Kitchen - Clinic

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#1
கிச்சன் டூ கிளினிக் - 1 (அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்(

[HR][/HR]
கிச்சனுக்கும் கிளினிக்குக்கும் என்னசம்பந்தம்?
இரண்டு வார்த்தைகளும் ஒரு ரைமிங்கில் ஒத்துப் போகிறதே தவிர வேறொன்றுமில்லையே என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது! நம் வீடுகளின் கிச்சன்கள் சரியானதாக இருந்தால் நாம் கிளினிக்குகளுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. அடுக்களைகளை ஒழுங்கமைப்பதன் மூலம் ஆஸ்பத்திரிகளிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.


‘‘ஓ... ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று சொல்லும் அந்த குரூப்பா நீங்கள்?’’ என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், இன்று திரும்பிய திசைகளில் எல்லாம் உணவை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி என்றும், மருந்தை உணவாக மாற்றுவது எவ்வாறு என்றும் விளக்கும் கட்டுரைகளும், நூல்களும் பரவிக் கிடக்கின்றன. நிஜத்தில் நாம் இங்கு அதுபற்றிப் பேசப் போவதில்லை!


உணவை மருந்தாகப் பயன்படுத்துவது பற்றி நாம் பேசப்போவ தில்லை என்றால் நவீன உணவுகளின் தீமைகளைப் பற்றியும், மரபுவழி உணவுகளின் பெருமை பற்றியும் கலந்துரையாடப் போகிறோமா என்ன? அதுவும் இல்லை.அப்படியெனில், உணவு பற்றிய இந்தத் தொடரின் மூலம் நாம் என்னதான் செய்யப் போகிறோம்? கோபப்படாதீர்கள்... நேராக விஷயத்திற்கு வந்து விடுவோம்.இந்த உலகில் எல்லா விஷயங்களுமே முரண்பட்ட இரண்டு துருவங்களை அடக்கியதாகவே உள்ளன.


இது இயற்கையின் நியதி. நம் வாழ்விலும் இரண்டு எதிர்த் திசைகள் எப்போதும் இருக்கும். இரண்டும் அதீத எல்லைகள். உதாரணமாக, ‘நம் பாரம்பரியம் நல்லது’ என்று பெருமிதப்படும் பண்பாட்டு ஆர்வலர்கள் பலரும் இன்னொருபுறம் ‘நவீன விஷயங்கள் முழுமையாக நல்லதில்லை’ என்று சொல்வார்கள். ‘நவீன பொருட்களே மனித வாழ்வை மாற்றின’ என்று சொல்லும் இன்னொரு தரப்பினர், ‘பாரம்பரிய அம்சங்கள் அனைத்தும் அரதப் பழசானவை. ரேஸ் பைக் யுகத்தில் கட்டை வண்டியில் போவார்களா? வாட்ஸ் அப் காலத்தில் போஸ்ட் கார்டு வேஸ்ட்’ என கிண்டல் செய்வார்கள்.


இப்படித்தான் பழமையையும் புதுமையையும் ஒரு சார்போடு புரிந்து கொள்கிறார்கள் பலரும். இதேபோன்ற இரு துருவங்கள் நம்முடைய உணவு பற்றிய புரிதலிலும் உண்டு. ஒருபுறம் நம் பாரம்பரிய உணவுகள் சிறந்தவை என்று நாம் பேசுகிறபோதே, ‘சர்வ ரோக நிவாரணி’ போல எல்லாப் பிரச்னைகளுக்கும் அவற்றை மட்டுமே தீர்வாக நம்புவதும் நிகழ்கிறது. இந்த நம்பிக்கையை அறுவடை செய்யும் நோக்கில் மிகப்பெரிய வணிக நிறுவனங்களும் களமிறங்கி, தங்கள் கடைகளை மாற்றிக்கொண்டு மரபுவழி உணவுகளை விற்கும் நிறுவனங்களாக மாறிவிடுகின்றன. இன்னொருபுறம், ‘நவீன உணவுகள் மோசமானவை’ என்று சொல்லிக்கொண்டு, குடிக்கிற தண்ணீரில் இருந்து கடிக்கிற கரும்பு வரை சகலமும் விஷம் என்று விரக்தி அடைந்து விடுவது.
இப்படியான இரு துருவங்களுக்கு இடையில் உணவு பற்றிய குழப்பங்கள் கிளம்பி வருகின்றன.


உணவுகளைப் பற்றியும், அவற்றின் மரபுத்தன்மை, கலப்படம் பற்றியும் பேசுகிறபோது உணவிற்கும், நம் உடலுக்குமான அடிப்படைத் தொடர்பை நாம் மறந்து விடுகிறோம். இந்த ஞாபக மறதியை அடியுரமாகப் பயன்படுத்தும் பல வணிக நிறுவனங்கள், பயத்தை மூலதனமாகக் கொண்டு லாபத்தை அறுவடை செய்கின்றன. பழைய பண்பாடும் வரலாறும் இல்லாமல் இன்றைய நாம் இல்லை; அதேபோல நவீனத்தை புறக்கணித்துவிட்டு இருள்குகைகளில் வாழவும் யாரும் தயாராக இல்லை. உணவு விஷயத்திலும் இதுதான் இயல்பான நடைமுறையாக இருக்க வேண்டும்.


நம்முடைய அன்றாடப் பழக்கங்கள், உணவுகள், உணவுமுறைகளை மரபுத்தன்மையோடு நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதைப் பற்றிப் பேசுவதுதான் இத்தொடரின் பிரதான நோக்கம். ஒவ்வொரு உணவின் தயாரிப்பு முறைகளில் உள்ள குளறுபடிகள் பற்றியும், அந்தக் காலத்தில் உணவுகளை எந்த அடிப்படையில் பயன்படுத்தினார்கள் என்பதன் அறிவியல் பூர்வமான ரகசியங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.


அப்படி அறிந்து கொள்ளும்போதே, நம் நவீன கால வாழ்வில் அவற்றை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

‘நாற்பது வயதில் தன்னுடைய உடலை அறிந்தவன் மருத்துவனாக இருக்கிறான்; அறியாதவன் முட்டாளாக, நோயாளியாக இருக்கிறான்’ என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. நாம் மருத்துவர் ஆகா விட்டாலும் பரவாயில்லை; எந்த வயதிலும் நோயாளியாக மாறாமல் இருப்பதற்கு உடலையும், உணவையும் அறிந்து கொள்ள வேண்டும்.


உணவும் உடலும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றிலிருந்துதான் இன்னொன்று தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் உடலைப் பற்றி அறிய வேண்டுமென்றால் உணவைப் பற்றி அறிய வேண்டும். உணவைப் பற்றிப் புரிய வேண்டுமென்றால் உடலைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும்.உணவுகளைப் பற்றிய பல தவறான புரிதல்களும், மிக மோசமான உணவுப் பழக்கங்களும் நம்மிடம் இருக்கின்றன. இவைதான் நம்மை கிச்சனிலிருந்து கிளினிக்கிற்கு அனுப்பும் காரணிகள். எதற்குச் சாப்பிட வேண்டும் என்ற உடலியல் ரீதியான கேள்விக்கு பதில் தெரியாமல் இருப்பது ஒரு புறம். இன்னொருபுறம் உணவுகள் நோய்களைப் போக்கிவிடும் என்று காரணம் தெரியாமல் நம்புவது. இவைதான் நாம் செய்யும் இரட்டைத் தவறுகள். ஒன்று - உடல் பற்றிய அறியாமை, இன்னொன்று - உணவு பற்றிய அறியாமை.


*எல்லா பழங்களும் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்தை நம்பி, ஆப்பிள் போன்ற அமிலத்தன்மையுள்ள பழங்களை அளவிற்கு அதிகமாகச் சாப்பிடுவது.


*வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் கரையும் என்று இன்னொருவரின் அனுபவத்தை ஏற்று, தொடர்ந்து வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு உடலின் நீர்ச்சமநிலையைக் கெடுத்துக் கொள்வது.


*உடலின் புளிப்புச் சுவை அதிகரிப்பால் ஏற்பட்ட மலச்சிக்கலை வாழைப்பழம் அதிகரிக்கும் என்பது புரியாமல், ‘எல்லா விதமான மலச்சிக்கலுக்கும் வாழைப்பழம் நிவாரணம் தரும்’ என்று நம்பி வாழை மரங்களை மொட்டையடிக்கும் அளவிற்குச் சாப்பிடுவது.


*மணியடித்தால் சோறு என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாட்ச் காட்டும் நேரத்திற்கு அலாரம் வைத்து சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வது.


*சமையல் என்ற சத்துக்களைச் சமப்படுத்தும் செயலில் என்ன நடக்கிறது என்று அறியாமல், எல்லா உணவுகளையும் அதன் சமநிலை கெடுமாறு சமைப்பது; சாப்பிடுவது.


உடலிலும் உணவிலும் நாம் செய்யும் தவறுகளை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நம்முடைய முன்னோர்கள் உணவிலும், உண்ணுவதிலும் பல ரகசியங்களைப் புரிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு உடலும் தனித்தன்மை வாய்ந்தது; எனவே ஒவ்வொரு உடலுக்கும் ஏற்ற தனித்தனியான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது. உணவு பற்றியும், உடல் பற்றியும் பல ஃபார்முலாக்களை நமக்காக உருவாக்கித் தந்தார்கள் நம் தாத்தாக்கள்.


உடலையும், உணவையும் புரிந்து கொள்ள நம் முன்னோர்கள் என்ன விஞ்ஞானிகளா என்ன? ஆம். விஞ்ஞானிகள்தான். உணவியல், உடலியல், உளவியல், உலகியல் என்னும் நான்முகத் தத்துவத்தையும், அவர்களின் அறிவியலையும் நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.


(தொடரும்)
 
Last edited:

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#2
கிச்சன் டூ கிளினிக் - 2
நம் முன்னோர்களின் அறிவியல் புரிதலை சில செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம். மிளகாய் தெரியுமா உங்களுக்கு? ‘இதென்ன வேடிக்கையாக இருக்கிறது... மிளகாய் கூடவா தெரியாமல் இருப்போம்? என்று கேட்கிறீர்களா! அது சரிதான். நம் எல்லோருக்கும் மிளகாய் தெரியும்தான். அது எந்த நாட்டு உணவு தெரியுமா?
‘‘மிளகாய் எந்த நாட்டி லிருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை. நம் தோட்டத்தில்கூட எளிதாய் விளைகிறது. எனவே அது இந்திய உணவு தான்’’ என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், அந்த பதில் தவறு. மிளகாய் நம் நாட்டுத் தாவரமே அல்ல. அதனுடைய பெயரிலேயே அந்த ரகசியம் ஒளிந்திருக்கிறது.

நம் சமையலில் காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று, மிளகு. ‘மிளகாய்’ என்ற சொல்லிற்கு ‘மிளகு போன்ற’ என்று அர்த்தம். மிளகாய்க்கு உண்மையில் பெயரே இல்லை. மிளகாய் எது மாதிரி இருக்கிறது என்று சொல்வதற்காகக் குறிக்கப்பட்ட ஒரு ஒப்பீடுதான் அதன் பெயராகவே மாறிவிட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிளகாய் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. மிளகாயின் பூர்வீகம் தென் அமெரிக்க நாடான சிலி என்றும், ஐரோப்பிய நாடுகள் என்றும் இருவிதமாக சொல்லப்படுகிறது.

அப்படிக் கொண்டு வரப்பட்ட மிளகாய் நம்முடைய மிளகைப் போல காரம் உடையதாய் இருந்ததால் இந்தப் பெயர் வந்தது. பெயர் வைத்து விட்டால் நம் தாத்தாக்களும், பாட்டிகளும் பெரிய விஞ்ஞானிகளா என்ன? கொஞ்சம் பொறுங்கள். நாம் இன்னும் கதைக்குள் போகவில்லை.

இந்த மிளகாயை ஈரத்தன்மை மாறுவதற்கு முன்னால் உணவில் பயன்படுத்தினால் நல்ல உணவாக இருக்கிறது என்று கண்டுகொண்டார்கள் அக்காலத்து உணவியல் அறிஞர்கள். மிளகாயின் குளிர்ச்சி குறைந்து காய்ந்து போகுமானால், அது நச்சுத் தன்மையாக மாறுகிறது என்றும் அறிந்து கொண்டார்கள். ஈரம் குறைந்து உருமாறும் நஞ்சை நீக்குவதற்காக ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்தார்கள். அது என்ன டெக்னிக்?

