How to tackle Rainy season Diseases ?-மழைக்கால நோய்களை சமாளிப்பது எப்ப&#297

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மழைக்கால நோய்களை சமாளிப்பது எப்படி?

டாக்டர் கு.கணேசன்

மழைக்காலம் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துவிட்டது. தமிழகத்தில் நகரம், கிராமம் எனப் பாகுபாடு இல்லாமல், தெரு சுத்தமும், பாதை சீரமைப்பும், சாலை பராமரிப்பும் சரியில்லாத காரணத்தால், மழைத் தண்ணீர் வடிய வழியின்றி தெருக்களெல்லாம் குளங்களாகிவிட்டன.

இதனால் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீர், கழிவுநீர், மழைநீர் என எல்லாமே கலந்து கொசுக்களும் நோய்க்கிருமிகளும் வாழ வசதி செய்துவிட்டன. இதன் விளைவாக, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள் காமாலை என்று பல தொற்று நோய்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டன.

வழக்கத்தில் பருவநிலை மாறும்போது, அதுவரை உறக்க நிலையில் இருக்கிற பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழித்தெழுந்து, வீரியம் பெற்று மக்களைத் தாக்கத் தயாராகின்றன. மக்கள் மழையில் நனைகின்றபோது இந்தக் கிருமிகள் பரவுவதற்கு மிகவும் ஏதுவான சூழல் உருவாகிறது. அப்போது ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் மழைக்காலத்தில் நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

வைரஸ் காய்ச்சல் மழைக்காலத்தில் பரவுகின்ற காய்ச்சல்களில் முதன்மையானது, ஃபுளு காய்ச்சல். இது ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் நோயாளி தும்மும்போது, இருமும்போது, மூக்கைச் சிந்தும்போது சளியோடு வெளியேறி, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால் வலி. தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

இந்தக் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலை குறைக்க `பாரசிட்டமால்’ மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற தொல்லைகளைக் கட்டுப்படுத்த `ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்’ பலனளிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால் வலிப்பும் வந்துவிடலாம். எனவே, உடனடியாகக் காய்ச்சலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் தேவையான அளவுக்கு ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும். திரவ உணவுகளையும், சுத்தமான குடிநீரையும் தரவேண்டியது முக்கியம். காய்ச்சல் அதிகமாக இருந்தால், சாதாரண தண்ணீரில் சுத்தமான துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும்.

இந்தக் காய்ச்சலைத் தடுக்கத் தடுப்பூசி உள்ளது. குழந்தைகள் முதன் முறையாக இதைப் போடும்போது ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். இதைப் பெரியவர்கள் ஒருமுறை போட்டுக்கொண்டால் போதும்.
நிமோனியா காய்ச்சல் நியூமோக்காக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டெபெலோகாக்கஸ், மைக்கோபிளாஸ்மா போன்ற பாக்டீரியா கிருமிகள் நுரையீரலைப் பாதிப்பதால் வரக்கூடியது, நிமோனியா காய்ச்சல்.

இது பெரும்பாலும் குழந்தைகளையும் முதியவர்களையும்தான் அதிகமாகப் பாதிக்கும். இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால், குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும்.

இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும். ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இதைக் கண்டறியலாம்.

நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்கு சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனை செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனை செலுத்தியும் சிகிச்சை தரப்படும். நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்கத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது.

‘பிசிவி 13’ தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்
கொள்ளலாம். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு ‘முதன்மைத் தடுப்பூசி’ என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும். 50 வயதைக் கடந்தவர்கள் ‘பிசிவி 13’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து ‘பிபிஎஸ்வி 23’ தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, காலராபாக்டீரியா மற்றும் ரோட்டா வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா ஏற்படுகின்றன. ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளை நமக்குப் பரப்புகின்றன. நோயாளியின் உடல் இழந்த நீரிழப்பைச் சரி செய்வதே இதற்குத் தரப்படும் சிகிச்சையின் நோக்கம்.

எனவே, பாதிக்கப்பட்ட நபருக்கு சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்கத் தர வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரையும் தரலாம். அல்லது `எலெக்ட்ரால்’ பவுடர்களில் ஒன்றைத் தரலாம். இதில் நோய் கட்டுப்படவில்லை என்றால் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்து சலைன் ஏற்ற வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கைத் தடுக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாட விட வேண்டாம்.

