Heart Care- இதயத்தை காப்போம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இதயத்தை காப்போம் இனிதாக!




இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள், அவற்றை தவிர்க்கும் வழிகள் பற்றி இதயநோய் சிறப்பு மருத்துவர்கள் அளிக்கும் பயனுள்ள தகவல்கள். மனிதனின் நெஞ்சுக்கூட்டில், இடது பக்கத்தில் இதயம் உள்ளது. இது உடலுக்குத் தேவை யான ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தை அனுப்பும் ஒரு 'பம்ப்’. உடல் முழுவதிலும் இருந்து வரும் கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ரத்தத்தைப் பெறும் இதயம், அதை நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரல், கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ரத்தத்தைப் பிரித்து வெளி யேற்றுகிறது. அதேநேரத்தி லேயே, ஆக்சிஜன் ரத்தத்தில் சேர்க்கப்பட்டு, அது இதயத் துக்கு அனுப்பப்படுகிறது. இதயம், அதை உடல் முழு வதும் அனுப்புகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை இதயம் துடிக்கிறது. வயது, பாலினத்துக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறு படலாம்.

இதயநோய்கள்

நெஞ்சுவலி: தங்களுக்குப் பிரச்னை ஏற்படும்வரை இதயநோய்ப் பற்றிய கவலை மக்களுக்கு இல்லை. இதயமும் நம்முடைய உடலின் மற்ற தசைகளைப் போலதான். அது ஆரோக்கியமாக இருக்க, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் தேவை. கொரனரி ரத்தக்குழாய்கள் இதயத்துக்குத் தேவையான ரத்தத்தைக் கொண்டுசெல்கின்றன. இந்த ரத்தக்குழாய்கள் இதயம் முழுக்க பரவியுள்ளன. இவற்றுக்குள் கொழுப்புப் படிவதால், பாதைகள் குறுகிவிடுகின்றன. இதனால், இதயத் தசைகளுக்குப் போதுமான ரத்தம் செல்வதில்லை. இதை ஈடுகட்ட இதயம் சற்று மெதுவாக இயங்குகிறது. ரத்தம் குறைந்த அளவில் செல்லும்போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது.

மாரடைப்பு: இதயத்தின் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பின் வழியாக ரத்தம் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு, அது உறையும் தன்மையை அடையும்போது, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் எந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அந்தப் பகுதியில் இதயத்தின் தசை உயிரிழக்கிறது.

சீரற்ற இதயத்துடிப்பு: இதயம், ரத்தத்தை அழுத்தி உடல் முழுவதும் அனுப்ப, துடிக்க வேண்டும். அதற்கு மின் ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக, இதயத்தின் உள்ளே ஒரு மின் உற்பத்தி நிலையமும், அந்த மின்சாரத்தை இதயம் முழுக்கக் கொண்டு செல்லும் அமைப்பும் உள்ளது. இந்த மின் உற்பத்தி அளவு அதிகமானாலோ, குறைந்தாலோ, இதயம் துடிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு அது செயலிழக்க நேரிடலாம்.

மாரடைப்புக்கு முக்கியக் காரணங்கள்

உயர் ரத்த அழுத்தம்.
ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு.
சர்க்கரை நோய்.
புகைப் பிடிக்கும் பழக்கம்.
மது அருந்துதல்.
உடல் பருமன்.


இதயநோய்: இதயத்தில் ஏற்படும் நோயை, குழந்தைகளுக்கு ஏற்படுவது; பெரியவர்களுக்கு ஏற்படுவது; முதியவர்களுக்கு ஏற்படுவது என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இந்த மூன்று பேருக்குமே வரக்கூடிய இதய நோய்களை, பிறவியிலேயே ஏற்படுவது (Congenital), பிற்காலத்தில் ஏற்படும் நோய் (Acquired) என்று இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு, பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாக இதயக்கோளாறுகள் ஏற்படுகின்றன. பிற்காலத்தில் ஏற்படக்கூடிய இதயநோய்களும், குழந்தைகளுக்கு ஏற்படலாம். பிற்காலத்தில் பெரியவர்களுக்கும் வால்வு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம்.

