Let children enjoy holidays - பிள்ளைகளின் விடுமுறையை அபகரிக்காத&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பிள்ளைகளின் விடுமுறையை அபகரிக்காதீர்கள்!

கோடை விடுமுறை விட்டாயிற்று. 10 மாதங்களாக பள்ளியிலும், டியூஷன் சென்டர்களிலும், வீட்டுப் பாடங்களிலும், பள்ளி வாகனங்களிலும் வதங்கிய பிள்ளைகள் கொஞ்சம் மூச்சு விடும் காலம். அரைத் தூக்கத்தில் எழுந்து அவசரக் கோலத்தில் கிளம்புகிற அவதிக்கு தற்காலிக ஓய்வு. இதையும் கூட பிள்ளைகளுக்குத் தருகிறோமா என்பதுதான் பிரதான கேள்வி. ஆண்டுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே தனியார் பள்ளிகள் பெரிய ஓலைகளை பெற்றோருக்கு அனுப்பி வைத்து விட்டன.

எல்கேஜியில் இருந்து 8ம் வகுப்பு வரைக்கும் வயது வாரியாக பயிற்சிகள். சம்மர் கேம்ப்களை மட்டுமே தனியாக கடை விரித்துக்கொண்டு ஏகப்பட்ட நிறுவனங்கள்... ஒரு பயிற்சிக்கு ஒரு பயிற்சி இலவசம், கட்டணச் சலுகை, பிள்ளைகளை பயிற்சியில் சேர்த்தால் பெற்றோருக்கு இலவசப் பயிற்சி என விதவிதமான விளம்பரங்கள்... மயங்கிப் போகிறார்கள் பெற்றோர்!

ஏன் விடுமுறையை வீணாக்க வேண்டும்? ஒன்றுக்கு நான்காக பயிற்சிகளை முடித்து வைத்துவிட்டால் எதிர்காலத்தில் உதவும்தானே? இப்படியாக, சிறிதும் குற்ற உணர்வின்றி பெரும் தொகையை கொட்டி பிள்ளைகளை அக்கறையாக சேர்த்து விடுகிறார்கள் பெற்றோர். ‘இரண்டே மாதத்தில் ஒரு விஷயத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியுமா’ என்ற புரிதல் கூட இல்லாமல்... ‘இதுவும் மற்றொரு நாளே’ என்ற எண்ணத்தில் பிள்ளைகள் மீண்டும் வேறுவிதமான வகுப்பறைக்குள் நுழைகிறார்கள்.

சில தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை விடுவதே கிடையாது. பெயருக்கு நான்கைந்து நாட்கள் விடுமுறை விட்டுவிட்டு சிறப்பு வகுப்புகளைத் தொடங்கி விடுகிறார்கள்.பத்தாண்டுகளுக்கு முன்பு பிள்ளைகளுக்கு இருந்த களம் வேறு. ‘கோடை விடுமுறை’ என்பது சுதந்திர காலம். கட்டற்று திரிவார்கள். 10 மாதக் கல்வி கற்றுத் தராத விஷயங்களை வெற்று வெளியில் கற்றுக் கொள்வார்கள். ஆண்டுத்தேர்வு முடிவதற்கு முன்பே பயணங்களை பட்டியலிட்டு விடுவார்கள். தாத்தா வீடு, பாட்டி வீடு, மாமா வீடு என்று ஊர் ஊராக உறவினர்களோடு கொண்டாடிக் களிப்பார்கள். படிப்பு, பள்ளிக்கூடம் எதுவும் அவர்களின் நினைவில் இருக்காது. அடுத்த ஆண்டுக்குரிய மொத்த புத்துணர்வையும் அந்த விடுமுறை அவர்களுக்கு வாரி வழங்கியிருக்கும். இந்த அனுபவம் இனி குழந்தைகளுக்கு வாய்க்கப் போவதில்லை... அரசும் விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்த முடிவு செய்திருக்கிறது.

