவாசத்துக்கு இது தேவைப்படுகிறது.

காற்றில் வரும் தூசும் கிருமிகளும் மிக அதிக அளவில் இருந்தால், மியூசின் சுரப்பும் அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல், சில வகைக் கிருமிகளோடு போராடும் குணமும் மியூசினுக்கு உண்டு. இந்தப் போராட்டத்தில் கிருமிகள் பல இறக்கும்; பழைய கோழைப்படலமும் அழியும். அப்போது தூசு, இறந்துபோன கிருமிகள், அழிந்து போன கோழைப்படலச் செல்கள் எல்லாமே மியூசின் திரவத்தில் கலந்து ‘சளி’யாக (Sputum) மாறும்.

பளிங்குபோல் இருக்க வேண்டிய மியூசின் திரவம் சளியாக மாறியதும் பழுப்பாகவோ, மஞ்சளாகவோ காணப்படும். கோழைப்படலத்தைப் பாதிக்கும் கிருமியைப் பொறுத்துச் சளியின் நிறம் பச்சை, சிவப்பு எனப் பல நிறங்களில் இருக்கலாம். கிருமிகளின் பாதிப்பு மூக்கில் இருந்தால், மூக்குச் சளி: தொண்டையில் பாதிப்பு இருந்தால், தொண்டைச் சளி; நுரையீரலில் பாதிப்பு என்றால், நெஞ்சுச் சளி என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.

பாலில் என்ன இருக்கிறது?
பாலில் கொழுப்புச் சத்து 3 6 சதவீதம், புரதம் 3 4 சதவீதம், தண்ணீர் 85 - 88 சதவீதம், தாதுகள் 0.7 சதவீதத்துக்குக் குறைவாக, சர்க்கரை ஐந்து சதவீதத்துக்குக் குறைவாக உள்ளது. பாலிலுள்ள கொழுப்புச் சத்தானது கிளிசரைடு எனும் கொழுப்பாக உள்ளது. அதோடு மொத்தம் 64 வகைக் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. சிறிதளவு பாஸ்போ லிபிட், கரோட்டினாய்டு ஆகிய சத்துகளும் உள்ளன. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைத் தரக்கூடிய இம்யூனோகுளாபுலின்களும் பாலில் உண்டு.

மேலும் பாலில் குளுகோஸ், கேலக்டோஸ் சர்க்கரைகளின் கலவை உள்ளது. பாலின் இனிப்புச் சுவைக்கு இதுதான் காரணம். இது உணவுச் செரிமானத்துக்கு மிகவும் அவசியமான ஒரு சர்க்கரைப் பொருள். பாலில் வைட்டமின்-ஏ, பி1, பி2, சி, டி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துகளும் உள்ளன.

பாதுகாப்பான பால் எது?

பால் ஒரு சத்துப்பொருள்தான் என்றாலும், பல வகை பாக்டீரியா வளர்வதற்கான சிறந்ததொரு ஊடகமாகவும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் அதைக் கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடித்தால் இந்த ஆபத்தும் மறைந்துவிடுகிறது. பாலின் கொதிநிலை 100.2 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பத்தில் பாலை சுமார் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள அனைத்து பாக்டீரியாவும் இறந்துவிடும்; பால் சுத்தமாகும்; சளி பிடிக்க வாய்ப்பில்லை.

ஓர் எச்சரிக்கை!

விலங்கினப் பால்களில் காசநோய்க் கிருமிகளும் டைபாய்டு கிருமிகளும் இருக்குமானால், அந்தப் பாலைக் காய்ச்சாமல் குடிப்பவர்களுக்கு இந்த இரண்டு நோய்கள் ஏற்பட்டுவிடும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பாலைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும்போது பாக்டீரியா இறந்து விடும் என்பதால் மேற்சொன்ன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் குறைந்துவிடுகிறது.

பால் ஒவ்வாமை இருந்தால்?

ஒரு சிலருக்குப் பால் ஒவ்வாமை இருக்கும். இவர்களுக்குப் பால் குடித்ததும் வயிற்று உப்புசம், வயிற்று வலி, இரைச்சல், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சினைகள் அதிகம் தலைகாட்டும். மூக்கு ஒழுகல், தும்மல், இருமல், சளி போன்றவை மிக அரிதாகவே ஏற்படும். இவர்கள் பால் குடிப்பதைத் தவிர்க்கலாம்.

 
Last edited:

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.