How to Get Rid of Tobacco Addiction? - எளிதில் விட்டொழிக்கலாம்!!

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
சிகெரெட், பீடி, குட்கா, ஹான்ஸ். மூக்கு பொடி போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பலரும் சொல்லுவது இது தான் “விட்டுவிட வேண்டுமென்று தான் நினைக்கிறேன், எவ்வாறு என்று தான் தெரியவில்லை”. அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டவே இந்த கட்டுரை.

புகையிலை பழக்கத்தை விட்டு விட இரண்டு வழிகள் உண்டு.

1. ஒரேடியாய் நிறுத்திவிடுவது (Cold Turkey)

2. படிப்படியாய் அளவை குறைத்து, கடைசியில் நிறுத்திவிடுவது. (TapTapering)

இவை இரண்டையும் விரிவாய் இப்போது பார்ப்போம்.

ஒரேடியாய் நிறுத்துவதற்கான வழிமுறைகள்:


இந்த முறையின் படி, புகையிலை பழக்கத்தை நிறுத்த, ஒரு நாளை குறித்துக் கொள்ளுங்கள். அந்த நாள் இன்றாகவும் இருக்கலாம், உங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்த நாள், உங்கள் திருமண நாள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்கள் புகையிலையால் இறந்த நினைவு நாளாகக் கூட இருக்கலாம். புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தவுடனேயே, அந்த நாளை குறித்து விடுங்கள். நெடுநாட்கள் தள்ளிப்போட வேண்டாம்.

நீங்கள் புகையிலை பழக்கத்தை ஒரேடியாய் விடப்போவதை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். ஒருவரையும் விட வேண்டாம், உடன் வேலை பார்ப்பவர், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், சொந்தக்காரர்கள், பங்காளிகள், குடும்பத்தினர், மிக முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் என நீங்கள் சந்திக்கும் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். மேலும் நீங்கள் புகையிலை பொருள் வாங்கும் கடைக்காரர்கள். அப்போது தான் நீங்கள் வரும் போது, அவர்களாகவே புகையிலை பொருளை எடுத்து உங்கள் முன் வைக்கமாட்டார்கள்.

ஏன் உங்களை தெரிவிக்க சொல்கிறார்கள் என்றால், அதற்கு காரணங்கள்

இரண்டு. – ஒன்று, உங்களை ஊக்குவித்து உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க, இரண்டாவது - நீங்கள் ஒரு வேளை நிறுத்தாமல் போனீர்களானால், கேள்வி கேட்க, தங்களை வருத்தி அதன் மூலம் உங்களை நிறுத்த வைக்க – எனக்கு தெரிந்தவர் ஒருவரின் குடும்பத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்து, குடும்பத்தலைவரை புகையிலை பழக்கத்திலிருந்து மீட்டெடுத்துள்ளார்கள்.

புகையிலை பழக்கத்தை நிறுத்தியவுடன், அதிக பட்சம் 2 வாரங்களுக்கு Withdrawal effects எனப்படும் ‘நிறுத்துதலால் உந்தப்பட்ட உபாதைகள்‘ ஏற்படும். அதற்கு பயந்து மீண்டும் புகையிலை பழக்கத்தை தொடங்கி விடக் கூடாது. அறிவியல் உண்மை என்னவென்றால், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே அந்த உபாதைகள் இருக்கும். அதை நீங்கள் சமாளித்து, போராடி வென்றால் மட்டுமே புகையிலை அரக்கனை நீங்கள் வெல்ல முடியும். இல்லையெனில் புகையிலை உங்களை வென்று, பல நோய்களுக்கு ஆளாக்கி, வெகுகாலத்திற்கு பின் மரணிக்க வைத்து விடும். பலருக்கு புகையிலை பழக்கமென்பது, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகி இருக்கும். அது இல்லாமல் இருப்பது என்பதை எதையோ ஒன்றை ‘மிஸ்’ செய்வது போல் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் இறந்ததது போல் கூட தோன்றலாம். அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு வெற்றி பெற உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

புகையிலை பழக்கத்தை நிறுத்த, 4D எனப்படும் முறையை உளவியலாளர்கள் சொல்லித்தருவதுண்டு. அவை முதல் DDD – Delay, இரண்டாவது D – Distract, மூன்றாவது D – Drink Water மற்றும் நான்காவது D – Deep Breath.

