How can you save the married life? -திருமண உறவை காக்க!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
காக்க காக்க... திருமணம் காக்க!


வாழ்வெனும் புதிர்

வசதிகளும் வாய்ப்புகளும் வாழ்க்கை முன்னேற்றங்களும் ஒருவரின் மகிழ்ச்சியை அதிகரிப்பதுதானே இயல்பு? அப்படி நிகழ்வதில்லை என்பதுதான் இன்றைய நிஜம். குறிப்பாக இன்டர்நெட், இ மெயில், வாட்ஸப், ட்விட்டர் என தகவல் தொடர்பை சுலபமாக்கிய தொழில்நுட்ப வசதிகள், மகிழ்ச்சியை அதிகரிப்பதற்குப் பதில், மன உளைச்சலையே கூட்டியிருக்கின்றன. உண்மையில் பார்த்தால் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி களால் நமக்கு நிறைய நேரம் மிச்சப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கெல்லாம் பழகிய நமக்கு இன்று யாருக்கும், எதற்கும் செலவிட நேரமே இருப்பதில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வாழ்க்கையின் வேகம் கூடியிருப்பதை உணர்கிறோம்.

கணவனும் மனைவியும் பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் பல நாட்கள் ஆனதை இன்றைய தம்பதியர் சர்வசாதாரணமாகச் சொல்வதைக் கேட்க முடிகிறது. தகவல் தொடர்பை இலகுவாக்கியிருக்கிற எத்தனையோ சாதனங்கள் வந்துவிட்ட போதும், இருவருக்கும் இருவருடனும் செலவிட நேரம் இருப்பதில்லை!

அரிதாக நேரம் கிடைத்தாலும், அதை நண்பர்களுடனும், நவீன தொழில்நுட்பச் சாதனங்களுடனும், வேலையுடனும், சமூகச் செயல்பாடுகளிலும் செலவழிக்கிற தம்பதியரே பெரும்பான்மை. கடைசியாக இருவரும் எப்போது நெருக்கமாக இருந்தோம்... அன்யோன்யமாக பேசி, சிரித்தோம் என்பதுகூட பல தம்பதியருக்கு நினைவிருப்பதில்லை. வாழ்க்கையில் வேறு எதற்கும் இல்லாத அதிகபட்ச முக்கியத்துவத்தை, முன்னுரிமையை தன் துணைக்குத் தர வேண்டியதன் அவசியத்தையோ, அது தவிர்க்கப்படுவதால் ஏற்படுகிற குற்ற உணர்வையோ இந்தத் தலைமுறை தம்பதியரிடம் பார்க்க முடிவதில்லை.

விவாகரத்து என்பது இன்று வீரியம் இழந்து விட்டது. மிகப்பெரிய பிரச்னைகள் ஏற்பட்டு, தீர்க்க முடியாத பட்சத்தில் விவாகரத்து செய்வதையே தவறாகப் பார்த்த காலம் இன்றில்லை. சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக்கூட விவாகரத்தை தீர்வாக நினைக்கிறார்கள். பேசித் தீர்த்துவிட முடியும் என்கிற பிரச்னைகளை அதற்கான முயற்சிகளை எடுக்க முனையாமல் விவாகரத்து பற்றி யோசிக்கிறார்கள். திருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்தில் பிரிகிற தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பாலிவுட் நடிகர் இம்ரான்கான் திருமணமான பத்தே மாதங்களில் விவாகரத்து செய்திருக்கிறார். விவாகரத்து செய்வதில் குற்ற உணர்வு இருப்பதில்லை. இரண்டாவது, மூன்றாவது திருமணங்களை விவாகரத்து செய்வதே இன்று சாதாரணமாக மாறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் லேட்டஸ்ட் டிரெண்ட் என்ன தெரியுமா? திருமண ஒப்பந்தம். ஒப்பந்த அடிப்படையில்தான் இருவரும் வாழ்க்கையில் இணைகிறார்கள். பிடிக்கவில்லையா? கோர்ட், விவாகரத்து என அலைவதற்கு பதில், பிடிக்கும் வரை சேர்ந்திருப்பது, பிடிக்காவிட்டால் பிரிந்துபோவது என்கிற மனநிலையில் ஒப்பந்தத் திருமணங்கள் அங்கே பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன. பிரச்னைகள் இருந்தாலும் சேர்ந்து வாழ்கிற மனநிலை எல்லாம் இப்போது இல்லை. பணக்காரர்களும் பிரபலங்களும் செய்கிற விவாகரத்துகள், நியாயமானவை என்கிற மாதிரி சாமானிய மக்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் விவாகரத்து என்பது உணர்வுரீதியாக மிகப்பெரிய வலியைக் கொடுக்கக்கூடியது.

