Health benefits of green gram - முழுமையான உணவாகும் பச்சைப் பயறு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
முழுமையான உணவாகும் பச்சைப் பயறு
தோலுடன் இருக்கும்போது ‘பச்சைப் பயறு’ என்று சொல்வதை, தோல் நீக்கி பருப்பாக்கும் போது ‘பாசிப் பருப்பு’ என்று கூறுகிறோம். மற்ற பயறு வகைகளுடன் ஒப்பிடும்போது, இதில் எல்லா முக்கிய சத்துகளும் இருப்பதோடு, விரைந்து வேகும் தன்மையும் உள்ளது. சுலபமாக முளைகட்டவும் இயலும்.இதை முழுப் பயறாகவே பருப்பாக, சாம்பாராக, சாலட், சுண்டலாகவும் பயன்படுத்தலாம். வட இந்தியர் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் டாலுக்கு இதையே உபயோகிக்கிறார்கள்.
இந்தப் பயறில் முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இல்லாத வைட்டமின்களும் முளைகட்டும் போது உருவாகின்றன. ஜீரணமாகும் போது வாயுத்தொல்லை ஏற்படுத்தாது. ஒவ்வாமை ஏற்படுத்தும் எதுவும் இல்லை. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினமுமே தரலாம்.

100 கிராம் பச்சைப் பயறில் 24 கிராம் புரதம் உள்ளது. இதிலுள்ள 12 அமினோ அமிலங்கள் மூளையில் உள்ள செல்களுக்கு நல்ல சக்தி தரும். உடல் சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மையைக் குறைக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். திசுக்களின் ஒரு பகுதியான நைட்ரஜனை சரி செய்யும் திறன் கொண்ட ‘வேலின்’ என்ற அமினோ அமிலமும் உள்ளது. எலும்பு, திசுக்கள் வளர்ச்சியோடு, ரத்த உற்பத்திக்கும், தசைகள் நன்கு இயங்க வும், தேய்மானத்தை சரி செய்யவும் இது பயன்படும். தலைமுடி நன்கு வளர, கொலஸ்ட்ராலை குறைக்க, பித்தப்பையில் கொழுப்புப் படியாமல் தடுக்கவும் அமினோ அமிலங்கள் உதவும். சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் மித்யோனைன் என்ற அமினோ அமிலமும் இதில் உள்ளது.

100 கிராம் பயறில் 56.7 கிராம் மாவுச்சத்து கிடைக்கும். முளைகட்டும் போது இது 15% குறையும். உழைப்புக்குத் தேவையான சக்தி தரும். முளைப்பயறில் அமிலேஸ் அதிகரிக்கும். இந்த மாவுச்சத்துதான் சக்தியாக மாற்றப்பட்டு, உடலின் வெப்பத்தை உருவாக்கும் மூலமாக அமைகிறது.இயற்கையாகவே 1.3 கிராம் கொழுப்பு 100 கிராம் பயறில் உள்ளது. இது நல்ல கொழுப்பு. எடை கூட்டாது. முளைகட்டும் போது சுலபமாக ஜீரணமாகும் கொழுப்பாக மாற்றப்படும்.

அதற்குத் தேவையான என்சைமை உற்பத்தி செய்யும்.கழிவுகளைச் சுலபமாக வெளித்தள்ளும் நார்ச்சத்து 4.1 கிராம் உள்ளது. மற்ற எல்லா பயறுகளை விடவும் இது அதிகம். ஆரோக்கியமான ஜீரண மண்டலத்துக்குத் தேவையான கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து இதில் உள்ளது.தாது உப்புகளில் மிக முக்கியமான கால்சியம் 100 கிராம் அளவில் 124 மில்லிகிராம் உள்ளது. இது ஒரு நாளையத் தேவையில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமே. எலும்புகளின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுவது கால்சியம்.

