Gastric Problem -வாயுத் தொல்லை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தர்ம சங்கடம் தவிர்க்கலாமா?
பிரச்னைகள் பலவிதம்

வாயுத் தொல்லை அதிகமா இருக்குமோ!
*‘கொலை செஞ்சாக்கூட ஒத்துக்குடுவாய்ங்கெ. -- விட்டா ஒத்துக்கிட மாட்டாய்ங்கெ...’ - இது தென் தமிழக கிராமங்களில் பிரபலமான பழமொழி.

*வீட்டில் ஏதோ விசேஷம்... உறவினர்களும் நண்பர்களும் நிரம்பிய தருணம்... ‘அப்பா பாம் போட்டுட்டாரு!’ என்று ஏதோ ஒரு வாண்டு கிளப்பிவிட, குறும்புச் சிரிப்பு அலையென அறையெங்கும் எழும்பும்... சம்பந்தப்பட்டவரோ குறுகி நிற்பார்.
*தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்ல... பிரபல ஹாலிவுட் படங்களிலேயே கூட ‘வாயுத் தொல்லை’ கண்ணுக்குத் தெரியாத கதாபாத்திரமாக வலம் வந்து கலகலப்பையோ முகச்சுளிப்பையோ ஏற்படுத்தியிருக்கிறது.


ஏப்பமாக இருந்தாலும் சரி... யாருமற்ற தனி இடத்துக்குப் போய் பிரியச் செய்கிற வாயுவானாலும் சரி... எல்லோருக்கும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்னையே!

‘‘ஏழு பேர் டாக்டர்கிட்ட ஏதோ ஒரு பிரச்னைக்குப் போறாங்கன்னா அவங்கள்ல 2 பேருக்கு வாயுத் தொல்லை இருக்கும்’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் குடல் மருத்துவர் ஏ.ஆர்.வெங்கடேஸ்வரன்.

ஒருவருக்கு வாயுத் தொல்லை ஏன் ஏற்படுகிறது என்பதையும் விளக்குகிறார் டாக்டர் வெங்கடேஸ்வரன்... ‘‘ரொம்ப எளிமையா இந்த விஷயத்தைச் சொல்ல லாம். நாம சாப்பிடுற உணவு உணவுக் குழாய்க்குப் போய், அதுலருந்து வயிற்றுக்குப் போகுது. அதாவது, இரைப்பைக்குப் போய், அப்புறம் மெல்ல மெல்ல ஜீரணமாகுது.

உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவுல ஒரு வால்வு இருக்கும். அந்த வால்வு எப்பவும் மூடியே இருக்கும். உணவு வரும்போது மட்டும் திறந்து உள்வாங்கிக்கும். இப்படி முறையா நடந்தா பிரச்னை இல்லை. அந்த வால்வு திறந்திருக்கறதாலதான் வாயுத் தொல்லை ஏற்படுது...’’வாயுத் தொல்லை வேறு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

‘‘கீழே விழுந்து சின்னதா சிராய்ப்பு ஏற்படுது. கவனிக்காம விட்டுட்டா பெரிய புண்ணாகிடும் இல்லையா? அது மாதிரி தான் இந்தப் பிரச்னையும். தகுந்த சிகிச்சை எடுக்கலைன்னா கஷ்டம். நாம சாப்பிடுற உணவு ஜீரணமாகுறதுக்கு வயிற்றுக்குள்ளேயே ஒரு ஆசிட் சுரக்கும். வால்வு திறந்திருந்தா ஆசிட் வெளியில வந்து நெஞ்செரிச்சல் உண்டாகும். அதுவே கொஞ்சம் கொஞ்சமா அல்சரா மாறிடும். அப்புறம் ரணமா உருமாறும். இந்த சிக்கலான வாயுப் பிரச்னையை ‘ஜெர்டு’ன்னு (GERD - Gastroesophageal reflex disease) மருத்துவத்துல குறிப்பிடுவோம். இந்தப் பிரச்னை உள்ளவங்க உடனே சிகிச்சை எடுத்துக்கறது நல்லது.’’