வரலாற்று மற்றும் சமூக ரீதியிலான மாற்றங்கள், திருமணம் என்கிற அமைப்பின் மேல் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. திருமணத் தோல்விகளுக்கு இவையும் ஒரு காரணம் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. திருமணம் என்கிற விஷயம் இத்தனை ஆண்டுகளில் வரலாற்று ரீதியான ஆராய்ச்சிக்கு எடுக்கப்படவில்லை. அப்படி எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது வந்திருக்கிறது. திருமண உறவில் சந்தோஷம் காணாமல் போவதில் கணவன்-மனைவி இருவரும் பங்கெடுத்துக் கொள்வது அவர்களுக்கே தெரிவதில்லை. திருமண உறவு என்பது பலவகையான பொய்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவற்றில் சிலதைப் பார்ப்போம்.

* காதல் மட்டுமே திருமணத்தைத் தாங்கி நிறுத்தி விடும் என கணவன்-மனைவி இருவரும் நம்புகிறார்கள். அது மட்டுமே போதாது. திருமணத்துக்குப் பிறகு அந்த உண்மை தெரிய வரும். `நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் நிறைய காதலோடதான் இருக்கோம். ஆனா, நாங்க சேர்ந்திருக்கிறபோது எங்களுக்கு இடையில சந்தோஷமே இருக்கிறதில்லை’ எனச் சொல்கிற தம்பதியரே இதற்கு சாட்சி. திருமண உறவில் சந்தோஷத்தைத் தக்க வைக்க பிரத்யேக திறமைகளும் கடின உழைப்பும் அவசியமாகிறது.

* `நான்தான் எப்போதும் பேசிக்கிட்டே இருக்கேன். அவர் என் பேச்சைக் கேட்கறதே இல்லை’ என்பது பெரும்பாலான பெண்களின் குற்றச்சாட்டு. நிறைய பேசுவதைக் காட்டிலும் சரியாகப் பேசுவதே முக்கியம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. கணவன்-மனைவி பந்தத்தை வளர்ப்பதில் தகவல் தொடர்புக்கு மிக முக்கிய பங்குண்டு. ‘உண்மையைச் சொல்கிறேன்’ என்கிற எண்ணத்தில் மனதில் உள்ள உணர்வுகளை எல்லாம் அப்படியே வெளிப்படுத்துவது, உறவை பலப்படுத்துவதற்குப் பதில் எதிர்மறையாகவே செயல்படும். ஆங்கிலத்தில் இதை Brutally honest என்கிறோம்.

* என்ன பேசினாலும் துணையை மாற்ற முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருதரப்பிலிருந்தும் வருவதுண்டு. துணைதான் எப்போதும் தவறு செய்கிறவர் என்கிற எண்ணமும் இருவருக்கும் இருப்பதுண்டு. `எவ்வளவோ முயற்சி செய்தும், துணையைத் திருத்த முடியவில்லை’ - விவாகரத்து முடிவில் இருக்கும் பலரும் இப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

* திருமணத்தில் இணைகிற இருவரும், புதிதாக அவர்களுக்கென குடும்ப விதிகளை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஆனால், இருவருமே அவரவர் வளர்ந்த பின்னணியில் இருந்து பழைய குப்பைகளை சுமந்து வந்து புதிய உறவில் புகுத்துகிறார்கள் என்பதே உண்மை.

அதனால்தான் தன் துணை தான் விரும்பியபடி நடந்து கொள்ளாதபட்சத்தில் கோபப்படத் தோன்றும். தன் வாழ்க்கையில் எப்போதோ சந்தித்த நிகழ்வுகளின் தாக்கம், உறவுகளின் அணுகுமுறை போன்ற பல விஷயங்களும் ஆழ்மனத்தில் பதிந்து போய், அது இயக்கும்படிதான் நிகழ்காலத்தில் நடக்க வைக்கும்.