மிளகாய் காய்ந்தவுடன் அதனைப் பவுடராக்கி மிளகாய்ப் பொடியாக சாம்பார், குழம்பு முதல் சகலத்துக்கும் நாம் பயன்படுத்துகிறோம் இல்லையா? அப்படி அதனை அரைக்கும்போது ஒரு துண்டு மஞ்சளையும் கூட சேர்த்து வைத்து அரைத்தால் மிளகாயின் நச்சுத்தன்மை மறைந்து விடுகிறது என்பதுதான் அந்த டெக்னிக்.
எதற்காக மஞ்சள் சேர்த்து அரைக்க வேண்டும் என்று நமக்குத் தெரியாவிட்டாலும் இன்னும் எல்லா வீடுகளிலும் மிளகாய்ப் பொடி அரைக்கும் சாமான்களில் மஞ்சளும் சேர்க்கும் பழக்கம் இயல்பான நடைமுறையாக இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஒரு உணவு ஆய்வில்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்கள்.

மஞ்சள் சேர்க்காமல் பயன் படுத்தப்படும் மிளகாய்ப் பொடியில் புற்றுநோயை உருவாக்கும் காரணி இருப்பதாகவும், மஞ்சள் சேர்க்கும்போது அக்காரணி மாறி விடுவதாகவும் அந்த ஆய்வு உறுதி செய்தது. நம் நாட்டு உணவின் உண்மைகளை ஒரு வெளிநாட்டுக்காரர் வந்து தான் நமக்கே சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் பார்க்கலாம்...

மிகச்சமீபத்தில் சிறுதானியங்களைப் பற்றி நாம் மிக அதிகமாகப் பேசி வருகிறோம். நல்ல விஷயம்தான். அப்படி என்ன தான் இருக்கிறது இந்த சிறுதானியங்களில்? நம் முன்னோர்கள் அரிசி உணவை சில நாட்களில் மட்டுமே குறைவாகவும், சிறு தானியங்களை தினமுமாக சாப்பிட்டதற்கு என்ன காரணம்?

அரிசி விலை அதிகம் என்பதாலா?சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில், மண்ணில் புதையுண்ட ஒரு பழங்கால நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அது மொகலாயர் ஆட்சிக்காலத்தில் இருந்த ஃபதேபூர் சிக்ரி பகுதியின் அருகிலுள்ள சிறு நகரம். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்கைப் பேரழிவினால் அந்த நகரம் புதையுண்டு போயிருக்கலாம் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அந்த நகரத்தின் கட்டிட அமைப்பு, நாகரிகம் அனைத்தும் சிறப்பானதாக இருந்ததாம்.

சரி... விஷயத்திற்கு வருவோம். அந்த புதையுண்ட நகரின் வீதியில் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தார்கள். வீட்டினுள்ளே நம் கிராமங்களில் பயன்படுத்தும் அடுக்குப்பானை கிடைத்தது. உரி என்று அழைக்கப்படும் அந்த அடுக்குப்பானை யில் கேழ்வரகு இருந்தது. பொதுவாக ஒரு பழைய பொருளானது இப்படி நீண்ட காலம் கிடந்தால் அதன் நிறம், வடிவம் எல்லாம் மாறியிருக்கும் என்று நமக்குத் தெரியும்.

ஆனால் இந்தக் கேழ்வரகின் நிறமோ, உருவமோ கொஞ்சமும் மாறாமல் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்த ஆய்வாளர்கள், அந்த வீட்டின் தொன்மையைக் கண்டறிய கார்பன் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அப்போதுதான் தெரிந்தது, அதன் வயது 1200 ஆண்டுகள்.

கண்டுபிடிக்கப்பட்ட கேழ்வரகு நிறம் மாறாமல் இருந்தது மட்டும் அல்ல. சுவையும் அப்படியே இருந்தது. சரி, இதன் குணம் மாறாமல் இருக்கிறதா என சோதிப்பதற்காக, கிடைத்த கேழ்வரகை நிலத்தில் விதைத்துப் பார்த்தார்கள். 1200 ஆண்டுகளுக்குப் பின்னால் அந்தக் கேழ்வரகு முளைத்தது என்பதுதான் அற்புதம். அதெப்படி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது முளைக்கிறது?

நாம் வழக்கமாகச் சாப்பிடும் அரிசியை எடுத்துக் கொண்டால், அதன் நெல்லானது எவ்வளவு காலம் வரை முளைக்கும் தன்மையோடு இருக்கும்? இப்போது கடைகளில் நமக்குக் கிடைக்கும் அரிசியெல்லாம் சாப்பிடுவதற்கு மட்டும்தான்.

இவற்றை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் இவையெல்லாம் கம்பெனிகளிடம் இருந்து விதை பெறப்பட்டு விளைவிக்கப்படுபவை. இங்கே நாம் பேசுவது நம்பர்களில் அழைக்கப்படும் நவீன அரிசிகளைப் பற்றி அல்ல; உண்மையான அரிசிகளைப் பற்றி. பாரம்பரியமாக நம் விவசாயிகள் அறுவடையில் கிடைக்கும் நெல்லில் ஒரு பகுதியை ‘விதை நெல்’ என்று பத்திரமாக ஒதுக்கி வைப்பார்கள். மீதியை உணவுக்காகப் பயன்படுத்துவார்கள். விதை நெல்லை எடுத்து மறுபடியும் விதைப்பார்கள். அப்புறம் அறுவடை செய்வார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் சுழற்சியாக இருக்கும்.

இது மாதிரியான பழைய அரிசி ரகத்தை எடுத்து விதைத்தால் அது எவ்வளவு நாள் முளைக்கும் தன்மையோடு இருக்கும் தெரியுமா? அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். அந்த அரிசியின் உயிர்த்தன்மை இரண்டு ஆண்டுகள் வரைதான் உயிர்ப்போடு இருக்கும். ஆனால் ஃபதேபூர் சிக்ரியில் கிடைத்த கேழ்வரகு 1200 வருடங்களாக முளைக்கும் தன்மையோடு இருந்தது என்றால், அதன் உயிர்த்தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்?

எனவேதான், சிறுதானியங்கள் என்று அழைக்கப்படும் கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு தானியங்களை மிகச்சிறந்த உணவாக நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். ஆஸ்பத்திரிகளில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். இப்போது நாமும் பயன்படுத்தத் துவங்கினால் நோய்களில் இருந்து தப்பிவிடலாம் என்று அவசரம் அவசரமாக மரபுக்குத் திரும்புகிறோம்.

ஆனால் நம் முன்னோர்களுக்கு இருந்த உணவு பற்றிய அறிவை நாம் பின்பற்றாமல், வெறுமனே சிறுதானியங்களைச் சாப்பிட்டாலும் இன்றைய நோய்களிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது. சிறுதானியங்கள் மிகச்சிறந்தவை என்று சொல்லி விட்டு, அதைச் சாப்பிட்டாலும் நோய் வரும் என்று சொன்னால் எப்படி நம்புவது? வாருங்கள்... சிறுதானியங்களின் முறையான பயன்பாடு பற்றிப் பார்க்கலாம். நம் முன்னோர்களுக்கு இருந்த உணவு பற்றிய அறிவை நாம் பின்பற்றாமல், வெறுமனே சிறுதானியங்களைச் சாப்பிட்டாலும் இன்றைய நோய்களிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#3
கிச்சன் டூ கிளினிக் - 3

நாம் அதிகமாகப் பயன்படுத்தும் அரிசியை விட, சிறுதானியங்களில் அதிக உயிர்ச்சக்தி இருப்பதை புதையுண்ட நகரத்தின் ஆய்வு மூலம்அறிந்து கொண்டோம். நாம் எந்த விஷயம் பற்றி புதிதாக அறிந்து கொள்ளும்போதும், உணர்ச்சி வசப்பட்டு அதன் எல்லை வரை சென்று விடுவோம். ‘நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மிகப்பெரிய சொத்து கிடைத்து விட்டது... இனி அதை மட்டுமே சாப்பிட்டு நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்’ என்று முழுநேர வேலையாகக் கிளம்பி விடுவோம்.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’, ‘மிகினும் குறையினும் நோய்’ என்று நம் தாத்தாக்கள் சொன்னதையும், ஒரு உணவை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வசதியாக மறந்து விடுகிறோம். அப்படியென்றால் சிறுதானியங்களை எப்படித்தான் சாப்பிடு வது? சிறுதானியங்களில் கம்பு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி, வரகு, சாமை என பல உண்டு. ‘சோளத்தில் கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து இருக்கிறது.

கேழ்வரகில் பாலை விட பத்து மடங்கு அதிகமான கால்சியம் இருக்கிறது. குதிரைவாலி, வரகு, சாமை எல்லாவற்றிலும் புரதம், இரும்புச் சத்து, நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகவே சிறுதானியங்கள் நம் உடலிற்கு மிகவும் நல்லது’ என்று இந்தப் பட்டியலை நம்பி நாம் சாப்பிடுவோமானால், நாம் சாப்பிடுவது உணவா? மருந்தா? அப்படியானால் மருத்துவத்தன்மையுள்ள உணவுகளை மட்டும் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமா? உணவை விட நாம் அதிகமாகப் பயன்படுத்தும் தண்ணீரில் என்ன மருத்துவத் தன்மை இருக்கிறது?

‘தண்ணீர் ஜீரோ கலோரி உள்ள ஒன்று; அதில் சத்தே இல்லை’ என்று சொல்லி வருகிறது நவீன அறிவியல். அதேபோல வைட்டமின்களோ, புரதங்களோ, இரும்புச் சத்தோ, கால்சியமோ, மெக்னீசியமோ கூட தண்ணீரில் இல்லை. சத்தும் இல்லை; மருத்துவ குணமும் இல்லை. அப்புறம் ஏன்தான் தண்ணீரை நாம் குடிக்கிறோம்? உடலின் தேவைதான் உணவையும், தண்ணீரையும் தீர்மானிக்கிறது. சோளத்தை உணவில் சேர்த்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்புச்சிதைவு நோய் வராது.

குதிரைவாலியைச் சாப்பிட்டால் இதயத்தில் கொழுப்பு அடைப்பு கரைந்து போகும். கேழ்வரகில் இருக்கும் மித்தியானைன் என்ற அமினோ அமிலம் உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்கும்... இதையெல்லாம் நம் தாத்தாக்கள் ஆய்வு செய்து கண்டு பிடித்துத்தான் சாப்பிட்டு வந்தார்களா என்ன? இதில் எந்த வேதியியல் பொருள் பற்றிய அறிவும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை; அது அவர்களுக்குத் தேவைப்படவும் இல்லை. ஆனாலும் அவர்கள் நோயின்றி, ஆரோக்கியமானவர்களாகவும், திடகாத்திர மானவர்களாகவும் வாழ்ந்தார்கள்.

ஒரு உணவை உணவாக மட்டுமே நாம் புரிந்து கொண்டால் நம் உடலிற்கு மருந்துகளின் தேவை இருக்காது. நம் முன்னோர்கள் எல்லா உணவுகளையும் தம் தேவைக்கு உணவுகளாகவே பயன்படுத்தினார்கள். உணவை மருந்தாகப் பயன்படுத்தினால் என்ன? நல்ல விஷயம்தானே? இது பற்றி விரிவாக அப்புறம் பேசுவோம். இப்போது சிறுதானியங்களில் என்ன இருக்கிறது என்பதைத் தொடரலாம்.

சிறுதானியங்களில் மட்டுமல்ல... எல்லா உணவுகளிலும் அடிப்படையாக இருப்பது உயிர்ச்சக்திதான். உயிர்ச்சக்தியின் செறிவும், திணிவும்தான் ஒவ்வொரு உணவிலும் மாறுபடுகிறது. இந்த உயிர்ச்சக்திதான் உணவின் அடிப்படை ஆற்றல். இந்த ஆற்றலை உடல் உட்கிரகித்து தனக்குத் தேவையான சத்துக்களாக மாற்றிக் கொள்கிறது. உணவுகளின் அடிப்படை ஆற்றல் பற்றிய அறிவுதான் நம் முன்னோர்களின் சொத்து.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய அடிப்படையான விஷயம், ‘உடலிற்குத் தேவை இருக்கிறதா’ என்பதைத்தான். உடலின் தேவை என்றால் என்ன? ஒரு செல்போனில் பேட்டரி தீர்வதைப் போல, உடல் தன்னுடைய இயக்கத்தால் தான் வைத்திருந்த ஆற்றலை இழக்கிறது. வேலைகளில் செலவழிந்து விட்ட ஆற்றலை நம்மிடம் கோருகிறது.
உடல் எந்த மொழியில் நம்மிடம் கேட்கும்? உணவு தேவைப்படும்போது பசி ஏற்படும். தண்ணீர் தேவைப்படும்போது தாகம் ஏற்படும். இவைதான் உடலின் அடிப்படைத் தேவைகள். இப்படி உடல் கேட்கும்போது தேவைக்கேற்றவாறு உயிர்ச்சத்துள்ள உணவுகளை நாம் கொடுத்தால் போதும். உடலிற்கு என்ன விதமான வேதியியல் சத்து தேவையோ அதனை உடல் உருவாக்கிக் கொள்ளும்.
உணவிலுள்ள உயிர்ச்சத்தின் அளவையும், தன்மையையும் நம் தாத்தா, பாட்டிகள் அறிந்து வைத்திருந்தார்கள். அதனை எப்போது கொடுக்க வேண்டும் என்ற உடல் அறிவையும் அவர்கள் பெற்றிருந்தார்கள்.

