Dysmenorrhea-வலியுடன் வருகிறதா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வலியுடன் வருகிறதா?மாதவிலக்கின் போது உண்டாகிற அவதிகளை நினைத்தால் பெண் பிறவியே வேண்டாம் என நினைக்கத் தோன்றும் பல பெண்களுக்கு. மாதவிலக்கு நாட்களில் உண்டாகிற வலி, பெரும்பாலான பெண்களுக்கு மரண வேதனையானது.வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம், அதற்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகச் சொல்கிறார் பொது மருத்துவர் நிவேதிதா. மாதவிலக்கு ஏற்படும்போது வருகிற வயிற்று வலியை டிஸ்மெனரியா (Dysmenorrhea) என்கிறோம். மாதவிலக்கு நாட்களுக்கு முன்போ, மாதவிலக்கின் இரண்டாவது நாளோ, மாதவிலக்கின் 5 நாட்களுக்குமோ இந்த வலி ஏற்படும். டிஸ்மெனரியாவில் பிரைமரி டிஸ்மெனரியா, செகண்டரி டிஸ் மெனரியா என இரு வகை உண்டு.

இது பருவமடைந்த புதிதில் இளம் பெண்களுக்கு ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் போது முதல் 2 நாட்களில் லேசான வலி ஏற்படுகிறது. 10 சதவிகிதப் பெண்களுக்கு அந்த வலி கடுமையாக இருக்கிறது.

இவர்களுக்கு இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுவதால் மருத்துவம் தேவைப்படுகிறது. வலி ஏற்படும் போது வேறு பெண் நோயியல் பிரச்னை எதுவும் இல்லையென் றால், அதை முதல் நிலை வலியுள்ள மாதவிலக்கு (பிரைமரி டிஸ்மெனரியா) என்கிறோம். இது பிராஸ்டாகிளாண்டின் (Prostaglandin) எனப்படுகிற பொருள் உடலினுள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது.

இந்தப் பொருள் மிகுதியாகும் போது, கர்ப்பப்பையின் தசைகள் சுருங்கி, அதன் உட்சுவர் சேதாரமாகிறது. பொதுவாக இந்த முதல் நிலை வலியுற்ற மாதவிலக்கு தீங்கற்றது. இது 20 வயதுக்குப் பிறகு அல்லது குழந்தைப்பேற்றுக்குப் பிறகு மறைந்து விடுகிறது.

பெண் நோயியல் பிரச்னைகளுடன் இணைந்து மாதவிலக்குடன் கூடிய வலி ஏற்படுவதை இரண்டாம் நிலை வலியுள்ள மாதவிலக்கு (செகண்டரி டிஸ்மெனரியா) என்கிறோம். இது கர்ப்பப்பையின் சுவர்களில் ஃபைப்ராய்டு எனப்படும் நார்த்திசுக் கட்டிகள் ஏற்படுவதாலோ, பால்வினைத் தொற்றுகளினாலோ, கர்ப்பப்பையின் உட்படலம் வேறு இடங்களில் பரவிப் பெருத்ததாலோ, இடுப்புக்குழி நோய்களாலோ, கருப்பைக் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகளாலோ ஏற்படுகிறது.

சிலருக்கு இதுபோன்ற வயிற்றுவலியுடன் வாந்தி, மயக்கம் போன்றவையும் காணப்படும். இதனால் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படலாம்.சிலருக்கு எவ்வித பிரச்னைகளும் இல்லாமலேயே மாதவிடாயின் போது வயிற்றுவலி (Primary Dysmenorrhea)ஏற்படலாம். இதற்கு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து அதற்கான மருந்துகளை உட்கொள்ளலாம்.

இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரைமரி டிஸ்மெனரியாவில் கர்ப்பப்பை உள் சுவரில் இருந்து வெளியேறும் ஹார்மோன் விடுவிக்கப்பட்டு வெளியே வரும்போது வலி உண்டாகும். இதை சரி செய்வதற்கு பிராஸ்டா கிளாண்டின் சின்தஸிஸ் இன்ஹிபிட்டார் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும்.

பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி குறைவு, இரட்டை கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் உருவாகாமல் இருப்பது மாதிரியான வளர்ச்சிக் குறைபாடு இருக்கும் பெண்கள், பருவமடையும் போது கர்ப்பப்பையில் இருந்து வெளியே வரும் உதிரம் சரியாக வர முடியாமல் கர்ப்பப்பை உள்ளேயே தேங்கும் நிலை ஏற்படலாம். இதனால் ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் அதிகமான வலி ஏற்படலாம்.

சில இளம்பெண்களுக்கு மாதவிலக்கு வலி வந்தும், உதிரம் வெளியே தெரியாமல் வெள்ளைப்படுதல் போன்ற நிகழ்வும் இருக்கலாம். அது அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி குறைபாடு உள்ளதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலமும் ஹைமனக்டமி (Hymenectomy) என்ற அடிவழி சிகிச்சை மூலமும் தீர்வளிக்கலாம்.

டிஸ்மெனரியாவால் சிலருக்கு குழந்தையின்மை பிரச்னை கூட ஏற்படலாம். குழந்தை இருப்பவருக்குக்கூட திடீரென வயிற்றுவலி ஏற்படலாம். அது செகண்டரி டிஸ்மெனரியா வகையாகவும் இருக்கலாம்.இதனை கண்டறிய முக்கிய விஷயம் நோயாளியின் உடல்நலப் பின்னணியை ஆராய்தல், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. அல்லது சிடி ஸ்கேன், மருத்துவப் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.தற்காலிகத் தீர்வுக்கு...

இபுபுரூஃபென் அல்லது டைகுளோஃபெனாக் சோடியம் அல்லது டைசைகுளோமைன் மாத்திரைகளை மருத்துவரிடம் கேட்டு உபயோகிக்கலாம். படுத்த நிலையில் வயிற்றுப் பகுதிக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அடிக்கடி நாப்கின்களை மாற்றியாக வேண்டும்.

வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்தாலே, இந்தப் பிரச்னை சரியாகும். இளம் சூடான தண்ணீரில் குளிப்பதும், மிதமான உடற்பயிற்சிகளும் கூட வலியைக் குறைக்கும். இவற்றையும் மீறி, மாதவிலக்கின் போதான வலி மிகக் கடுமையாகவும், வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்றவை 3 நாட்களுக்கும் மேல் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரைக் கலந்தாலோசிப்பதே பாதுகாப்பானது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.