How to get rid of Lice? - ஈறுகளையும் பேன்களையும் விரட்ட

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஈறுகளையும் பேன்களையும் விரட்ட

விதம் விதமான ஹேர் கட்டிலும் ஹேர் ஸ்டைலிலும் கலக்குவார்கள். பக்கத்தில் போய்க் கவனித்தால் தலை முழுக்க ஈறுகள் ஒட்டிக் கொண்டிருக்கும். பேன்கள் ஓடி விளையாடும். படித்த, நாகரிகமான பெண்களேகூட பலர் இப்படித்தான் முகம் சுளிக்க வைக்கிறார்கள். பக்கத்தில் போனால் ஒட்டிக் கொள்ளும் என இப்படிப்பட்ட பெண்களைத் தவிர்த்து, தள்ளி நிற்கவே விரும்புவார்கள் எல்லோரும்.

1. ஈறுகளையும் பேன்களையும் விரட்ட...

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

ஈறு, பேன் பிரச்னை என்பது ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிற விஷயம். கொஞ்சம் விழித்துக் கொண்டால் அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதும் சுலபம்.Pediculus humanus capitis என்பதே கூந்தலில் வரும் பேன்களின் அறிவியல் பெயர். இதன் தாக்கம் 3 முதல் 10 வயதுக் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கும். அவர்களது குடும்பத்தாருக்கும் அப்பிரச்னை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கே பேன் பிரச்னை அதிகமிருக்கிறது.

ஒருவருக்கு பேன்கள் இருந்தால், அவரது தலையில் இருந்து இன்னொருவருக்கு நேரடியாகவே அவை பரவும். உடலில் இருக்கிற இன்னொரு வகை பேன்கள் உள்ளன. P.humanus coporis எனப்படுகிற அவை உடம்பிலிருந்து உடம்பு தாவக்கூடியவை. பேன்கள் இருக்கும் நபரின் உடைகள், உடைமைகள் போன்றவற்றின் மூலம் பரவும். இது தவிர அந்தரங்க உறுப்புகளைத் தொற்றிக் கொள்ளும் பேன்கள், பெரும்பாலும் உடல் நெருக்கத்தின் மூலம் பரவக்கூடியவை.

தலையில் வாழ்கிற பேன்களுக்கு மனிதர்களின் ரத்தம்தான் உணவு. அரிப்பு இவற்றின் இருப்புக்கான பொதுவான அறிகுறி. பெண் பேனானது 3 முதல் 4 மி.மீ. நீளமும், ஆண் பேன்கள் சற்றே சிறியனவாகவும் இருக்கும். பேன்களின் நிறமானது மனிதர்களின் சரும நிறத்தைப் பொறுத்து வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் இருக்கலாம். தனது வாழ்நாளான ஒரு மாதத்தில் தினமும் 7 முதல் 10 முட்டைகளை ஈணும்.

அவற்றைத்தான் ஈறுகள் என்கிறோம். அவையே பேன்களாக உருமாறுகின்றன. முழுக்க வளர்ந்த பேன், ஒரு எள்ளின் அளவில் இருக்கும். ஊசி போன்ற
வாய்ப்பகுதியால் தலைச் சருமத்தில் துளை போட்டு, ரத்தத்தை உறிஞ்சி உணவாக்கிக் கொள்ளும். பேன்களும் ஈறுகளும் ரத்தத்தை உறிஞ்சி, தமது உமிழ்நீரை உள்ளே செலுத்தும். அதன் விளைவால் அரிப்பும், இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றும் ஏற்படும். இவை கடித்ததும் முதலில் அந்த இடம் சிவந்து போகும். அரிப்பு இருக்காது. ஒரு வாரத்துக்குப் பிறகே அரிப்பு ஏற்படும்.

அதையடுத்து தலையில் பருக்கள் மாதிரியான சிவந்த தடிப்புகளும் ஏற்படும்.உங்கள் ட்ரைகாலஜிஸ்ட் உங்கள் தலையில் உயிருடன் உள்ள ஈறு அல்லது பேனை எடுத்து சோதித்து அதன் பாதிப்புகளைக் கண்டறிவார். Bug Buster என்கிற முறையில் அவை கண்டுபிடிக்கப்படும்.அரிப்பின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு அரிப்பே இருக்காது. சிலருக்கு 3 வாரங்களுக்குப் பிறகு அது அதிகமாகும்.