யார் யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

‘‘இது ஒரு பொதுவான பிரச்னை. பருமன் பிரச்னை உள்ளவங்களுக்கு வரும். ஆஸ்துமா நோயாளிகள் அதற்கான மருந்து எடுத்துக்கறதால அவங்களுக்கு ஏற்படும். தொடர்ந்து வேற வேற பிரச்னைகளுக்கு மாத்திரை சாப்பிடுறவங்களுக்கும் வரலாம். இதெல்லாம் இல்லாதவங்களுக்கும் வரலாம். நம்ம வாழ்க்கை முறையும் முக்கியமான காரணம். இப்பல்லாம் நம்மள்ல நிறையபேர் அதிக தூரம் நடக்கறதில்லை... ஏ.சி.யில, கம்ப்யூட்டர் முன்னாடி 12 மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்துட்டு பீட்சா, சமோசான்னு கண்டதை சாப்பிடுறோம்... இதெல்லாம்தான் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணங்கள்...’’

தவிர்ப்பது எப்படி?

‘‘சாப்பிட்டதும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் கழிச்சுத்தான் படுக்கணும். அப்பத்தான் உணவு ஜீரணமாகறதுக்கு உடலுக்கு அவகாசம் கிடைக்கும். இரவில் எண்ணெய் உணவுகள், சாக்லெட், புரோட்டா, ஐஸ்க்ரீம் போன்றவற்றைதவிர்த்துடணும். அசைவ உணவுகளைக் குறைக்கணும். எண்ணெய் அதிகம் சேர்க்காத இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற டிபன் வகைகளை காலையிலும் இரவிலும் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகள், மொச்சை போன்றவற்றை கொஞ்சம் தவிர்க்கலாம்.

ரெகுலரா வாக்கிங் போறது, உடலுக்கு வேலை கொடுப்பது, உடற்பயிற்சி செய்வது, உடலைப் பருமனாக்காத - அதே நேரம் நம் உடலுக்கு வலு சேர்க்கும் சரிவிகித உணவு களை சாப்பிடுவது... இவையெல்லாம் இந்தப் பிரச்னை வராமல் தவிர்த்துவிடும். வாயுத் தொல்லை அதிகம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கணும். தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டால் குணம் பெறலாம். மாத்திரையால் குணப்படுத்த முடியாத அளவுக்கு இந்தப் பிரச்னை பெரியதாகிட்டா அறுவை சிகிச்சை அளவுக்குப் போகவும் வாய்ப்பிருக்கு...’’

வாயுத் தொல்லை உள்ளவர்களின் வாரிசுகளுக்கும் இது ஏற்படுமா?

‘‘நிச்சயமா இல்லை. அதற்கான வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு...’’
புளிச்ச ஏப்பத்திலிருந்து வாயுத் தொல்லை வரை சோடா குடித்தால் நிவாரணம் கிடைக்கும்
என்கிறார்களே... உண்மையா?

‘‘தவறு... அப்படியெல்லாம் நடக்காது. சோடா வாயுப் பிரச்னையைத் தீர்க்கும் என்பது ஒரு மனப்பிரமையே தவிர வேறொன்றுமில்லை. வாயுத் தொல்லையா? உடனே மருத்துவரை அணுகுங்கள்... அதுதான் உடம்புக்கு நல்லது!’’
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
வாய்வுக்குத் தீர்வு என்ன?

வாய்வுக்குத் தீர்வு என்ன?


அடிக்கடி மக்களை பாதிக்கும் வயிற்றுப் பிரச்னைகளைப் பட்டியலிட்டால், அதில் `வாய்வுத் தொல்லை’க்கு முக்கிய இடமுண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை படிக்காத பாமரர்கள்கூட `கேஸ் டிரபுள்’ (Gas trouble) என்ற வார்த்தையைத் தெரிந்திருந்து வைத்திருக்கிறார்கள். நோயைத் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்ல... அதற்கான சிகிச்சையையும் அவர்களே செய்துகொள்கிறார்கள்.