உடல் பற்றிய அறிவும், உணவு பற்றிய தெளிவும் இருந்ததால்தான் நோய்கள் பற்றிய அச்சமின்றி வாழ்ந்தார்கள்.ஆனால், இப்படி பழமை பேசுவதில் என்ன பயன்? உணவு பற்றிய, உடல் பற்றிய நவீன அறிவியல் இந்தியாவிற்குள் வரவில்லையென்றால் நம்முடைய சராசரி ஆயுள் கூடியிருக்குமா? இப்படி கேள்விகள் நமக்குத் தோன்ற வேண்டும்; தோன்றும். ஏனென்றால் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் பாடங்கள் அப்படி.

முதலில் உங்கள் வீட்டிலிருந்து நம் ஆய்வைத் தொடங்கலாம். உங்கள் அப்பாவின் ஆயுளை விட தாத்தாவின் ஆயுள் கூடுதலாக இருந்ததா? என்று யோசியுங்கள். தாத்தாவின் அப்பாவுடைய ஆயுள் எப்படி இருந்தது? நீங்கள் அறிந்த எல்லா வீடுகளிலும் இருந்த பெரியவர்களின் ஆயுள் எவ்வளவாக இருந்தது?

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் விடை கண்டுபிடிக்கும்போதே ஒரு விஷயம் நமக்கு விளங்கியிருக்கும். நம்மை விட நம் தாத்தாக்களின் ஆயுளும் அதிகம்; ஆரோக்கியமும் அதிகம். ‘‘அவர் 80 வயசுல தினசரி வாக்கிங் போறார். நான் அவர் வயசுல எப்படி இருப்பேனோ?’’ எனக் கவலைப்படும் பேரன்களால் நிறைந்தவை நம் வீடுகள்.

நம் தாத்தாவின் காலத்தில் நூறு வயது தாண்டி வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததே? நம் வீட்டின் ஆயுள் கணக்கும், நம் தெருவின், ஊரின் ஆயுள் கணக்கும் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் நாட்டின் ஆயுள் கணக்கு மட்டும் வேறு மாதிரி இருக்கிறது. ஒரு இந்தியனின் சாராசரி ஆயுட்காலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 34. ஆனால் இப்போது 67. ஆயுட்காலம் இப்போதுதான் கூடியிருக்கிறது என்று கூறுகின்றன ஆங்கிலேயர்கள் நம் கைகளில் கொடுத்து விட்டுப் போன ஆவணங்கள்.

வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான். அதிலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டால் அது அறிவியலேதான். இவ்வாறு நாம் நம்பி, அவர்கள் கொடுத்த ஆவணங்களைப் பற்றி கேள்வி எழுப்புவதில்லை. இந்தியா என்று ஒரு நாடு இருக்கிறது என்பதையும், அதற்கான கடல் வழியையும் 1500களில்தான் ஐரோப்பியர்கள் கண்டுகொண்டார்கள்.

அப்புறம் நம் நாட்டிற்குள் அந்நியர்கள் வருகை அதிகமாகியது; நாடு அடிமையானது. 1600களிலிருந்து 1900 வரைக்குமான 300 வருடங்களின் இந்தியக் கணக்கு மட்டும்தான் அதிகபட்சமாக ஆங்கிலேயர்களுக்குத் தெரியும். அதற்கு முந்தைய இந்தியா வின் மக்கள்தொகை பற்றியோ, அவர்களின் ஆயுள் பற்றியோ ஆங்கிலேயருக்கு எப்படித் தெரிந்திருக்கும்? இது அடிமை இந்தியாவின் கணக்கா? அக்காலத்தில் எல்லா ஊர்களிலும் இருந்த மக்கள் இக்கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்களா?
அவர்களுடைய நலனுக்காக, அவர்களுடைய அறிவியல் உயர்ந்தது என்று காட்டுவதற்காக நம்முடைய மரபுவழி அறிவியலைப் புறக்கணித்தார்கள். அதனை முழுமையாகச் செய்து முடிப்பதற்கான கணக்குதான், இந்தியர்களின் ஆயுள் பற்றிய பழங்கதைகள். இந்தியர்களின் ஆயுள் எப்போதும் கூடுதலானதாகவே இருந்தது. நம்முடைய மரபுவழி அறிவியலின் அழிவிற்குப் பின்னால் அது குறைந்து போயிருக்கிறது என்பதுதான் உண்மை.

நூறு வயதிற்கு மேல் இருந்த நம் தாத்தாக்களும், பாட்டிகளும் தொலைந்து போய், இப்போது இருபது வயது டயாபடீஸ் நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்கள்.சரி, கதைக்கு வருவோம். உடலின் தேவையை அறிந்து, சிறுதானியங்களின் உயிர்ச்சத்தை நாம் முறையாகப் பயன்படுத்தும்போது நோய்களிலிருந்து தப்ப முடியும்.சிறுதானியங்களின் முறையான பயன்பாடு என்றால் என்ன? இப்படி சிறுதானியம் சாப்பிட்ட நம் முன்னோர்கள் கூட்டம் கூட்டமாக கொள்ளை நோய்கள் வந்து செத்த போது இந்த உணவு பற்றிய அறிவு எங்கே போனது?

சோளத்தில் இரும்புச் சத்து இருக்கிறது. கேழ்வரகில் பாலைவிட பத்து மடங்கு அதிக கால்சியம் இருக்கிறது. குதிரைவாலி, வரகு, சாமை எல்லாவற்றிலும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்று சிறுதானியங்களைச் சாப்பிடுவோமானால், நாம் சாப்பிடுவது உணவா? மருந்தா?

(தொடர்ந்து பேசுவோம்...)
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#4
கிச்சன் டூ கிளினிக்- 4

உடலியலையும், உணவியலையும் புரிந்து கொண்டதால்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், நீண்ட ஆயுள் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய சிறுதானியங்களை முறையாகப் பயன்படுத்துவது எப்படி?
பார்ப்போம். முதலில் உணர வேண்டிய விஷயம்... நாம் என்ன சாப்பிட்டாலும் உடலின் தேவைக்குத்தான் சாப்பிட வேண்டும்.

உடலின் தேவைகள்தான் பசியாகவும், ருசியாகவும் வெளிப்படுகின்றன. அப்படி உடல் கேட்கிறபோது சிறுதானியங்கள் உள்ளிட்ட எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஒவ்வொரு சிறுதானியத்திற்கும் தனித்தனியான தன்மை உண்டு. அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் குளிர்ச்சியான கம்பு விளையும். குளிர்ந்த பிரதேசங்களில் இருக்கும் நிலங்களில்தான் வெப்பத்தன்மை உள்ள கேழ்வரகு விளையும். ஒவ்வொரு ஊரின் வெப்ப, குளிர்ச்சி தன்மைகளுக்கேற்ப அங்கு விளையும் பொருட்களின் தன்மையும் இருக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் எந்தப் பகுதியில் என்ன விளைபொருள் வருமோ அதையே பயிரிடுவார்கள்; அங்கு வாழ்பவர்கள் அதையே உண்பார்கள்.

வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உடலைக் குளிர்ச்சிப்படுத்துவதற்கு கம்பும், குளிர்ச்சியான பகுதிகளில் உள்ளவர்களின் உடலை வெப்பப்படுத்த கேழ்வரகையும் நம் நிலங்கள் தருகின்றன.

இப்படி ஒவ்வொரு சிறுதானியத்திற்கும் தனித்தனியான செறிவும், உயிர்ச்சக்தி திணிவும் இருக்கின்றன. நாம் பொத்தாம் பொதுவாக சிறுதானியங்கள் உடலிற்கு நல்லது என்று கேள்விப்பட்டவுடன், எல்லா தானியங்களையும் மொத்தமாகச் சேர்த்து பன்னாட்டு நிறுவனங்களின் சத்து பானங்களைப் போல, பொடியாக்கி வைத்துக் கொள்கிறோம்.

குளிர்ச்சியைத் தரும் உணவையும், வெப்பத்தைத் தரும் உணவையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடுகிறோம்! பாவம்... நம் உடல்தான் என்ன செய்யும்? நாம் சாப்பிட்ட கலவை உணவுகளிலிருந்து, என்ன முடியுமோ அந்த அளவிற்கு உயிர்ச்சத்துக்களைக் கிரகித்துக் கொள்கிறது உடல். எப்போதும் சிறுதானியங்களை தனித்தனியாக தேவையின் அடிப்படையில் சாப்பிட வேண்டும்.எந்தக் காலத்தில் எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?

இப்படி பட்டியல் போட்டுப் பழகுவது எப்போதும் யாருக்காவது அடிமையாக வாழ வைத்து விடும். என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம் என்பதன் அடிப்படையைப் புரிந்து கொள்வதே சிறந்த வழி. அதை விட இன்னும் எளிமையானது, உங்கள் உடலைப் பின்பற்றுவது. அதெப்படி? உடலைப் பின்பற்றி எந்த உணவுகளைச் சாப்பிடலாம் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? மிகவும் சுலபம்.
முதலில் உடலின் தேவையை பசி மூலம் அறிந்து கொள்ள வேண்டும். பசியின் அளவு மிகவும் குறைவாக இருந்தால் திட உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம். எளிய திரவ உணவுகள். கஞ்சி, கூழ், ஜூஸ்... இப்படி! நல்ல தீவிரமான பசியாக இருந்தால் எல்லாவிதமான உணவுகளையும் சாப்பிடலாம்.

அடுத்த விஷயம், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் லேசான பசி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நாக்கு என்ன சொல்கிறது என்று கவனித்துப் பாருங்கள். உங்கள் உடலின் தன்மைக்கும், வெளிச் சூழலின் தன்மைக்கும் ஒத்துப் போகிற உணவைத்தான் உங்கள் நாக்கு கேட்கும். நல்ல மொறுமொறுப்பாக எதையாவது சாப்பிடலாம் என்று தோன்றுகிறதா? இப்போது உங்கள் உடலின் தேவை அதுதான்.

இதில் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம், உடலின் தேவை. இரண்டாவது, நாக்கின் தேவை. அதாவது பசியும் ருசியும். இந்த இரண்டைப் பார்த்துப் பழகினாலே எந்த உணவை, எப்போது சாப்பிடலாம் என்ற புரிதல் நமக்கு ஏற்பட்டு விடும்.

உங்கள் பகுதியில் எந்தவிதமான சிறுதானியங்கள் விளைகிறதோ, அதுதான் உங்களுக்கான பொது உணவு. அவற்றில் எது உங்களுக்குப் பிடிக்கிறதோ, அது உங்களின் தனி உணவு. அந்த உணவிலும், பசியின் தன்மை தான் உணவின் வடிவத்தை முடிவு செய்யும். உணவு - உடல் - உலகு... இதில் எந்த ஒன்றுமே தனியாக இல்லை. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. நாம் அதனைப் பின்தொடர்ந்தால் நம் தேவைகளை சரியாக அறிந்து கொள்ள முடியும்.

தனித்தனியான சிறுதானியங்களை, நம் பகுதியில் விளைபவற்றை, தேவைக்குச் சாப்பிடுவதே சரியான உணவு முறை. இது சிறுதானியப் பயன்பாட்டிற்கு. இதே போல எல்லா உணவுகளையும் பிடித்து, பிரித்துச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

அதெல்லாம் சரி... இப்படியெல்லாம் தேவையை கவனித்து, ருசியைக் கவனித்து சாப்பிடுவதால் என்ன கிடைக்கும்? நாம் இன்று சத்துக் குறைந்து விட்டது என்று டப்பா டப்பாவாக சத்துக்களை வாங்கி நாமும் விழுங்கி, நம் குழந்தைகளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறோமே... அவை தேவைப்படாது. நாம் சாப்பிடும் உணவி லிருந்து எல்லா சத்துக்களையும் சரியான அளவில், கூடாமல் குறையாமல், உடல் உற்பத்தி செய்துகொள்ளும்.