நமது கல்விமுறை ஆங்கிலேயர் உருவாக்கி வைத்தது. அவர்கள் நம் மூதாதையருக்கு எதைக் கற்றுத் தந்தார்களோ அதைத்தான், அதே முறையில் நம் பிள்ளைகளும் கற்கிறார்கள். ஆங்கிலேயர் இன்று எவ்வளவோ நவீனமடைந்து விட்டார்கள். குழந்தைகளின் இயல்பறிந்து, நிலத்தின் தட்பவெப்பமறிந்து, உளவியல் அறிந்து அவர்களின் கல்வித் திட்டம் மாறிவிட்டது. சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளைக் கடந்து விட்ட பிறகும் நாம் எதையும் மாற்றவில்லை. ஆங்கிலேயர்கள் மைக்கேல்சன் ஹாலிடே என்று கொண்டாடியதைத்தான் நாம் கோடை விடுமுறையாக கொண்டாடுகிறோம். கிறித்தவ தத்துவவியலாளரும் அதிகாரியுமான மைக்கேல்சன், கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் மாதம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தி யாவில் அந்த விடுமுறையை மே, ஜூனுக்கு மாற்றினார்கள்.

இம் மாதங்களில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அக்னி தகிக்கும். வெப்பத்தோடு சேர்த்து நோய்களையும் கொண்டு வரும் கோடை. பாவம் குழந்தைகள்... அவர்களுக்கு ஓய்வளித்து ஆரோக்கியத்தைக் காத்து உற்சாகமூட்டுவதற்காகவே ஆங்கிலேயர்கள் கோடை விடுமுறையை கொண்டு வந்தார்கள். ஆண்டுக்கு ஆண்டு வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் தகிக்கும் வெயில், இந்தாண்டு மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டது. விடுமுறையின் நோக்கம் அறியாமல், அக்காலத்திலும் பயிற்சி, வகுப்பு என குழந்தைகளை துன்புறுத்துகிறார்கள்.

“பத்து மாதங்கள் இடைவெளி இல்லாமல் குழந்தைகள் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். வகுப்பறை, பள்ளி வாகனம், பாடப்புத்தகம், வீட்டுப்பாடம் என்று எந்த மாற்றமும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. ஒரு வகுப்பு முடித்து இன்னொரு வகுப்புக்கு செல்லும் முன்பாக அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியான வகுப்பறைச் சூழலில் இருந்து அவர்கள் விடுபட்டு உற்சாகமான மனநிலைக்கு அவர்கள் வரவேண்டும். படிப்புக்கும் வகுப்பறைக்கும் தொடர்பில்லாத ஒரு சூழலில் கோடை விடுமுறை அமைய வேண்டும். அந்த இடைவெளியில் அவர்களுக்குப் பிடித்ததை அவர்களே கற்றுக்கொள்வார்கள்.

அந்த வாய்ப்பை அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். இல்லாவிட்டால் உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்... என்கிறார் கல்வியாளரும், குழந்தைகளுக்காக பல்வேறு நூல்களை எழுதியவருமான ஆயிஷா நடராஜன். “குடும்பங்கள் சிதறிவிட்டன. பெரும்பாலான குடும்பங்களில் வயதானவர்களே இல்லை. எல்லாரும் பிரிந்து வாழும் சூழல். கோடை விடுமுறையில் பிள்ளைகளை தாத்தா, பாட்டிகளிடம் விடலாம். அவர்கள் கற்றுத்தருகிற பாடத்தை எந்தப் பாடப் புத்தகமும் கற்றுத்தருவதில்லை. பாடப்புத்தகத்தைத் தாண்டி வெளியுலகத்தை குழந்தைகள் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாய்ப்புகளை பெற்றோர் உருவாக்கித்தர வேண்டும். உறவுகளை வீட்டுக்கு அழைக்கலாம். விருந்து வைக்கலாம். பிள்ளைகளை சந்தோஷப்படுத்த இதைவிட வேறு எதுவும் தேவையில்லை. சுற்றுலா அழைத்துச் செல்ல லாம். கிராமங்களுக்கு கூட்டிச் செல்லலாம்.