முதியவர்களுக்கும் 99 சதவிகிதம் ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதால், பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்னையை, ரத்தக் குழாயில் வரக்கூடிய நோய்; வால்வில் வரக்கூடிய நோய்; இதயத் தசையில் வரக்கூடிய நோய் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதயத்தில் எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டாலும், இதயத்தசைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு மூலம் உயிரிழப்பு ஏற்படுவதுதான் மிகவும் அதிக அளவில் உள்ளன. இதயநோய்களுக்கு என்னதான் பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், அவை வராமல் தவிர்ப்பதுதான் மிகவும் முக்கியமானது.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
நொறுங்குகிறதா பெண் இதயம்?




நீரிழிவும் மூட்டுவலியும் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்தன. இன்று அவை வயது வித்தியாசம் பார்ப்பதில்லை. அதே போலத்தான் இதய நோய்களும். ‘மாரடைப்பும் இதய நோய்களும் ஆண்களுக்கு மட்டும்தான் வரும்... அப்படியே பெண்களுக்கு வந்தாலும் வயதான பிறகுதான் வரும்’ என்ற நிலை இன்றில்லை. மக்களின் வாழ்க்கைமுறை மாறிப் போனதன் விளைவாக, நோய்களின் போக்கிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். இன்று எந்த நோயும் எந்த வயதினருக்கும் வரலாம் என்பதற்கான ஒரு உதாரணம்தான் பெண்களையும் குறி வைக்க ஆரம்பித்திருக்கிற இதய நோய்கள்.

பெண்களுக்கு இதய நோய்கள் அதிகரித்திருப்பதன் பின்னணி, அவற்றின் அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விவரமாகப் பேசுகிறார் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகரன். ‘‘என்னுடைய அனுபவத்தில் 35 வயது இளம்பெண் மாரடைப்பில் இறந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆஞ்ஜியோ, பைபாஸ் அறுவைகள் எல்லாம் செய்த பிறகும் அவரைப் பிழைக்க வைக்க முடியவில்லை. இன்று இதய நோய்களால் பாதிக்கப்படுகிற பெண்களின் வயது 35 ஆகக் குறைந்திருப்பதை அபாயகரமான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்கிற டாக்டர், நோய்க்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார்.

‘‘பெண்களின் உடலில் உள்ள பாதுகாப்பு ஹார்மோன்களின் காரணமாக அவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் இயல்பிலேயே குறைவு. சிலருக்கு இளவயதிலேயே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆர்த்ரைடிஸ், பருமன் போன்றவை இருந்தால், அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இதய நோய்கள் வரலாம். இதய நோய்களுக்கான காரணங்களை மாற்றக் கூடியவை, மாற்ற முடியாதவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

மாற்றக் கூடியவை...

புகைப்பழக்கம்
நீரிழிவு
பருமன்
உயர் ரத்த அழுத்தம்


இந்தக் காரணங்களை பெண்கள் தமது உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம்.

மாற்ற முடியாதவை...

வயது
பாலினம்
குடும்பப் பின்னணியில் அம்மா அல்லது அப்பாவுக்கு இதய நோய்கள் இருப்பது
.

இந்த மூன்றையுமே மாற்ற முடியாது. மூன்றாவது காரணத்தைக் கட்டுப்படுத்தலாம். அதாவது அப்பா அல்லது அம்மாவுக்கு அவர்களது 50 பிளஸ் வயதில் இதய நோய் வந்திருந்தால், வாரிசுகளுக்கும் அது பாதிக்கிற அபாயம் அதிகமாகவே இருக்கும். அது தெரிந்தால், ஏற்கனவே சொன்ன மாதிரி உணவு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் அது சீக்கிரமே நெருங்காமல் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். இவை தவிர சில பெண்களுக்கு பரம்பரையாக புரோட்டீன் சி குறைபாடு பிரச்னை இருக்கலாம்.

அதன் காரணமாகவும் ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, இதய நோய்கள் பாதிக்கும் வாய்ப்பு இள வயதிலேயே அதிகரிக்கலாம். அதையும் முறையான மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறிந்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
எந்த வேலையும் செய்யாமல், உடலுக்கு உழைப்பே இல்லாமல் சோம்பேறியாகக் காலம் தள்ளுகிற பெண்களுக்கும் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

மிஸ் பர்ஃபெக்டா நீங்கள்?

