India wants to keep US chicken legs out - இந்தியா வருகிறது அமெரிக்க சிக்கன&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இந்தியா வருகிறது அமெரிக்க சிக்கன் லெக் பீஸ்!

குப்பைத்தொட்டியா நம் தேசம்?

*உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது அமெரிக்கா போட்ட ஒரு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது சமீபத்தில் தீர்ப்பு வந்திருக்கிறது. அது இந்தியாவுக்கு எதிரான தீர்ப்பு.
*சிக்கன் பிரியாணியில் லெக்பீஸ் யாருக்குக் கிடைக்கிறதோ அவர் அதிர்ஷ்டசாலி. நம்ம ஊரைப் பொறுத்துவரை அசைவம் சாப்பிடுகிறவர்களின் மனநிலை இதுதான். அமெரிக்காவில் கோழிக்கறியின் மார்புப்பகுதியை மட்டுமே சாப்பிடுகிறார்கள்.

லெக்பீஸில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால், அது குப்பைக்கே போகிறது. கசாப்புக்கடை குப்பைத் தொட்டியில் போடும் கழிவுகளை நாய்களுக்கும் பறவைகளுக்கும் உணவாக்குகிறார்கள். அமெரிக்கா தன் குப்பைத்தொட்டியில் விழும் கழிவுகளை இனி நாம் சாப்பிடுவதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் போகிறது.

- மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எப்படி?மேலைநாடுகளின் பார்வையில் இந்தியா போன்ற வளரும் நாடுகள், குப்பைத்தொட்டிகள். உபயோகித்து எஞ்சும் கழிவுகளை இங்கே கொட்டி தங்கள் மண்ணையும், மக்களையும் காத்துக் கொள்வதோடு காசும் பார்த்து விடுவார்கள். ஆபத்து நிறைந்த மின்னணுக் கழிவுகளும், ரசாயனங்களும், அபாயகரமான உணவுப் பொருட்களும் அப்படித்தான் இங்கு கொட்டப்படுகின்றன. அந்த வரிசையில் அடுத்து வரவிருக்கிறது அமெரிக்க கோழிக்கால்.

உலக அளவில் பிராய்லர் கோழி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்கர்களுக்கு ‘பிரெஸ்ட் பீஸ்’ எனப்படும் கோழியின் மார்புக்கறியின் மீதுதான் மயக்கம். தொடைப்பகுதியை கழிவாக ஒதுக்கி விடுவார்கள். இந்தியா, சீனா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் அதிகம் விரும்புவது லெக்பீஸைத் தான். அவர்களைத்தான் குறி வைக்கிறது அமெரிக்கா. கோழிப்பண்ணை என்பது நம்மைப் பொறுத்தவரை விவசாயத்தோடு இணைந்த மாற்றுத்தொழில். ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகள் இங்கே உண்டு. அமெரிக்காவில் எல்லாம் கார்ப்பரேட் மயம். கறிக்கோழி வளர்ப்பு முதல் சில்லறை விற்பனை வரை அனைத்தும் நான்கைந்து நிறுவனங்களிடமே இருக்கின்றன.

எல்லாம் அமெரிக்க பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும் சகல சக்திகளும் பொருந்திய நிறுவனங்கள். கார்ப்பரேட் பார்வையில் எதுவுமே கழிவில்லை. எல்லாவற்றுக்கும் விலை உண்டு. அமெரிக்கர்கள் ஒதுக்கும் கோழிக்கால்களை குப்பையில் கொட்டுவதற்கு பதில், இந்தியா போன்ற நாடுகளில் கொட்டினால் பணம் கிடைக்கும். 2006ல் அதற்கான வேலைகள் தொடங்கின. முதற்கட்டமாக, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் செயல்படும் கே.எப்.சி., மெக்டொனால்டு நிறுவனங்களுக்கு கோழிக்கால்களை அனுப்ப முயற்சி நடந்தது. ஆனால் இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்தருணத்தில் பறவைக்காய்ச்சல் பற்றிக்கொள்ள, அதைக் காரணமாகக் காட்டி அமெரிக்க கோழிக்கால் இறக்குமதிக்குத் தடை விதித்தது இந்தியா.