சீதபேதி அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் நம்மை பாதிக்கும்போது சீதபேதி வரும். தெருக்கள், குளங்கள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மலம் கழிக்கும்போது மலத்தில் வெளியாகும் இந்தக் கிருமிகளின் முட்டைகள், மழைக்காலத்தில் சாக்கடை நீர் மற்றும் குடிநீரில் கலந்து நம்மைத் தொற்றிவிடும். அப்போது சீதபேதி ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்றுவலி, வாந்தி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்து போவது போன்றவை இதன் அறிகுறிகள். மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சையைப் பெறவேண்டும்.

மஞ்சள் காமாலை மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் `ஹெபடைடிஸ்-ஏ’ வைரஸ் கிருமிகள் நம்மைத் தாக்கும்போது மஞ்சள்காமாலை வரும். பசியின்மை, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி, வாந்தி, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, கண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போன்றவை இதன் அறிகுறிகள். சுத்தமான குடிநீரைப் பருகுவது, மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உண்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது
ஆகியவை இந்த நோயைக் குணப்படுத்த உதவும். இந்த நோய்க்கான தடுப்பூசியை குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு முறை, அடுத்து ஆறு மாதம் கழித்து
ஒரு முறை என இரண்டு முறை போட வேண்டும்.

டைபாய்டு காய்ச்சல் `சால்மோனெல்லா டைபை’ (Salmonella typhi) எனும் பாக்டீரியாவால் இது வருகிறது. இந்தக் கிருமிகளும் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம்தான் மற்றவர்களுக்குப் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல் வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்று வலியுடன் உடல் சோர்வடையும். இதைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் விரைவில் குணமாகும்.

கவனிக்கத் தவறினால், குடலில் ரத்தக்கசிவு, குடலில் துளை விழுதல், பித்தப்பை அழற்சி போன்ற கடுமையான விளைவுகள் உண்டாகும். உணவுச் சுத்தம், குடிநீர் சுத்தம் இந்தக் காய்ச்சலைத் தடுக்க உதவும். இந்த நோய்க்கான தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு டைபாய்டு வராது.

எலிக் காய்ச்சல்மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீரில் நடக்கும்.
அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் `லெப்டோஸ்பைரா’ எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல் (Leptospirosis) வரும். கடுமையான தலைவலி, காய்ச்சல், தொட்டாலே தாங்கமுடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் தரப்படும். தெருக்களில் நடக்கும்போது கணுக்கால் மூடும்படி கால்களில் செருப்பு அணிந்து கொள்வதும் வீட்டுக்கு வந்ததும் சுடுநீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும்.

குளத்து நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.கொசுக்களால் பரவும் நோய்கள்மழைக்காலத்தில் தெருவில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் ெபருகுவதால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்றவை ஏற்படுகின்றன. விட்டு விட்டு குளிர்காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்கலாம். மூட்டுவலி அதிகமாக இருந்தால் சிக்குன்குனியா. மூட்டுவலியுடன் உடலில் ரத்தக்கசிவும் காணப்பட்டால் அது டெங்கு காய்ச்சலின் அறிகுறி. கொசுக்களை ஒழித்தால்தான் இந்த நோய்களைத் தடுக்க முடியும். அதுவரை வீட்டு ஜன்னல், படுக்கையைச் சுற்றி கொசுவலையைக் கட்டி சமாளிக்க வேண்டியதுதான்
.

மழைக்கால நோய்களை சமாளிக்க பொதுவான வழிகள்


*மழைநாட்களில் குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்லவும்,

*வீட்டுக்குள் நுழைந்ததும் சுடுநீரில் கை, கால்களைக் கழுவவும்.

*வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

*கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*பத்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டிய
தண்ணீரையே குடிக்க வேண்டும்.

*அடிக்கடி தலைக்குக் குளிப்பது, குளிர்பானங்களைக் குடிப்பது, ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

*ஈக்கள் மொய்த்த உணவுகளை தவிர்க்கவும்.

*சமைத்த உணவுகளையும், குடிநீர் பாத்திரங்களையும் மூடி வைக்கவும்.