உதாரணமாக, நமக்கு கால்சியம் சத்து தேவைப்பட்டால் என்ன செய்வோம்? கால்சியம் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவோம். ‘‘அப்படி சாப்பிட வேண்டியதில்லை’’ என்கிறார் பிரான்ஸ் நாட்டு உயிரியல் விஞ்ஞானி டாக்டர் லூயி கேர்வரான்.

அப்புறம் கால்சியம் சத்திற்கு எங்கே போவதாம்? நமக்கு கால்சியம் சத்து தேவை என்றால், பால் குடிக்கிறோம். (பால் உணவா? விஷமா? என்று விவாதங்கள் ஒருபுறம் போய்க்கொண்டிருக்கின்றன. அதனை நாம் அப்புறம் வைத்துக் கொள்வோம்.) ‘‘பாலில் எவ்வளவு கால்சியம் சத்து இருக்கிறது. இந்த சத்து பாலிற்கு எங்கிருந்து வந்தது’’ என்று கேட்கிறார் கேர்வரான்.

ஒரு விஞ்ஞானிக்கு இது கூடவா தெரியாது? பசுவிடம் இருந்துதானே பால் வருகிறது? எனவே பசுவிடம் இருந்துதான் கால்சியம் பாலிற்கு கிடைக்கிறது. சரிதானே..? இங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.
‘‘பாலிற்கு கால்சியத்தைத் தந்த பசு, கால்சியம் சத்தை எங்கிருந்து பெற்றது?’’ - அடுத்த கேள்விக்குப் போகிறார் கேர்வரான்.நாம் கால்சியம் தேவைப்படும்போது உணவுகளில் இருந்துதான் கால்சியத்தை எடுத்துக் கொள்கிறோம். அல்லது நமது டாக்டர்கள் மெடிக்கல் ஸ்டோரிலிருந்து கொஞ்சம் கால்சியம் தருவார்கள்.
அதேபோல பசு தன் உணவில் இருந்துதான் கால்சியத்தைப் பெற்றிருக்கும். டாக்டர் கேர்வரானின் ஆராய்ச்சியில் இந்த உண்மை வெளிப்பட்டது. பசு தன் உணவில் கால்சியத்தை எடுத்துக் கொள்ளவே இல்லை. நம் நாட்டிலாவது வைக்கோல் கொடுக்கிறோம். பிரான்சில் புல்தான். புல்லில் இருக்கும் மெக்னீசியத்தை கால்சியமாக மாற்றிக் கொள்கிறது பசுவின் உடல்.

பசுவின் தேவை கால்சியம். அதை தனக்குக் கிடைக்கிற உணவிலிருந்து மாற்றிப் பெற்றுக் கொள்கிறது பசு. அவ்வளவுதான்! இவ்வளவு சுலபமான சத்து உற்பத்தியை சிக்கலாக்கி விட்டான் மனிதன். ‘‘நாம் சாப்பிடும் உணவில் சத்துக்களின் அளவு பார்த்து சாப்பிட வேண்டியதில்லை’’ என்பதுதான் கேர்வரானின் கண்டுபிடிப்பு.ஆனால், உடலின் தேவை அறிந்து சாப்பிட வேண்டும். ஏனென்றால் விலங்குகள் பசிக்காமலோ, தனக்குப் பிடிக்காமலோ சாப்பிடுவதில்லை.

உலகிலுள்ள உயிரினங்களில் பசிக்காமலும், பிடிக்காமலும் கடமைக்குச் சாப்பிடுகிற ஒரே பிராணி, மனிதன் மட்டும்தான்.உடலின் தேவையை அறிந்து, சுவையின் தேவையை அறிந்து நாம் உண்ணும்போது நம் உடலிற்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. சிறுதானிய உணவுகளில் உயிர்ச்சத்து அதிகமாக இருப்பதால் மற்ற உணவுகளை விட சிறுதானியங்கள் சிறந்தவை.பசித்துச் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வருமா? ஹார்ட் அட்டாக் வருமா? வாருங்கள்...

தொடர்வோம்.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#5
கிச்சன் டூ கிளினிக் - 5

‘பசியையும், ருசியையும் அறிந்து சாப்பிட்டால் நம் உடலில் சத்துக்களின் குறைபாடு ஒருபோதும் வராது’ என்று பார்த்தோம். பசித்துச் சாப்பிடும் விலங்குகளுக்கு கால்சியம் தேவையை அதன் உடலே எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை நிரூபித்த கேர்வரானின் ஆய்வும் நம் உடலின் சத்து உற்பத்தியை உறுதி செய்கிறது.

‘விலங்குகள் எல்லாம் உண்மையில் பசித்துத்தான் சாப்பிடுகிறதா என்ன? அல்லது நமக்கு வரும் நோய்களுக்கான காரணம் என்று எதையாவது அடித்து விடுகிறீர்களா?’ - உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றலாம்.

வீட்டில் நாய், பூனை என்று ஏதாவது செல்லப் பிராணி வளர்ப்பவருக்கு இந்தச் சந்தேகமே வராது. நாம் சாப்பிடுகிறபோதெல்லாம் நாய்க்குக் கொஞ்சம் உணவை வைத்தாலும், அது நாம் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு தானும் சாப்பிடுவதில்லை. தன் தேவையின்போது மட்டுமே அது சாப்பிடுவதைக் கவனிக்க முடியும். பசி இல்லாத நேரத்தில் எவ்வளவு ருசியான உணவையும் அவை தொடுவதில்லை.

விலங்குகள் பசியைப் பின்பற்றுகின்றன என்று உறுதி செய்து கொள்வதற்கு இன்னும் ஒரு வழி இருக்கிறது. நாயோ, பூனையோ - அதன் உடல்நலம் கெட்டிருக்கும்போது என்ன செய்யும் தெரியுமா? சோர்ந்து படுத்திருப்பதும், வாந்தி எடுப்பதும் அவற்றின் உடல்நிலை கெட்டிருக்கிறது என்பதை நமக்குக் காட்டும்.

அந்த நேரத்தில் நாய் எதையும் சாப்பிடாது. கவனித்திருக்கிறீர்களா? வழக்கமாக பசித்தும், ருசித்தும் சாப்பிடும் நாய், உடல்நலமில்லாமல் இருக்கும்போது அதிக நேரம் படுத்தே கிடக்கும். நாய் ருசித்துச் சாப்பிடுமா என்ன? ‘நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலையாதே’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் திட்டும்போதே நமக்குப் புரிந்திருக்கும், நாய் தன் ருசியில் எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பது!

இப்படி பசிக்கும் ருசிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாய், அதன் உடல்நிலை சரியில்லாதபோது என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. ஏனென்றால் உடல்நிலை நன்றாக இல்லாதபோது, உடலில் பசி ஏற்படாது. உடல் உறுப்புகளுக்கு செரிக்கும் வேலையைச் செய்யும் ஆற்றல் குறைந்து போயிருக்கும். உங்களுக்குக் காய்ச்சல் வந்தாலோ, வேறு தொந்தரவுகள் ஏற்பட்டாலோ வயிற்றைக் கவனித்துப் பாருங்கள்... பசி இல்லாமல் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
காய்ச்சல் ஏற்பட்டிருக்கும்போது நாக்கில் ருசியும் இருக்காது; வயிற்றில் பசியும் இருக்காது. எதையாவது சாப்பிடுவோம் என்று சாப்பிட்டவுடன், சுவையற்று இருக்கும் நாக்கு கசப்பைக் காட்ட ஆரம்பிக்கும். சுவையில்லை என்றவுடன் நாம் சாப்பிட்டிருக்கக் கூடாது. ஆனாலும் பழக்கத்தில் சாப்பிடுகிறோம்.

நாக்கில் கசப்பைத் தடவி விட்டால் சாப்பிட முடியுமா? அதனால்தான் உடல் நம் நாக்கில் கசப்புச் சுவையை ஏற்படுத்துகிறது. ‘‘நான் வேறு வேலையாக இருக்கிறேன். இப்போதைக்கு சாப்பிட்டுத் தொலைக்காதே’’ என்பதே அது சொல்ல வரும் விஷயம்!
உடல்நிலை சரியில்லாதபோது நம் முன்னோர்கள் ‘லங்கணம் பரம ஔஷதம்’ (பட்டினியே அனைத்திற்குமான மருந்து) என்று சும்மா இருப்பார்கள். நமக்கு உடம்பு சரியில்லை என்றால் வழக்கத்தை விட அதிகமாகச் சாப்பிடுகிறோம். ஆனால், உடம்பு சரியில்லாத நாய், தனக்கு மிகவும் பிடித்த லெக் பீஸைக் கூட அந்த நேரத்தில் திரும்பிப் பார்க்காது.

நாம் என்ன செய்வோம்? காய்ச்சல் வந்து, நாக்கெல்லாம் கசந்தால் கூட ஒரு பீஸ் சிக்கனைப் பார்த்து விட்டால் - சாப்பிட்டு விட்டுத்தான் மறுவேலை.உலகத்தில் எல்லாப் பிராணிகளும் பசியையும், ருசியையும் அறிந்துதான் சாப்பிடுகின்றன. மனிதன் மட்டும்தான் தன் பகுத்தறிவின் வழியாக எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.
இப்படி பசித்துச் சாப்பிடும் விலங்குகளுக்கு சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன என்பது மட்டுமில்லாமல், ரத்தத்தில் கொழுப்பு அடைப்பது, ஹார்ட் அட்டாக் வருவது என்பதெல்லாம் இல்லை.
உதாரணத்திற்கு, ஆட்டை எடுத்துக் கொள்ளலாம். ‘‘நான் உயிருள்ள ஆட்டைப் பார்த்ததே கிடையாது. ஆடுகளை எப்போதும் பிரியாணியோடு சேர்த்து தட்டில்தான் பார்த்துப் பழக்கம்’’ என்று சொல்லும் நகரவாசியா நீங்கள்? பரவாயில்லை. நாம் பேசும் விஷயத்தைப் புரிந்து கொள்ள ஆடுகளைப் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கறிக்கடையில் ஆடுகளை அறுக்கும்போது, அதில் கறியும், அதே அளவிற்கு கொழுப்பும் இருக்கும். இவ்வளவு கொழுப்பு ஆட்டிற்கு எப்படிக் கிடைத்தது? கொழுப்பு நமக்கு வர வேண்டும் என்றால் நம் நவீன டயட் படி - ஃபிரை செய்த பொருட்களைச் சாப்பிட வேண்டும். அதிகமாக அசைவம் சாப்பிட வேண்டும். அல்லது ஆயிலையே சாப்பிட வேண்டும்.

ஆடு சைவமா? அசைவமா? ஒரு குழப்பமும் வேண்டியதில்லை... ஆடு சுத்த சைவம்தான். கொஞ்சம் பொறுங்கள்... ஆடு சுத்த சைவம்தான்; ஆட்டை நாம் சாப்பிட்டால்தான் அசைவம். எனவே ஆடு ஒருபோதும் அசைவம் சாப்பிட்டிருக்காது. ஆடு எப்போதும் ஃபிரை செய்தோ, ஆயில் சாப்பிட்டிருக்கவோ வாய்ப்பில்லை. அப்புறம் எப்படி அதன் உடலில் இவ்வளவு கொலஸ்ட்ரால்... அதாங்க, கொழுப்பு வந்திருக்கும்?

ஆட்டினுடைய உடலிற்கு கொழுப்பு அவசியம். எனவே அதன் உடல் தன் தேவைக்குக் கொழுப்பை உருவாக்கிக் கொள்கிறது. ஆட்டு உடலில் இவ்வளவு கொழுப்பு இருந்தாலும், அதற்கு ஹார்ட் அட்டாக்கோ, ரத்தக் குழாய் அடைப்போ ஏற்படுவதில்லை. ஏனென்றால், ஆடு மற்ற பிராணிகளைப் போலவே தன் தேவைக்குச் சாப்பிடுகிறது. அது சாப்பிடும் உணவிலிருந்து உடலிற்குத் தேவையற்ற கழிவுகள் நீக்கப்பட்டு, தேவையானவை உற்பத்தி ஆகி விடும்.