பழுதுபட்ட எலும்புகள் புதுப்பிக்கப்படவும், பற்கள் இயல்பாக, முறையாக வளரவும் இன்றியமையாத தேவை. குழந்தைகளுக்காகச் செய்யும் சத்துமாவில் இதையும் சேர்க்கும் போது ஆரோக்கியத்துக்கு உதவும். முளைகட்டும் போது கால்சியம் 34% அதிகரிக்கிறது. திசுக்கள் இயல்பாக உருவாக்கம் பெறவும், எலும்புகள், பற்கள் உருவாக்கத்துக்கும் பாஸ்பரஸ் இன்றியமையாதது. 100 கிராமில் 326 மில்லிகிராம் பாஸ்பரஸ் உள்ளது. முளைகட்டும் போது 56% அதிகரிக்கிறது.

ரத்தத்தின் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உருவாக மிக முக்கியமானது இரும்புச்சத்து. 4.4 மில்லிகிராம் அளவு இதில் உள்ளது. முளைகட்டும் போது 40% அதிகரிப்பதோடு, முளைப்பயறில் வைட்டமின் சி மிகவும் அதிகரிப்பதால், சுலபமாக உடலில் உறிஞ்சப்படும்.

கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ, கரோட்டீனாக இதில் 94 மைக்ரோகிராம் உள்ளது. முளைகட்டும் போது 285% அதிகரிக்கிறது. இந்த வைட்டமின் உடல் வளர்ச்சி, உறுதியான பற்கள், எலும்புகள் உருவாகவும், நோய் எதிர்ப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்ணின் ஒளி மட்டுமின்றி கண் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கவும் உதவும். முளைகட்டிய பின் பச்சையாகச் சாப்பிடும் போது ஆக்ஸிகரணம் ஆகாது. கேன்சர் வராமல் தடுக்கும். நீர்க்கட்டிகள் உருவாகாமல் இருக்கவும் உதவி புரியும். கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு இந்த வைட்டமின் நிறையவே தேவை. தினமும் முளைகட்டிய பயறாக சாப்பிட்டால் கண்களில் உலர் நிலை வராமல் இருக்கும்.

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் மிக முக்கியமானது தயாமின். இதை பி1 என்றும் கூறுவர். நரம்புகளின் உறுதிக்கும் செயல்பாட்டுக்கும் இன்றியமையாதது. நரம்புத்தளர்ச்சியை போக்கும் வைட்டமின் என்றே இதை கூறுவார்கள். ஒரு நாளையத் தேவை 1.4 மில்லிகிராம் மட்டுமே. 100 கிராம் அளவில் பயறில் 0.47 மில்லி கிராம் உள்ளது. முளைகட்டும் போது 208% அதிகரிப்பதால், சுலபமாக ஒரு நாளையத் தேவையை பெற இயலும். இதை நம் உடலால் சேமித்து வைக்க இயலாது.

பி2 என்கிற ரிபோஃப்ளோவின் தினமும்2 மில்லிகிராம் தேவை. பயறில் 0.27 மில்லிகிராம் உள்ளது. முளைகட்டும் போது 515% அதிகரிக்கும். கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்களை செயல்படச் செய்வதில் இதன் பங்கு முக்கியமானது. மாவுப் பொருட்களின் வளர்சிதை மாற்றம், மூச்சு விடுதல், ரத்த உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல், நரம்பு மண்டல நடவடிக்கையைக் கண்காணித்தல் போன்ற பல செயல்களிலும் பி2வின் பங்கு சிறப்பானது. இதன் பற்றாக்குறையால் உடலில் பல நோய்க்குறிகள் தோன்றும். செரிமானக் கோளாறுகள், வளர்ச்சி தடைபடல், கண் நோய்கள், முடி உதிர்தல், தோலில் சொரசொரப்புத் தன்மை, நரம்பு மண்டலக் கோளாறுகள், வாயின் இரு ஓரங்களிலும் வெண் புண்கள் ஏற்படலாம். இதை உடலால் சேமித்து வைக்க இயலாது. உணவில் இருந்தே தினமும் பெறப்பட வேண்டும்.