சில பெண்களுக்கு எங்கேயும், எப்போதும், எல்லாம் மிகச் சரியாக இருக்க வேண்டும். 5 நிமிடங்கள் தாமதமானாலும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். சின்னச் சின்ன தவறுகள்கூட அவர்களுக்கு உச்சக்கட்ட டென்ஷனை கொடுக்கும். ‘எனக்கு எல்லாம் சரியா இல்லைனா பிடிக்காது. பர்ஃபெக்ஷன் முக்கியம்’ எனப் பெருமையாக சொல்லிக் கொண்டாலும், இந்த குணாதிசயம் உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களை ‘டைப் ஏ பர்சனாலிட்டி’ என்கிறோம். இவர்களுக்கு உண்டாகிற டென்ஷனும் படபடப்பும் இதய நோய்களுக்கு வழி வகுக்கலாம்... ஜாக்கிரதை!

ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை

பிறந்த குழந்தையிலிருந்து, ஓய்வு பெற்ற முதியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம் இருக்கிறது. குறிப்பாக ஐ.டி. துறையிலும், சாஃப்ட்வேர் துறையிலும் வேலை பார்க்கிற பெண்களுக்கு இது மிக அதிகம். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் புராஜெக்ட்டுகளை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம், கண்ட நேரத்து உணவுப் பழக்கம், கொழுப்பும் கலோரியும் அதிகமான உணவுகள், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை என எல்லாமே ஆரோக்கியக் கேட்டுக்கான விஷயங்கள். அதீத ஸ்ட்ரெஸ் காரணமாகவும் இதயம் பாதிக்கப்படலாம்.

தவிர்க்கவும் தப்பிக்கவும்...

குடும்பப் பின்னணியில் இதய நோய்கள் இருப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், பருமன், அதிக ரத்த அழுத்தம் உள்ள பெண்கள் எல்லாம் 35 வயதுக்குப் பிறகு வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டியது அவசியம். பெரும்பாலானவர்களுக்கு காலம் கடந்து மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்கிற போதுதான், நீரிழிவு இருப்பது கூட முதல் முறை தெரிய வருகிறது. வயதானவர்களுக்கு நெஞ்சு வலி இல்லாமல்கூட அமைதியாக மாரடைப்பு வரலாம். அதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல.

எக்கோ கார்டியோகிராம், டிரெட்மில் டெஸ்ட் போன்றவற்றை செய்வதன் மூலம் ஏற்கனவே மாரடைப்பு வந்திருக்கிறதா, வரும் வாய்ப்புள்ளதா என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். மெனோபாஸ் வந்து விட்ட பெண்கள் கிட்டத்தட்ட ஆண்களுக்குச் சமம்தான். அதுவரை அவர்களைப் பாதுகாத்த ஹார்மோன்கள் அதன்பிறகு இல்லாமல் போவதால் இதய நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம். எனவே முறையான மருத்துவப் பரிசோதனையும், இதயத்துக்கான சோதனையும் மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வாரத்துக்கு 150 நிமிட நடைப் பயிற்சி அவசியமாகிறது. நடந்து விட்டு வந்தாலே, உடல் லேசான மாதிரியும், ஆரோக்கியமாக இருக்கிற உணர்வும் நிச்சயம் வரும்.

ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். பொரித்த உணவுகள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், ஊறுகாய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

புகைப்பழக்கம் இருந்தால் தவிர்க்கப்பட வேண்டும். புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்திலிருந்து மீள, மனதை லேசாக்கும் பயிற்சிகளை, மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம்




ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க, இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி, இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் ‘டிரான்ஸ்ஃபேட்’னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை.

எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:


  • மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.

  • ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.

  • பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

  • ‘ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்’னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.
சாப்பிடக்கூடிய உணவுகள்:

  • கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,

  • அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)

  • ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

  • தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகள்


காய்கறிகளில் உயிர்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளதாள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரழிவு போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டவை ஆகும். செரிபரோ வாஸ்குளார் நோயினால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது.ஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக் கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு பாதுகாத்து பராமரிக்கின்றன.

பொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தாராளமாய் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துகளை விட அதிகளவு சத்துக்களை நம்மால் பெற முடிகிறது. இவை ஊட்டசத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடலில் ஏற்படும் பல வித பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.


டர்னிப் : டர்னிப் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த டர்னிப் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வேர் காய்கறி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளதால் இதயத்தை பாதுகாக்கிறது

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையை குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது.

