Handle the relations with Relatives carefully-கண்ணாடி உறவுகள்

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
மனித வாழ்வுக்கு உரம் சேர்ப்பது உறவு. நெருக்கமாக இருக்க வேண்டிய உறவு களெல்லாம் இப்போது விரிசல் கண்டு வருகின்றன. தன் இல்லற வாழ்க்கையைப் பற்றி ஒருவர் இப்படிக் கூறினார். ‘திருமணம் ஆன முதல் ஆண்டில் என் மனைவி பேசினாள். நான் கேட்டேன். இரண்டாம் ஆண்டில் நான் பேசினேன். அவள் கேட்டாள். மூன்றாம் ஆண்டில் இருவரும் ஒரே நேரத்தில் பேசினோம். ஊரே கேட்டது’ என்று. பல குடும்பங்களில் நிலவுகின்ற உரையாடலின் நிலை இதுதான். இருவழிப் பாதையாக இருக்க வேண்டிய உரையாடல் ஏனோ பல நேரங்களில் ஒரு வழிப்பாதையாகி விடுகிறது.
உரையாடல் மனங்களைத் திறந்து உறவை ஆழமாக்கும். பலருக்கு உரையாடல் என்றால் என்ன என்கிற தெளிவு கிடையாது. பல குடும்பங் களில் அது பெரும்பாலும் உரையாடலாக இருப்பதில்லை. மாறாக, தங்களது கருத்துக் களையும் எண்ணங் களையும் பிறர் மீது திணிக் கின்ற யுத்த களமாகவே அமைந்து விடுகிறது.
பலர் உரையாடல் என்கிற பெயரில் வாதாடுகின்றனர். அப்படியே உரையாடினாலும் மற்றவர்களைவிட தாங்கள் பெரியவர்கள், மேலானவர்கள், அதிகம் தெரிந்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான தருணமாக உரையாடலைப் பயன்படுத்துக்கின்றனர். இதனால் இருக்கின்ற உறவுகளையும் இழந்து விடுகின்றனர்.
உரையாடலின் போது நாமே ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. நம்முடைய பிரச்சனைகளையே பேசிக்கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்களைக் குத்திக் காட்டி பேசக் கூடாது. எதிரியிடத்திலும் கூட கருணைமிக்க கண்ணியமான வார்த்தை களைப் பயன்படுத்தினால் அவர்களின் கோபமும் எதிர்ப்பும் மறைந்து உறவு மலரும்.
உரையாடுவது மட்டுமல்ல. உறவினர் களிடமும், நண்பர்களிடமும் உறவு கொள்வதும் குறைந்து வருகிறது. வீட்டை விட்டு வெளியில் சென்று உறவினர்களை நேரில் பார்த்துப் பேசும் பழக்கம் குறைந்து விட்டதால் இளைய தலைமுறைக்கு உறவு முறைகளே தெரிவதில்லை.
இன்றைய உறவை ‘Out of Sight, Out of Mind’ என்று சொல்வார்கள். அதாவது நாம் பார்க்கும் போது மட்டும் கண்ணாடி நம் முகத்தைக் காட்டும். விலகி விட்டால் கண்ணாடி நம் முகத்தைக் காட்டாது. இந்தக் கண்ணாடியின் நியதி இன்றைய உறவு நிலைக்கும் பொருந்தும்.
நீண்ட காலம் பழகிய நண்பர்களையே தனித்தனியே விசாரித்தால் இருவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத போக்கு பற்றிய வருத்தம் வெளிப்படுகிறது. ஈருடல் ஓருயிர் என்று கருத்தொருமித்து வாழ்ந்து வருவதாகக் கூறிக்கொள்ளும் கணவன்-மனைவியைக் கூட தனித்தனியாக விசாரித்தால் ஒருவரைப் பற்றி ஒருவர் கொட்டித் தீர்த்து விடுவதைப் பார்க்க முடிகிறது.
மனித உறவுகளுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பது ‘தான்’ என்னும் மாயப்பிசாசு. பல ஆண்டுகள் ஒருவரை ஒருவர் நேசித்து திருமணம் செய்து கெண்டவர்கள் கூட மாங்கல்ய மஞ்சள் காயும் முன்பே குடும்ப நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டுகின்றனர்.
பெரியவர்கள் என்று பிள்ளைகள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. பிள்ளைகள் என்று பெரியவர்கள் சகித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. ‘அன்னை இல்லம்’ என்று வீட்டிற்குப் பெயர் வைத்து விட்டு பெற்ற அன்னையை அனாதை இல்லத்தில் விட்டிருக்கும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிடிவாதங்கள் வாழ்க்கை என்னும் வரத்தைச் சாபமாக்கி விடுகின்றன. பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள அகந்தையும், ஆணவமும் அனுமதிப்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் சக மனிதர்களின் உணர்வுகளையும் பிரச்சனைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், இந்த மனிதன் சமுதாயத்தின் மாபெரும் பிரச்சனைகளில் நமது பிரச்சனை ஒன்றுமே இல்லை என்பதை உணர முடியும்.