அரிதாக சிலருக்கு கொப்புளங்கள் நிறைந்த சரும நோயையும், சீழ் கட்டிகளையும்கூட ஏற்படுத்தும். மிக அரிதாக சிலருக்கு நிணநீர் சுரப்பிகளில் வீக்கமும் காய்ச்சலும் வரலாம்.சிகிச்ைசகள் கெமிக்கல் கலந்த பொருட்களை உபயோகிப்பது, தலையை மொட்டை அடிப்பது, சிலிக்கான் கலந்த லோஷன்கள் உபயோகிப்பது என ஏராளமான சிகிச்சைகள் உள்ளன.

பொதுவாக மெடிக்கேட்டட் ஷாம்பு உபயோகித்து இவற்றை விரட்டுவதுண்டு. ஈறுகளை நீக்கவென்றே கிடைக்கிற சீப்புகளை வைத்து அவற்றை எடுக்கலாம். அதிகபட்ச வெப்பத்தில் துணிகளை துவைத்து உபயோகிப்பதன் மூலம் உடலில் வருகிற பேன்களில் இருந்து விடுபடலாம். சுரப்பிகளில் ஏற்படும் அழற்சி போன்று அறிகுறிகள் தீவிரமானால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளலாம். அகற்ற முடியாத அளவுக்கு ஈறுகளும் பேன்களும் பெருத்துப் போயிருந்தால் மொட்டை அடிப்பதன் மூலமே தீர்வு கிடைக்கும்.

தடுப்பு முறைகள்

குழந்தைகளின் தலையை தினமும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஈறுகளோ பேன்களோ தென்பட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே கவனிப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் அடுத்தவருக்குப் பரவாமல் தடுப்பதும்கூட எளிதாகும்.

குழந்தையின் தலையில் அரிப்பு அதிகமிருப்பதைப் பார்த்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் ட்ரைகாலஜிஸ்ட்டிடம் குறிப்பிட்ட இடைவேளைகளில் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லலாம்.குழந்தைகளின் தலையை தினமும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஈறுகளோ பேன்களோ தென்பட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

2. பேன்களை போக்கும் வீட்டு சிகிச்சை

அழகியல் ஆலோசகர் ராஜம் முரளி

விதை நீக்கிய வேப்பம் பழம் 10 எடுத்து, அது மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சவும். தலைமுடியை இரண்டாகப் பிரித்துக் கொள்ளவும். லேசான சூடாக இருக்கும் போதே அந்த எண்ணெயை பஞ்சில் தொட்டு, பேன், ஈறுகள் உள்ள இடங்களில் தேய்த்து தூக்கி எறிந்துவிடவும். குறிப்பாக ஈறுகள் அதிகம் இருக்கும் பின்னங்கழுத்துப் பகுதியில் இதைச் செய்யவும்.

*மேலே சொன்னபடி எண்ணெய் தேய்த்து சுத்தப்படுத்தியதும் தலையை அலச வேண்டும். பேன், ஈறு பிரச்னை உள்ளவர்கள் எப்போதும் ஷாம்பு உபயோகிக்கக்கூடாது. அது அவற்றை பெருகச் செய்யும். வெந்தயத் தூள், வேப்பிலைத் தூள், துளசித்தூள், பூந்திக் கொட்டைத்தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் குழைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இந்த வாசனைக்கும் கசப்புச் சுவைக்கும் பேன், ஈறுகள் ஓடிவிடும். அடுத்தவருக்கும் பரவாது.

*சீயக்காயை வெதுவெதுப்பான தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் அத்துடன் சாதம் வடித்த கஞ்சி சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இதை வாரம் ஒருமுறை செய்யலாம்.

*50 எண்ணிக்கையில் வேப்பங்குச்சிகளை எடுத்துக் கொள்ளவும். அவற்றை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரில் சுத்தமான சீயக்காய் தூளைக் கரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் ஈறு, பேன்கள் ஓடிவிடும்.

*வாள் மிளகு 1 டீஸ்பூன், பிஞ்சு கடுக்காய் 2, துவரம் பருப்பு 1 டேபிள்ஸ்பூன், பூந்திக் கொட்டை 4 - இவை எல்லாவற்றையும் முதல் நாள் இரவே வெந்நீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அம்மியிலோ, மிக்சியின் சின்ன ஜாடியிலோ அரைத்து தலை முழுவதற்கும் பேக் மாதிரி போட்டுக் கொள்ளவும். சிறிது நேரம் ஊறியதும் அதையே தலையில் தேய்த்து அலசவும். குட்டை முடியுடன் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை உடனடி பலன் தரும். முடியும் நன்கு வளரும்.

*பேன் பிரச்னை இருப்பவர்கள் எப்போதும் குளிர்ந்த தண்ணீரில் தலைக்குக் குளிக்க வேண்டாம். வெதுவெதுப்பான அல்லது சூடான தண்ணீரில் குளிப்பதே சிறந்தது.

 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.