நாம் பசித்தும் ருசித்தும் சாப்பிடுவதில்லை. ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் உடனே அதனைச் சாப்பிட்டு விடுகிறோம். இதைச் சாப்பிட வேண்டும் என்று நாம் தீர்மானிப்பதற்குப் பதிலாக, நம்மைச் சாப்பிடத் தூண்டுவதாக பொருள் மாறிவிட்டது.

அதேபோல ஒரு பொருள் உடலிற்கு நல்லது என்று யாராவது சொல்லிவிட்டால் போதும்... எப்போதும் அந்த ஒரே பொருளையே சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நம் வழக்கம். பசியில்லாமல், உடலுக்கும் தேவையில்லாமல், அளவை மீறி சாப்பிடும்போது எந்த உணவு நமக்கு சத்தைத் தர வேண்டுமோ, அதே உணவு கழிவுகளை உற்பத்தி செய்கிறது.

உணவிலிருந்து நாம் எதைப் பெறப் போகிறோம் என்பதை நம்முடைய பழக்கவழக்கங்களே தீர்மானிக்கிறது. ஆடு சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வராது என்று வரிந்து கட்டிக் கொண்டு உடனே கிளம்பி விடாதீர்கள்... உணவைப் பற்றி இன்னும் கொஞ்சம் முழுமையாக அறிந்து கொண்டு, அப்புறம் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் பயமின்றிச் சாப்பிடலாம்.சாதாரண உணவுகளையோ, நம் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படும் வீட்டு மருந்துகளையோ அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்?

தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் ‘உணவே மருந்து’ எனச் சொல்லும் அறிவுரைகள் அதிகமாகி வருகின்றன. இந்த மருந்துணவுகளைச் சாப்பிடும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? நாம் பசித்தும் ருசித்தும் சாப்பிடுவதில்லை. ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தால் உடனே அதனைச் சாப்பிட்டு விடுகிறோம். இதைச் சாப்பிட வேண்டும் என்று நாம் தீர்மானிப்பதற்குப் பதிலாக, நம்மைச் சாப்பிடத் தூண்டுவதாக பொருள் மாறிவிட்டது.

(தொடர்ந்து பேசுவோம்...)
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#6
கிச்சன் டூ கிளினிக் - 6

பசியும் ருசியும் எவ்வளவு முக்கியமானதோ, அதை விட உணவின் அளவு மிகவும் அத்தியாவசியமானது என்பதைப் பார்த்தோம். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது எப்படி உடலியல்ரீதியாக உண்மையாகிறது என்பதையும் புரிந்து கொண்டோம்.நாம் சாப்பிடும் சாதாரண உணவின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலே, உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதைக் கண்டோம். அப்படியானால் மருந்தாகப் பயன்படுத்தும் உணவுகளில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

‘ஒரே உணவுதானே... அதை உணவாகவோ, மருந்தாகவோ எடுத்துக்கொள்ளும்போது அதன் பயன்பாடும் ஒரே மாதிரிதானே இருக்கும்’ என்கிற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும்! அப்படி இல்லை. பசி எடுக்கும்போதும், ருசி தேவையின்போதும் நாம் சாப்பிடுகிற உணவுதான் உணவு. இந்த இரண்டு தேவைகளும் இல்லாமல் நம் அறிவின் வழியாகத் தேர்வு செய்து, உடல் தொந்தரவுகளின்போது சாப்பிடுவது மருந்து.

சுருக்கமாகச் சொல்வது என்றால்... ‘ஒரு பொருளை உடல் கேட்கிறபோது கொடுத்தால் அது உணவு; அதே பொருளை தொந்தரவுகளைச் சரிப்படுத்த பயன்படுத்தினால் அது மருந்து’. உணவாக ஒரு பொருளைப் பயன்படுத்தும்போது உடலைக் கவனித்துச் சாப்பிட்டால் போதுமானது. உணவுப் பொருளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அதை என்ன செய்வது என்பதை உடல் கவனித்துக் கொள்ளும்.

ஆனால், உடலின் தேவை இல்லாமல் பொருளை நாம் தேர்வு செய்து கொடுக்கும்போது அதன் குணம், அளவு... இவை எல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது.‘என்னங்க குழப்புறீங்க... சாதாரணமாக நாம் சாப்பிடும் இஞ்சி, சுக்கு, மிளகு போன்ற உணவுகளை மருந்தாகப் பயன்படுத்தினால் என்ன தப்பு’ என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?ஒரு தப்பும் இல்லை. அந்தப் பொருள் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல், அதன் குணங்கள் பற்றிய தெளிவு இல்லாமல் யாரோ எங்கோ சொல்லியிருக்கிறார்கள் என்றோ, பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரைக்கிறார் என்றோ பயன்படுத்துவதுதான் பிரச்னை.

அப்படி என்ன பிரச்னைதான் வந்து விடும்?உதாரணமாக, கிட்னியில் சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நம்மைப் பார்க்கிற எல்லோரும் ஆளாளுக்கு ஒரு வைத்தியத்தைச் சொல்லி வைக்கிறார்கள். நம் தொந்தரவுகள் சரியாக வேண்டும் என்ற நோக்கத்தை விட, தங்கள் அனுபவத்தையும் அறிவையும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியமாக மாறுகிறது பல நண்பர்களுக்கு.

தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்காக ஆலோசனை சொல்லும் நண்பர்கள்... அனுபவத்தைக் காட்டிக் கொள்வதற்காக மருத்துவம் பரிந்துரைக்கும் உறவினர்கள்... இவர்களை எல்லாம் மிஞ்சும் வண்ணம் தொந்தரவுகளை தீராத நோய்களாக மாற்றி விடும் அளவிற்கு பயமுறுத்தும் அண்டை வீட்டார் என்று உங்களுக்கு அனுபவங்கள் இருக்கும்.

சிறுநீரகக் கற்களுக்கு நமக்குச் சொல்லப்பட்ட விதம்விதமான மருத்துவங்களில், வாழைத் தண்டு ஜூஸ் எல்லோராலும் சொல்லப்படுகிற பொதுச் செய்தி. வாழைத் தண்டு என்பது உணவா, மருந்தா என்றால் அது உணவுதான். ஆனால் தொடர்ச்சியாகப் பயன்படுத்தக்கூடிய உணவு இல்லை. எப்போதாவது வாழை மரங்கள் அழிக்கப்படுகிற காலங்களில் மட்டும் பிடித்தவர்களால் பயன்படுத்தப்படுகிற உணவு.

சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை வாழைத்தண்டிற்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த பொதுச் செய்தி. அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை சித்த மருத்துவர்களும், உணவியல் மருத்துவர்களும் முழுமையாக அறிந்திருப்பார்கள். சிறுநீரகத்தில் இருக்கும் கற்களின் அளவு என்ன என்பதை வலியின் தன்மை மூலமாகப் புரிந்துகொண்டு, நோயாளியுடைய உடலின் தாங்கும் திறனையும் அறிந்து, அதற்கேற்றாற்போல மருந்தின் அளவையும், மருந்து செய்முறையையும் தீர்மானிக்கிறார் மருத்துவர்.
ஆனால், நம் பக்கத்து வீட்டுக்காரர் வாழைத்தண்டை மருந்தாகப் பரிந்துரைக்கிறபோது, நம் உடல்நிலையையோ அல்லது சாப்பிட வேண்டிய அளவையோ அவர் அறிந்திருக்க முடியாது. நாமும் நம் தொந்தரவிலிருந்து விடுபட ஒரு நல்ல வழி கிடைத்து விட்டது... சிவப்பாய் இருப்பவர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பி அவர் சொன்னபடி சாப்பிட ஆரம்பிக்கிறோம்.

வாழைத்தண்டு சுவையே உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் உடல்நலன் கருதி சாப்பிடுகிறீர்கள். பசியின் தேவையும் ருசியின் தேவையும் இல்லாத இப்போது நீங்கள் சாப்பிடுவது உணவல்ல... மருந்து. எத்தனை நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்? ஒவ்வொருமுறையும் எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும்? ஜூஸாகச் சாப்பிடும்போது தண்ணீர் கலக்க வேண்டிய அளவு என்ன? பச்சைத் தண்ணீருக்குப் பதிலாக வெந்நீர் கலந்தால் மருந்தின் தன்மை என்ன ஆகும்? இப்படி எந்தக் கேள்வியும் இன்றி தொடர்ந்து வாழைத்தண்டு ஜூஸைக் குடிக்கிறீர்கள். இப்போது என்ன ஆகும் தெரியுமா?

நம்முடைய சிறுநீரகங்கள் சிறுநீரைப் பிரிக்கும் வேலையை மட்டும் செய்பவை அல்ல. பாரம்பரிய அறிவியலின்படி உடலின் நீர்ச்சமநிலையைப் பாதுகாத்தல்... மூட்டுக்களைப் பராமரித்தல்... எலும்புகள், பற்கள், தலைமுடி இவற்றுக்கு சக்தி அளித்தல்... என்று ஏராளமான வேலைகளை அவை செய்கின்றன.வாழைத்தண்டு ஜூஸை ஒரு நல்ல சித்த மருத்துவரின் பரிந்துரையின்றி தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நீர்ச்சமநிலை கெட்டுப் போகும். மூட்டுக்களில் தேங்கியிருக்கிற நீர் உறையத் துவங்கி, ஆர்த்ரைட்டிஸ் ஏற்படும். ஆர்த்ரைட்டிஸ் என்பது சிக்கலான மூட்டுவலியைக் குறிக்கிறது அல்லவா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. லத்தீன் மொழியில் ‘ஆர்த்தோ’ என்றால் மூட்டு என்றும், ‘ஐடிஸ்’ என்றால் தொந்தரவு என்றும் பொருள். எனவே ஆர்த்ரைடிஸ் என்றால் பயப்பட வேண்டியதில்லை. ஒரு கிராமத்து நோயாளி ‘மூட்டு வலி’ என்று சொல்வதைப் போல, படித்த நகரத்து நோயாளி ‘நீ பெயின்’ என்று சொல்வதைப் போலத்தான் இதுவும். மருத்துவக் கலைச்சொல்லில் மூட்டுவலி என்பதன் லத்தீன் பெயர்தான் ‘ஆர்த்ரைடிஸ்’.

நம் உடலின் நீர்ச்சமநிலை கெடுகிறபோது, எல்லா மூட்டுக்களிலும் இருக்கும் நீர்ச்சத்து சமநிலை இழக்கிறது. எந்த மூட்டில் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ, அங்கு வலி ஏற்படுகிறது. இந்த மூட்டுவலியை யார் ஏற்படுத்தியது? சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை செய்கிறோம் என்று கிளம்பி மூட்டுவலியை நாம்தான் வரவழைத்துக் கொள்கிறோம்.ரசாயன மருந்துகள் அளவிற்கு இயற்கையான உணவுகள் மோசமானவை இல்லை. ஆனால், உணவுகளை மருந்தாகப் பயன்படுத்தும்போது, அது பற்றிய முழுமையான அறிவுடைய மருத்துவரின் உதவி அவசியம். உங்கள் உடலை வைத்து விஞ்ஞானிகள் போல ஆராய்ச்சியெல்லாம் செய்து பார்க்காதீர்கள்.
மருந்தைப் பற்றி நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’. நாம் உண்ணுவது உணவாக இருந்தால் அதற்குக் கால எல்லை கிடையாது. மருந்தாக இருந்தால் சில நாட்களில் அது நிறுத்தப்பட வேண்டும். எனவே, மருந்து பற்றிய பொழுதுபோக்கு உபதேசங்களுக்குக் காது கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் மிச்சமாகும்.

உணவு பற்றிய நம்முடைய புரிதலின்மையை வணிக நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை அறிந்து கொள்ள நம் தேங்காய் எண்ணெய் பற்றிப் பேசுவோம்.

‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’. நாம் உண்ணுவது உணவாக இருந்தால் அதற்குக் கால எல்லை கிடையாது. மருந்தாக இருந்தால் சில நாட்களில் அதை நிறுத்த வேண்டும். எனவே, மருந்து பற்றிய பொழுதுபோக்கு உபதேசங்களுக்குக் காது கொடுக்காதீர்கள்.