பெரும்பாலான பெற்றோர் பள்ளிக்கூடத்தில் மட்டும்தான் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அதில் துளியும் உண்மையில்லை. வீடு, தெரு, சமூகம், நட்பு, உறவுகள் என அனைத்திலும் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள். எவ்வளவோ விஷயங்களை பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. எப்படி சாப்பிட வேண்டும், எப்படி பழக வேண்டும், எப்படி உறவுகளை நேசிக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொடுக்கலாம். துணிகளை வெளுக்கக் கற்றுக் கொடுக்கலாம். சமையல் கற்றுக் கொடுக்கலாம். வாகனங்களை பழுது நீக்கக் கற்றுத் தரலாம்.

நிறைய திருவிழாக்கள் நடக்கிற நேரம் இது. பிள்ளைகளை திருவிழாக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். பண்பாடு, கலை, வாழ்க்கை முறை என அனைத்தையும் திருவிழாக்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும். குழந்தைகளைப் புரிந்து கொள்ளாமல், கல்வியையும் புரிந்து கொள்ளாமல் அவர்களை மீண்டும் மீண்டும் வகுப்பறைக்குள் முடக்குவது மிகப்பெரும் சர்வாதி காரம். அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்... என்கிற நடராஜன், குழந்தைகளுக்கும் சில ஆலோசனைகளை முன் வைக்கிறார்.

“விடுமுறை என்றாலே தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் கேம், மொபைல் கேம் என்று பிள்ளைகள் பழகி வைத்திருக்கிறார்கள். இது நல்லதல்ல. தொலைக்காட்சியை போட்டுவிட்டு ஓரிடத்தில் உக்கார்ந்து கொள்வது, நொறுக்குத் தீனிகளாக தின்று கொண்டிருப்பது, எல்லாம் இருக்கிற இடத்துக்கு வர வேண்டும். இப்படி விடுமுறையைக் கழித்தால் மனதுக்கு மட்டுமல்ல... உடலுக்கும் கேடு. விளையாடுங்கள். சைக்கிள் ஓட்டுங்கள். நண்பர்களோடு கூடியிருங்கள். விதையூன்றுங்கள். மரம் நடுங்கள். பூங்காக்களில் சுற்றுங்கள். வெயிலில் நனையுங்கள். வெளியில் எதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் கற்றுக் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் ஏராளமான நூலகங்கள் பயன்படுத்தப்படாமலே கிடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் புரட்டப்படாமலே கிடக்கின்றன. குழந்தைகளின் அறிவை மேம்படுத்துகிற ஏராளமான குழந்தை இலக்கியங்கள் தமிழில் வந்துள்ளன. குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்லலாம். விருப்பப்பட்ட நூல்களை எடுத்துப் படிக்கச் சொல்லலாம். வாசிப்பு ஏற்படுத்துகிற விசாலமான அனுபவத்தை வேறெதுவும் தராது. நூலகம் என்கிற ஒரே இடத்தில் உலகம் குவிந்திருக்கிறது. குழந்தைகளுக்கு வாசிப்பை பழக்கப்படுத்த இந்த கோடையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்... என்கிறார் நடராஜன்.

குழந்தைகளின் இயல்பே கற்றுக்கொள்வது தான். பெற்றோரிடம்தான் குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரை விட சிறந்த ஆசிரியர்கள் யாரும் இல்லை. தந்தையே குழந்தையின் முதன்மையான முன்மாதிரி. தாயே குழந்தையின் முதல் ஆசிரியை. இசையில் ஒரு குழந்தைக்கு ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அக்குழந்தையை இசைப் பயிற்சியில் சேர்த்து விடுவதில் தவறில்லை. ஓவியத்தில் ஆர்வமுடைய குழந்தைக்கு ஓவியப் பயிற்சி வழங்குவதில் தவறில்லை. ஆனால், அதெல்லாம் குழந்தையின் சுதந்திரத்தை முடக்காமல் கற்பனைத்திறனை வளர்க்கவும், ஆர்வத்தைத் தூண்டவும் பயன்பட வேண்டும்.