எப்படி காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்றவற்றுக்குத் தாங்களாகவே கடைகளில் மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிட்டுக் கொள்கிறார்களோ அவ்வாறே இந்த வாய்வுப் பிரச்னைக்கும் `இஞ்சி மரப்பா’வில் ஆரம்பித்து, `வெள்ளைப்பூண்டு, டைஜீன், ஜெலுசில், ஆன்டாசிட்’ என்று தங்களுக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் தங்கள் விருப்பப்படி பெட்டிக்கடையில் அல்லது மருந்துக்கடைகளில் வாங்கி, வாயில் அள்ளிப் போட்டுக் கொள்வதை நடைமுறையில் நாம் காண்கிறோம்.

எது வாய்வுத் தொல்லை?பசிக்குறைவு, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அடிக்கடி வாய்வு வெளியேறுதல், வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய உணவுப்பாதை பிரச்னையை அலோபதி மருத்துவம் `வாய்வுத் தொல்லை’ (Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்களோ வாய்வுக்குத் துளியும் தொடர்பில்லாத முதுகுவலி, மூட்டுவலி, முழங்கால் வலி, விலாவலி, தசைவலி என்று உடலில் உண்டாகின்ற எல்லா வலிகளுக்கும் வாய்வுதான் காரணம் என்று முடிவு செய்து கொள்கிறார்கள்.

வாய்வு எப்படி உருவாகிறது?

மனித உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப்பை, உணவுப்பாதை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வாய்வு இருக்க முடியும். நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல் தலை முதல் பாதம் வரை வாயு சுற்றிக்கொண்டு இருப்பதில்லை. அப்படிச் சுற்றினால் அது உயிருக்கே ஆபத்தாக அமையும். நாம் மூக்கு வழியாக சுவாசிக்கும் காற்று, தொண்டை மற்றும் சுவாசக்குழாய் வழியாக சுவாசப்பைக்குச் செல்வது உங்களுக்குத் தெரியும். இது ஒரு தனி வழி. இதற்கும் உணவுப்பாதைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. பிறகு எப்படி உணவுப்பாதைக்குக் காற்று வருகிறது?


பொதுவாகவே நாம் ஒவ்வொருவரும் உணவை உண்ணும்போது உணவுடன் சிறிதளவு காற்றையும் வயிற்றுக்குள் விழுங்கி விடுகிறோம். அதிலும் குறிப்பாக, அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, காபி, தேநீர் மற்றும் காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, சுருட்டு பிடிக்கும்போது, வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது,

அடிக்கடி தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே உணவுடன் காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவிகிதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறி விடும். மீதி குடலுக்குச் சென்று, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. இந்தக் காற்று விழுங்கல் சாதாரணமாக இருந்தால் தொல்லை எதுவும் தருவதில்லை. அளவுக்கு மீறினால்தான் இது ஒரு
`வாய்வுப் பிரச்சினை’யாக உருவாகும்.

குடலில் நொதிகள் குறைந்தால்..?

வயிற்றில் வாய்வு உருவாக இன்னொரு வழியும் உள்ளது. அதாவது, குடலில் உணவு செரிமானமாகும்போது, அங்கு இயல்பாகவே உள்ள தோழமை பாக்டீரியாக்கள் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன. அப்போது ஹைட்ரஜன், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்கள் உற்பத்தியாகின்றன.


இந்த வாயுக்கள் ஆசனவாய் வழியாக சத்தத்துடன் வெளியேறுகின்றன. சாதாரணமாக இந்த வாயுக்களில் துர்நாற்றம் இருப்பதில்லை. மாறாக, குடலில் சில நொதிகள் குறையும்போது புரத உணவு சரியாகச் செரிமானமாகாது. சில நேரங்களில் `அல்வளி பாக்டீரியா’க்களின் (Anaerobic bacteria) ஆதிக்கம் குடலில் அதிகரித்துவிடும். இந்த இரு நிலைமைகளில் அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டேன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகும். இவை ஆசனவாய் வழியாக வெளியேறும்போதுதான் துர்நாற்றம் வீசும். மூக்கை மூடிக்கொள்ள வேண்டியது வரும்.