வெங்காயம்: வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங்கு உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

முள்ளங்கி: நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

சக்கரைவள்ளி கிழங்கு: சர்க்கரைவள்ளிக் கிழங்ககில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு, சாதாரண உருளைக்கிழங்கை விட குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும்.

பூண்டு: பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பச்சையாக பூண்டை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் குணமாகிவிடும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
உயர் ரத்த அழுத்தம் தடுப்பது எளிது!


உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது உயர் ரத்த அழுத்தம் (Hypertension) உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகை பிடிப்பவரா? மதுப்பழக்கம் உண்டா? தொப்பை உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? நீரிழிவு இருக்கிறதா? மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு ‘ஆம்’ என்று பதில் சொன்னாலும் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கே மருத்துவரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம் (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்று இருந்தால், அது நார்மல். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறார்கள்.

80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure).. . அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். 30 வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது சுருங்கழுத்தம்... 80 என்பது விரிவழுத்தம். இது எல்லோருக்குமே சொல்லி வைத்தாற்போல 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவது போல, சுருங்கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (கீபிளி) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று சொல்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்?

ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றின் பயனாக, உடலில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். சிலருக்கு இது தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கும். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்காலிக உயர் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத்திருக்கும்போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும். உதாரணமாக, ரத்த அழுத்தமானது உறங்கும்போது சற்றுக் குறைந்தும், உணர்ச்சிவசப்படும்போது மிக உயர்ந்தும், காலை நேரத்தில் இயல்பாகவும், மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும். இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும்போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குத் தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒருவருக்கு முதல் முறையாக ரத்த அழுத்தத்தை அளக்கும் போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.

நிரந்தர உயர் ரத்த அழுத்தம்

பொதுவாக, வயது கூடும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பருமன், நீரிழிவு, சிறுநீரக நோய், பிறவியில் ரத்தக்குழாய் பாதிப்பு, அதிக ரத்தக்கொழுப்பு, புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், மன அழுத்தம், உறக்கமின்மை போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஓய்வில்லாமல் பணிபுரிகிறவர்கள் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பது வாடிக்கை. மருத்துவர்கள், ஒருவருக்கு உண்மையான ரத்த அழுத்தத்தை அறிய, தொடர்ந்து சில நாட்களுக்கு 5 அல்லது 6 முறை ரத்த அழுத்தத்தை அளக்கிறார்கள். அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140/90க்கு மேல் இருந்தால், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கிறார்கள்.

தனித்த உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தத்தில் ஒரு சிறப்பு வகை இருக்கிறது. அதற்கு ‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ (Isolated Systolic Hypertension) என்று பெயர். அதாவது, இதில் சிஸ்டாலிக் அழுத்தம் மட்டும் 180க்கு மேல் இருக்கும்... டயஸ்டாலிக் அழுத்தம் சரியாக இருக்கும். இப்படி இருப்பதை ‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இதயத்துக்கு அதிகம் சுமை தந்து, இதயம் செயல் இழப்பதை ஊக்குவிக்கின்ற மோசமான ரத்த அழுத்தம் இது. பொதுவாக வயதானவர்களுக்குத்தான் இது ஏற்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகளிடம் இது இளம் வயதிலேயே காணப்படுகிறது. இவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, மறதி நோய் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.

அறிகுறிகள் என்னென்ன?

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. திடீரென்று மயக்கம்,பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதால் இதற்கு ‘சைலன்ட் கில்லர்’ (Silent Killer)அதாவது,‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.

பாதிப்புகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தை காலமுறைப்படி டாக்டரிடம் சென்று அளந்து கொண்டு, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள தவறினால் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும். இது இதயத்தை பாதிக்கும்போது இதயம் வீங்கிவிடும்.அது துடிப்பதற்கு சிரமப் படும். மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப் படும்போது பக்கவாதம் வரும். மறதி நோய் வரும். மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுமானால், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது கண்ணைப் பாதித்தால், திடீரென பார்வை பறிபோய்விடும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறிது சிறிதாக சிறுநீரகங்கள் கெட்டுப்போகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முழுவதுமாக செயல் இழந்துவிடும்.

தவிர்க்கவும் தப்பிக்கவும்...

30 வயது ஆனவர்களும் குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம். காலம் கடந்து கண்டுபிடிக்கிற போது, உடலில் வேறு சில பாதிப்புகளும் சேர்ந்து கொள்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் மாத்திரை இல்லாமலும் சமாளிக்கலாம்.

