Junk Foods pose dangers - குப்பை உணவுகள் !

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!


சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஏழு வயதுப் பெண் திடீரென சுகவீனமடைந்தாள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்தவள் ”வயிறு வலிக்கிறது” என்று அழுதிருக்கிறாள். பதறிப் போன பெற்றோர்கள் உடனடியாக மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். பலவிதமான சோதனைகளையும், ஸ்கேன்களையும் செய்து பார்த்த மருத்துவர், ’உடலில் எந்தக் கோளாறும் தெரியவில்லையே!’ என்று குழம்பியிருக்கிறார். இதற்கிடையே நான்கைந்து நாட்கள் ஓடி விட்டது. இந்த நாட்களில் தொடர்ச்சியாக வலி நிவாரணி ஊசி போட்டே சமாளித்திருக்கிறார்கள். வலி நிவாரணியின் தீவிரம் குறையும் போதெல்லாம் அவள் துடிதுடித்துப் போயிருக்கிறாள்.

கடைசியாக எந்தச் சோதனையும் நோயைக் கண்டு சொல்லாததால் குழம்பிப் போன மருத்துவர்கள், எதற்கும் ஒரு முறை வயிற்றைச் சுத்தம் செய்து பார்த்து விடுவோமென்று எனிமா கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வயிற்றிலிருந்து கட்டி கட்டியாக கறுப்பு நிறக் களிம்பு போன்ற பொருள் கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியுள்ளது. அதைச் சோதனைக்கனுப்பிப் பார்த்த போது, அவ்வளவும் அந்தச் சிறுமி தினசரி தின்னும் நொறுக்குத் தீனிகளின் கழிவு என்று தெரிய வந்துள்ளது. மகளைச் செல்லமாக வளர்ப்பதாகக் கருதிக் கொண்டு பெற்றோர் அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

லேய்ஸ், குர்குர்ரே, சீட்டோஸ், கிண்டர் ஜாய், சீஸ் பால் மற்றும் கடைகளில் பல வண்ணங்களில் சரம் சரமாகத் தொங்கும் அத்தனை நொறுக்குத் தீனிகளும் தான் அவள் வயிற்றை நிறைத்துள்ளது. அது சரியாக செரிமானமாகாமல் இரைப்பையிலும், குடலின் உட்சுவரிலும் ஒரு பிசினைப் போல் படிந்து போயிருக்கின்றது. தொடர்ந்து உள்ளே வரும் உணவுப் பொருள் எதையும் செரிக்க விடாமல் செய்ததோடு, கடுமையான வலியையும் தோற்றுவித்திருக்கின்றது.
குழந்தைகளைக் கவர்வதற்கென்றே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் பெரும்பாலானவை தின்பண்டங்களுக்காகவும், அதனை சாப்பிட்ட பின் பற்களை எந்த பற்பசையைக் கொண்டு விளக்கலாம் என்பதற்காகவுமே காட்டப்படுகின்றது.

சுமார் 50% விளம்பரங்கள் ஜங்க் புட் என்று சொல்லப்படும் குப்பை உணவுகளைக் கடை விரிப்பதாகவும், ஒரு வாரத்துக்கு சராசரியாக 45 மணி நேரம் தொலைக்காட்சிகளின் முன் செலவழிக்கும் குழந்தைகள் ஆண்டொன்றுக்கு சுமார் 30,155 விளம்பரங்களைக் காண்பதாகவும், அமெரிக்கச் சிறார்களில் 60% பேர் ஒபசிட்டி எனப்படும் அதீத உடற்பருமன் நோய்க்கு ஆட்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சொல்கின்றது.

உலகளவில் குப்பை உணவுச் சந்தையின் தோராய மதிப்பு சுமார் ரூ. 6521 பில்லியன். அமெரிக்காவில் விளம்பரங்களுக்காக மட்டுமே சுமார் 83.2 பில்லியன் ரூபாயைக் குப்பை உணவு தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவிடுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு வலுவுடன் இருக்கும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டங்களையே கால் தூசுக்கு மதிக்கும் குப்பை உணவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது திறந்த மடம் தான்.
2006-ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்கிற தன்னார்வ அமைப்பு, பெப்சி கோக் போன்ற மென்பானங்களில் கடுமையான பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளதை அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.

