Gen z - இவங்க இப்படிதான்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
GEN Z - இவங்க இப்படிதான்!


ரு மாலை வேளை. உங்கள் 10 வயது குழந்தையின் அறைக்குள் நுழைந்து, 'ஹோம் வொர்க் முடிச்சிட்டியாமா?’ எனக் கேட்கிறீர்கள். ஹெட்போன் காதுக்குள் இன்னிசை மழை பொழிய, கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் பலருடன் வாட்ஸ்அப் சேட் செய்துகொண்டே, மடியில் இருக்கும் டேப்லெட்டில் யூ-டியூப் வீடியோ பார்த்துக்கொண்டே, உங்கள் பக்கம் திரும்பாமல், 'அதான் செஞ்சிட்டு இருக்கேன். ஃபைவ் மினிட்ஸ்... முடிஞ்சிடும்ப்பா’ எனப் பதில் சொல்கிறாள். 'அடடா... ஒரே நேரத்துல எத்தனை வேலை பார்க்கிறா என் செல்லம்!’ என்ற ஆச்சர்யத்துடன், 'இந்தக் காலத்துப் பசங்க செம ஷார்ப்ல்ல...’ என உங்கள் நண்பர்கள், உறவினர் களைப் பார்க்கும்போது எல்லாம் அந்த ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள்..!

ஆனால், ஜெனரேஷன் இஸட் (Gen Z) குழந்தைகள் அப்படித்தான். Gen Z..?

1995-ம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களை 'Gen Z 'என்கிறார்கள். இதற்கு முந்தைய தலைமுறை Gen Y அல்லது மில்லேனியல்ஸ் (1975-95 காலகட்டங்களில் பிறந்தவர்கள்). 1950-75-க்கு இடையில் பிறந்தவர்கள்Gen X. மாறிக்கொண்டே வரும் உலக வழக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்தத் தலைமுறைவரை முறை!

முன்னர் எல்லாம் சிறுவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, பெரியவர்கள் யாராவது வந்தால் பேச்சை நிறுத்திவிடுவார்கள். அதை 'மரியாதை’ என, பெரியவர்கள் நினைப்பார்கள். ஆனால், Gen Z குழந்தைகள் பேச்சை நிறுத்துவது இல்லை. காரணம், அது மரியாதைக் குறைவு என அவர்கள் நினைப்பது இல்லை. ஏனெனில், அவர்கள் எதையும் மறைப்பது இல்லை. ரகசியம் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. எல்லா விஷயங்களையும் எங்கேயும் எப்போதும் ஷேர் செய்வதே அவர்கள் இயல்பு!

இன்றைய தேதியில் உலகம் முழுக்க சுமார் 200 கோடி பேர் Gen Z தலைமுறைதான். இவர்கள் பிறக்கும்போது உலகமே டெக்னாலஜியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இவர்களால் எந்தச் சிரமும் இன்றி அலைபேசி, கணினிகளைக் கையாள முடியும். 'பாப்பாக்கு மூணு வயசுதான். ஆனா, ஆங்ரி பேர்ட்ஸ் அட்டகாசமா விளையாடுது’ எனப் பெற்றோர்கள் பெருமை பேசலாம்.

ஆனால், அது அந்தக் குழந்தைகளின் இயல்பு. தொழில்நுட்பத்தையே சுவாசிக்கும், தினம் புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் தலைமுறையினர்... இவர்கள்தான். மல்ட்டி டாஸ்க்கிங், வயதுக்கு மீறிய முதிர்ச்சி, எதையும் எளிதில் கிரகிக்கும்தன்மை ஆகியவை இவர்களின் சிறப்பியல்புகள். 'பிராண்ட்’களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள்தான் சமூக வலைதளப் போக்கை நிர்ணயிப்பவர்கள்.

மிக இளம்வயதிலேயே வாழ்க்கையை 'வாழத்’ தொடங்குவார்கள். போகிறபோக்கில் பெரும்சாதனை புரிவார்கள். Gen Z சாதனையாளருக்கான உதாரணமாக பாகிஸ்தானின் மலாலா யூஸுஃப்சாயைச் சொல்லலாம்.

மிகக் குறைந்த வயதில் (17 வயது) நோபல் பரிசு வென்றவர் அவர். இந்தத் தலைமுறையினருக்கு கல்வி முக்கியம். தன்னார்வலர்களாக இருப்பார்கள். Gen Y தலைமுறையில் 39 சதவிகிதப் பேர்தான் 'உலகில் மாற்றத்தை உருவாக்குவேன்’ என்றார்கள். ஆனால், Gen Z -ல் அது 60 சதவிகிதம். குடும்பத்தின் மீது அலாதி அன்பு உண்டு இவர்களுக்கு. இந்தியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி 'Gen Z தலைமுறையினரால் கூட்டுக் குடும்பம் மீண்டும் செழிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள்.

ஒரு நதி ஒரு திசையில்தான் ஓடும். அதில் பயணிக்கும் படகு இரண்டு திசைகளில் பயணிக்க முடியும். நதிக்குள் மீன் நான்கு திசைகளில் நீந்தும். ஆனால், கரையில் இருந்து இவற்றைக் கவனிப்பவனின் மனம் எல்லா திசைகளிலும் பறக்கும். Gen Z அப்படிப்பட்டவர்கள்; படைப்பாற்றல் மிக்கவர்கள்; என்ன வேலை செய்கிறோம் என்பதைவிட அதை எப்படிச் செய்கிறோம் என்பதுதான் அவர்களுக்கு முக்கியம்.

பொதுவாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களால்தான் கட்டமைக்கப்படுகிறார்கள். முன்னர் 18 வயது வரை வீடு, பள்ளி, கல்லூரி ஆகியவைதான் சுற்றுப்புறமாக இருந்தன. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி Gen Z தலைமுறைக்கு உலகத்தையே உள்ளங்கையில் கொடுத்துவிட்டது. அதனால் அவர்களின் வாய்ப்புகள் எல்லையற்றவை.

ஆஸ்திரேலியாவின் வாழ்க்கை முறையில் கவரப்பட்டு ஒருவன் கோயம்புத்தூரிலும் தன் லைஃப்ஸ்டைலை அப்படி அமைத்துக் கொள்ளலாம். சென்னையில் இருந்துகொண்டே ஸ்வீடனின் கலாசாரத்தை ஒருவன் பின்பற்றலாம். எனவே, இந்தத் தலைமுறையை மொழி, பிராந்திய, தேசிய வரையறைக்குள் அடக்குவது என்பது சிக்கலான ஒன்று. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மூவாயிரம் ஆண்டு பழைய மொழிக்கு,Gen Z தலைமுறையே மிகச்சிறந்த உதாரணமாகத் திகழும்.

எல்லாமே இவர்கள் விரல்நுனியில் கிடைப்பதால் Gen Z -க்கு உடல் உழைப்பு என்பது குறைவு. அதனால் உடல் பருமன் என்பது தவிர்க்கமுடியாத விஷயம். எதிர்காலத்தில் இவர்கள் 40 வயதைத் தாண்டும்போது ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும் தலைமுறையாகக்கூட இருக்கலாம் என்பது இவர்களுக்கான எச்சரிக்கை.

Gen Z தலைமுறை 2020-ம் ஆண்டுக்குள் பணிபுரியத் தொடங்குவார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தொழில்நுட்ப விஷயங்களுடன் வளரும் இவர்கள், முற்றிலும் மாறுபட்ட பணியாளர்களாக இருப்பார்கள். டீம்-வொர்க் என்பதை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். தனித்தனியே இயங்கத்தான் விரும்புவார்கள். அதற்கு ஏற்ப பல ஆய்வு முடிவுகளும் 'இந்தத் தலைமுறையில் பல தொழில்முனைவோர்கள் இருப்பார்கள்’ என்கிறது. நான்கு சுவருக்குள் இருந்தபடி, என்ன சொன்னாலும் செய்துவிடுவார்கள்.

தலைமுறை இடைவெளி என்பது, எப்போதும் இருக்கும் ஒன்றுதான். ஆனால், இந்த முறை அந்த இடைவெளி தோனியின் சிக்ஸைவிட அதிகமான தூரத்தில் இருக்கிறது. Gen Z - ஐ புரிந்துகொள்வது சிரமம்தான். ஆனால் அவசியமானது. ஏனெனில், இனி உலகம் அவர்களுக்கானது!

[HR][/HR]
தினமும் அதிக முறை பேசுங்கள். ஆனால், அதிக நேரம் தொடர்ந்து பேசாதீர்கள். முடிந்தவரை குறைவான சொற்களைப் பயன்படுத்துங்கள்.

குழந்தைகள் என நினைத்து பேசினால் போச்சு. அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரைவிட அதிக விஷயங்கள் தெரியும்... புரியும்.

குடும்ப முடிவுகளில் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். உங்கள் புதிய கார் அல்லது பைக் நிறத்தை இனி மனைவிகள் தீர்மானிக்க முடியாது. குழந்தைகள்தான்!

அதிகாரம் செல்லாது. அன்பால்தான் இவர்களை வசப்படுத்த முடியும்!

விலை முக்கியம் அல்ல. இவர்களுக்கு ஒரு பொருளின் மதிப்புதான் முக்கியம்.

நிறைய பொறுப்புகளைக் கொடுங்கள். அதை அவர்கள் விரும்புவார்கள்; நன்றாக செய்தும் முடிப்பார்கள்.

Gen Z பொதுநலவாதிகள். எனவே, சமூகம் சார்ந்த விஷயங்களை அவர்களுடன் பேசுங்கள். அப்போதுதான் அவர்களின் மதிப்பைப் பெறமுடியும்!

[HR][/HR]
எதற்கும் பதற்றப்படுவது Gen Z குணம் அல்ல. தடைகள் வந்தால், புதுப்புது வழிகளை கண்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். நம் ஊரிலேயே அதற்கான உதாரணங்கள் உண்டு. இசை வெளியீட்டுக்கு முன்னரே '3’ படப் பாடல்கள் இணையத்தில் வெளியானதும் பதறிப்போனது படக்குழு. எல்லோரையும் விட அந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருந்த அனிருத்துக்கு அது பெரிய இடி. ஆனால், சுதாரித்த அனிருத் கொடுத்த ஐடியாதான் யூடியூப் ரிலீஸ். சில வீடியோ காட்சிகளைச் சேர்த்து 'கொலவெறி’ பாடலை இணையத்தில் வெளியிட்டனர். அதற்கு முன் தமிழ் சினிமா அப்படி ஒன்றைச் செய்தது இல்லை. அதன் பின் நடந்தது... வரலாறு!

கலைத் துறை மட்டும் அல்லாமல், சமூக அக்கறையுடன் போராடவும் இவர்கள் தொழில்நுட்பத்தையே கையில் எடுத்திருக்கிறார்கள். ஹாங்காங்கைச் சேர்ந்த ஜோஷ்வா ஹோங் 19 வயதிலேயே டைம்ஸ் பத்திரிகையின் 'உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இப்படி உலகளவில் ஜஸ்டின் பீபர் போல பலரை Gen Z ன் உதாரணங்களாகச் சொல்லலாம்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.