புகையிலை பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எண்ணத்தை 5 முதல் 10 நிமிடங்கள் வரை தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்டவுடன், உங்கள் சிந்தனை முழுவதும் அதைப்பற்றியே இருக்கும். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த எண்ணம் மறைந்து விடும். ஒரு சின்ன குழந்தை சாக்லேட் கேட்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அம்மா வாங்கி கொடுக்க மாட்டேன் என்கிறார். குழந்தை என்ன செய்யும்? தன்னால் முடிந்த வரை அடம் பிடித்து பார்க்கும், கொஞ்சி பார்க்கும், வீரிட்டு அழும், சத்தம் போடும். எதற்கும் அம்மா மசியவில்லை எனில் கடைசியில் டயர்ட் ஆகி விட்டுவிடும் அல்லது தூங்கி விடும். அதே போல் தான் நமது எண்ணங்களும். தள்ளிப்போட தள்ளிப்போட எண்ணங்களின் வலு குறைந்து விடும்.

மேலும், அந்த எண்ணத்திற்கு அவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்து அதைப் பற்றி சிந்திப்பதை தவிருங்கள். 15 வது மாடியிலிருந்து கீழே எட்டி பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சாதாரணமாக நமக்கு என்ன தோன்றும்? விழுந்துவிடுவோமோ என்றுதானே, ஆனால் அந்த எண்ணத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமா? இல்லைதானே! அதே போல் புகையிலை பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் அதனை கண்டுகொள்ளாதது போல், நடிக்க தொடங்குங்கள். நாளடைவில் நடிப்பு நிஜம் ஆகி விடும். கண்டுகொள்ளாமல் தள்ளிப்போடுவதே முதல் D.

இரண்டாவது D என்பது Distract-கவனத்தை திசை திருப்பி வேறு எண்ணங்களில் செலுத்துங்கள். உங்கள் ஃபோனில் ரேடியோ அல்லது பாட்டு கேட்கலாம். யாராவது ஒருவருக்கு ஃபோன் செய்து பேசலாம், அந்த இடத்திலிருந்து வெளியேறி கொஞ்ச தூரம் நடந்து செல்லலாம். இதைத்தான் செய்ய வேண்டுமென்று இல்லை. உங்கள் கவனத்தை திசைத்திருப்பும் எதையும் செய்யலாம். இவ்வாறு 10 நிமிடங்களுக்கு உங்கள் கவனத்தை திசை திருப்ப முடிந்தால், புகையிலை பொருள் பற்றிய எண்ணம் தானாக மறைந்து விடும்.

மூன்றாவது D – Drink Water மற்றும் நான்காவது D – Deep Breath. புகையிலை பொருள் பற்றிய எண்ணம் வந்தவுடன் ‘மெதுவாக’, ‘விழிப்புணர்வுடன்’ தண்ணீர் குடிக்க வேண்டும். ஆகவே எப்போதும் தண்ணீரை அருகிலேயோ அல்லது கைப்பயிலோ வைத்திருக்க வேண்டும். மெதுவாக, அடக்காமல் 5 முதல் 8 முறை மூச்சை இழுத்து விடுவதும் நல்ல பலனை தரும்.

புகையிலை பொருள் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம், புகையிலையால் ஏற்படப்போகும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள். கொஞ்ச நாட்களில், உங்கள் எண்ணங்களின் வலு வெகுவாக குறைந்திருக்கும். புகையிலை பொருளை பயன்படுத்த தூண்டும் சூழ்நிலைகளையும், ஆட்களையும், இடங்களையும் முழுவதுமாக தவிர்த்து விடுங்கள்.

இவ்வாறு ஒரேடியாய் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாமலோ அல்லது நிறுத்துதலால் உந்தப்பட்ட உபாதைகள் பற்றிய பயமோ இருந்தால் இதோ இருக்கிறது அடுத்த வழி.

படிப்படியாய் அளவைக் குறைத்து கடைசியில் நிறுத்துவதற்கான வழிமுறைகள்:

இந்த முறையிலும், முழுமையாய் நிறுத்த போகும் நாளை குறித்துக்கொண்டு அனைவருக்கும் தெரிவியுங்கள். 4D வழிமுறைகளை பயன்படுத்துங்கள். முடியவே இல்லையெனில், நீங்கள் செய்ய வேண்டியது புகையிலை பொருளை பயன்படுத்துவது அல்ல. புகையிலை பொருளில் உங்களுக்கு போதை கொடுத்து ரிலாக்ஸ் செய்ய வைக்கும் நிக்கோடினை மட்டுமே எடுத்துக்கொள்வது. எப்படி என்று கேட்கிறீர்களா?