கோபமுற்ற அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உலக வர்த்தக அமைப்பு, ‘இந்தியாவின் செயல்பாடு அறிவியல்பூர்வமாக இல்லை’ என்று கூறி தடையை நீக்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது இந்தியா. அமெரிக்காவின் சுண்டுவிரல் அசைவில் ஆடும் உலக வர்த்தக அமைப்பு மேல்முறையீட்டையும் சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்துவிட்டது. இன்னும் ஓராண்டில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ‘அமெரிக்க லெக்பீஸ்’ நம்மூர் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரப் போகிறது. நம்மூர் இறைச்சியை விட 40 சதவீதம் விலை குறைவாகக் கிடைக்கும் என்கிறார்கள்.

‘‘அமெரிக்காவில் கோழிக்கால்களை கழிவாக ஒதுக்கினாலும், அதற்குரிய விலை கோழி இறைச்சியின் மதிப்பில் சேர்க்கப்பட்டு விடும். ஆனாலும், இந்தக் கழிவையும் விற்று காசு பார்க்கத் துடிக்கிறார்கள். 1 கிலோ அமெரிக்கக் கோழி இறைச்சியை இந்தியா கொண்டு வர அதிகபட்சம் 25 ரூபாய் செலவாகும். இதற்குமேல் எவ்வளவு கூடுதலாக வைத்து விற்றாலும் லாபம்தான். அதோடு கழிவையும் அகற்றியது போலாகிவிடும்.

2006-2007ல் இலங்கையில் போர்ச்சூழலால் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்திருந்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்கா கோழிக்கால்களை அனுப்பியது. விலை குறைவாக கிடைத்ததால் மக்கள் அதை வாங்கத் தொடங்கினார்கள். ஒரே வருடத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் போண்டியாகி விட்டார்கள். தொடக்கத்தில் கிலோ 40 ரூபாய்க்கு விற்ற அமெரிக்க நிறுவனங்கள், உள்ளூர் போட்டியாளர்கள் அழிந்ததும், படிப்படியாக விலை உயர்த்தி 150 ரூபாயில் கொண்டுபோய் நிறுத்தின. அதன்பிறகு விழித்துக்கொண்ட இலங்கை அரசு, இந்தியாவின் உதவியோடு கோழிப்பண்ணைத் தொழிலை மீட்டுருவாக்கம் செய்தது. நம் அண்டை நாட்டுக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நமக்கான பாடமும் இருக்கிறது.

இது இந்தியாவின் ஜீவாதாரமான விவசாயம் சார்ந்த பிரச்னை. இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட விவசாய மாவட்டங்கள் மானாவாரி நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. கோழிப்பண்ணைகளை நம்பியே அங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள். கோழிப்பண்ணைத் தொழில் நசிந்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவின் ‘கூலிங் ஸ்டோரேஜ் சிஸ்டம்’ பிரமாண்டமானது. ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கூட உணவுப் பொருட்களைச் சேமிக்க முடியும்.

அங்கிருந்து அனுப்பப்படும் கோழிக்கால்கள் எப்போது வெட்டப்பட்டது, அதைப் பதப்படுத்த என்னென்ன ரசாயனங்கள் உபயோகிக்கப்பட்டன என்ற விபரங்கள் நேர்மையாகச் சொல்லப்பட வாய்ப்பில்லை. உள்நாட்டு உற்பத்தியையும் மக்களின் ஆரோக்கியத்தையும் குலைக்கும் அமெரிக்கக் கோழிக்கால்களை இந்தியாவுக்குள் வர அரசு அனுமதிக்கக்கூடாது. இறக்குமதி வரியை அதிகரிப்பதோடு, கடும் தரக்கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட தீவனத்தைக் காரணம் காட்டி மீண்டும் தடை விதிக்கவேண்டும்...’’ என்கிறார் வெங்கடேஸ்வரா ஹேச்சரிஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் டாக்டர் செல்வகுமார்.
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் நல்லதம்பியும் செல்வகுமாரின் குரலையே எதிரொலிக்கிறார்.

‘‘நாங்கள் இறக்குமதியை எதிர்க்கவில்லை. கால்களை அனுப்புவதற்குப் பதிலாக அமெரிக்கா முழுக்கோழியை அனுப்பட்டும். அதை வரவேற்கிறோம். கழிவுகளைக் கொட்ட இந்தியா குப்பைக்காடு அல்ல. இந்தியாவுக்குத் தேவையான கோழி இறைச்சி இங்கேயே தயாராகிறது. போதாக்குறைக்கு ஏற்றுமதியும் செய்கிறோம். நமக்கு அமெரிக்கக் கோழிக்கால்கள் அவசியமில்லை.