உப்பைக் குறைக்கவும்!

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர், சேவு, சீவல் போன்ற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், விரைவு உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உணவில் கவனம்...

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சாஸ், சீஸ், க்ரீம் மிகுந்த கேக் வகைகள், இனிப்பு வகைகள், சாக்லெட் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஒதுக்குங்கள். எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை குறைந்த அளவிலும் சுழற்சி முறையிலும் பயன் படுத்தினால் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகள் உகந்தவை. அசைவப் பிரியர்கள் வாரம் ஒருநாள் தோலுரித்த கோழிக்கறி அல்லது மீன் சாப்பிட்டுக் கொள்ளலாம். காபி, தேநீருக்குப் பதிலாக பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

நார்ச்சத்து உணவுகள் உதவும்

நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைப் பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும். எடையைக் குறைக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தமும், மாரடைப்பு வருவதும் தடுக்கப்படும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, பிரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள், புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகளில் நார்ச்சத்து அதிகம்.பழங்களை சாப்பிடுங்கள்

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினமும் பால் சாப்பிடுங்கள். இதில் கால்சியம் உள்ளது, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர் மற்றும் மீன் உணவுகளில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உள்ளதால் இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நடக்க நடக்க நன்மை!

உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க வேண்டுமானால் தினமும் 40 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வாரத்துக்கு 150 நிமிட நடைப்பயிற்சி தேவை.

புகை உடலுக்குப் பகை

சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 600 மடங்கு அதிகரிக்கிறது. புகைப்பதால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ ரத்தக்குழாய்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய ரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும். புகைப்பதையும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிருங்கள்.

மதுவுக்கு மயங்காதீர்கள்!

அருந்தப்படும் ஒவ்வொரு கோப்பை மதுவும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மது அருந்தும் ஒருவருடைய ரத்த அழுத்தம், மது அருந்தாதவரை விட இரு மடங்கு அதிகரிக்கிறது என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே, மதுவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.

தூக்கமும் ஓய்வும் முக்கியம்

தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கமும் வாரம் ஒருநாள் ஓய்வும் அவசியம். மன அழுத்தம் கூடாது. மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்தால் மனம் லேசாகி மன அழுத்தம் குறையும். பரபரப்பையும் கோபத்தையும் குறைத்து, மனதை லேசாக்கிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

மாத்திரைகள் எப்போது அவசியம்?

இன்றைய நவீன மருத்துவத்தில் உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த நிறைய மருந்துகள் உள்ளன. தேவைக்குத் தகுந்தாற் போல ஒரே நேரத்தில் பல மருந்துகளை கலந்து சாப்பிடும் வழிமுறைகளும் உள்ளன. அதனால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் நோயைப் பற்றி அதிகம் அச்சப்படத் தேவையில்லை.

உயர் ரத்த அழுத்த வகைகள்

இதயம் சுருங்கும்போது (சிஸ்டாலிக் அழுத்தம்), இதயம் விரியும்போது (டயஸ்டாலிக் அழுத்தம்) ரத்த அழுத்த நிலை...

100 முதல் 140 வரை 70 முதல் 90 வரை சரியான நிலை (Normal)
141 முதல் 159 வரை 91 முதல் 99 வரை இளநிலை (Mild)
160 முதல் 179 வரை 100 முதல் 109 வரை மிதநிலை (Moderate)
180 முதல் 199 வரை 110 முதல் 129 வரை மிகுநிலை (Severe)
200க்கு மேல்130க்கு மேல் கொடியநிலை (Malignant)


இங்கு ரத்த அழுத்த வகைகள் குறித்துப் பேசுவதற்குக் காரணம், இந்த வகைகளை அடிப்படையாக வைத்துத்தான் இதற்கு சிகிச்சை முறை அமைகிறது. எனவே, உயர் ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல், நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று ‘பிபிக்கு ஒரு மாத்திரை கொடுப்பா’ என்று வாங்கிச் சாப்பிட்டால் அது பலன் தராது.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!



முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவற்றால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ஒமேகா கொழுப்பு அமிலம் :


மீன்களில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

வயதான பெண்களுக்கு
:

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது. குறைவாக ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்திருக்கிறது.

இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்களை நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனை தரும். கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிக்கிறது. மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளன.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
ரத்த கொதிப்பு குறைய...
ரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ என அதிகளவு உணர்ச்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்க வேண்டும்.

முடிந்தளவு மன அழுத்தம் குறைக்கும் தியான முறைகளை பின்பற்றலாம்.

ரத்த கொதிப்புக்கு மலச்சிக்கலும் முக்கிய காரணம். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அதுபோன்று மலம் கழித்தலும் குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். அதிகளவு பழம், சுத்த பசும்பால் மற்றும் நிறைய தண்ணீர் அருந்தினால், மலச்சிக்கல் வராது.

அதிக நேரம் ஓய்வின்றி கண்விழிக்கக் கூடாது. அதிகளவு கோபத்தை காட்டக்கூடாது. காபி, டீ, கோகோ பானங்களை தவிர்க்க வேண்டும். புகையிலை சம்பந்தமான எதையும், மதுவையும் பயன்படுத்தக் கூடாது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
இதயத்தில் நடக்கும் அதியசம்




நம் உடல் உறுப்புகளில் இதயம் மிகவும் முக்கியமானது. இதயத்தின் வலது புறத்தில் 2, இடதுபுறத்தில் 2 என நான்கு அறைகள் உள்ளன. இடது பக்க அறைகளில் சுத்த இரத்தமும் வலதுபுற அறைகளில் அசுத்த இரத்தமும் உள்ளன. அசுத்த இரத்தம் வலது புற அறைகளில் இருந்து நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்தமாக்கப்பட்டு இதயத்தின் இடதுபுற அறைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கு இரத்தக்குழாய்கள் மூலம் இரத்தம் சென்றடைகிறது. இதயம் சுருங்கி விரிவதால் இந்நிகழ்ச்சி நடைக்கிறது. சுத்த இரத்தமும் அசுத்த இரத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால் அது ஆபத்தானது. மரணத்திற்கே காரணமாகிவிடும்.

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது நுரையீரல் வேலை செய்யாதிருப்பதால் இரத்தத்தை சுத்தமாக்கும் பணி குழந்தையின் இதயத்தில் நடைபெறுவதில்லை. எனவே இதயத்தின் இடப்பக்க, வலப்பக்க அறைகளுக்கிடையில் ஒரு இணைப்பு காணப்படும். இந்த இணைப்பு இருப்பதால் தாயின் உடலில் இருந்து சுத்த இரத்தம் குழந்தையின் இதயத்தை அடைந்து அங்கிருந்து குழந்தையின் உடலுக்கு சென்று அசுத்தமடைந்து மீண்டும் தாயின் உடலுக்குள் சென்றடையும். எனவே குழந்தையின் இதயத்தில் அசுத்த இரத்தம் இருப்பதில்லை. குழந்தையின் இதயம் இரத்தத்தை கடத்திவிடும் குழாயாகவே செயல்படுகிறது.

குழந்தை பிறந்தவுடனேயே முதல் மூச்சு விடும்போது நுரையீரல் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இப்போது பிறந்த குழந்தையின் இதயத்தின் இடது அறைகளில் சுத்த இரத்தமும் வலது அறைகளில் அசுத்த இரத்தமும் வந்துவிடும். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது இருந்த வலது, அடது அறைகளை இணைக்கும் இணைப்பில் அசுத்த இரத்தமும், சுத்த இரத்தமும் கலந்துவிடும் அபாயம் குழந்தையின் இதயத்தில் உண்டு. ஆனால் அந்த இணைப்பு துவாரத்தை ஒரு சவ்வு மூட ஆரம்பித்து விடுவதால் இந்த அபாயம் நிகழ்வதில்லை. இந்த சவ்வு எப்படி உடனே வளர ஆரம்பித்து சுத்த இரத்தமும், அசுத்த இரத்தமும் கலக்காமல் தடுக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புதிராவே உள்ளது. குழந்தை பிறந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 முறை இதயம் துடிக்கிறது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
இருதய பாதிப்பை தவிர்க்க


இருதய பாதிப்புக்கு அடிப்படையாக இருப்பது இருதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பு மற்றும் ஓட்டை. இருதய பாதிப்பை முற்றிலும் தடுக்க முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை. அதற்கு இந்த டிப்ஸ்கள் உதவும்.

* ரத்தத்தில் கரையும் கொழுப்புக்களான தாவர எண்ணையை உணவில் பயன்படுத்த வேண்டும்.