*வெளியிடங்களிலும் சாலையோர உணவகங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

*இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளவும்.

*கொசுக்களைக் கட்டுப்படுத்த கொசு வலையைப் பயன்படுத்தலாம். உடல் முழுவதும் மறைக்கிற உடைகளை அணியலாம்; கொசு விரட்டிகளையும் கொசுவை விரட்டும் களிம்புகளையும் பயன்படுத்தலாம்.

*வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுச் சுவர்களில் டி.டி.டி. மருந்து தெளித்தால் கொசுக்கள் ஒழியும்.

*தெருக்களில் வாரம் ஒருமுறை கொசு மருந்து தெளிப்பதும் முக்கியம்.

*தெருக்களைச் சுத்தப்படுத்தி பிளீச்சிங் பவுடர் தூவினால் ஈக்கள் வராது.

*மழைக்காலத்தில் அவசியம் செருப்பு அணிந்துதான் தெருக்களில் நடக்க வேண்டும்.

*மழைக்காலத்தில் எண்ணெய் பண்டங்களையும் அசைவ உணவுகளையும் குறைத்துக் கொண்டு ஆவியில் அவித்த உணவுகளை அதிகரித்துக் கொண்டால்
செரிமானப் பிரச்னைகள் வராது.

*சத்தான காய்கறிகள், பழங்கள், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதன் பலனால் மழைக்கால நோய்கள் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால் வலிப்பும் வரலாம். எனவே, உடனடியாகக் காய்ச்சலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
re: How to tackle Rainy season Diseases ?-மழைக்கால நோய்களை சமாளிப்பது எப்ப&

தொடரும் மழை வெள்ளம்! மிதக்கும் வீடுகள்... ஆரோக்கியம் காப்பது எப்படி?

மிழகத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் ‘மழை பெய்தது’ என்று சொல்வதைவிட ‘மழை கொட்டியது’ என்று சொல்வதே பொருத்தம். சாலைகள் எங்கும் ஆறாக ஓடிய நீர், பல இடங்களில் இன்னும் இடுப்பு அளவு தேங்கிக்கிடக்கிறது. இப்படித் தேங்கிக்கிடக்கும் மழைநீரோடு கழிவு நீரும் கலந்துள்ளது என்பதுதான் வேதனை. மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை. மழையின் உபவிளைவான மழைக்கால நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்...


ஏழு நாட்களுக்கு நிலவேம்புக் கஷாயம்

ஏழு நாட்களுக்கு காலை, மாலை என நிலவேம்புக் கஷாயத்தைக் குடியுங்கள். கஷாயம் குடித்த அரை மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிட வேண்டாம். 200 மி.லி தண்ணீரில் நிலவேம்புப் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காய்ச்ச வேண்டும். நீர் கொதித்து 50 மி.லி-ஆக வற்றியதும் வடிகட்டி, மிதமான சூட்டில் பருகலாம். எந்தவிதக் காய்ச்சலும் குணமாகும். காய்ச்சல் வராதவரும் ஏழு நாட்கள் தொடர்ந்து அருந்த, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்ச்சல், சளி, வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.

தினம் தினம் உணவில் மாற்றம்
சுக்கு, மிளகு, பூண்டு, வெந்தயம், மஞ்சள், சீரகம், கருஞ்சீரகம், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தனியா, இஞ்சி, திப்பிலி போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

மழையில் நனைந்த பின்...
மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. கால்கள் மற்றும் நகங்களில் நன்றாக சோப் போட்டுக் கழுவ வேண்டும்.
நீரில் நனைந்த செருப்பையும் சுத்தம் செய்த பிறகே மறுநாள் அணிய வேண்டும். முடிந்த வரை ஷூ, தோல் செருப்பு அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
நனைந்த உடைகளை, மற்ற உடைகளுடன் சேர்க்காமல், தனியே துவைப்பது நல்லது. வெளியில் செல்லும்போது, கட்டாயம் ரெயின் கோட், குடை, டிஷ்யூ பேப்பர் வைத்திருப்பது அவசியம்.