(தொடர்ந்து பேசுவோம்...)
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#7
கிச்சன் டூ கிளினிக் - 7


உணவுகள் உண்பதற்கானவை. உணவுகளை உணவுகளாகவே பயன்படுத்தினால் ஆரோக்கியத்தை எளிமையாகப் பெற முடியும். அப்படிப் பயன்படுத்தும்போது, உணவு பற்றி பெரிதாகத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பசித் தேவையையும், ருசித் தேவையையும் அறிந்து அளவோடு சாப்பிட்டுவது மட்டுமே போதுமானது.ஆனால் உணவுகளை மருந்துகளாகப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவைப்படுகிறது.

அதுகுறித்த முழுமையான புரிதலும், அதைப் பயன்படுத் தும் விதமும், அளவும் முக்கியத்துவம் பெறுகிறது. உணவு பற்றி முழுமையாக அறிந்த ஒரு உணவு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருத்துவமாக அதனைப் பின்பற்றுவதில் சிக்கல் இல்லை. ஆனால், போவோர் வருவோர் தரும் செய்தித் துணுக்குகளைக் கேட்டுக்கொண்டு பின்பற்றும்போது, உடல்ரீதியான பலவிதமான சிக்கல்கள் தோன்றுகின்றன என்பதைப் பார்த்தோம்.

‘உணவு’ என்ற சொல் ஆரோக்கியத்தோடு மிக நெருங்கிய தொடர்புடைய சொல். இதை நாம் இப்படிப் புரிந்து கொள்வதே சரியானது. ஆனால், உணவை நோய்களோடு தொடர்புப்படுத்தி யோசிப்பது நம்முடைய வேலை அல்ல; மருத்துவர்களின் வேலை. நாம் சாப்பிடும் உணவுகளை எப்படி, எவ்வளவு, எப்போது பயன்படுத்தலாம் என்பதையும், அதன் பின்னால் இருக்கும் வணிக தந்திரங்கள், அரசியல், கலப்படங்கள் ஆகியவற்றையும் பற்றி நாம் யோசிப்பதற்கும் பேசுவதற்கும் நிறைய இருக்கின்றன. அவசியமான இந்த விஷயங்களை விட்டு விட்டு, ‘இந்த உணவை இதற்கு மருந்தாகப் பயன்படுத்தலாமா’ என்று ஆய்வு செய்து கொண்டிருக்கும் அளவிற்கு நமக்கு நேரமில்லை; அது நம்முடைய வேலையும் இல்லை.

நவீன உணவுகள் தொடர்பாக நாம் பார்ப்பதற்கு முன்னால் இரண்டு விஷயங்கள் குறித்துப் பேசி விடலாம்.முதல் விஷயம், ‘நவீன’ என்ற சொல்லைக் கேட்டவுடன் ‘அது முற்றிலும் தவறானது. நம் பாரம்பரியத்தில் இல்லாத விஷயமா’ என்ற வாதத்தை உடனே எடுக்கத் தேவையில்லை. புதியன எல்லாமே தேவையற்றவை என்ற அடிப்படையில் நம் ஆய்வைத் தொடரவேண்டியதில்லை. இன்னொன்று, உணவுகளில் இருபெரும் பிரிவுகளாக நாம் புரிந்து கொண்டிருக்கும் சைவம், அசைவம் குறித்து அறிந்து கொள்வது.
நவீனத்துக்கு உதாரணமாக, இன்று நாம் வீடுகளில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ்ஜை சொல்லலாம். இயற்கை மருத்துவர்கள் ‘ஃப்ரிட்ஜ்’ என்ற குளிர்சாதனப் பெட்டியின் பெயரைக் கேட்டவுடன் கோபமாகி விடுவார்கள். உணவுகளின் உயிர்ச்சத்தைக் கெடுக்கிறது என்பதும், ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் ஆற்றல் சிதைந்து விடுகிறது என்பதும் அவர்கள் கருத்து.இதில் உண்மையும், கற்பனையும் கலந்து இருக்கிறது.

ஒரு ஃப்ரிட்ஜை நாம் பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் நம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் ஃப்ரிட்ஜ் அதிகப் பயன்பாட்டில் இருக்கும்போது அதிலிருந்து வெளியேறும் வாயுக்களால் பாதிப்பும் அதிகம்தான்.நம் வீட்டில் ஒரு பீரோ இருக்கிறது என்றால், அதில் நாம் வைத்திருக்கும் பொருட்களின் மதிப்பைக் கணக்கிடுங்கள். பீரோவுக்குள் நாம் வைக்கும் பொருட்களின் மதிப்பைக் கூட்டிப் பார்த்தால், அது பீரோவின் மதிப்பை விட கூடுதலாக இருக்கும்... சரிதானே? பீரோவின் விலை ஆறாயிரம் என்றால், அதனுள் நாம் வைக்கும் உடைகள், நகைகள், முக்கியப் பொருட்களின் விலை பீரோவின் மதிப்பை விட உயர்ந்ததாகத்தான் இருக்கும்.

நாம் வீட்டில் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களுமே இப்படித்தான். ஆனால் இதே கணக்கை ஃப்ரிட்ஜிற்கு போட்டுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஃப்ரிட்ஜில் நாம் வைத்திருக்கும் இட்லி மாவின் விலை, பழங்களின் மதிப்பு, தண்ணீர் பாட்டிலின் மதிப்பு இவற்றைக் கூட்டினால் ஃப்ரிட்ஜின் விலையைத் தொடவே முடியாது.இதுகூட பரவாயில்லை... ஃப்ரிட்ஜைப் பயன்படுத்தும்போது அதற்காக நாம் செலவளிக்கும் மின்சாரக் கட்டணத்தைக் கணக்குப் பார்த்தால், அதுவே உள்ளே இருக்கும் பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்கும். மிக அவசியமான தேவை இருந்தால் ஃப்ரிட்ஜைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இந்தக் கணக்குகளில்... செலவு அதிகமாவதும், சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் ஃப்ரிட்ஜின் மிக முக்கிய வேலைகளில் ஒன்று.

அதே நேரம், ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்களின் ஆற்றல் அழிந்து விடும் என்பது உண்மையில்லை. இதை எப்படிப் புரிந்து கொள்வது? இயற்கையின் மூலம்தான் எந்த ஒன்றையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, கோழி முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறோம். இங்கு கோழி முட்டை என்பது நாம் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதற்கான முட்டை இல்லை. வீட்டில் கோழி வளர்க்கும்போது, அவை போடும் உயிருள்ள முட்டைகள்.

இந்த முட்டைகளை அடை வைத்தால் அதிலிருந்து குஞ்சுகள் பொறிக்கும். ஒரு கோழி தினசரி ஒரு முட்டை வீதம் இருபத்தோரு முட்டைகள் இடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கோழி இருபத்தோரு முட்டைகள் இடுகிற வரைக்கும் காத்திருந்து அதன் பிறகு அடை வைக்கிறோம். கோழியின் முதல் முட்டை சுமார் இருபத்தோரு நாட்கள் வரை வீட்டில் இருக்கிறது. இரண்டாவது முட்டை இருபது நாட்கள் இருக்கிறது. இப்படி அதிகபட்சமாக இருபத்தோரு நாட்கள் முட்டை கெடாமல் அதன் உயிர்த்தன்மையோடு இருக்கிறது.

இவற்றை அடை வைக்கும் போது ஒன்றிரண்டு முட்டைகள் உயிர்த்தன்மை கெட்டுப்போய் குஞ்சு பொறிப்பதில்லை. இவற்றை ‘கூமுட்டை’ என்று சொல்வார்கள். ‘உள்ளே விஷயம் இல்லாதவர்களை’ கூமுட்டை என்று திட்டுவது வழக்கம்தானே? சாதாரண சூழலில் இருபத்தோரு நாட்கள் கெடாமல் இருக்கும் முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், அதிக நாட்கள் முட்டைகளின் உயிர்த்தன்மை நீடிக்கிறது. அதே போல, வெளியில் சாதாரண சூழலில் வைக்கப்பட்ட முட்டைகளை விட ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட முட்டைகள் அதிக குஞ்சுகளைப் பொறிக்கிறது. அதாவது, ‘கூமுட்டைகள்’ குறைகிறது. ஃப்ரிட்ஜில் வைக்கப்படுகிற முட்டைகளின் உயிர்ச்சக்தி அழிந்திருந்தால் அவற்றிலிருந்து குஞ்சுகள் பொறிக்குமா?

இன்னொரு உதாரணமும் சொல்லலாம்... கறிவேப்பிலை செடியின் விதைகளை சாதாரண சூழலில் ஒரு வாரம்தான் வைத்திருக்க முடியும். ஒரு வாரத்திற்குப் பின் விதையின் உயிர்த்தன்மை தானாகவே குறைந்து, அதன் முளைப்புத்திறன் அழிந்து விடுகிறது. ஆனால், கறிவேப்பிலை விதைகளை பிரத்யேகமான குளிரூட்டப்பட்ட இடத்தில் பாதுகாப்பதன் மூலம் அதன் ஆயுள் கூடுகிறது. இவை ‘ப்ரிசர்வ் விதைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த விதைகளின் ஆயுள் எவ்வளவு தெரியுமா? பன்னிரண்டு ஆண்டுகள். ஒரு வாரத்தில் இயற்கையாக அழிந்து விடும் ஆற்றலை செயற்கைக் குளிர்ச்சி அழிக்கிறதா? நீட்டிக்கிறதா?

இயற்கையான அல்லது செயற்கையான குளிர்ச்சி உயிர்த்தன்மையை நீட்டிக்கிறது. விதைகளின் உள்ளே நடைபெறும் வளர்சிதை மாற்றத்தை வேகம் குறைக்கிறது. அதனால் விதையின் ஆற்றல் நீள்கிறது, ஃப்ரிட்ஜில் வைப்பதால் உணவுப் பொருட்களின் ஆற்றல் குறைவதோ, அழிவதோ இல்லை என்பதுதான் உண்மை.அப்படியென்றால், தோசை மாவிலிருந்து ஆரம்பித்து எல்லா உணவுகளையுமே ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாமா? அப்படி வைக்கக் கூடாது. ஃப்ரிட்ஜை எந்த உணவுகளுக்குப் பயன்படுத்தலாம்?
பீரோவுக்குள் நாம் வைக்கும் பொருட்களின் மதிப்பைக் கூட்டிப் பார்த்தால், அது பீரோவின் மதிப்பை விட கூடுதலாக இருக்கும்... இதே கணக்கை ஃப்ரிட்ஜிற்கு போட்டுப் பார்த்தால் ஏமாற்றமே
மிஞ்சும்.

வெளியில் சாதாரண சூழலில் வைக்கப்பட்ட முட்டைகளை விட ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட முட்டைகள் அதிக குஞ்சுகளைப் பொறிக்கிறது. அதாவது, ‘கூமுட்டைகள்’ குறைகிறது.
(தொடர்ந்து பேசுவோம்...)
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#8
கிச்சன் டூ கிளினிக் - 8


உணவு பற்றிய நம்முடைய புரிதலின்மையை உலகம் முழுவதும் கடை விரித்திருக்கும் உணவு நிறுவனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றன. சில உணவுகளை, சில உணவுப் பொருட்களை ‘ஆபத்தானவை’ என்ற பயத்தை நமக்குள் ஏற்படுத்தி, அவற்றுக்குப் பதிலாக புதிய வியாபாரத்தைத் துவங்குவது இந்த நிறுவனங்களின் உத்திகளில் ஒன்று.

இன்று நாம் சமைப்பதற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது மிக அரிதாகி விட்டது. ‘‘தேங்காயா? அது உடலில் கொலஸ்டிராலைச் சேர்க்கும். இதய நோயையும், ஹார்ட் அட்டாக்கையும் கொண்டு வந்து விடும்’’ என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நாம் பழகி விட்டோம். தேங்காய் எண்ணெய் பற்றி நாம் புரிந்து கொண்டாலே உணவு நிறுவனங்கள் நம்மிடம் எப்படி வியாபாரம் செய்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைவிட தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை.

உலகில் பெரும்பாலான நாடுகளில் மரபாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை அமெரிக்காவின் சோயா எண்ணெய்ப் பிரசாரம் பின்னுக்குத் தள்ளியது. சோயா எண்ணெய் வியாபாரத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா அதற்கு மானியம் வழங்கி, உலகம் முழுவதும் கொலஸ்டிரால் பயத்தை ஏற்படுத்தி ரீஃபைண்ட் ஆயிலை அறிமுகம் செய்தது. இப்போது நம் நாட்டில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் அமெரிக்கப் பிரசாரத்தைத் தொடர்ந்து செய்தபடி, தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

‘கொழுப்பு நீக்கப்படாத, நேரடியாக செக்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவதால் நம் உடலில் கொலஸ்டிரால் கூடி, அடைப்பு ஏற்பட்டு இதய நோய்கள் வந்து விடும்’ என்ற அச்சம் இக்காலத் தில் நமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம்மையெல்லாம் ரீஃபைண்ட் ஆயிலைப் பயன்படுத்தச் சொன்ன அமெரிக்கா, உலகம் முழுவதிலும் இருந்து தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.