* 40 வயதை தொடும்போதே உணவு விஷயத்தில் அக்கறை கொள்ள வேண்டும். ருசியை தவிர்த்து உணவை மருந்தாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான நார்ச்சத்து உணவில் இருப்பது அவசியம்.

* தினமும் 3 கி.மீ தூரமாவது நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம்.

* தினமும் மூச்சு மற்றும் தியான பயிற்சி தேவை.

* மதிய உணவுக்கு பிறகு அரை மணி நேரமாவது கண்ணயர்வது அவசியம்.

* மார்பில் திடீரென தோன்றும் வலி, குத்தல், மயக்கம், வியர்வை கொட்டுதல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ்





ஒரு காலத்தில் நோய் இல்லாமல் வாழ்ந்தவன் மனிதன். ஆனால் இன்றைக்குள்ள நடைமுறையில் மனிதனோட வாழ்வில் நோய் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் வயது பாரபட்சம் இன்றி வரும் நோய் இதயத்தில் ஏற்படும் நோய் தான். இதை இரண்டு விதமாக பிரிக்கலாம். இதயத்தின் வால்வுகளில் ஏற்படுவது மற்றும் இதய தசைகளில் ஏற்படும் பிரச்னை.


இதில் இதய தசைகளில் உருவாகும் பிரச்னை காரணம் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள உணவு பழக்கம். இதுபோன்ற பிரச்னைகளை உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்தல், முறையான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் 90 சதவீதம் கட்டுப்படுத்தலாம். இதயத்தின் தசைகளுக்கு ரத்தம் சரிவர செல்லவில்லை என்றால் நெஞ்சு வலியும், இதயத்தின் உட்பகுதி மற்றும் விரல்களின் நுனிப்பகுதி ஆகிய பாகங்களில் அதிக வலி ஏற்படும்.

இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதனால் 35 வயது கடந்தவர் என்றால் அவர்கள் இதய நோய் குறித்து மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்.

இதய கோளறுகள் ஏற்பட இரண்டு காரணங்கள்
:

1. பரம்பரையாக வருவது.
2. நடைமுறை வாழ்க்கை முறை காரணமாக நவீன வாழ்க்கை முறையில் வாகனங்களை பயன்படுத்துவதால் நடைபயிற்சி என்பது குறைந்து விட்டது. இதனால் உடலில் சேரும் தேவையில்லாத கலோரிகள் சரியாக எரிக்கப்படுவதில்லை.

உணவில் கவனம் தேவை:


இதய நலன் காக்க உணவு முறையில் கவனம் தேவை. காலை உணவை தவிர்க்கவே கூடாது. மற்றபடி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது. வேக வைத்த நார்ச்சத்து உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருப்பது முக்கியம். பழங்கல் பல வகைகளில் நம் உடலுக்கு நன்மை அளிப்பதால் அதை நாம் தினமும் சாப்பிடுவது நல்லது.

உட்காந்தபடியே பணிகளை செய்வது உடலுக்கு நல்லது அல்ல. உடலுக்கு அசைவும், இயக்கமும் அடிக்கடி தேவை. காலை, மாலையில் 40 நிமிடங்கள் நடப்பது அல்லது ஒரு வேளையாவது நடப்பது நல்லது. வாரத்தில் 5 நாட்களுக்கு தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி தேவை. இதுபோன்ற சூழ்நிலை மனதை மென்மையாக வைத்து கொள்ளும்.

சிகிச்சை என்ன?


இதய பிரச்னை உள்ளவர்கள் அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அக்குபஞ்சர் சிகிச்சை முறை முதலில் பிரதானமாக இதயத்திலிருந்து தொடங்கப்பட்டு பிறகு உள்பாகங்களில் பரவி, கைகள் மூலம் விரல்களின் முனைகளில் முடிவடைகிறது. அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை பெறும் நபர் வேறு இதய கோளாறுகள் வராமல் தங்களை பாதுகாத்து கொள்ளலாம். சரியான புள்ளியை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவதால், இதய தசைகளுக்கு ரத்தம் சீராக செல்லும். இதனால் வலி, வேதனையில் இருந்து விடுபடலாம். மேலும் உண்ணும் உணவும் எளிதில் செரிமானம் ஆகும். இதன் மூலம் ஒருவரின் வாழ்நாள் அதிகரிக்கும்.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.