பிற வழிகள் என்னென்ன?
நம் தினசரி உணவில் பால், பருப்பு, கிழங்கு மற்றும் இனிப்பு வகைகளை அதிகமாக சேர்க்கும்போது, அடிக்கடி வறுத்த உணவுகளைச் சாப்பிடும்போது, இரைப்பை அழற்சி, இரைப்பைப்புண், குடல்புழுக்கள், பித்தப்பைக் கற்கள், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல்வால் அழற்சி முதலிய நோய்கள் உள்ளபோது வாய்வுத்தொல்லை அதிகமாகும்.

அதுபோல் உணவுப்பாதையில் ஏற்படும் காசநோய், கணையநோய், கல்லீரல்நோய், புற்றுநோய், குடலடைப்பு போன்றவற்றால் குடலியக்கம் தடைபட்டு வாய்வு அதிகரிக்கலாம். சிலருக்கு ரத்த அழுத்த மாத்திரைகள், வலிநிவாரணிகள், பேதி மாத்திரைகள், நுண்ணுயிர்க்கொல்லி மருந்து கள் ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது அவற்றின் பக்கவிளைவாக வாய்வுத் தொல்லை எட்டிப் பார்ப்பதுண்டு. மிகத்தவறான உணவுப்பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, உடற்பயிற்சியின்மை, முதுமை, உறக்கமின்மை, மன அழுத்தம் போன்ற வாழ்க்கை
முறைகளும் வாய்வுத் தொல்லையை வரவேற்பவையே.

வாய்வுக்குப் பரிசோதனை உண்டா?ஒருவருக்கு அடிக்கடி வாய்வுப் பிரச்னை தொல்லை தருமானால், வாய்வுக்குக் காரணம் உணவா, நோயா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு `இரைப்பை எண்டோஸ்கோப்பி பரிசோதனை’ (Gastro endoscopy), பேரியம் எக்ஸ்-ரே பரிசோதனை, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra sound scan) மலக்குடல் அகநோக்கல் பரிசோதனை (colonoscopy), மலப்பரிசோதனை, ரத்தப்பரிசோதனை போன்றவை தேவைப்படலாம்.

வாய்வுத் தொல்லை வராமல் இருக்க என்ன செய்யலாம்? 

வாய்வுத் தொல்லைக்குப் பெரும்பாலும் நம் தவறான உணவுமுறைதான் காரணமாக இருக்க முடியும். நம் அன்றாட உணவுமுறைகளில் சிறிது மாற்றம் செய்து கொண்டால் போதும், வாய்வுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.


இப்போது எல்லாமே அவசர யுகமாகிவிட்டது. உணவை அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது. அது வாய்வுக்கு ஆகாது. சரியான உணவை, சரியான நேரத்தில் நிதானமாக மென்று சாப்பிடுங்கள். வாய்வுப் பிரச்னை பாதி சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ஒரேவேளையில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட, சிறு இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடுவது நல்லது. உணவு சாப்பிட்டதும் போதுமான அளவிற்குத் தண்ணீர் குடியுங்கள். பேசிக்கொண்டே சாப்பிடாதீர்கள்.

இரவு உணவை உறங்கச் செல்லும் இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுங்கள். காற்றடைத்த புட்டிப் பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் உறிஞ்சிக் குடிப்பதைத் தவிருங்கள். மது அருந்துதல், சூயிங்கம் மெல்லுதல், புகைபிடித்தல், சுருட்டு பிடித்தல், வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா பயன்படுத்துதல் போன்ற தீயபழக்கங்களை நிறுத்துங்கள். பல மணிநேரம் ஒரே இடத்தில் வேலை செய்கின்றவர்களுக்கும்,
வயதானவர்களுக்கும் வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து வந்தால் வாய்வு குறையும்.

