Food for Asthma Patients-ஆஸ்துமாவிற்கான உணவு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆஸ்துமாவிற்கான உணவு


“குளிர் காலத்தில வரும்; தூசியிலே நின்னா வரும்”, என்ற நிலைமையத் தாண்டி, எப்போதுமே நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் என நெஞ்சுக்குள் ஏதோ சிம்பொனி கேட்டுக் கொண்டேயிருந்த ஆஸ்துமாக் காலம் அது.

டவுண் வாகையடி முக்கு வரை பஸ்ஸில் போய், டபுள்ஸ் வைக்கத் தெரியாத அப்பாவின் சைக்கிளுக்காக காத்திருப்பேன். திருனெல்வேலி டவுணில் ,அந்த எண்பது வயதுக் கணபதியாபிள்ளை ஓமியோபதி டாக்டர் தாத்தாவைப் பார்க்கத் தான் இந்த பயணம்., தன் வீசிங்கிற்காக அந்த இனிப்புச் சவ்வரிசிகளை எடுக்கும் போது, “என்ன சாப்பிட்டான் அவன்?” என திட்டுவாரே, அதற்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்திக் கொண்டிருக்கும் போது அப்பா அருகில் வந்து நிற்பார். ”ஏல, ரொம்ப நேரமா நிக்கியா? ”ஏபிசி பஸ் ஸ்பீடுக்கு என்னாலே சைக்கிள் மிதிக்க முடியாதுல்லா, என்று கூறிக் கொண்டே, ஏறிக்கோலே” என்பார்.

நான் பின் ஸீட்டில் ஏறி அமர்ந்து கொள்ள, டபுள்ஸ் அடிக்க தெரியாத அப்பா, வீசிங்கில் நடக்க முடியாத என்னை உட்கார வைத்து உருட்டிக் கொண்டே டாக்டர் வீட்டுக்குச் செல்வோம்.
”ராத்திரியில் அதிரசம் திங்காதே! சளி பிடிக்கும்னு சொன்னா கேக்கிறியா? இதுல சாயந்திரம் கிரேப்ஸ் வேற தின்னியாமே?.. அம்மா சொன்னா.. ஏன் சாப்பாட்டில கட்டுப்பாடே இல்ல.. அப்புறம் எப்டி வீசிங் சரியாகும்..?” திட்டு முடியும் போது டாக்டர் வீட்டு வாசல் வந்திருக்கும்.. ம்ம் அப்புறம் அவர் ஆரம்பிப்பார்.

எனக்கு மட்டும்,” ஏன் இப்படி? அத திங்காத; இத திங்காதேன்னு. ஜெயந்தி மட்டும் எல்லத்தையும் சாப்பிடறா அவளுக்கு ஒண்ணும் வரலே; எனக்கு மட்டும் இப்படி இழுக்குது..” அன்றைக்கு எனக்கு இருந்த கேள்வி இன்னும் பலருக்கு இப்போதும் இருக்கிறது.
காய்ச்சல் தலைவலியில் இருந்து எச்.ஐ.வி.எயிட்ஸ் வரை நோயினை விரட்ட, உணவு ஒரு முக்கிய அம்சம்.

ஆஸ்துமா சிகிச்சையில் உணவு ஒரு மருந்தும் கூட. எப்படி? ஆஸ்துமா இருந்தால் காலை பானமாக மறந்தும் பாலோ அல்லது எந்த பவர் சீக்ரட் எனர்ஜியோ கலந்த பாலோ கொடுக்கத் தேவையில்லை.. பல் துலக்கியதும் முதலில் 2-3 குவளை நீர் வெதுவெதுப்பான நிலையில் அருந்துவது நல்லது,. அதன் பின் பால் கலக்காதத் தேநீர் சிறந்தது. “காபி/தேநீர் சாப்பிட்டா அதே மாதிரி கருப்பாயிடுவே,” என்று உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தயவு செய்து பூச்சாண்டி காட்டாதீர்கள்.

வெளுத்த பாலை விட கறுத்த தேநீரும் காபியும் எவ்வளவோ மேல்.
நல்ல வீசிங்கில் இரவில் சிரமப்பட்டிருந்தால் கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்து போட்டு கசாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நெஞ்சில் இரவில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி உடனடி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக இந்த கலவை கசாயத்தைக் காலை பானமாக குடித்துவர இரைப்பு கண்டிப்பாய்க் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால் முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவில் வீசிங்கில் சிரமப்பட்டவர்க்கு காலை உணவு சாப்பிடப் பிடிப்பதில்லை.