ஏன் தெரியுமா? தேங்காய் எண்ணெயில் இருந்து மோனோலாரின் என்ற இயற்கையான சத்துப் பொருளைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால், நம்முடைய தேங்காய் எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த மோனோலாரின் என்ற பொருளிற்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றிருக்கிறது.அதென்ன மோனோலாரின்?

நம்முடைய உடலின் அடிப்படை எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ள விசேஷ சத்துப் பொருள்தான் லாரிக் அமிலம். இதன் இன்னொரு பெயர், மோனோலாரின். இந்த லாரிக் அமிலம் இடம் பெற்றுள்ள இரண்டே பொருட்கள்தான் உலகில் கிடைக்கின்றன. ஒன்று, தாய்ப்பால். இன்னொன்று, தேங்காய் எண்ணெய். தாய்ப்பாலின் முக்கியத்துவம் நமக்குத் தெரியும். ஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புச் சக்தியோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டுமானால் தாய்ப்பால் அவசியம். அதிலுள்ள விசேஷ சத்துப்பொருள் தேங்காயிலும் இருக்கிறது.

தேங்காய் எண்ணெயை மட்டுமல்ல... இயற்கையான தாவர எண்ணெய்களில் எதைப் பயன்படுத்துவதாலும் நம் உடலில் கொழுப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை. தாவர எண்ணெய்களில் இருக்கும் இயற்கையான கொழுப்பு, நம் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் தன்மையுள்ளது. இது சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் கூறும் செய்தி. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் கொலஸ்டிரால் அல்லது இதய நோய் ஏற்படுமா என்பதைத் தெரிந்து கொள்ள கேரளா நல்ல உதாரணம்.

கேரள மக்கள் தங்கள் எல்லா வகை உணவுகளிலும் தேங்காய் எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார்கள். கொலஸ்டிரால் வருவதாக இருந்தால், உலகிலேயே முதலில் அவர்களுக்குத்தான் வந்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இதயநோயால் அல்லது கொலஸ்டிராலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் கேரளாவின் பெயர் இல்லை. தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கையான தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால் கொலஸ்டிரால் வராது என்று நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் இன்னொரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் டாக்டர் பி.எம்.ஹெக்டே.

டாக்டர் ஹெக்டே ஆங்கில மருத்துவத்தின் இதய நோய்ப் பிரிவு சிறப்பு மருத்துவர். சிறந்த மருத்துவ சேவைக்காக பத்மபூஷண் விருது பெற்றவர். மருத்துவப் பேராசிரியர். மணிபால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய மருத்துவ விழிப்புணர்வுக் கல்வியை மருத்துவர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் ஏற்படுத்தி வருபவர்.

‘‘கொலஸ்டிராலுக்கும் இதய நோய்க்கும் சம்பந்தமே இல்லை. பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கூறும் பொய்களை கிளிப்பிள்ளைகளைப் போல திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மருத்துவர்கள்’’ என அதிரடியாகச் சொல்கிறார் ஹெக்டே. ‘‘கொலஸ்டிரால் குறைவு என்பது இதய நோய்க் குறைவு இல்லை. மாறாக, கொலஸ்டிரால் குறைவது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கவே செய்யும். மாரடைப்பிற்குக் காரணம் கொழுப்பு அடைப்பு (Arthro Sclerosis) அல்ல. சிறு உறை கட்டியே (Clot). இந்த உறை கட்டி ஏன் உண்டாகிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!’’

நாம் ரீஃபைண்ட் ஆயிலைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைக் காரணம், கொலஸ்டிரால் மற்றும் இதயநோய் பற்றிய பயம்தானே? இந்த இரண்டுமே இயற்கையான எண்ணெய்களைப் பயன்படுத்தினால் ஏற்படாது.

இயற்கையான தாவர எண்ணெய்களை அளவோடு பயன்படுத்துவது நமது ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்; எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தும். நம்முடைய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த முடியாமல் நோயின் பெயரால் அச்சத்தை ஏற்படுத்தி, ரீஃபைண்ட் ஆயிலை மார்க்கெட் செய்யும் தந்திரத்திற்கு இடம் கொடுத்தது எது தெரியுமா? நம்முடைய உணவு பற்றிய தெளிவின்மையும், புதிய உணவுப் பொருட்கள் மீதான ஆர்வமும்தான்.

நம்முடைய அன்றாடப் பயன்பாட்டு உணவுகளில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன? வாருங்கள் நம் கிச்சனுக்குப் போகலாம்... ஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புச் சக்தியோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டுமானால் தாய்ப்பால் அவசியம். அதிலுள்ள விசேஷ சத்துப்பொருள் தேங்காயிலும் இருக்கிறது.

(தொடர்ந்து பேசுவோம்...)
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#9
கிச்சன் to கிளினிக் - 9

நம்முடைய தினசரி வாழ்வில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? நாம் நேரடியாகக் கற்றுக்கொண்ட உண்மைகளின் அடிப்படையில் இதையெல்லாம் செய்வதில்லை. எப்போதும் பிறர் சொல்வதையே பின்பற்றி வருகிறோம். அறிவுரைகள் வழியாக நாம் அடைவதைப் பற்றி யோசித்துப் பார்க்காமல், அது உண்மையா என ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே பின்பற்றி விடுகிறோம்.

இதில் இரண்டு விதமான சிக்கல்கள் உருவாகின்றன. ஒன்று... மரபுரீதியாக முன்வைக்கப்படும் மருந்துகளை, அவை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் பயன்படுத்துவது. உதாரணமாக வாழைத்தண்டு பற்றிய புரிதலின்றி அதனை மருந்தாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று விரிவாகப் பார்த்தோம்.
இன்னொன்று... ‘நவீன வாழ்வில் இருக்கின்ற எல்லா அறிவியல் அம்சங்களுமே இயற்கைக்கு எதிரானவை’ என்கிற அச்சம். இந்த இரண்டிற்கும் இடையில் ஏற்படும் குழப்பங்களோடுதான் நம் ஒவ்வொரு நிமிடமும் நகர்கிறது.அப்படி முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டிய கருவியாக ஃபிரிட்ஜ் சொல்லப்படுகிறது. ஆனால், அதனுள் வைக்கப்படும் பொருட்களின் வளர்சிதை மாற்றங்கள் கட்டுப்படுத்தப்படுவதையும், அவற்றின் ஆயுள் கூடுவதையும் பார்த்தோம்.

ஆனால் இதை மட்டும் வைத்தே ‘ஃப்ரிட்ஜ் முழுமையாக நன்மை செய்யும் கருவி’ என்று முடிவு செய்துவிட வேண்டாம். எல்லா உணவுப் பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லை.
தோசை மாவு, இன்றைய சமையலில் மீந்துபோன பழைய உணவுகள்... இப்படிக் கையில் கிடைக்கிற பொருட்களை எல்லாம் ஃப்ரிட்ஜிற்குள் திணித்து விடாதீர்கள். காய்கறி, பழங்கள், முட்டை போன்ற உயிருள்ள பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

ஆனால், அவை உணவாக சமைக்கப்பட்ட பிறகு - அதாவது சமையலுக்குப் பின்பு ஃப்ரிட்ஜில் வைக்கப்படுவது நல்லதல்ல. கோடைக் காலத்தில் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக் குடிக்கலாம். ஆனால் உச்சகட்ட குளிர்ச்சியில் தண்ணீர் குடிப்பது உடலைப் பாதிக்கும். மிகக் குளிர்ந்த நீரை உங்களால் வாயில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும்?

பற்கள் கூச்சம் ஏற்பட்டு, நாக்கு குளிர்ச்சியால் நடுங்க ஆரம்பிக்கும். நம் உடலின் மிகக் கடினமான உறுப்பு என பற்களின் மீதுள்ள கவசத்தைத்தான் சொல்வார்கள். அப்படி பாதுகாப்பான பற்களே நடுங்கும் அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கும் தண்ணீரை, மென்திசுக்களால் ஆன குடலிற்குள் அனுப்பினால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!

நம் செரிமான உறுப்புகள் எல்லாமே இயல்பாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீரால் அது பாதிக்கப்பட்டு, இயல்புநிலை குலைந்துவிடும். எனவே, வாய் தாங்குகிற மிதமான குளிர்ச்சியில் தண்ணீர் குடிக்கலாம். அதே போலத்தான் சூடான உணவுகளைச் சாப்பிடுவதும்! ‘‘வாணலியிலிருந்து அப்படியே எடுத்து வச்சாகூட ‘சூடா இல்லை’ன்னு குறை சொல்வாரு என் கணவர்’’ என அங்கலாய்க்கும் பெண்களைப் பார்த்திருக்கலாம்.

அப்படி சூடாக சாப்பிடுவது பெருமை அல்ல, ஆபத்து! நாம் சாப்பிடும் உணவினுடைய வெப்பத்தின் அளவை வாய்தான் தீர்மானிக்கிறது. வழக்கமாக நாம் சாப்பிடும்போது வாய் பொறுக்காத சூட்டிலோ, குளிர்ச்சியிலோ எந்த உணவையும் உண்பதில்லை. வாய்தான் குடலுக்குள் செல்ல வேண்டியதை அளவெடுக்கும் கருவி.
உடலும் குடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் வாய் சொல்வதைக் கேளுங்கள்; பிறர் வாய் சொல்வதை அப்படியே கேட்காதீர்கள். பரிசீலனை செய்து முடிவெடுங்கள்... நான் சொல்வதையும் சேர்த்து!எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. நம்மால் தீமையைத் தவிர்க்க முடியும் என்றால், அதில் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

நாம் ஏற்கனவே மருந்துப் பட்டியலில் வாழைத்தண்டு குறித்துப் பார்த்தோம். அதைவிட சாதாரணமான விளக்கெண்ணெய் பற்றிப் பார்க்கலாம். ஒரு மருந்துப் பொருளை மட்டும் பார்த்து விட்டு, எல்லா மருந்துப் பொருட்களும் இப்படித்தான் என்று சொல்லக் கூடாதல்லவா?விளக்கெண்ணெயை எதற்குப் பயன்படுத்துவோம்? ‘‘விளக்கு எரிக்க’’ என்று சொன்னால், நீங்கள் ஆண்ட்ராய்டு காலத்து ஆள் என்று கண்டுபிடித்து விடலாம். விளக்கெண்ணெயை சமையலில் பயன்படுத்துவார்கள்.

மலச்சிக்கல் ஏற்பட்டால், வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிக்குமாறு சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அப்படி விளக்கெண்ணெய் சாப்பிடும்போது மலக்குடலில் நீர்ச்சத்து வற்றி, தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற உதவியாக இருக்கும். அது மட்டுமல்ல, மலக்குடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அளித்து, அது மறுபடியும் இயல்பிற்குத் திரும்ப விளக்கெண்ணெய் உதவுகிறது.

விளக்கெண்ணெய் சாதாரணப் பயன்பாட்டில் உள்ள ஒரு உணவுப்பொருள்தான். ஆனால், மலச்சிக்கல் ஏற்பட்ட நபருக்கு அவருடைய உடலின் தன்மை பற்றி அறியாமல் பொத்தாம் பொதுவாக இதைப் பரிந்துரைத்தால் அது தீமை செய்யவும் கூடும். சாதாரண விளக்கெண்ணெய் அப்படி என்னதான் தீமை செய்து விடும்?
உடல்நிலையின் அடிப்படையில் வெப்பம் மிகுந்த உடல், குளிர்ச்சி மிகுந்த உடல் என்று இரு வகைகளாக மனிதர்கள் இருக்கிறார்கள். அதே போல உடலில் தோன்றும் நோய்களிலும் வெப்பம் மிகுந்து ஏற்படும் நோய்கள், குளிர்ச்சி மிகுந்து ஏற்படும் நோய்கள் என இருக்கின்றன. இது இரண்டையும் புரிந்து கொண்டு, நோயாளியின் உடலில் சமநிலை ஏற்படுத்துவதற்காக சித்த மருத்துவர்கள் விளக்கெண்ணெயைப் பரிந்துரைப்பார்கள்.