ஈரக் கால்களுக்கு இதமான மசாஜ்
என்னதான் ரெயின்கோட் போட்டிருந்தாலும், கால்கள் நனையத்தான் செய்யும். சாலையில் தேங்கிய நீரில் கால்களைப் பதிப்பதைத் தவிர்க்க முடியாது. பக்கெட்டில் பாதி அளவு வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எப்சம் உப்பு போட்டு, அதில் 20 நிமிடங்கள் கால், பாதங்களை வைத்திருக்கலாம். இதனால் தொற்றுக்கள், அழுக்கு, கால் வலி, எரிச்சல் ஆகியவை நீங்கிவிடும்.

மழைக்கால நோய்கள்
மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்புகள் அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப்போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களும் வரலாம்.
சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலம், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் தயாரிக்கும் உணவை உண்ணலாம்.

கொசுத் தொல்லை நீங்க...
டெங்கு, மலேரியா போன்றவை கொசுக்களால் பரவக்கூடியவை. வீட்டில், துளசி, நிலவேம்பு, லெமன் கிராஸ், நொச்சி, கற்பூரவல்லி, புதினா ஆகிய செடிகளை வளர்ப்பதால், கொசு வீட்டில் வருவது ஓரளவுக்குத் தடுக்கப்படும்.
மண் சட்டியில் நொச்சி, நிலவேம்பு, துளசி ஆகியவற்றை எரித்து, புகையை வீட்டில் பரவவிட்டால் கொசுக்கள் ஓடிவிடும்.

தேங்காய் எண்ணெய், புங்க எண்ணெய் ஆகிய வற்றை சமஅளவு எடுத்து, அதில் மண்ணெண் ணெயை எட்டில் ஒரு பங்கு கலந்து, நீர் தேங்கும் இடங்களிலும், வீட்டைச் சுற்றிலும் தெளிக்கலாம். இது கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும்.
கொசுவை அழிக்கும் எலெக்ட்ரானிக் பேட்களைப் பயன்படுத்துவதும் சிறந்த வழிதான். தரமான, வசதியான கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.

சுற்றுச்சூழலை சுத்தமாக்குவோம்
கொசு உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். பிளாஸ்டிக் கப், தேங்காய்ச் சிரட்டை, பிளாஸ்டிக் கவர், டயர், ஆட்டுக்கல், பறவைகளின் உணவுப் பாத்திரம் போன்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது தண்ணீர் தேங்காத வகையில், தலைகீழாக வைக்க வேண்டும்.

செடிகள் நிறைந்த வீட்டில், கூடுதல் கவனம் எடுத்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குப்பையைச் சேர்த்துவைக்காமல், உடனுக்குடன் அப்புறப்படுத்துவது நல்லது.
கிணறு, தொட்டி ஆகியவற்றை மூடிவைத்திருப்பது அவசியம்.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...
ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நெல்லி ஆகியவற்றின் சாற்றைக் குடிக்கலாம். மழைக்காலத்தில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பு சேர்க்க சளி பிடிக்காது.காலையில் திரிகடுகம் என்ற சூரணத்தைப் பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து, நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இரவில் திரிபலா சூரணத்தை ஒரு டீஸ்பூன் கலந்து, வெல்லம் சேர்த்து, திரிபலா டீயாகப் பருகலாம். டெங்கு காய்ச்சலில் ரத்தக்கசிவு வராமல் இருக்க, உணவு உண்ட பிறகு, நெல்லி லேகியம், கரிசாலை லேகியம், இம்பூர லேகியம் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.


[HR][/HR]காபி, டீக்குப் பதிலாக...



ஆவாரம் பூ

ஆவாரம் பூக்களைத் தண்ணீரில் அலசிய பிறகு, தண்ணீரில் கொதிக்க வைத்து எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.

செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூக்களின் இதழ்களைப் பிரித்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்க விட்டு, எலுமிச்சைச் சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.

துளசி
துளசி இலைகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, ஏலக்காய் தட்டிப் போட்டு, கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.

கொத்தமல்லி
கொத்தமல்லித்தழைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, சிறிது சுக்கு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.

புதினா
புதினா இலைகளை நீரில் கொதிக்கவிட்டு, எலுமிச்சைப் பழச்சாறு, கருப்பட்டி கலந்து குடிக்கலாம்.

மூலிகை காபி
சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா ஆகிய வற்றை அரைத்து, காபி பொடியாகப் பயன்படுத்தலாம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.