Fatigue-உற்சாகம் பொங்கட்டும்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உற்சாகம் பொங்கட்டும்!


'சந்தடியே இல்லாமல் பலரையும் தாக்கும் ஒரு பிரச்னை ஃபட்டீக் (Fatigue) எனப்படுகிற சோர்வு. ஃபட்டீக் ஒரு நோய் அல்ல; அது ஒரு பிரச்னை. ஆனால், நாளடைவில் பல நோய்களை இது அழைத்து வந்துவிடும்'' - உடல் மற்றும் மனச் சோர்வுபற்றி பேச ஆரம்பித்தார் பொதுநல மருத்துவரான ராஜாமணி.

சோர்வு ஒரு நோய் அல்ல என்கிற பட்சத்தில், அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொண்டு மருத்துவரைத் தேடிப்போக வேண்டுமா?

''ஒருவர் சோர்வாக இருக்கிறார் என்றால் உடல்ரீதியான ஏதாவது குறைபாடு முக்கியக் காரணமாக இருக்கலாம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அனீமியா போன்ற குறைபாடு இருப்பவர்கள் சோர்வால் பாதிக்கப்படுவார்கள். இது தவிர உடலுக்குத் தேவையான சக்தியையும் சத்துக்களையும் கொடுக்கும் காய்கறிகள், பழங்களைத் தேவையான அளவு சாப்பிடாதவர்களுக்கும் சோர்வு வரும். குறிப்பாக வைட்டமின் பி 12 குறைபாட்டால் மந்தத்தன்மையும் தாமதமாகப் புரிந்துகொள்ளும் நிலையும் இருக்கும்.


முன்புபோல் வேலை பார்க்க முடியவில்லை, தூங்க முடியவில்லை, பசியின்மைப் பிரச்னையும் இருக்கிறது என்றால், அது உடல் சோர்வின் அறிகுறியாக இருக்கலாம். அதே நேரத்தில் சோர்வை அசதியோடு குழப்பிக்கொள்ளக் கூடாது. அசதி என்பது ஓய்வு எடுத்தாலோ... தூங்கி எழுந்தாலோ சரியாகிவிடும். ஆனால், சோர்வு என்பது ஓய்வு எடுத்தாலும் சரியாகாது.

சோர்வு என்பது நோய் அல்ல என்றாலும், அது ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கும். அப்படியே இல்லாவிட்டாலும், நாளடைவில் ஏதாவது நோயைக் கொண்டுவந்துவிடும். சோர்வுக்கு உடனடி விளைவுகள் இல்லாவிட்டாலும், அது நாளடைவில் பெரிய பின்விளைவுகளை உண்டாக்கும். சோர்வாகவே இருந்தால் சோர்வின் தொடர்ச்சியாக சோம்பலும், சோம்பலின் தொடர்ச்சியாக உடல்


பருமனும் ஏற்படும். உடற்பருமன் வந்து விட்டால், மற்ற எல்லா வியாதிகளும் தாமாகவே வந்துவிடும். மனதும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. மனது சரியில்லாமல் இருந்தால், உடல் சோர்ந்துவிடும். அதேபோல, உடலில் பிரச்னை இருந்தாலும் மனம் சோர்வடையும். இதுதவிர தொழில் ரீதியாகவும் பாதிப்பு வரும். சிந்தனையை ஒருமுகப்படுத்த முடியாமல் செக்குமாடுபோல் இயந்திரத்தனமாக வேலையில் ஈடுபட வேண்டிய மனநிலை ஏற்படும். அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இல்லாமலேயே போய்விடலாம்'' என விளக்கமாகச் சொல்கிறார் ராஜாமணி.

சோர்வுப் பிரச்னைகுறித்து அணுவியல் தைராய்டு சிறப்பு மருத்துவரான ஆர்.ராம்குமார் சொல்வதும் கவனிக்கத்தக்கது. ''சரிவர சாப்பிடாமல் இருப்பது, குறைவானத் தூக்கம், உடலில் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறை ஆகியவற்றினாலும் வரும் சோர்வு அதிகபட்சமாக இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால், நன்றாகத்தான் சாப்பிடுகிறேன், தூங்குகிறேன் எனக்கு ஏன் சோர்வு வருகிறது என்று ஒருவருக்குத் கேள்வி எழுந்தால், அவர் தைராய்டு பரிசோதனை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், தைராய்டு சுரப்பு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஒருவருக்கு சோர்வு ஏற்படும்'' என்றவர், 'சோர்வு ஒருவரைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?’ என்ற கேள்விக்கும் பதில் கூறினார்.

''தினசரிக் களைப்பில் இருந்து நம்மைப் புதுப்பித்துக்கொள்ள தூக்கம்தான் உதவுகிறது. 6 மணி நேரத்துக்குக் குறைவாகவும் 10 மணி நேரத்துக்கு அதிகமாகவும் தூங்கினால், அது சோர்வை உண்டாக்கும். இரவு நேரத்தில் சராசரியாக எட்டு மணி நேரம் தூங்குவது சிறந்தது. தூக்கத்தின்போது நம் உடலில் சுரக்கும் எண்டார்ஃபின் என்ற ஹார்மோன் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்.

யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றை நாம் மேற்கொள்ளும்போதும் இந்த எண்டார்ஃபின் அதிகமாகச் சுரந்து புத்துணர்வைக் கொடுக்கும். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு விதமான காய்கறிகள் மற்றும் ஒரு வகைப் பழம் ஆகியவற்றைச் சாப்பிடுவது நல்லது. அதேபோல், சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும் என்பதும் அவசியம். மது, புகை போன்ற தீயப் பழக்கங்கள் உடலின் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கக்கூடியவை. இவற்றை விட்டுவிடுவது சோர்வுக்கு மட்டும் அல்ல... எல்லாவற்றுக்குமே நல்லது!'' என்று முடித்தார் ராம்குமார்.

சோர்வு அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டால், 'சோர்வு இனி இல்லை...’ என்று உற்சாகமாய் பாடலாம்!

டாக்டர். எஸ்.மோகன வெங்கடாசலபதி,
மனநல மருத்துவர்.


''மனச்சோர்வு (Depression) வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் ஏற்படும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது முதல் தற்கொலைச் சம்பவங்கள் வரை பலவற்றுக்கும் மனச்சோர்வுதான் மூலக் காரணம்.

அறிவியல்பூர்வமாகச் சொன்னால், நம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள்தான் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்குத் தகவல்களைக் கடத்துகின்றன. இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் இருக்கும் செரட்டோனின், டோபமைன் ஆகிய வேதிப்பொருட்களின் அளவு குறையும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள், மணிக்கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். நாளடைவில் தன்னைத்தானே வெறுப்பது, இந்த ஊரும் உலகமும் நமக்கு எதிராக இருப்பதாக நினைப்பது ஆகியன மனச் சோர்வின் வெளிப்பாடுகள். இனம்புரியாத பயம், காரணம் இன்றி அழுகை என வளரும் மனச்சோர்வு இறுதியாகத் தற்கொலை எண்ணங்களையும் ஏற்படுத்தும். உடல் சோர்வைப் போலவே மனச்சோர்வும் பெண்களைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதனால், மனச்சோர்வு அதிகமாக இருப்பவர்களையும் இரண்டு முறைக்கு மேல் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தவர்களையும் உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துப்போவது முக்கியம்.''
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.