அதே நிறுவனம் கடந்த மாதம், லேய்ஸ் குர்குரே போன்ற குப்பை உணவுகளில் அளவுக்கதிகமான சர்க்கரையும், கொழுப்பும் சேர்க்கப்பட்டிருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. குப்பை உணவு நிறுவனங்கள் எத்தனை முறை அம்பலப்பட்டாலும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலாளிகளின் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் எதையும், அது நுகர்வோரின் உரிமையை நசுக்குவதாக இருந்தாலும் அரசு கண்டுகொள்ளாது.

இது பணக்கார – நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினை மட்டுமல்ல…! கடந்த பத்தாண்டுகளில் குப்பை உணவுகளைக் கொறிப்பது பரவலான பழக்கமாகவும், தினசரி உணவின் அங்கமாகவும் இந்தியாவில் மாறியுள்ளது.

ஐந்து ரூபாயில் துவங்கி சில ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் இவ்வகை உணவுகளை மேட்டுக்குடியினர் மட்டுமல்லாது சாதாரண மக்களும் விரும்பித் தின்கின்றனர். காசுக்கேற்ற தோசை என்ற அளவில் அந்தந்த வர்க்கங்கள் தமக்குக் கட்டுப்படியாகும் தீனிகளை ருசிக்கின்றனர்.

அதிலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இவ்வகை உணவுப் பழக்கத்துக்கு மிகத் தீவிரமாக அடிமையாகியுள்ளனர். தெருவோரப் பெட்டிக்கடைகள் தொடங்கி பேரங்காடிகள் வரை சரம்சரமாகத் தொங்க விடப்பட்டுள்ள இவ்வகை நொறுக்குத் தீனிகள் மிக எளிதில் குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றது. சந்தையில் புதிது புதிதாக வரும் இனிப்புகள், மிட்டாய்கள், தீனிகள், அவற்றின் விலை, சலுகைகள் அனைத்தும் குழந்தைகள் உலகில்தான் அழுத்தமாக அறிமுகமாகின்றன.

இவை போக, குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடே வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் குப்பை உணவுகளைக் கடை பரப்புவதற்காகவே தொடர்ந்து காட்டப்படுகின்றன. கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, வெறும் வணிகக் குறியீடுகளைப் பார்த்த மட்டிலேயே குழந்தைகளின் மூளையில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

மிக விரிவாக நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகளின் படி, குப்பை உணவுகள் உடல் ரீதியிலான பாதிப்புகளை மட்டுமின்றி உளவியல் ரீதியிலும் மிகத் தீவிரமான பாதிப்புகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. நாக்கின் சுவை மொட்டுக்களை சட்டென்று தாக்கி அதீத உணர்ச்சிக்குள்ளாக்குவதன் மூலம் அதீத ‘சுவை’ உணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகக் குப்பை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. நமது நாவில் உள்ள சுவை மொட்டுக்கள் மிகவும் மென்மையான தன்மை கொண்டவை.

அதீத சுவையின் தாக்குதலுக்கு ஒரு சில முறைகள் மட்டும் ஆட்பட்டாலே, திரும்பவும் அதே விதமான உணர்ச்சி – அதாவது சுவை – தேவைப்படும் போது மீண்டும் அதே உணவை மூளை கோருகின்றது. தொடர்ச்சியான பழக்கத்தில் குறிப்பிட்ட அளவு ரசாயனத் தாக்குதல் பயனற்றதாகிப் போகும் நிலையில் மேலும் அதிக சுவை கூட்டும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட உணவை நாடச் செய்கின்றது. இதற்கும் பொழுதுபோக்கு குடிகாரன் விரைவிலேயே மொடாக் குடிகாரனாக மாறுவதற்கும் பாரிய வேறுபாடு இல்லை.

மிக அதிகளவிலான ரசாயான உப்பு, பதப்படுத்தப்பட்ட கொழுப்பு, அதிகப்படியான செயற்கை இனிப்பு, செயற்கை நார்ச்சத்து, மேலும் பல்வேறு வகையான ரசாயன நிறமிகள் என்று ஒரு ஆபத்தான அவியல் கலவையில் தயாராகும் குப்பை உணவு, உடலில் நுழைந்தவுடன் நிகழ்த்தும் மாற்றங்கள் அபரிமிதமானது.

சாதாரணமாக வீட்டில் தயாராகும் சமைக்கப்பட்ட உணவை விட பல மடங்கு வேகத்தில் இரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டுகின்றது, குப்பை உணவு. சர்க்கரையின் அளவு எவ்வளவு வேகத்தில் கூடுகிறதோ அதே வேகத்தில் சடாரெனக் குறையவும் செய்கின்றது – இந்த நிலையை ஹைப்போக்ளெசெமியா (டதூணீணிஞ்டூதூஞிஞுட்டிச் ) என்கிறார்கள். இப்படிச் சர்க்கரையின் அளவு திடீரெனக் கூடிக் குறைவது மூளையின் செயல்திறனையும் பாதித்து மன அழுத்தம், மனச் சோர்வு, மனச் சிதைவு போன்ற உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.

புறநிலையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை – வயிற்றின் திறனைப் பாதித்து அதிவேகமாகச் செயலாற்றி, அமிலங்களை இரத்தத்தில் கலக்கும் குப்பை உணவு; சோவும், சுப்பிரமணியம் சாமியும் போன்ற இந்த ஆபத்தான கூட்டணியின் விளைவாகக் குப்பை உணவுக்குப் பழக்கப்பட்ட ஒருவரின் மூளை நின்று நிதானமாகச் சிந்திப்பது, ஒரு விஷயத்தைப் பற்றி நின்று வேலை செய்வது, தொடர்ந்து முனைப்புடன் உழைப்பது போன்றவற்றை மெல்ல மெல்ல இழந்து வருகின்றது.

இரத்தத்தில் கூடிக் குறையும் சர்க்கரையின் வேகத்தில் மூளையின் செயல்பாட்டுத் திறன் இயல்பை இழக்கிறது - விரும்பிய, எதிர்ப்பார்த்த விளைவைத் தராத போது தளர்ந்து போகின்றது; வன்முறையை நாடுகின்றது. விரும்பிய குப்பைத் தின்பண்டங்களைப் பெற்றோர் வாங்கித் தர மறுக்கும் போது அடம் பிடிப்பதில் ஆரம்பமாகும் இந்த வன்முறை வயதோடு சேர்ந்து வளர்ந்து கொண்டே போகின்றது.

தொடர்ந்து குப்பை உணவுகளை உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்தியிழப்பு, சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார். பாரம்பரியமாக வீட்டில் நாம் தயாரிக்கும் உணவில் குப்பை உணவுக்கு ஈடான சுவை குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான சத்துக்கள் சம அளவில் சேர்ந்திருப்பதால் உடலின் செயல்திறனைக் கூட்டி, ஆரோக்கியத்தை அது மேம்படுத்துகிறது. வயிற்றுப் பசியைத் தீர்த்து, முதலாளித்துவச் சந்தைப் போட்டியில் நாவின் பசியைத் தீர்த்து, ஆரோக்கியத்தை அழிக்க வந்துள்ள குப்பை உணவுகளின் முன் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வீட்டு உணவு வகைகள், கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்று வருகின்றது.

சந்தையால் அழிக்கப்படும் நூற்றாண்டு கால விவசாய உணவின் அறிவு

உணவுப் பழக்கம் என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் விசேடமான தட்பவெப்ப நிலை, அம்மண்ணின் தன்மை, விவசாயத்தின் தன்மை, அம்மக்களின் உழைப்பு, சமூகப் பொருளாதாரம், உடல் அமைப்பு போன்ற பல்வேறு காரணிகளைக் கணக்கில் கொண்டு பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட அனுபவ அறிவின் விளைவாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை கடும் உடலுழைப்புத் தேவைப்படுவோர் அதிகாலையில் நீராகாரமும், சூரியன் ஏறும் போது கூழும் குடித்து விட்டு வயலில் இறங்கினால் சூரியன் உச்சியை அடையும் வரை உழைக்கத் தேவையான சக்தியை எளிதில் பெற்று விடுவர். எலுமிச்சை, வெல்லம் கலந்த பானகமும், நீர் மோரும், இளநீரும்தான் நமது நாட்டிற்குப் பொருத்தமான குளிர்பானங்கள். இன்று இவற்றின் இடத்தை தேநீரும், காபியும், குளிர்பானங்களும் எடுத்துக் கொண்டு விட்டன. உண்மையில் அப்படி மாற்றி விட்டார்கள்.

சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவுப் பொருட்கள் மண்ணின் தன்மையையும், நீர், காற்று, வெப்பம் உள்ளிட்ட சுற்றுச்சூழலையும் கணக்கில் கொண்டு விளைவிக்கப்படும். இவ்வகை விவசாய அறிவு என்பது பல நூற்றாண்டு கால அனுபவத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், குப்பைத் தின்பண்டங்களைச் சந்தையில் குவித்துள்ள கார்ப்பரேட்டுகள் எதிர்நோக்கும் சந்தைத் தேவையின் முன் இந்த விவசாய அறிவு தேவையற்ற குப்பையைப் போல் வீசியெறிப்படுகிறது. உதாரணமாக, பெப்சி நிறுவனம் தயாரிக்கும் லேய்ஸ் எனப்படும் உருளை வறுவலுக்காக பஞ்சாபில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் உருளை உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதில் உருளை வறுவல் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், ஒரே மாதிரியான சுவையில் வறுவலைத் தயாரிக்க ஏதுவாக ஒரே ரக உருளை விளைவிக்கப்படுகின்றது.

