Health and Medicinal Benefits of having Oil Bath - எண்ணெய்க் குளியலை வரவேற்போம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
காக்காய் குளியல் வேண்டாம்; எண்ணெய்க் குளியலை வரவேற்போம்


‘‘வாரத்துக்கு ரெண்டு தடவத் தலைக்கு நல்லெண்ணெய் தேய்ச்சுக் குளிங்க, பெரும்பாலான நோய்கள் அண்டாது" என்று சொன்னால், பெரும்பாலானவர்கள், "தீபாவளிக்குத் தேய்ச்சு குளிக்கிறோமே, அதைத்தானே சொல்றீங்க" என்று கேட்பார்கள். எண்ணெய் குளியல் என்றாலே, "அது தீபத் திருநாளன்று மட்டும்" என்று மக்களின் மனதில் வலுவாகப் பதிந்துவிட்டது.


ஆத்திச்சூடியில் ஔவையார் சொல்லும் ‘சனி நீராடு' என்றாலும் சரி, நமது பெரியவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளி என்றாலும் சரி, இரண்டும் தரும் பலன் ஒன்றுதான். உடல்நலனை உடல் வெப்பத்தைச் சீர்ப்படுத்தவே அப்படிச் செய்யச் சொல்கிறார்கள். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் வலியுறுத்தப்பட்டு, நம் முன்னோர்கள் அதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள்.


ஆனால், குளிப்பதே பிரச்சினையாக உள்ள இன்றைக்கு எண்ணெய்க் குளியல் எல்லாம் எப்படி முடியும் என்று கேள்வி கேட்கிறோம். வேறு வழியில்லை, நவீன வாழ்க்கை உருவாக்கும் நெருக்கடி களையும், அதனால் உடல்நலனில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் எண்ணெய்க் குளியல் அவசியம்.


குளியல் முறை

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுக வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். அத்துடன், ‘எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்' எனும் பிணியணுகா விதி பாடல், எண்ணெய் தேய்த்த நாளன்று குளிக்க, வெந்நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ‘சதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்' என்ற சித்தர் தேரையரின் வரிகள், நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெயிட்டுத் தலை முழுக வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.

தீரும் நோய்கள்

சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு, அதிக உடல் சூடு, தூக்கமின்மை, மன அமைதியின்மை போன்ற பித்த நோய்களைத் தடுக்கலாம், குறைக்கலாம். செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெய், முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இளநரையைத் தடுக்க உதவும், மனதை அமைதிப்படுத்தும்.

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அரக்குத் தைலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் நாற்றம், தொண்டை கம்மல், ரத்தக் குறைவு போன்ற நோய்கள் ஓட்டம் எடுக்கும். சளி, இருமல், பீனிசம் (சைனஸ்) போன்ற கப நோய்களைப் போக்கச் சுக்குத் தைலத்தால் தலை முழுகலாம்.

அத்துடன் வாரம் இரு முறை தலை முதல் கால்வரை எண்ணெய் தேய்த்துக் குளித்துவருவதால், சரும ஆரோக்கியம் மேம்படும். உடலின் வெப்பம் குறையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் நோய்கள் தொலைந்து போகும், பசி அதிகரிக்கும். உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால், குருதி ஓட்டம் சீரடையும், உடலின் வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு, பல வாத நோய்கள் குணமடையும். நவீன மனிதர்கள் அதிகம் அவதிப்படும் மன அழுத்தம் குறையும்.

தவிர்க்க வேண்டியவை

எண்ணெய்க் குளியல் நாளன்று அசைவ உணவு வகைகள், காரம் அதிகமுள்ள பொருட்கள், மசாலாப் பொருட்கள், எளிதில் செரிக்காத பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்து முழுகிய நாளன்று, உடல் சற்றுப் பலமிழந்து காணப்படுவது இயற்கையே. எனவே, கடினமான வேலைகளைச் செய்யாமல் ஓய்வெடுப்பது நல்லது. அன்றைக்குப் பகலில் உறங்குவதையும் உடலுறவையும் தவிர்க்க வேண்டும்.

‘தலை உரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டாள்' என்கிறது ஆசாரக்கோவை. அதாவது தலைக்குத் தேய்த்த எண்ணெயை உடலின் மற்றப் பகுதிகளில் தடவுவதால், தலையிலிருக்கும் அழுக்கு, உடலோடு ஒட்டி பல சரும நோய்களை உண்டாக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறது. அதனால் தலை, உடலுக்குத் தனித்தனியே எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாத திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டுமென்றால், எண்ணெயோடு நீர் அல்லது பசு நெய் சேர்த்துக் குளிக்கலாம். அதேபோலத் தினமும் நீராடும்போது, தலையையும் சேர்த்து முழுகாமல், கழுத்துக்குக் கீழ் மட்டும் குளிப்பது நிச்சயம் நல்லதல்ல! முழுமையாகக் குளிப்பதே குளியல்.

- கட்டுரையாளர் அரசு சித்த மருத்துவர்,
தொடர்புக்கு: teddyvik@gmail.com
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.