குழந்தைக்கு எதில் ஆர்வம் என்றே புரிந்து கொள்ளாமல் பெற்றோருக்கு எதிலெல்லாம் விருப்பமோ அதைக் கற்றுக்கொடுக்க முனைவதில்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. “சம்மர் கேம்ப்கள் இன்று வணிகமயமாகி விட்டன. யார் நடத்துகிறார்கள், குறித்த துறையில் அவர்களின் முன் அனுபவம் என்ன, குழந்தைகளுக்கு அங்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். சம்மர் கேம்ப்களுக்கு குழந்தைகளை அனுப்புவது தவறு என்று சொல்லவில்லை. அது குழந்தைகளை மீண்டும் வகுப்பறை மிரட்சியில் தள்ளிவிடக்கூடாது என்பதுதான் என் கவலை...என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி.

“சம்மர் கேம்ப் குழந்தை விரும்புவதாக இருக்க வேண்டும். கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்க வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் பயனளிக்க வேண்டும். சிந்திக்கும் தன்மையை மேம்படுத்த வேண்டும். பகுத்தறியும் தன்மையை வளர்க்க வேண்டும். ஒரு பயிற்சியை தேர்ந்தெடுப்பதற்கு முன், அது வயதுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கேம்ப் நடக்கும் இடம் தொலைதூரத்தில் இருக்கக்கூடாது. பயிற்சி குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள், பயிற்சிக்குப் போதிய வசதிகள் இருக்கின்றனவா, தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் இருக்கிறார்களா, பாதுகாப்பான சூழல் இருக்கிறதா என்பதெல்லாம் முக்கியம். மொத்தமாக நான்கைந்து பயிற்சிகளில் குழந்தைகளை தள்ளுவதும் ஆபத்து... என்கிறார் ஜெயந்தினி.

சம்மர் கேம்ப்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்று பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். சில வருடங்களுக்கு முன் கோவையில் நீச்சல் பயிற்சிக்குச் சென்ற ஒரு சிறுவன் நீரில் மூழ்கி பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தான். சம்மர் கேம்ப்கள் நடத்த எவரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை என்ற நிலைதான் இருக்கிறது. சில கேம்ப்கள் கேளிக்கை விடுதிகளைப் போல நடத்தப்படுகின்றன. சில கேம்ப்களில், முற்றிலும் புதியவர்களை குறைந்த சம்பளத்துக்கு தேர்வு செய்து, சில வாரங்கள் பயிற்சி கொடுத்து பயிற்சியாளர்களாக நியமிக்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைகளைக் கையாளவும் தெரியாது. முறையாக பயிற்சி அளிக்கவும் தெரியாது.

‘பிள்ளைகளை கேம்ப்பில் சேர்த்து விடுவதோடு தங்கள் கடமை தீர்ந்ததாக பெற்றோர் நினைக்கிறார்கள். பெற்றோருக்கு இதில் நிறைய பொறுப்பு உண்டு. சம்மர் கேம்ப்களில் சேர்ப்பதற்கு முன் அங்கு சென்று ஏற்பாடுகளைப் பார்க்க வேண்டும். பயிற்சியாளர்கள் தகுதி வாய்ந்தவர்களா என்பதை அறிந்து கொண்ட பிறகே சேர்க்க வேண்டும்’ என்கிறார்கள் குழந்தை உரிமை ஆர்வலர்கள்.

ஒரு காலத்தில் கல்வியே கொண்டாட்டமாக இருந்தது. இன்று கல்வியும் வகுப்பறையும் இருண்மை நிறைந்த இடமாகி விட்டன. கோடை விடுமுறையை மட்டுமாவது குழந்தைகளின் விருப்பத்துக்கு விடலாம். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை குழந்தையின் மேல் சுமத்தாமல் அதன் விருப்பத்துக்கு மதிப்புத் தரலாம். எந்த ஒரு விஷயத்தையும் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் முழுமையாக கற்றுக் கொள்ள முடியாது. கோடை விடுமுறை என்பது குழந்தைகள் சமூகத்துடன் ஊடாடுவதற்கும் இதுநாள் வரை கற்றதை சமூகத்தோடு இணைத்துப் பார்ப்பதற்கும் தரப்படுகிற வாய்ப்பு. அதை நிறைவு செய்தால்தான் வாழ்க்கையையும் கல்வியையும் ஒன்றோடு ஒன்று இணைக்க முடியும்.