பி5 என்கிற நயாசின் வைட்டமின் தினம் 16 மில்லிகிராம் தேவை. 100 கிராம் பச்சைப்பயறில் 2.1 மில்லிகிராம் உள்ளது. முளைகட்டும் போது 256% அதிகரிக்கிறது. இதன் பற்றாக்குறையால் முடி உதிர்தல், ரத்தசோகை, அட்ரினல் சுரப்பி சரிவர வேலை செய்யாதது, கொலஸ்ட்ரால் தயாரிப்பு சரிவர நடக்காதது, உணவு மண்டல உறுப்புகளில் பாதிப்பு, பல்வேறு உறுப்புகளில் உள்ள செல்களில் வேண்டாத மாற்றங்கள், வளர்சிதை மாற்றம் சரிவர நடைபெறாதது போன்றவை ஏற்படும்.

கோலின் வைட்டமின் பற்றாக்குறையால் பல பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்டறிந்து, உலகெங்கும் இதன் முக்கியத்துவத்தைப் பேசுகின்றனர். 100 கிராம் பயறில் 167 மில்லிகிராம் கோலின் உள்ளது. உடலில் கொழுப்பு அதிகமாகப் படிவதைத் தடுக்கும் சக்தி கொண்டது. நரம்பு உணர்ச்சியைத் தூண்டும் அசிட்டில் கோலின் என்னும் பொருள் நமது உடலில் தயாரிக்கப்பட்டது. இது அவசியம் தேவை. கர்ப்பிணிகளுக்கு மிக அவசியம்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இதன் பங்கு மகத்தானது. நரம்பு மண்டலம் சரிவர இயங்கவும் இந்த வைட்டமின் தேவை. நீரிழிவுக்கும், இதய நோய்க்கும், வயதானபோது ஏற்படும் மறதிக் கோளாறுகளுக்கும் இந்த வைட்டமின் குறைபாடு காரணமாகலாம். மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை இந்த வைட்டமினுக்கு உள்ளது. மரபணு மாற்றத்தை தடுப்பதிலும் இதன் பங்கு உள்ளது.

நோய் எதிர்ப்புத் திறனைத் தரும் வைட்டமின் சி பயறாக இருக்கும் போது நமக்குக் கிடைக்காது. முளைகட்டும் போது அதிக அளவு உற்பத்தி ஆகிறது. முளை கட்டியதை வறுத்து ‘மால்ட்’ ஆக தயாரித்து, பலவித சிறுதானியங்களுடன் சேர்த்து சத்துமாவாக அரைத்து சிறுவயதினரோடு வயது முதிர்ந்தவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.எல்லா முக்கிய தாதுகளுமே (மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரின்...) இப்பயறில் உள்ளன.

ஆந்திரா பெசரட்டு

1 ஆழாக்கு முழு பச்சைப் பயறுடன் 1லு டேபிள் ஸ்பூன் பச்சரிசி சேர்த்து 6 மணி நேரம் ஊற வைத்து, 1 அங்குலத்துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், 1 பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக தோசை மாவு பக்குவத்தில் அரைத்து எடுக்கவும். இந்த மாவை அரைத்த உடனே ஊற்றலாம். சிறிது எண்ணெயில் சீரகம் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெங்காயத்தை லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.

தோசையை மெலிதாக ஊற்றியதும் மேலே வெங்காயக் கலவையைத் தூவவும். கீழ்பாகம் சிவக்க ஆரம்பிக்கும் போது, சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். திருப்பிப் போட வேண்டாம். ஒரே பக்கம் நன்கு சுட்டு, மடித்து, அப்படியே பரிமாறவும். இதற்கு இஞ்சி சட்னி நன்றாக இருக்கும். இதிலேயே மத்தியில் உப்புமா வைத்து செய்யப்படும் ‘எம்.எல்.ஏ. பெசரட்டு’ என்பது ஆந்திராவில் மிகப் பிரபலம்!பச்சைப் பயறிலுள்ள 12 அமினோ அமிலங்கள் மூளையின் செல்களுக்கு நல்ல சக்தி தரும். உடல் சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மையைக் குறைக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
thank you for sharing this information about முழுமையான உணவாகும் பச்சைப் பயறு!!!!!!!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.