ஹிட்லர் தன் சுய சரிதையில் இப்படிச் சொல்கிறார். ‘ஒருவன் தலைவனாகத் தொடர, தன் நாட்டில் அமைதி நிரந்தரமாகத் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கலவரங்களை ஏதாவது ஒரு கணத்தில் பிரசவிக்கச் செய்ய வேண்டும். தற்காப்பற்றநிலையிலும் பயத்திலும் மக்களை வைத்திருக்க வேண்டும். தலைவன்தான் தனக்கு எல்லாம் என்றநம்பிக்கையில் வாழவைக்க வேண்டும். அப்பொழுதுதான் தன் வசதியும் வாய்ப்பும் பறிபோகாது!’ என்று.
சர்வாதிகாரியின் இந்த வார்த்தைகள் பல குடும்பங்களுக்கும் கூட பொருந்துவதாக உள்ளது. இத்தகைய சர்வாதிகார எண்ணங்கள் குடும்பத் தலைவன் அல்லது தலைவியிடம் தோன்றும் பொழுது ‘தான்’ என்ற அகங்காரம் தலை தூக்கி குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகிறது.
நம்மில் பலருக்கு வசதியாக வாழ்வதாகக் காட்டிக்கொள்வதில் கொள்ளைப் பிரியம். இதன் காரணமாகத்தான், பலருடைய சொல் வேறு, செயல்வேறு என்றாகிவிட்டது. பொய்யான சௌகரியங்களுக்காக உண்மையான சந்தோஷத் தையும் விற்கத் தயங்காத மனப்பான்மை வளர்ந்துவிட்டது.
மனிதன் பகட்டாக, ஆடம்பரமாக வாழ மட்டும் விரும்புவதில்லை. அத்தகைய தன் வாழ்வை பிறர் அறிய வேண்டும் என்றும் விரும்புகிறான். வாழ்க்கை என்பது மிகக் குறுகிய காலம் தான். அதில் பணம் சேர்ப்பது மட்டும் குறிக்கோள் அல்ல. சௌகரியத்திற்காக பணம் தேவை என்றாலும் எதையும் சௌரியமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும்.
மனைவியும் சம்பாதித்தால் பொருளாதார ரீதியாக குடும்பத்திற்கு நல்லதுதான். ஆனால் ஓடி ஓடி உழைத்து, சம்பாதித்து ஓரிடத்தில் உட்கார்ந்த பிறகுதான் கணவன் மனைவி இருவருக்குமே புரியும், ‘எத்தனை சந்தோஷமான நாட்களை, சம்பாதிக்கும் ஆசையில் இழந்து விட்டோம்’ என்று!
எத்தனையோ குடும்பங்கள் வசதி இல்லாமல் இருந்தபோதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்னியோன்யமாக ‘வாழ்க்கையை வாழ்க்கையாக’ அனுபவிக் கின்றனர். வாழ்வின் அர்த்தம் அதுதான்.
மகனுக்கு பெரிய இடத்தில் பெண் எடுக்க வேண்டி, தங்களை வசதி உள்ளவர்களாக காட்டிக்கொள்ள கடன் வாங்கி கடனில் மூழ்கியவர்கள் உண்டு. மாப்பிள்ளை வெளி நாட்டில் வேலை செய்கிறார். இலட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்று கூறியதை நம்பி, பெண்ணைப் பெற்றவர்கள் ஏமாந்த கதைகளும் உண்டு. இப்போதெல்லாம் திருமணம் பேசும்பொழுது ஜாதகம் பார்த்தால் மட்டும் போதாது. ‘அப்பாயின்மென்ட் ஆர்டரை’யும் சான்றிழ்களையும் கூட சரிபார்க்க வேண்டி யிருக்கிறது.
சக்திக்கும் வருவாய்க்கும் உட்பட்டு கிடைக்கும் வசதிகளே போதும். ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று ஆசைப்படும்போது, அந்த வசதிகளைத் தகுதிக்கு மீறி அனுபவிக்கும் ஆசைக்கு உட்படும்போது, தடுமாறவும் தவறு செய்யவும் நேரிடுகிறது. இருப்பதில் நிறைவு காணும் மனம் படைத்தவர்களால் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.