ஆனால் உடலின் பஞ்சபூதங்கள் பற்றியோ, அவற்றின் சமநிலை பற்றியோ நமக்குத் தெரியாது. நோயாளியின் உடல்நிலையில் குளிர்ச்சி கூடுதலா, வெப்பம் கூடுதலா என்று எதைப் பற்றியும் கவலை இல்லாமல் ஒரு மருத்துவர் போல நாம் விளக்கெண்ணெயைப் பரிந்துரைத்தால் என்ன ஆகும்?உதாரணமாக, மூச்சிரைப்பு உள்ள ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட மலச்சிக்கலைப் போக்குவதற்காக விளக்கெண்ணெயைப் பரிந்துரைத்தால் அவர் உடலின் குளிர்ச்சித்தன்மை கூடுதலாகி, மூச்சிரைப்பு அதிகமாகி விடலாம்.

திடீர் வலிப்பு ஏற்படலாம். விளக்கெண்ணெயைப் பற்றி பயமுறுத்துவதற்காக நாம் இங்கு இதைப் பேசவில்லை. மாறாக, ஒரு சாதாரணப் பொருளை நம் உணவின் தேவை அடிப்படையில் பயன்படுத்தினால், அது உணவு. பிறரின் பரிந்துரை அடிப்படையில் பசி இல்லாமல் நோய்க்காகப் பயன்படுத்தினால் அது, மருந்து.
ஒரு பொருளை மருந்தாகப் பயன்படுத்தும்போது அப்பொருளைப் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் முழுமையான புரிதல் இல்லாமல் பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேலும் சிக்கலாக்கும். மருந்து பற்றியும், உடல் பற்றியும் அறிந்த ஒரு சித்த மருத்துவர் ஒவ்வொரு நோயாளியின் தனித்தனியான உடல்நிலையைப் பொறுத்து மருந்துகளைப் பரிந்துரைப்பதற்கும், நாம் சும்மா போகிற போக்கில் ஒரு ஐடியாவில் பரிந்துரைப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

இயற்கையான எந்த ஒரு மருந்தையும் முறையாகப் பயன்படுத்தினால் ஆபத்து ஒன்றுமில்லை. முறையற்றுப் பயன்படுத்தும்போது அது ஆபத்து மிகுந்ததாக மாறுகிறது.இப்போது இரண்டாவது விஷயத்திற்கு வரலாம். உணவில் சிறந்த உணவு எது? சைவமா? அசைவமா? எது உடலிற்கும், அதன் ஆரோக்கியத்திற்கும் உகந்தது?

ஒரு மருத்துவர்போல நாம் விளக்கெண்ணெயைப் பரிந்துரைத்தால் என்ன ஆகும்?
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,745
Likes
2,594
Location
Bangalore
#10
கிச்சன் to கிளினிக் - 10

ஆரோக்கியம் என்ற அடிப்படையில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் கலந்துள்ள பழக்கவழக்கங்களையும், அவற்றின் வகைகளையும் ஆராய்ந்து வருகிறோம். ‘உலகில் சிறந்த உணவு எது’ என்பது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ‘நம் உடலிற்குத் தகுந்த உணவு எது’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். ‘பழமைதான் உன்னதமானது’ என்ற நம்பிக்கை யில் இறுக்கமடைந்த உணவுக் கொள்கைகளை அப்படியே பின்பற்றவில்லை. ‘சத்துக்கள் பகுத்தறியப்பட்ட புதுமைதான் ஆரோக்கியமானது’ என ஏற்கவில்லை; ‘நவீனம் எல்லாமே நல்லதில்லை’ என நிராகரிக்கவும் இல்லை. ‘எல்லா காலத்திற்குமான ஆரோக்கிய உணவுகள் எவை?’ என்பதையே நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் உணவு விவாதமான ‘சைவமா? அசைவமா? எது ஆரோக்கியத்திற்கான உணவு’ என்பது பற்றியும் நாம் பேசலாம்.சைவம் - அசைவம் என்ற இரு வார்த்தைகளுக்கு இடையிலேயே ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. தமிழில் நீதி - அநீதி, தர்மம் - அதர்மம் போன்ற சொற்கள் ஒரு உண்மையைப் புலப்படுத்துகின்றன. நீதி என்ற சொல்லில் ‘அ’ சேர்க்கும்போது நேரெதிரான சொல்லாக மாறிப்போகிறது.

அப்படித்தான் சைவம் என்ற உணவு முறைக்கு எதிரான ஒன்றைக் குறிப்பதற்கு அசைவம் என்ற சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இயல்பாக சொற்களில் இருக்கும் இந்த எதிர்த்தன்மையை நாம் கடந்து செல்ல வேண்டுமானால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும். இப்போது உணவு முறைக்குள் வருவோம்.

‘‘மனிதன் அடிப்படையில் ஒரு தாவர உண்ணிதான். தாவரங்களில் உள்ள சத்துக்களைச் செரிப்பதற்காகத்தான் சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கிற இடத்தில் குடல்வால் இருக்கிறது’’ என்று வாதிடுவார்கள் சைவப் பிரியர்கள். ‘‘கற்காலத்திலேயே வேட்டையாடி உணவு உண்ணும் முறைதான் மனிதர்கள் மத்தியில் இருந்தது. சமையல் என ஒரு கலையைக் கற்பதற்கு முன்பிருந்தே மனிதன் மாமிசத்தைப் புசித்தே காடுகளில் வாழ்ந்தான். எனவே மனிதன் பிறவியிலேயே அசைவன்தான்’’ என்று சொல்கிறவர்கள் அசைவப் பிரியர்கள்.

அசைவம் உண்ணும் விலங்கினங்களின் சிறுகுடல் மிகவும் சிறியது. சைவம் உண்ணும் விலங்குகளின் குடல் மிகவும் நீளமானது. மனிதனின் சிறுகுடல் நீளமானது என்பதால், உயிரியல் ரீதியாக மனிதர்கள் இயல்பிலேயே சைவம் உண்கிற அமைப்போடே பிறந்திருக்கிறார்கள் என்பது ஒரு பக்கத்தினரின் வாதம்.

விலங்குகளில் அசைவம் சாப்பிடுகிற விலங்குகளுக்கு மட்டுமே வெட்டும் பற்கள் இருக்கின்றன. சைவம் உண்ணும் விலங்குகளுக்கு தட்டையான சாதாரணப் பற்கள் மட்டுமே இருக்கும். மனிதர்களுக்கு வெட்டும் பற்கள் இருப்பதால், மனிதர்கள் சைவர்கள் அல்ல என்பது இன்னொரு தரப்பு.
ஒவ்வொரு தரப்பினரின் வாதத்தைக் கேட்கும்போதும் ‘சைவம்தான் சரி’ என்றும், ‘அசைவம்தான் சரி’ என்றும் தீர்க்கமாக நம்ப முடியும். தகவல்கள் குவிந்துவிட்ட இந்த டெக்னாலஜி யுகத்தின் பிரச்னையே இதுதான்! எல்லாவற்றுக்குமே வலுவான ஆதாரங்களைத் தேடித் தோண்டி எடுத்துவிடலாம்.

ஆனால், உடலுக்குப் பொருந்துகிற உணவில் சைவம், அசைவம் என்ற பிரிவுகளே இல்லை என்பதுதான் நிஜம். மரபுவழி அறிவியல் அழுத்தமாக முன்வைக்கிற உண்மைகளில் ஒன்று, தனித்துவ தத்துவம். ஒருவருக்குப் பொருந்துகிற உணவு, இன்னொருவருக்குப் பொருந்தாது. ஒருவருக்குப் பிடிக்கிற உணவு, இன்னொருவருக்குப் பிடிக்காது. எனவே எல்லாரும் அவரவர் விருப்பு வெறுப்பு அடிப்படையிலும், பசி, ருசி தேவைகளின் அடிப்படையிலும் அவரவருக்குப் பிடித்த உணவுகளை தனித்தனியாகத் தேர்வு செய்வதே சரி.

மிக முக்கியமான விஷயம்... அடுத்தவர் உணவுத் தேர்வில் நாம் மூக்கை நுழைப்பது. நாம் பிறந்ததில் இருந்து சிலவகை உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதோ, நம் உடல் என்ன உணவை சுலபமாக செரிக்கும் என்பதோ நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இதில் இன்னொருவரின் பொத்தாம் பொதுவான ஆலோசனைகள் எந்த விதத்திலும் பயன்படாது.
‘‘அசைவம் சாப்பிட்டால்தான் சத்து கிடைக்கும்’’ என்று ஒருவர் சொல்வதை நம்பி உங்களுக்குப் பிடிக்காத உணவைச் சாப்பிடுவதும், ‘‘அசைவம் சாப்பிட்டால் கொலஸ்டிரால் வந்து விடும்... எனவே நிறுத்தி விடுங்கள்’’ என்ற பேச்சை நம்பி உங்களுக்குப் பிடித்த அசைவ உணவுகளை நிறுத்தி விடுவதும் சரியான முடிவில்லை.

மாட்டுக்குப் புல், முயலுக்குக் கேரட், பூனைக்குப் பால் என்பது போல உலகின் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துகிற மாதிரியான ஒரு முழுமையான உணவுப் பரிந்துரையை உருவாக்க முடியாது. ஏனெனில், மனிதன் தனித்தன்மையானவன். ஒவ்வொரு தனித்தனி மனிதனுடைய உணவுத்தேவையும் தனித்தனியானவை. இதை எப்படிப் புரிந்து கொள்வது?
எல்லா மனிதர்களுக்கும் சராசரிக் கணக்கின் அடிப்படையில் நாம் ‘வயிறு’ என்று செல்லமாக அழைக்கும் இரைப்பையின் அளவு ஒன்றுதான். வயது வந்த ஒரு மனிதனின் இரைப்பை சராசரியாக 960 மி.லி. கொள்ளளவைக் கொண்டது. ஆனால் நாம் சாப்பிடுகிற அளவு ஒரே மாதிரியாகவா இருக்கிறது? ஒரே வீட்டிலேயே, ஒரே வயிற்றில் பிறந்த இரண்டு நபர்களின் உணவின் அளவு எவ்வளவு தூரம் மாறுபடுகிறது!

இரண்டு நபர்களைக் கூட விடுங்கள். உங்களுடைய உணவின் அளவே நேரத்திற்கு நேரம் மாறுபடுகிறதா, இல்லையா? நமக்கு இருந்த பசியிலும், இட்லியின் ருசியிலும் நேற்று காலையில் ஆறு இட்லிகளை மணக்க மணக்க உள்ளே தள்ளியிருப்போம். இன்று காலையில் பசியற்று இருக்கும்போது அதே அளவைச் சாப்பிட முடியுமா என்ன? அதே போல நம் ஒவ்வொரு நேரத்தின் உணவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வொன்றும் தனித்தனி அளவுகளில் இருக்கும்.

ஒரே நபரின் உணவு அளவிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும்போது, இரு நபர்களுக்குப் பொது அளவு இருக்க முடியுமா? உலகத்தின் மனிதர்கள் எல்லாருக்கும் ஒரு அளவு இருக்க முடியுமா? அப்படித்தான் உணவுத்தேவையும் நபருக்கு நபர் மாறுபடுகிறது.உங்களுடைய தனித்த விருப்பத்தின் அடிப்படையில் சைவமோ, அசைவமோ... எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். உங்கள் உணவுத்தட்டில் இன்னொருவரின் கையை நுழைக்க விடாதீர்கள்.

அதுபோலவே இன்னொருவர் உணவுத்தட்டில் உங்கள் கையையும் நுழைக்காதீர்கள். அது அவரவர் உடல், மன ஆரோக்கியத்தோடு தொடர்புடையது.அதெல்லாம் சரிதான்... தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு வேறுதான். ஆனால் ஆரோக்கியத்தின் அடிப்படையில் எது சரியான உணவு என்பதை எப்படி முடிவு செய்வது? அசைவம் சாப்பிட்டால் நிறைய நோய்கள் வரும் என்று சொல்கிறார்களே? உணவுகள் மனிதர்களின் குணங்களையே கூட மாற்றும் தன்மை கொண்டவை என்றும் சொல்கிறார்களே? வாருங்கள்... அதையும் அடுத்து பார்த்துவிடலாம்!ஒருவருக்குப் பொருந்துகிற உணவு, இன்னொருவருக்குப் பொருந்தாது. ஒருவருக்குப் பிடிக்கிற உணவு, இன்னொருவருக்குப் பிடிக்காது. உணவில் இதுதான் தனித்துவ தத்துவம்!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.