நிக்கோடின் பபிள் கம் இப்போது 2 mg அளவில், மின்ட் ஃபிளேவரிலும், குட்கா ஃபிளேவரிலும், எல்லா பெரிய மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. உங்களுக்கு தேவையான ஃபிளேவரை நீங்களே மருந்து கடைக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம். நிக்கோடின் பபிள் கம்-ஐ சாதாரண பபிள் கம் போல ‘சாப்பிடக்கூடாது’. பல் இடுக்கில் வைத்து, கடித்து, மெதுவாக மெல்ல வேண்டும். கொஞ்ச நேரத்திற்கு அந்த ஃபிளேவரின் சுவை வந்து கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், காரமான ஒரு சுவை உங்கள் நாக்கில் தோன்றும், அப்போது மெல்லுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, வாய்ச்சுவரின் பக்கம் நிறுத்தி வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நிக்கோடின் உங்கள் வாயின் உட்புறத்திலேயே உறிஞ்சப்பட்டு, நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலந்து, நீங்கள் புகையிலை பொருளை பயன்படுத்தும் போது, என்ன மாதிரி இருக்குமோ அதே உணர்வை உருவாக்குகிறது. கொஞ்சம் மெதுவாக இது நடக்கும். அதனால் உடனே போதை வர வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டாம். போதை குறைந்த உடன், மீண்டும் மெதுவாக அதனை மெல்லலாம், காரச்சுவை வந்தவுடன் நிறுத்தி விடலாம். இவ்வாறு ஒரு பபிள் கம்மில் 3- 4 முறை செய்யலாம். சாதாரண பபிள் கம்மை போல மென்றீர்களானால், உங்கள் வாய் முழுக்க காரம் சார்ந்து எரிச்சலை உண்டாக்கும். மிக முக்கியமாக அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை நன்கு படித்துக்கொள்ளவும். இந்த பபிள் கம்மை பயன்படுத்தும் போது, புகையிலை பொருட்களை அறவே பயன்படுத்தக்கூடாது.

இந்த பபிள் கம்மையும் ஒரே அளவில் பயன்படுத்தி வரக்கூடாது. படிப்படியாக குறைத்து, கடைசியில் குறிப்பிட்ட நாளில் நிறுத்த வேண்டும். ஆகவே இந்த சிகிச்சை உங்கள் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியை எளிதாக்குமே தவிர, மேஜிக் செய்து நிறுத்த செய்யாது.

இந்த பபிள் கம் சிகிச்சையை Nicotine Replacement Therapy என்று கூறுகிறோம். முள்ளை முள்ளால் எடுப்பது போல, இந்த சிகிச்சை வேலை பார்க்கிறது. நிக்கோடினுக்கு அடிமையான உடலுக்கும், மனதுக்கும் வேறு எந்த ஒரு விஷத்தன்மை உள்ள பொருட்களும் இல்லாது நிக்கோடினை மட்டும் தருவது தான் இதற்கு பின்னால் உள்ள தத்துவம்.

ஆக படிப்படியாய் குறைத்து விட்டு விடுவது என்பது, புகையிலை பொருள் பயன்பாட்டை அல்ல, நிக்கோடினை தான். புகையிலை பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது என்பது பலருக்கு முடியாத காரியம், ஏனெனில் உலகிலேயே அதிக அளவு அடிமைப்படுத்தும் சக்தி புகையிலை பொருட்களுக்கு தான் உள்ளது.

மேற்சொன்ன வழிமுறைகளை உங்களால் செய்ய முடியாமல் போனாலோ அல்லது அவற்றை கடைபிடிப்பதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது நிறுத்துதலால் உந்தப்பட்ட உபாதைகளை சமாளிக்க முடியாமல் போனாலோ ஒரு பொது மருத்துவரையோ, பல் மருத்துவரையோ, மன நல மருத்துவரையோ அல்லது உளவியல் ஆலோசகர்களையோ அணுகுங்கள். மேலும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, அரசு பல் மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனை, ராகா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்ற பல இடங்களில் புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு சென்று இதற்கான சிகிச்சையை பெற்று உங்கள் வாழ்வை வளமாக்குங்கள்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.