Do's & Don'ts after Ceaserean delivery- சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
#1
இன்றைய தலைமுறையின் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவம் என்றாலே, சிசேரியன் என்றாகிவிட்டது. அதற்கு மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படும் காரணங்கள், `பெண்கள் ஒத்துழைப்பது இல்லை. இன்றைய பெண்கள் உடலளவில் பலவீனமாக இருக்கிறார்கள்' என்பது.

பெண்களின் உடலளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகவே சிசேரியன் உள்ளது. `ஒருநாள் வலிக்கு பயந்ததால், ஒவ்வொரு நாளும் வலியை அனுபவிக்கிறோம்' என வேதனைப்படும் பெண்கள் உண்டு. சுகப்பிரசவத்தில் மூன்று முதல் ஐந்து நாள்களிலே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். சிசேரியனில் குறைந்தது ஐந்து மாதமாவது ஓய்வு எடுக்கவேண்டும். கடினமான வீட்டு வேலைகள் செய்யக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டிய செயல்களைப் பகிர்கிறார், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர், கீதா ஹரிப்பிரியா.
சிசேரியன் என்பது பெண்களின் உடலில் ஒரு பகுதியைக் கிழித்து, குழந்தையை வெளியே எடுக்கும் முறை. சிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆனால், அதன்பின் ஏற்படும் வலிகள் அதிகம்.

இயல்பு வாழ்க்கை:

ஆபரேசன் செய்து தையல் போட்ட இடத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறைந்தது ஆறு வாரத்துக்குக் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது, கீழே அடிக்கடி உட்கார்ந்து எழுவது. அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். இயல்பு வாழ்க்கை வேலைகளுக்குக் குறைந்தது 6 வாரத்துக்கு ஓய்வு கொடுத்துப் பின்னர் தொடங்கலாம்.

உணவுப் பொருள்கள்:

பிரசவ காலத்திலும், அதற்குப் பின்னரும் பெண்களுக்கு அதிகளவு எனர்ஜி இழப்புகள் ஏற்படும். இந்நிலையில், தாய் சாப்பிடும் உணவுகள்தாம் குழந்தைக்குப் பால் மூலமாகச் சென்றடையும். எனவே, குழந்தையின் ஆரோக்கியம் காக்கப்படவும் தாய்மார்கள் அதிகளவிலான புரோட்டின், இரும்புச்சத்துகள் நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும். உணவின் மூலம் மட்டுமே ஈடு செய்யமுடியாது என்பதால், மருத்துவர் ஆலோசனையுடன் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் போன்றவற்றுக்கு மாத்திரைகள் உட்கொள்ளலாம்.மருத்துவர் ஆலோசனை:

நிறைய பெண்களுக்குக் குழந்தைப் பேற்றுக்குப் பிறகு தங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்தில் ஈடுபாடு போய்விடுகிறது. அதனால், எடை அதிகரிப்பு ஏற்படும். இதனைத் தடுக்க, சிசேரியனுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் அடிவயிற்றுப் பகுதி தசைகளுக்கான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். முதல் மூன்று மாதத்துக்கு நடைப்பயிற்சிகள் மட்டும் போதுமானது. அதன்பின் எளிமையான யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். சிசேரியனுக்குப் பிறகு வயிற்றின் சதையைக் குறைக்க டம்மி பெல்ட் அணிவது அவசியம். மேலும், பிரசவ காலத்தில் ஏற்பட்ட தழும்புகள் மறைய ஆன்ட்டி-ஸ்ட்ரெச் மார்க் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.தாம்பத்தியம்:

சிசேரியன் செய்தபின் பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு மூன்று மாதங்கள் தேவை. இந்தச் சமயத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால், காயம் அதிகமாவதுடன், கர்ப்பப்பை பிரச்னைகளும் வரலாம். இன்ஃபெக்ஷன், அலர்ஜியம் உண்டாகலாம். எனவே, மூன்று மாதங்களுக்குத் தாம்பத்தியத்தைத் தவிர்ப்பது நல்லது. சில பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் வரை மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. இதுபோன்ற சூழலில் அடுத்த குழந்தை கருவுறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதால், முதலிலே மருத்துவரின் ஆலோசனை பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது.மருந்துகள் தவிர்க்கலாம்:

தாய்மார்கள் உண்ணும் உணவுகள் எல்லாம் குழந்தைக்குச் செல்லும் என்பதால், தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த வலிநிவாரணி மருந்துகளையும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேபோல ஆறு மாதத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் டயட் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.வாகனம் ஓட்டுதல்:

பெரும்பாலான பெண்கள் இன்று இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். சிசேரியனுக்குப் பிறகு எத்தனை மாதங்கள் டூவீலர் ஓட்டக் கூடாது என்பது பெண்களின் கேள்வியாக உள்ளது. சிசேரியன் முடிந்த 6 மாதத்துக்குப் பிறகு தாராளமாக வண்டி ஓட்டிச்செல்லலாம். அதேசமயம், பொறுமையும் கவனமும் முக்கியம். வண்டி ஓட்டும்போது ஏற்படும் எதிர்பாராத அதிர்வுகள் கர்ப்பப்பையில் காயங்களை ஏற்படுத்தலாம். எனவே, லேசான வலியை உணர்ந்தாலே மருத்துவரை அணுகுவது அவசியம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.