துர்நாற்றத்ததுடன் வாய்வு வெளியேறினால் பால், முட்டை, இறைச்சி போன்ற புரத உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். அடிக்கடி வாய்வு தொல்லை தருமானால் குடல்புழுவுக்கும் அமீபா கிருமிகளுக்கும் மாத்திரை சாப்பிடலாம்.

வாய்வு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதவை?


மொச்சை, பட்டாணி, சுண்டல், பயறுகள், பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், காரம் மற்றும் மசாலா மிகுந்த உணவுகள், எண்ணெயில் குளித்த, வறுத்த, பொரித்த உணவுகள், சாக்லெட், கேக், ஐஸ்கிரீம், பிஸ்கெட், கற்கண்டு போன்ற இனிப்புகள், புட்டிகளில் அடைத்த மென்பானங்கள், டின்களில் அடைத்து விற்கப்படும் செயற்கைப் பழச்சாறுகள் மற்றும் உணவுகள், பால் அல்வா, பால்கோவா, பாலாடைக் கட்டி போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.

வாய்வு உள்ளவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டியவை?உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள், புரதம் மிகுந்த உளுந்து, முட்டை, மீன், இறைச்சி, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், வாதுமை, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், அப்பம், அடை, அப்பளம், வடாகம், ரொட்டி, ஊறுகாய், சோளப்பொரி, காபி, தேநீர். இவை தவிர உங்களுக்கு எந்த உணவு சாப்பிட்டால் வாய்வு தொல்லை தருவதாக நினைக்கிறீர்களோ அதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

வாய்வை உண்டாக்காத உணவுகள்?அரிசி, கம்பு, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் (எடுத்துக்காட்டாக, இட்லி, இடியாப்பம், தோசை, புட்டு, ரவா உப்புமா, அரிசிச்சோறு, கம்பங்கூழ், கேப்பைக்கூழ், கேப்பைத் தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை). கேரட்,

பீட்ரூட், முள்ளங்கி, டர்னிப், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, தக்காளி, பப்பாளி, எல்லா கீரைகள், புதினா, தேன், வெல்லம், சாம்பார், ரசம், மோர். இந்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடலாம்.

இரண்டு தவறான நம்பிக்கைகள்!

ஒன்று, வாய்வு வெளியேற வேண்டுமானால் சோடா குடிக்க வேண்டும் என்று நினைப்பது. சோடா குடித்ததும் வயிற்றில் உள்ள வாயு வெளியேறி விடு
வதாக நம்புகிறோம். இது தவறு. உண்மையில் சோடா குடித்ததும், சோடாவில் கலந்திருக்கும் கரியமில வாயுதான் ஏப்பமாக வெளியேறுகிறது. குடலில் உள்ள வாயு வெளியேறுவதில்லை.

இன்னொன்று, `ஆ.....வ்’ என்று பெரிய ஏப்பம் விட்டால் வாயு முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நம்பி பலர் தாங்களாகவே வலிய ஏப்பத்தை
வரவழைப்பர். உண்மையில் அப்போது என்ன நிகழ்கிறது தெரியுமா? பெரிய ஏப்பம் விடும்போது வாயு வயிற்றுக்குள்தான் செல்கிறது. அடுத்தமுறை இப்படி நீங்களாகவே வலிய ஏப்பம் விடும்போது முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று கவனியுங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.

பல மணிநேரம் ஒரே இடத்தில் வேலை செய்கிறவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கும். தினம் 40 நிமிடங்
களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து வந்தால் வாய்வு குறையும்.

அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, காபி, தேநீர் மற்றும் காற்ற டைத்த மென்பானங்களை குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, சுருட்டு பிடிக்கும்போது, வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா போடும்போது, அடிக்கடி தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே உணவுடன் காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவிகிதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடும். மீதி குடலுக்குச் சென்று, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.
 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Re: வாய்வுக்குத் தீர்வு என்ன?

Thanks for the detailed share ji. Gastric trouble appadi ngra vaarthai ku pinnadi ivalo irukka :rolleyes:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.