Is Master Health Checkup necessary?-மாஸ்டர் ஹெல்த் செக்கப் அவசியமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
மாஸ்டர் ஹெல்த் செக்கப் அவசியமா?

நோய்களை, `தொற்றுநோய்கள்’, `தொற்றா நோய்கள்’ என இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளால் ஏற்படும் டெங்கு, நிமோனியா, காலரா போன்ற சீஸன் நோய்கள் தொற்றுநோய் வகையறாவுக்குள் அடங்கிவிடும். ஆனால், வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய், கல்லீரல் பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம் முதலான பல நோய்கள், தொற்றா நோய்கள் எனப்படுகின்றன.

இவை, ஒரு நாளில் வந்துவிடுவது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்னை அதிகரித்து, நோய் ஓரளவுக்கு முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் வெளிப்படும்.மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன்ற முழு உடல் பரிசோதனைகளை ஆண்டுக்கு ஒரு முறை செய்துவந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது ஏதாவது நோய் உள்ளதா, எந்த உறுப்பில், எந்தப் பிரச்னை, எந்த அளவுக்கு இருக்கிறது எனக் கண்டறிய முடியும். பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தால், அதற்கு உரிய சிகிச்சை பெற்று நலமுடன் வாழலாம்.

தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, மரபியல் காரணங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற லைஃப் ஸ்டைல்தான், நோய்கள் அதிகரிக்க முக்கியக் காரணங்கள். இந்த நோய்களை முன்கூட்டியே கண்டறிந்தால், 80 சதவிகிதம் வரை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும்.

நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுப்பதைவிட, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, முழுமையாகக் குணப்படுத்துவதும், ஒருவருக்கு எந்தவிதமான நோய்கள் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்கு ஏற்ப வாழ்வியல்முறையை மாற்றிக்கொண்டு, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதையும்தான் பிரிவென்டிவ் மெடிசின் பரிந்துரைக்கிறது.

‘மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ய நிறைய செலவாகும்’, ‘எனக்கு எந்த நோயும் இருக்காது, மருத்துவமனைக்குப் போனால் ஏதாவது ஒரு நோய் இருக்குன்னு சொல்லிப் பயமுறுத்திருவாங்க’ என்பன போன்ற எண்ணங்கள்தான், பலரை மருத்துவமனைக்கு வரவிடாமல் தடுக்கின்றன. ‘சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாகிடும்’ என சினிமாவில் ஒரு பிரபலமான டயலாக் உள்ளது.

உண்மையில் அது தவறு. 10 வருடங்கள் கழித்து, நாம் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஆட்பட்டு பலவீனமடையப் போகிறோம் என்பதை, இப்போதே கண்டுபிடித்து, அந்தப் பிரச்னையைக் குணப்படுத்தவோ அல்லது 10 வருடங்களில் வரக்கூடிய தொந்தரவை, தள்ளிப்போடவோ நம்மிடம் இப்போது வசதிகள் வந்துவிட்டன. அதனை நாம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் என்ன நடக்கிறது?
*ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசோனிக், ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, சிறுநீர், மலம் பரிசோதனைகள் செய்யப்படும்.

*ஆண்களுக்கு ப்ராஸ்டேட்டும், பெண்களுக்கு, பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்யப்படும்.

*பொது மருத்துவர் அல்லது துறை நிபுணர் களிடம், பரிசோதனை முடிவுகளைக் காட்டி ஆலோசனை செய்துகொள்ளலாம்.

*ஏதாவது ஒரு பாதிப்பு உடலில் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சை, வழிமுறைகள் பற்றி டாக்டர் விவரிப்பார்.

ரத்தப் பரிசோதனை
*அதிகபட்சம் 15 மி.லி ரத்தம் எடுக்கப்படும். ஒருமுறை ரத்த சாம்பிளை பரிசோதனைக்கு கொடுத்துவிட்டால், அதிலேயே பல சோதனைகள் செய்துவிடுவார்கள்.

*ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின் மூலம், சர்க்கரை நோய் இருக்கிறதா, இல்லையா அல்லது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா என்பதை எல்லாம் அறிந்துகொள்ள முடியும்.

*ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் எவ்வளவு இருக்கின்றன என அளவிடப்படும். வெள்ளை அணுக்கள் 5,000 - 10,000 எம்.சி.எல் அளவுக்குள் இருக்க வேண்டும். இந்த அளவைவிடக் குறைந்தாலும், அதிகரித்தாலும் பிரச்னைதான். வெள்ளை அணுக்கள் அளவுக்கு அதிகமாகக் கண்டறியப்பட்டால், உடலில் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிய முடியும்.

*ப்ளேட்லெட்ஸ் எனப்படும் ரத்தத் தட்டணுக்கள் உடலில் 1.5 லட்சத்தில் இருந்து 4.5 லட்சம் இருக்க வேண்டும். பொதுவாக, டெங்கு போன்ற காய்ச்சலின்போது, தட்டணுக்கள் குறைவாக இருக்கும். ஒருவருக்கு ப்ளேட்லெட்ஸ் எப்போதுமே குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவருக்குப் பல்வேறு வகையான காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.