பசியும் இருப்பதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகு ரச சாதம், இட்டிலி என ஏதொவொன்றை சாப்பிடுவது நல்லது. ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல், அரை வயிற்றிற்கு சாப்பிடுவதும் வேண்டும். இடையில் தேநீர் சப்பிடுவதும் நல்லது.

மதிய உணவில் நீர்சத்துள்ள சுரை, புடலை, சவ்சவ் இவற்றைத் தவிர்க்கலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்க வைக்கும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். வாயு உண்டாக்கும், செரிக்க நேரமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல.

மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரை தவிர்க்கலாம். சில வகை காய்களுக்கு சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வெண்டும். அதே சமயத்தில் தன் நாவிற்கு பிடிக்காததை எல்லாம், “அய்யோ எனக்கு பவக்கா அலர்ஜி! வெண்டக்கா ஒத்துக்காது” என நடிக்கத் துவங்கினால் இழப்பு கூடும்; இழுப்பும் கூடிடும்.
மாலையில் தேநீரோ/ சுக்குக் கசாயமோ எடுப்பது இரவு சிரமத்தை பெருவாரியாகக் குறைக்கும்.

இரவு உணவினை முடிந்தவரை ஏழரை மணிக்கு முன்பதாக எடுத்துப் பழகிக் கொள்வது நல்லது. கோதுமைரவை கஞ்சி, இட்டிலி நல்லது. பரோட்டா, பிரியாணி என படுக்கைக்குப் போகும் முன் புகுந்து உணவில் விளையாடுவது நல்லதல்ல. படுக்கைக்கு போகும் போது காலிவயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும்.
பல ஆஸ்துமா நோயினருக்கு வாழைப்பழம் குறித்து தேவையற்ற அச்சம் உள்ளது.

நாட்டு வாழைப்பழம் (தென் மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது), மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.மலத்தையும் இளக்க அது உதவிடும். ஆற்றலையும் தரும். மோரிஸ் அல்லது தற்போது சந்தையில் கிடைக்கும் ஹ்ய்பிரிட் மஞ்சள் வாழை கடைசிச் சாய்ஸாக இருக்கலாம்.

எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை பழங்களை மருந்து எடுத்துவரும் காலத்தில் கண்டிப்பாக 6-7 மாதம் முற்றிலும் தவிர்ப்பது வேண்டும். பகல் பொழுதில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகள் சிறிது மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
இனிப்பு பண்டங்கள் ஆஸ்துமாவிற்கு நல்லதல்ல. ரொம்பா ஆசைப்பட்டால் பகல் வேளையில் கொஞ்சமாய் சுவைக்கலாம்.அதுவும் குளிர் காலத்தில் தேவையில்லை.

பெரியவர்கள் மதிய உணவிற்குப் பின்னர் 2 வெற்றிலை சவைப்பதும் ஆஸ்துமாவிற்கு நல்லது தான். வெற்றிலையும் மிளகும் ஆஸ்துமா நோயில் பயனளிப்பதை நம்ம ஊர் சித்தர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு ஆய்வாளர்களுமே சொல்லியுள்ளனர். வெற்றிலையுடன் புகையிலையை மட்டும் மறந்தும் சேர்த்துவிட வேண்டாம்.

புற்று நோய் வந்துவிடும்.
சிவப்பரிசி அவல், புழுங்கல் அரிசி கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக் கீரை பொரியல், மணத்தக்காளி வற்றல், இலவங்கப்பட்டைத் தேநீர், இவையெல்லாம் ஆஸ்துமாகாரர் மெனு கார்டில் அவசியம் இடம் பெற வேண்டும். சிறந்த உணவுத் தேர்வுடன், சரியான சித்த மருத்துவம், மூச்சுப்பயிற்சி எனும் பிராணாயாமம் இருந்தால் ஆஸ்துமாவைக் கண்டு பயம் கொள்ளத் தேவையே இல்லை.

-Dr.G.சிவராமன்
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.