இதற்காக கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற பஞ்சாபின் விளைநிலங்கள் அந்த மண்ணோடு சம்பந்தப்படாத உருளைக் கிழங்கு ரகத்தைப் பயிரிட வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றது. இதற்காகக் கொட்டப்படும் டன் கணக்கான உரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக தனது உயிர்ப்புத் தன்மையை இழந்து மண்ணே மலடாகி வருகின்றது.

மேலும், பெப்சி, ஐ.டி.சி போன்ற பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் விவசாயிகளோடு ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு, சுயசார்பு விவசாயத்தை அழித்து வருகின்றனர். மேலும் முறையான விலையையும் விளைபொருட்களுக்கு அவர்கள் தருவதில்லை. விவசாயிகளைக் கிட்டத்தட்ட கொத்தடிமைகளான மாற்றுகின்றனர்.

உலக அளவில் நாக்குகளை அடிமையாக்கி, பெரும் பணத்தை அள்ளும் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபம் பெருகுவதற்கேற்ப பாரம்பரிய விவசாயத்தின் அழிவு வேகமும் கூடுகின்றது. அந்த வகையில் குப்பை உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, பாரம்பரிய விவசாயத்தையும், சுயசார்புப் பொருளாதாரத்தையும், தேசியப் பண்பாட்டையும் சேர்த்தே அழிக்கின்றன.

தீனி வெறி : வாழ்க்கைக்காக உணவா, உணவுக்காக வாழ்க்கையா?

குழந்தைகளும், சிறுவர்களும் தெருமுனைப் பெட்டிக் கடையில் அணிவகுக்கும் சிப்ஸ் வறுவல்கள் உள்ளிட்ட குப்பைத் தீனிகளுக்கு ஆட்பட்டிருக்கிறார்களென்றால், நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வசதிக்கேற்றபடி ஷாப்பிங் மால்களிலும், தனித்துவமான உணவு விடுதிகளிலும் அணிவகுக்கும் பிஸ்ஸா, பர்கர், ஹாட்டாக், ஸ்டீக், தாய், மெக்சிகன், இத்தாலியன், சீன வகை உணவுகளுக்கு அடிமையாகி வருகின்றார்கள்.

ஐ.டி துறையில் பணிபுரியும் நண்பர் ஒருவரோடு உரையாடிய போது அவர்கள் வட்டத்தில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் உணவுக் கலாச்சாரம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரது கம்பெனியில் பணிபுரியும் சிலர் எங்கே எந்த உணவு பிரபலம், எப்போது சாப்பிடலாம், எவ்வளவு செலவாகும் என்கிற விவரங்களை விவாதிப்பதற்காவே நடத்தப்படும் இணையதளத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இதில் உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்படும் உணவுத் திருவிழாக்கள் பற்றிய தகவல்களும், எங்கே எந்த உணவு பிரபலம் என்பது பற்றிய விவரங்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது.

சமீபத்தில் அவரது நண்பர்கள் ஒரு குழுவாக தாய்லாந்துக்கு விமானத்தில் பறந்து அங்கே ஒரு குறிப்பிட்ட தனித்துவமான உணவு விடுதியில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவைச் சாப்பிட்டு விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். சாப்பாட்டுக்காகவே நடத்தப்பட்ட இந்தப் பயணத்திற்காக தலைக்கு சுமார் ஐம்பதாயிரம் வரை செலவு செய்திருக்கிறார்கள். ஒரு ரூபாய் ரேசன் அரிசியை நம்பி வாழும் மக்களின் நாட்டில்தான் இத்தகைய ஆபாச உணவு சுற்றுலாக்களை அடிக்கடி மேற்கொள்ளும் வர்க்கமும் வாழ்கின்றது.

ஜூனியர் அம்பானிகள்
மூன்று ஷிப்டுகள் வேலை செய்யும் ஐ.டி சேவைத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் வேலையின் அலுப்பை மறக்க இடையிடையே லேய்ஸ், குர்குரே போன்ற குப்பைத் தீனிகளை உள்ளே தள்ளுவதோடு உணவு வேளையிலும் பிட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய பாணி குப்பைத் தீனிகளாலேயே வயிற்றை நிரப்புகிறார்கள்.