* அந்தக் காலத் திருமணங்களுக்கும் இந்தக் காலத் திருமணங்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள்... இந்தக்கால திருமணங்கள் இருவரும் சமம் என்பதை உணர்த்துகின்றன என்கிறோம். வீட்டு வேலைகளையும் பொருளாதார சுமைகளையும் இருவருமே சமமாகப் பிரித்துக் கொள்கிறார்கள். ஆனாலும், ஆண்களின் ஆண்டாண்டு கால மனோபாவம் இன்னும் முற்றிலும் மாறிவிடவில்லை என்பதே உண்மை. பெண்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும், பெண்கள் பெரிய பதவிகளிலும் பொறுப்புகளை ஏற்கும் போதும், அதை இயல்பாக எடுத்துக் கொள்ள இன்னும் ஆண்கள் மத்தியில் பெரிய தயக்கம் இருக்கிறது. கடினமாக இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு என்று ஆண்களுக்கும், தன்னுடைய வேலைகள் கணவரால் அங்கீகரிக்கப்படுவதோ, பாராட்டப்படுவதோ இல்லை என்று பெண்களுக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அது இருவரது நெருக்கத்திலும் அதிருப்தியை அதிகரிக்கும்.

* குழந்தைகள்தான் திருமண வாழ்க்கையை முழுமையடையச் செய்கிறார்கள்... பலப்படுத்துகிறார்கள் என்பது பரவலாக நம்பப்படுகிற கருத்து. உண்மையில் திருமண வாழ்க்கையை பலவீனமாக்குவதே குழந்தைகள்தான். அதற்காக குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. குழந்தைகள் வருவதற்கு முன், கணவன்-மனைவியின் நெருக்கம் அதிகமாக இருக்கும். குழந்தைகள் பிறந்ததும், அவர்கள் மீதான கவனிப்புக்கும் பராமரிப்புக்குமே நேரம் சரியாக இருக்கும். ஏற்கனவே ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்காத தம்பதியருக்கு இது இன்னும் சிக்கலைத் தரும். குறிப்பாக பெண்களே இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பிறந்த குழந்தையைக் கவனிக்கும்போது தூக்கமில்லா இரவுகள் பிரச்னை தரும். பிள்ளைகள் வளர்ந்து டீன் ஏஜை அடைகிற போது, அவர்களது நடத்தையில் ஏற்படுகிற மாறுபாடுகளை சமாளிப்பது சவாலாக இருக்கும். வாழ்க்கையில் குழந்தைகள் முக்கியம்தான். அவர்களைவிடவும் முக்கியமானது திருமண உறவு.

* கடைசியாக செக்ஸ். திருமண உறவில் தாம்பத்திய உறவு சுலபமாகவும் திருப்தியாகவும் இருக்கும் என்கிற நம்பிக்கைக்கு முரணாக இருக்கிறது நடைமுறை யதார்த்தம். நேரமின்மை, வேலை அழுத்தம் போன்ற பல காரணங்களால், பெரும்பாலான தம்பதியரிடையே அந்த உறவு திருப்தியின்றியே இருக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

(வாழ்வோம்!)​
 
Last edited:

priyanram

Friends's of Penmai
Joined
Aug 24, 2011
Messages
177
Likes
137
Location
madurai
#2
Re: காக்க காக்க... திருமணம் காக்க!

True facts Chan sis!!!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
சின்ட்ரெல்லாவுக்கும் பிரச்னை வரலாம்!

எதிர்பார்ப்பும் யதார்த்தமும்

திருமண உறவில் நம்பப்படுகிற 7 பொய்களைப் பற்றி பார்த்தோம். ஒவ்வொரு பொய்யின் பின்னணிபற்றியும் தீர்வுகள் குறித்தும் இனி வரும் அத்தியாயங்களில் விரிவாக அலசுவோம்.

பொய் 1

`அன்பு எல்லாவற்றையும்
பொறுமையாக ஏற்கும்.
அன்பு எப்போதும் நம்பும்.
அன்பு கைவிடுவதில்லை.
எப்போதும் உறுதியுடன் தொடரும்...’
என்கின்றன பைபிள் வாசகங்கள்.

நடைமுறையிலோ வெறும் அன்பும் காதலும் மட்டுமே திருமண பந்தத்தைக் கட்டிக் காப்பதில்லை. இரண்டு பேர் காதலிக்கிறார்கள். திருமணம் செய்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் காதலுடன் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். அதே அன்பை தம் வாரிசுகளிடமும் காட்டுகிறார்கள். அது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது... எல்லாம் சரிதான். ஆனால், திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திச் செல்ல அது மட்டுமே உதவுவதில்லை என்பதுதான் நிஜம். அன்பிருந்தால் திருமண வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம் என சிறு வயதிலிருந்தே நாம் நம்ப வைக்கப்படுகிறோம்.