அம்மா சுடச்சுட சமைத்துப் போடுகிற சாதம், அப்பா உடலணைத்து கற்றுத்தருகிற நீச்சல், நண்பன் அன்போடு கற்றுத்தருகிற விளையாட்டு, அக்கா பரிவோடு கற்றுத்தருகிற கணிதம், தாத்தா ஆசையாக சொல்லித் தருகிற கதைகள், மாமா கரம் கோர்த்து அழைத்துச் செல்கிற சுற்றுலா... இந்த அனுபவங்களை எந்த சம்மர் கேம்ப்களும் குழந்தைகளுக்குத் தராது. கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளிடம் கொடுங்கள். வழக்கம் போல நீங்களே அபகரித்துக் கொள்ளாதீர்கள்.

கோடையை குதூகலமாக்க சுற்றுலா செல்லுங்கள்

குளுமையான பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். புதியப் புதிய நிலப்பரப்புகளையும் பசுமைப்பரப்புகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் குளிர்ந்து போவார்கள். புராதன தலங்கள், சரித்திரச் சுவடுகள் நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இதுநாள் வரை ஏட்டில் படித்ததை எல்லாம் நேரில் காட்டுங்கள்.

கிராமங்களை தரிசியுங்கள்

அரிசி எந்த மாவில் செய்யப்படுகிறது என்று கேள்வி கேட்கும் அளவுக்கு கிராமத்தோடும் விவசாயத்தோடும் தொடர்பு அறுந்த நிலையில் வளர்கிறார்கள் பெருநகரத்துப் பிள்ளைகள். ஆண்டு முழுவதும் நகரத்து வெம்மைகளில் வதங்கிக் கிடக்கும் அவர்களை கிராமங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மண்ணைத் தொட்டாலே அசுத்தம் என்று பதறாதீர்கள். மண்ணுக்கும் மனிதர்களுக்குமான ஆழ்ந்த உறவை அவர்கள் அனுபவிக்கட்டும். ஆசைதீர விளையாட விடுங்கள். உறவினர்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்களோடு கலந்து உறவாட விடுங்கள். வயற்காடுகள், தோட்டங்கள் அறிமுகமாகட்டும். கோயில் திருவிழாக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மண்பாண்டத் தயாரிப்பு, கூடை முடைதல் போன்ற கிராமியத் தொழில்களையும் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். நெல் எப்படி அரிசியாகிறது, கரும்பு எப்படி வெல்லமாகிறது என்பதையெல்லாம் அவர்கள் பார்த்துத் தெளியட்டும்.

வனச் சுற்றுலா செல்லுங்கள்


வனம் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஏகப்பட்ட படிப்பினைகளை பரப்பி வைத்துக் கொண்டிருக்கிறது. நஞ்சை வடிகட்டி சுத்தமான காற்றை அவை சுரந்து கொண்டே இருக்கின்றன. நகரத்து நச்சுக் காற்றில் இருந்து குழந்தைகளுக்கு விடுதலை கொடுங்கள். அந்த குளுமையையும் பசுமையையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். மரங்களை வகைப் பிரித்துக் காட்டுங்கள். வனத்துக்கும் மனிதர்களுக்குமான பந்தத்தை வனமே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும். கையில் ஒரு கேமராவைத் தந்துவிட்டால் காலம் முழுமைக்கும் அவர்களுக்கு பயணம் மறக்காது.

உறவுகளோடு ஒன்றியிருங்கள்


உறவினர், நண்பர்களை வீட்டுக்கு அழையுங்கள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுங்கள். பேசிச் சிரியுங்கள். பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உறவின் மேன்மையை உங்கள் அனுபவத்தின் வாயிலாக உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள். குழந்தைகள் உற்சாகமடைவார்கள். அதேபோல குழந்தைகளை உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வையுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு கலந்து உறவாட விடுங்கள். அது எதிர்காலத்துக்கு நல்லது.