வீட்டிலிருந்து சாப்பாடு கட்டியெடுத்து வருவதை கட்டுப்பெட்டித்தனமாகவும், பர்கரும் பிட்ஸாவும் நவீனத்தின் அடையாளமாகவும் கருதிக் கொள்ளும் இவர்களுக்காகவே தொலைபேசியில் தேவையானதைக் கேட்டு விட்டு, வீட்டுக்கே வந்து தரும் பிரத்யேக உணவு விடுதிகள் இயங்கி வருகின்றன. இவர்களின் வாயும், மூளையும் மட்டுமல்ல – வயிறும் கூட மேற்கத்திய அடிமைத்தனத்திற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சதா சர்வ காலமும் பஞ்சுப் பொதி நாற்காலியில் அமர்ந்து கணினித் திரையை வெறித்துக் கொண்டு, வாயில் எப்போதும் நொறுக்குத் தீனியை அரைத்துக் கொண்டு, இடையிடையே ’கோக்’கால் தொண்டை அடைப்பை நீக்கிக் கொள்ளும் இவர்கள் வெகு எளிதில் பல்வேறு உடல் உபாதைகளுக்கும், உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டு விடுகின்றார்கள்.

மூளையைக் கசக்கிப் பிழியும் வேலை ஒரு பக்கமென்றால், இவர்கள் உட்கொள்ளும் உணவோ உடல் ஆரோக்கியத்தையும், வேறொரு புறத்திலிருந்து மூளையின் செயல்திறனையும் குலைத்து இவர்களை மும்முனைத் தாக்குதலுக்கு இலக்காக்குகின்றது. உணவுக்கும் கேளிக்கைக்கும் சம்பாதிப்பது, அதற்காகவே நேரம் செலவழிப்பது என்கின்ற போக்கில் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்த உணவின் முன் தோற்றுப் போய், தின்பதற்காவே வாழ்வது என்கிற நச்சுச் சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த விசயத்தில் குப்பைத் தீனிப் பழக்கம் என்பது வாழ்க்கைச் சூழலின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி ஏற்படும் தவிர்க்கவியலாத பழக்கம் என்று கருப்பு வெள்ளையாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களை இத்தகைய நுகர்வுக் கலாச்சார தீனிப் பண்பில் மாற்றும் வண்ணம் உணவுச் சந்தையில் நுழைந்திருக்கும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் பங்கும் முக்கியமானது.

ஒரு உலகம், ஒரு சந்தை – ஒரு ருசி..!
கட்டுரையின் துவக்கத்தில் சர்வதேச அளவில் உணவுச் சந்தையைக் கைப்பற்றியிருக்கும் கார்ப்பரேட்டுகள் பற்றிய புள்ளிவிவரங்களை மீண்டுமொரு முறை பாருங்கள். இவை காட்டும் உண்மை என்னவென்றால், தேசங்களின் எல்லைகள், மக்களின் கலாச்சாரங்கள், பிராந்தியளவிலான விவசாயத்தின் தன்மை, வெவ்வேறு நாடுகளின் மாறுபட்ட சீதோஷ்ண நிலை என்கிற வேறுபாடுகளை அழித்து, முதலாளிகளின் இலாபத்திற்காக ஒரே ருசி, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்பது படையெடுப்பு போல நடந்து வருகின்றது. அவ்வகையில் நமது பண்பாடு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட இவர்களைப் பொறுத்த வரை கழிவறைக் காதிதம்தான்.

இந்தியனின் நாக்கு அமெரிக்கனின் சுவையை ஏற்றுக்கொள்ள வேண்டும்; சீனனது வயிறு ஐரோப்பியனின் உணவைச் செரிக்க பழகிக்கொள்ள வேண்டும்; ஆப்பிரிக்கனின் மூளையில் அமெரிக்கனின் கேளிக்கை பிறக்க வேண்டும். விளம்பரத்தில் காட்டப்படும் கே.எப்.சி சிக்கனின் வணிகக் குறியீட்டைக் கண்ட மாத்திரத்தில் அமெரிக்கக் குழந்தையிடம் என்னவிதமான உளவியல் மாற்றங்கள் உண்டாகுமோ அதே மாற்றங்கள் தான் இந்தியக் குழந்தையிடமும் உண்டாக வேண்டும். இதுதான் முதலாளித்துவ நியதி.

