Health Benefits Of Indian Black Berry - நாவல் மரத்தின் மருத்துவக் குணங்க&#29

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#1
நாவல் மரத்தின் மருத்துவக் குணங்கள்:-


வேர்


வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.

மரப்பட்டை


முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு. சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.

இலை


வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.

பழம்


நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை. கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.


கொட்டை


நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.