வாசிப்பை பழகுங்கள்


குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். செய்தித்தாள்களை வாசிக்கப் பழகுங்கள். வாசிப்பு அவர்களுக்கு புதிய கதவுகளை திறந்து விடும். கற்பனைத் திறனையும் ஆக்க சக்தியையும் வளர்க்கும்.

சேவையும் செய்யலாம்!

வாழ்க்கை குறுகிக்கொண்டே போகிறது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவே யாருக்கும் நேரமில்லை. குழந்தைகளுக்கு மற்றவர்களைப் பற்றி கவலைப்படக் கற்றுக்கொடுங்கள். தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளில் இணைந்து சேவையாற்றலாம். நம்மைவிட கீழிருக்கும் மக்களுக்காக சின்னச்சின்ன வேலை செய்யலாம். நம்மைக் கடந்தும் ஒரு உலகம் இருப்பதை குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள்.

பசுமைப் பணியில் பங்களிக்கலாம்

வீட்டைச் சுற்றி தோட்டம் போடலாம். நிலமெல்லாம் கான்கிரீட்டா... மாடித்தோட்டம் போடுங்கள். குழந்தைகளையே விதையூன்றச் செய்து செடிகளைப் பராமரிக்கச் செய்யுங்கள். அச்செடியோடு சேர்த்து குழந்தைகளும் வளருவார்கள். தாவரவியலையும் உயிரியலையும் குழந்தைகள் நேரடியாக கற்றுணர்வார்கள். பொதுவிடங்களில் மரங்களை நட்டு வளர்க்கத் தூண்டலாம்.

கலைகளில் கலக்கலாம்!

கலைகள் குழந்தைகளை மலரச் செய்யும். வகுப்பறைச் சூழல் நிறைந்த கலைப் பயிற்சிகளைத் தவிர்த்து, இணக்கமான பயிலரங்குகளில் குழந்தைகளை இணைக்கலாம். கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். விரும்பாத குழந்தைகள் மீது நம் விருப்பத்தை திணிக்கக்கூடாது. நல்ல தேர்ச்சி உடைய கலைஞர்களிடம் பயிற்சி பெறுவது நல்லது. முழு நாளையும் ஆக்கிரமித்து விடாமல் சில மணி நேரங்கள் மட்டுமே பயிற்சி இருக்க வேண்டும்.

கடிதம் எழுதுங்கள்

கம்ப்யூட்டர் வந்தபிறகு எழுதும் பழக்கமே குறைந்து விட்டது. அதிலும் கடிதத்தை இழந்தது மனிதகுலத்துக்குப் பேரிழப்பு. அன்பை, அறிவை, ஆக்கத் திறனை வளர்ப்பதில் கடிதத்துக்கு இணையில்லை. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளை கடிதம் எழுதத் தூண்டுங்கள். நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, ஆசிரியர்களுக்கு எழுதலாம். இதன்மூலம் எழுத்து பயிற்சியும் இயல்பாகக் கிடைக்கும்.

‘‘விளையாடுங்கள். சைக்கிள் ஓட்டுங்கள். நண்பர்களோடு கூடியிருங்கள். விதையூன்றுங்கள். மரம் நடுங்கள். பூங்காக்களில் சுற்றுங்கள். வெயிலில் நனையுங்கள். வெளியில் எதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் கற்றுக்கொள்ளுங்கள்...’’
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#2
Re: பிள்ளைகளின் விடுமுறையை அபகரிக்காதீர்&#2965

I totally agree with this article. Let them enjoy their holidays to refresh them. Pls. read the below given link (Short Story) shared by our @Dangu uncle related to this...

http://www.penmai.com/forums/short-stories/91890-a.html#post1479607
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
Re: பிள்ளைகளின் விடுமுறையை அபகரிக்காதீர்&#

Very nice & needed article.
 

anbarasi

Friends's of Penmai
Joined
Jun 28, 2011
Messages
178
Likes
162
Location
chennai
#4
Re: Let children enjoy holidays - பிள்ளைகளின் விடுமுறையை அபகரிக்கா&#29

Nice article
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.