இதனால் நாம் கட்டுப்பெட்டித்தனமாக உள்ளூரில் நிலவுடமை ஆதிக்கப் பண்பாட்டின் அங்கமான ஆதிக்க சாதிகளின் உணவுப் பழக்கத்தை மட்டும் ஏற்க வேண்டும் என்பது அல்ல. பெண்களின் பணி நேரத்தை விழுங்கிக் கொள்ளும் இத்தகைய உணவு முறையெல்லாம் உழைக்கும் வர்க்கத்திடம் இன்றுமில்லை. தினை வகைகளும், நீராகரமும்தான் அவர்களின் உணவாக சமீப காலம் வரைக்கும் இருந்தது. இன்று அது சோறு, தேநீர் என்று மாறியிருக்கின்றனது. எளிமையும், ஆரோக்கியத்தையும், சத்தையும், நமது சூழ்நிலைக்கு பொருத்தத்தையும் கொண்டிருக்கும் வரையிலும் நாம் எந்த உலக உணவு வகைகளையும் வரவேற்கலாம்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம் இப்படி உலக மக்களின் பண்பாட்டை சங்கமிக்கச் செய்வது அல்ல. நாகரிகம் என்ற பெயரில் ருசிக்கும், இலாபத்திற்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் அவர்களது குப்பை உணவு எல்லா வகைகளிலும் தீங்கிழைக்கின்றன.

நமது மரபில் உணவு வாழ்க்கைக்குத் தேவையான சக்தியைத் தருபவையாக மட்டுமல்ல, மருந்தாகவும் இருந்திருக்கின்றது. மீனவ கிராமங்களில் கேட்டால் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மீனை மருந்தாகக் கூறுவார்கள். இன்றும் கூட பிரசவம் ஆன பெண்களுக்கு பால் சுரப்பதற்காக பால் சுறா மீன்களைக் கொடுப்பதைப் பார்க்கிறோம்.

சுக்கு, மிளகு, திப்பிலி, வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள், கடுக்காய், சித்தரத்தை, மாயக்காய், அதி மதுரம், கிராம்பு, வெட்டி வேர், கண்டங்கத்திரி, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, காசினிக் கீரை, புதினா, மல்லி, கீழா நெல்லி என்று மருத்துவ குணம் கொண்ட பொருட்களும், அவற்றின் நோய் தீர்க்கும் முறைகளும் இந்த மண்ணில் பல நூற்றாண்டு கால அனுபவத்தில் கண்டறியப்பட்டவை. இவற்றையெல்லாம் சமையல் உணவில் கலந்து சாப்பிடும் பழக்கம்தான் நமது பண்பாடு.

பிட்ஸா இத்தாலிக்குப் பொருத்தமான உணவாக இருக்கலாம். அந்த பிட்ஸா அமெரிக்கா சென்று, உலக ருசிக்காக மாற்றப்பட்டு, இந்தியாவில் மேட்டுக்குடியினரின் உணவாக மாற்றப்பட்டு விட்டது. வெப்ப மண்டல நாடுகளில் வாழும் நமக்கு இந்த அடுமனை வகை உணவுப் பொருட்கள் பொருத்தமானவை அல்ல. பல நாடுகளில் இன்று குடிநீர் குடிக்கும் பழக்கம் கூட இல்லை என்பது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆம், தாகம் என்று வந்தால் அவர்களுக்கு நினைவில் தோன்றுவது பெப்சியும், கோக்கும்தான்.
ஆகவேதான் இந்தக் குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழிக்கும் அணுகுண்டுகள் என்று சொல்கிறோம்.

மண்ணையும், பண்பாட்டையும், விவசாயத்தையும் அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தக் குப்பை உணவு நமது ஆளுமையையும் சீர்குலைக்கின்றது. ஐந்து ரூபாய் விலையுள்ள லேஸ் சிப்சை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது அவர்களது வயிற்றையும், ஆளுமை வளர்ச்சியையும் அமிலம் போலக் கரைத்து அவர்களை வெளியே தக்கைகளாகத் துப்பி விடும். சம்மதமா?


 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Very useful caution for today's children and parents.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#3
அவரவர்கள் உணர்ந்து தாங்களே திரிந்தி, நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கேற்ப வீட்டில் தயாரிக்கப்படும் உணவை உண்டால் மட்டுமே நம் ஆரோக்கியம் பேணி காக்கப்படும்.

மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Important and useful caution for today's children and parents. thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.