வாழ்க்கைக்கும் ஒரு வாய்ப்பாடு உண்டு. ஓர் எட்டில் (8) நல்ல பண்புகளும், ஈரெட்டில் (16) நல்ல கல்வியும், மூவெட்டில் (24) திருமணமும், நாலெட்டில் (32) நல்ல பிள்ளைகளும், ஐந்தெட்டில் (40) செல்வமும் சேர்த்துவிட வேண்டும். ஆறெட்டில் (48) உலக அனுபவமும், ஏழெட்டில் (56) மிகுந்த புகழையும் அடைந்து, எட்டெட்டில் (64) அனைவரின் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவனாக வாழ வேண்டும். இந்த வாழ்க்கை அட்டவணையை ஓரளவு மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு சிறுவன் தன் தந்தையுடன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். ‘அப்பா இந்தப் பட்டம் எதனால் உயரமாகப் பறக்கிறது?’ என்றான் சிறுவன். ‘பட்டத்தில் கட்டியிருக்கும் நூல் கயிற்றால்தான்’ என்றார் அப்பா. ‘இல்லை, இல்லை அந்தக் கயிறு பட்டத்தை மேலே பறக்க விடாமல் இழுத்துப் பிடித்துக் கொள்கிறது’ என்றான் சிறுவன். உடனே தந்தை அச்சிறுவனுக்கு புரிய வைக்க அந்த நூலை அறுத்து விட்டார். பட்டம் கீழே விழுந்தது.
ஆம். அந்தக் கயிறு பட்டத்தை இழுத்துப் பிடிப்பது போல் தோன்றினாலும் அதுதான் பட்டத்தை உயர்த்துகிறது. பட்டத்தின் நூல் கயிற்றைப் போன்றதுதான் நம் ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும். நாம் எதைத் துன்பம் என்று சொல்கிறோமா அதுவும் இயற்கையின் இயல்புதான் என்று எடுத்துக் கொண்டால் எல்லாமே இன்பம்தான்.
மானுட அன்பில் எப்போதும் ஓர் எதிர்ப்பார்ப்புண்டு. தான் கொடுத்த அன்பை அது பிறரிடம் எதிர்பார்க்கும். அது கிடைக்காது போனால் அன்பு நீர்த்துப் போகும். உறவு களுக்குள் சிறிய கோப, தாபங்கள் ஏற்படுவது இயற்கை. அது தவிர்க்க முடியாதது. சொன்ன ஒரு சொல்லை அல்லது சம்பவத்தை ஊதிப் பெரிது படுத்துவதை விடுத்து அதை மறக்கவும், மன்னிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனித உறவுகள் மென்மையானவை. மிக மெல்லிய இழைகளால் ஆனவை. கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளும் எச்சரிக்கை உணர்வுடன் உறவைக் கையாண்டால் பிரச்சனை வராது. பெருந்தன்மை உள்ள, பேரம் பேசாத, குறைகாணாத அன்பு இருந்தால் மனப்பூசல்கள் விலகி உறவுகள் வலுப்பெறும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,749
Location
Bangalore
#2
அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் . நன்றி .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் . நன்றி .
Welcome sis......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#6
கலை,
நல்ல கருத்துக்களை, நச்சுனு, நடு மண்டையில ஆணி அடிப்பது போல சொல்லி இருக்கீங்க.
- Positive and appropriate communication between couples and treat each other with respect
- Living within our means and leading a simple and honest life
- Key things for survival of any relationship : listen, be patient, have low expectation and be ready to compromise.


"பெருந்தன்மை உள்ள, பேரம் பேசாத, குறைகாணாத அன்பு இருந்தால் மனப்பூசல்கள் விலகி உறவுகள் வலுப்பெறும்."

Super!!! Super!!!

 
Last edited:

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
கலை,
நல்ல கருத்துக்களை, நச்சுனு, நடு மண்டையில ஆணி அடிப்பது போல சொல்லி இருக்கீங்க.
- Positive and appropriate communication between couples and treat each other with respect
- Living within our means and leading a simple and honest life
- Key things for survival of any relationship : listen, be patient, have low expectation and be ready to compromise.


"பெருந்தன்மை உள்ள, பேரம் பேசாத, குறைகாணாத அன்பு இருந்தால் மனப்பூசல்கள் விலகி உறவுகள் வலுப்பெறும்."

Super!!! Super!!!

thank u very much sis......
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.