*ரத்தத்திலும் சிறுநீரிலும் கிரியாட்டினின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பது பரிசோதிக்கப்படும். கிரியாட்டினின் அளவைவைத்து, சிறுநீரகம் எப்படி இயங்குகிறது எனக் கணிக்க முடியும்.

*கல்லீரல் எப்படி இயங்குகிறது ( எல்.எஃப்.டி டெஸ்ட்) என்பதையும் ரத்தப் பரிசோதனை மூலமாகவே கண்டுபிடித்துவிடலாம். கல்லீரலில் இருக்கும் என்சைம்களான ஏ.எஸ்.டி., ஏ.எல்.டி அளவு, அல்கலைன் பாஸ்படேஸ் அளவு, ஜி.ஜி.டி அளவு ஆகியவை எவ்வளவு இருக்கிறது என்பதும் கண்டறியப்படும்.

*ரத்தத்தில் பிளிருபின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதுதான் மஞ்சள்காமாலை பரிசோதனை. ரத்தப் பரிசோதனையில் மஞ்சள்காமாலை பரிசோதனையும் செய்யப்படும்.

*கொலஸ்ட்ரால் பரிசோதனையும், ரத்தப் பரிசோதனை மூலமாகவே செய்யப்படும். ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் எவ்வளவு இருக்கின்றன, டிரைகிளிசரைடு அளவு எவ்வளவு ஆகியவை கண்டறியப்படும்

எக்ஸ்ரே:
நுரையீரலின் செயல்திறனை அறிவதற்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் நுரையீரலில் எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி, கட்டி இருக்கிறதா, நுரையீரல் வீங்கி உள்ளதா எனப் பரிசோதிக்கப்படும்.

ஈ.சி.ஜி:
இதயம் சீராக இயங்குகிறதா, இதயத்துடிப்பு எப்படி இருக்கிறது,
மாரடைப்பு, இதயத் தசை வீக்கம், இதயத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இருக்கிறதா உள்ளிட்டவற்றை ஈ.சி.ஜி பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும்.

அல்ட்ராசோனோகிராபி:
அல்ட்ரோசோனிக் அலைகளைச் செலுத்தி, வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதன் மூலம், கல்லீரல் அளவு சரியாக உள்ளதா, சிரோசிஸ் பாதிப்பு உள்ளதா, சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் இருக்கின்றனவா என்பவற்றைக் கண்டறிய முடியும்.

பெண்களுக்கு:
கர்பப்பைவாய் புற்றுநோய் பெண்களுக்கு எந்த வயதிலும் வரலாம். மருத்துவர் பரிந்துரைப்படி இளம்வயதிலேயே அவ்வப்போது பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோயால்தான். இதையும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், முழுமையாகக் குணமடைய முடியும். 40 வயதைக் கடந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் இந்தப் பரிசோதனைகளும் அடங்கும்.

ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி சரியான அளவில் இருக்கிறதா, பெரிதாகி இருக்கிறதா என்பது ஸ்கேன் மூலம் கண்டறியப்படும். ப்ராஸ்டேட் புற்றுநோய் வயதான ஆண்களுக்கு அதிகம் வரும். எனவே, 60 வயதைத் தாண்டிய ஆண்கள், இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது அவசியம்.


யாருக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப்?
*20 வயதைத் தாண்டியவர்கள் அனைவருமே உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம். உடலில் ஏதாவது பிரச்னை இருப்பின் அவர்கள் எத்தனை மாதம் அல்லது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோனை செய்துகொள்ள வேண்டும் என்பது மாறுபடும்.

20-30 வயதினர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ளலாம்.

*30 - 40 வயதினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம்.

*40 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

டெஸ்ட் செய்தால் வரிச்சலுகை
*அரசு மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது.

*தனியார் மருத்துவமனைகளில், அங்குள்ள வசதிகளைப் பொறுத்து 1,000 முதல் 10,000 ரூபாய் வரைக்கும் வசூலிக்கப்படுகிறது.

*இந்த ஆண்டு மத்திய அரசு, `வருமான வரி கட்டுபவர்களுக்கு 80 டி வரிச்சலுகை பிரிவில் பிரிவென்டிவ் ஹெல்த் செக்கப்புக்கு, 5,000 ரூபாய் வரை வரிச்சலுகை பெற முடியும்’ என ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

*தற்போது வெகு சில கம்பெனிகள் இன்சூரன்ஸ் மூலமாகவும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொள்ளலாம் என அனுமதித்து உள்ளனர்.

மரபியல் பரிசோதனை
நவீன பரிசோதனை முறையில், ஒருவரின் மரபணுக்களைப் பரிசோதித்து, அவருக்கு வருங்காலத்தில் என்னென்ன நோய்கள் வரக்கூடும் என்பதைக் கணிக்க முடியும். இதன் மூலம் மாத்திரை, மருந்துகளை நாடாமல் வாழ்வியல்முறையை ஒழுங்குபடுத்திக்கொள்வதன் மூலமாகவே, வருங்காலத்தில் பெரும்பாலான நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#3
விவரங்களுக்கு நன்றி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.