எல்லா திருமணங்களுமே காதலுடன்தான் தொடங்குகின்றன. இறுதிவரை அதே காதலும் சந்தோஷமும் தொடர்கிறதா என்றால் இல்லை. சுபமாக முடிகிற திரைப்படங்கள் போல இருப்பதில்லை நிஜ வாழ்க்கை. சின்ட்ரெல்லா கதையைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். திருமணத்துக்கு முன்பு அவள் அனுபவித்த சித்தி கொடுமை பற்றிப் படித்திருப்போம். இளவரசனை அவள் திருமணம் செய்ததும், அந்தக் கதையைப் படித்த எல்லோருக்குமே ஒருவித மனநிறைவு ஏற்படும்.

சின்ட்ரெல்லா வின் வாழ்க்கை திருமணத்துக்குப் பிறகும் பிரச்னைகள் இன்றி சுமுகமாகவே தொடரும் என்று நாம் நம்புவோம். அது அப்படித்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. திருமணத்துக்குப் பிறகு அவளுக்கும் பிரச்னைகள் வரலாம். மாமியார் கொடுமைக்காரராக இருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு கணவரின் காதல் முகம் மாறிப் போகலாம். அவர்களுக்கு ஏடிஹெச்டி கோளாறுடன் குழந்தை பிறக்கலாம். இப்படி திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கையில் பிரச்னைகள் பல வரலாம்.

சினிமாக்களிலும் கதைப் புத்தகங்களிலும் நாம் பார்க்கிற, படிக்கிற காதல் கதைகள் வேறு. அந்தக் கதைகளில் எந்தப் பெண்ணும் வேலைக்குப் போய்விட்டுக் களைத்து வீடு திரும்புவதில்லை. அவற்றில் வருகிற கணவர்கள், குழந்தைகளுடன் நேரம் ஒதுக்குவதைத் தவிர்ப்பதில்லை. வீட்டுக்கு வந்ததும் டி.வி. முன் உட்கார்வதில்லை. மனைவி பேசும்போது செய்தித்தாள் வாசிப்பதில்லை. தாம்பத்திய உறவுக்குக்கூட நேரமில்லாமல் இருப்பதில்லை. கற்பனைக் கதைகளில் வரும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் மன அழுத்தம் இருப்பதில்லை. அந்தப் பெண்களுக்கு மெனோபாஸ் காலத்துப் பிரச்னைகள் இருப்பதில்லை. நிஜ வாழ்க்கையில் இவை எல்லாம்தான் தம்பதியரிடையே பிரச்னைகளை ஏற்படுத்துகிற விஷயங்களே.

காதலிக்கிற காலத்தில், `Love of my life’ என அறிமுகப்படுத்தப்படுகிற அதே நபர், கல்யாணத்துக்குப் பிறகு சகித்துக் கொள்ள முடியாத துணையாவதும் பிரிவதுதான் தீர்வென்பதும் எப்படி நடக்கிறது என்பது கூட சம்பந்தப்பட்ட தம்பதியருக்குத் தெரிவதில்லை. காதலிக்கிற போதோ, கல்யாணமான புதிதிலோ, துணையைப் பற்றி நாம் அறிந்த `மிகச் சரியானவர்’ என்கிற இமேஜ், திருமணத்துக்குப் பிறகு உடைந்து, `கொஞ்சம்கூட சரியானவரில்லை’ என்று மாறுகிறது. அது பல தம்பதியருக்கும் ஏமாற்றத்தைத் தருகிறது. ஒருவரை அவரது இயல்பான குணங்கள், குறைகளுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப் பக்குவம்தான் அந்தத் திருமணத்தைத் தக்க வைக்கப் போகிறதா, தகர்க்கப் போகிறதா என்பதைத் தீர்மானிக்கிறது.

அளவுகடந்த அன்பு மட்டுமே கணவன்-மனைவி உறவின் வெற்றிக்கு உதவுவதில்லை என்றால் வேறு என்னதான் உதவும்? இப்படிக் கேட்பவர்கள் கீழ்க்கண்ட 3 விதிகளை நினைவில் கொள்ள வேண்டும்.

* `என் துணை என்னை ஏமாற்றி விட்டார்’ என்று சொல்வதற்குப் பதில், இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பது சகஜம்தான். இப்படியும் இருப்பார்கள் என நினைப்பதும், நமக்கும் குறைகள் இருக்கும் என நம்புவதும் அவசியம். எதிர்பார்ப்பு என்பது வேறு. யதார்த்தம் என்பது வேறு என்கிற புரிதல் அவசியம்.