அமெரிக்கக் கோழிப் பண்ணையாளர்களுக்கு அந்நாட்டு அரசு ஏராளமான மானியங்களை அளிக்கிறது. தவிர, ஏற்று மதி சலுகைகளும் தருகிறார்கள். இவ்வளவு சாதகங்களுக்கு மத்தியில், கழிவுகளையும் நம் தலையில் கட்டி காசாக்க முயற்சிக்கிறார்கள். ஏழைநாடுகளின் ஜீவனாக இருக்கிற கிராமியத் தொழில்களை அழிப்பதையே உலக வர்த்தக அமைப்பு செயல்திட்டமாகக் கொண்டிருக்கிறது. அமெரிக்க கோழிக்கால்களுக்கு தடையை நீக்கியது அதன் ஒரு அம்சம். இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது’’ என்கிறார் நல்லதம்பி.

கோழி இறைச்சி வணிகத்தை கட்டுப்படுத்தும் பிராய்லர் கோ-ஆர்டினேஷன் கமிட்டியின் சேர்மன் ஆர்.லெட்சுமணனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘உலகமயமாக்கலை ஏற்றுக்கொண்ட பிறகு இதுபோன்ற போட்டிகளை சமாளிக்கத்தான் வேண்டும். அமெரிக்க கோழிக்கால்கள் வருகையால் மொத்தமாக தொழில் பாதிக்கப்படும் என்பதை நான் ஏற்கவில்லை.

இந்தியாவில் 5% பேர்தான் பதப்படுத்தப்பட்ட சிக்கனை விரும்புபவர்கள். 95% பேர் உயிர்க்கோழிக்கறியைத்தான் வாங்குகிறார்கள். சிறிய தாக்கம் இருக்கலாமே ஒழிய பெரிய பாதிப்புகள் வராது. இச்சூழலை சமாளிக்க கோழிப்பண்ணையாளர்கள் தயாராக வேண்டும்...’’ என்கிறார் லெட்சுமணன். ‘மேக் இன் இந்தியா’ திட்டம் கோழிகளுக்குப் பொருந்தாதா?

சிக்கன் டேட்டா!

கோழிக்கறி உற்பத்தியைப் பொறுத்தவரை உலகில் 4வது இடத்தில் இருக்கிறது இந்தியா. முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. முட்டை உற்பத்தியில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடம் நமக்கு. இங்கு ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கோடி அளவுக்கு கோழிக்கறி வர்த்தகம் நடக்கிறது. வருடத்துக்கு 4000 டன் கோழிக்கறி ஜப்பான், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

குறைவா சாப்பிடறோம்!

தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைப்படி, அசைவம் சாப்பிடுபவர்கள் சரிவிகித ஊட்டச்சத்தைப் பெற ஆண்டுக்கு 11 கிலோ கோழி இறைச்சி சாப்பிட வேண்டும். ஆனால் ஒரு இந்தியருக்கு 2.95 கிலோதான் கிடைக்கிறது. உலகிலேயே அதிகமாக புரூணே, ஜார்ஜியா, ஓமன் நாட்டினர் ஆண்டுக்கு 100 கிலோ கோழி இறைச்சி சாப்பிடுகிறார்கள். அமெரிக்கர்கள் 47 கிலோவும், ஐரோப்பியர்கள் 40 கிலோவும் சாப்பிடுகிறார்கள்.
 

roseagalya

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Nov 27, 2013
Messages
4,121
Likes
9,762
Location
coimbatore
#2
Re: இந்தியா வருகிறது அமெரிக்க சிக்கன் லெக் &#2

thank u for sharing lashmi
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#3
Re: இந்தியா வருகிறது அமெரிக்க சிக்கன் லெக் &#2

எப்படி எல்லாம் அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,989
Location
Atlanta, U.S
#4
Re: இந்தியா வருகிறது அமெரிக்க சிக்கன் லெக் &#2

அடக்கடவுளே..... இதிலுமா காசு பார்க்க நினைப்பார்கள்....?
ஏற்கனவே எலெக்ட்ரானிக் கழுவுகளால் நிரம்பி கிடக்கு... அதோடு இதுவும் சேர்ந்தால்....????
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.