* உங்கள் துணையின் உண்மையான சுபாவம் தெரிந்து, அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வது.

* திருமண உறவில் ஏற்படுகிற கோபங்கள், சண்டைகள் போன்றவற்றை லாவகமாகக் கையாளவும், அவற்றைக் கடந்து திருமண பந்தத்தைத் தொடரச் செய்வதற்கும் ஒரு தனித் திறமையை வளர்த்துக் கொள்வது.

திருமண உறவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில விதிமுறைகள்...

* கணவன்-மனைவி இருவரும் முதலில் தனித்தனியே சில விஷயங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். எவற்றுடன் எல்லாம் நம்மால் வாழ முடியும்? எவற்றுடன் வாழ முடியாது? எவை இன்றி நம்மால் வாழ முடியாது? இவற்றைப் பட்டியலிட வேண்டும்.

* சில விஷயங்களைத் தவறாமல் துணையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, `நீங்க செல்லப் பேர் வச்சுக் கூப்பிட்டா எனக்குப் பிடிக்குது... நீங்க என் கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கும்போது காதலை ஃபீல் பண்றேன்...’ - இப்படி உங்களை சந்தோஷப்படுத்துகிற சின்னச் சின்ன விஷயங்களை நேர்மையாகச் சொல்லுங்கள்.

* சில விஷயங்களை உங்கள் துணையுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பிடிக்காத விஷயங்களையும் பேசலாம். சில பழக்கங்களை ஒரேயடியாக நிறுத்த முடியாது. குறைந்தபட்சம் உங்கள் முன்னிலையில் அவற்றைச் செய்வதைத் தவிர்க்கச் சொல்லலாம். உதாரணத்துக்கு தகாத வாரத்தைகளைப் பேசுவது... கோபமாக நடந்து கொள்வது.

* திருமணத்துக்கு முன்பும், பிறகும் பல தம்பதியர் அர்த்தமுள்ள உரையாடலைப் பின்பற்றுவதே இல்லை. அப்படிப் பேசினால் திருமணமே நின்று போகுமோ என்றும், திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வருமோ என்றும் தவிர்க்கிறார்கள். உண்மையில் அர்த்தமுள்ள பேச்சுதான் திருமண வாழ்க்கையில் பல பிரச்னைகளையும் வரவிடாமல் தடுக்கும். இதுநாள் வரை அதைச் செய்யாவிட்டாலும், இன்றே தொடங்கலாம்.

* இருவரின் வாழ்க்கையிலும் திருமண உறவுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். கடின உழைப்பும் கமிட்மென்ட்டும் இல்லாவிட்டால் அந்த உறவை வெற்றி கரமாக நடத்திச் செல்ல முடியாது.

* வேலை என்பது இருவரின் வாழ்க்கையிலும் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்க வேண்டும். பெரும்பாலான ஆண்களுக்கும் வேலைதான் முதல் மனைவி. வேலைக்குச் செல்கிற தம்பதியர், துணையுடன் செலவிடுவதைவிட அதிக நேரத்தை அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் செலவழிக்கிறார்கள். காதல் அது தானாக வளரும் என அலட்சியமாக இருப்பது முட்டாள்தனம். எத்தனை வேலை வேண்டுமானாலும் கிடைக்கும். அத்தனை வேலைகளிலும் இதே மனோபாவத்துடன் இருந்தால் திருமண உறவில் பிரச்னைகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.

உண்மையான காதல் என்பது என்ன? பிரச்னைகளை சமாளித்து, தீர்ப்பது, துணையுடனான பரஸ்பர மரியாதையைத் தக்க வைத்துக் கொள்வது, இருவருக்குமான நெருக்கம் கூட்டும் திறமைகளை வளர்த்துக் கொள்வது போன்றவைதான். இவற்றை அவ்வப்போது செய்யாமல், எப்போதும் தொடர்ந்தால் திருமண உறவில் மகிழ்ச்சியும் தொடரும்.

"கற்பனைக் கதைகளில் வரும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் மன அழுத்தம் இருப்பதில்லை. அந்தப் பெண்களுக்கு மெனோபாஸ் காலத்துப் பிரச்னைகள் இருப்பதில்லை. நிஜ வாழ்க்கையில் இவை எல்லாம்தான் தம்பதியரிடையே பிரச்னைகளை ஏற்படுத்துகிற
விஷயங்களே."

(வாழ்வோம்!)
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.