Metabolic syndrome

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
Metabolic syndrome
குழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்பும் சராசரி உடல் எடையோடு இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்துக்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதைவிட அதிகமான எடையுடன் இருந்தால், அது உடல் பருமன்.

Metabolic syndrome என்று சொல்லக்கூடிய நோய், பல பெரிய நோய்களை உண்டாக்கக்கூடிய காரணிகளின் தொகுப்பாகக் கூறப்படுகிறது. இந்த நிலை உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், இரண்டாம் நிலை நீரிழிவு நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புள்ளது.

கலோரி அதிகமுள்ள கொழுப்பு மற்றும் அதிகச் சர்க்கரை நிறைந்த கார்போஹைட்ரேட் உணவு வகைகள், குறைந்த உடல் உழைப்பு, தைராய்டு சுரப்பி பிரச்சினை, ஜீன் மாற்றம், ஹார்மோன் குறைபாடு உள்ளிட்டவற்றால் உடல் பருமன் ஏற்படும்.

இந்தியாவில் Metabolic syndrome என்று சொல்லக்கூடிய உடல் பருமன், தொந்தி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்று மருத்துவர்களால் உறுதியாகக் குறிப்பிட்டுக் கூற இயலவில்லை. ஆனால், இதற்கான காரணிகள் எல்லாம் உடல் பருமனுக்கான காரணிகளோடு சேர்ந்துள்ளன.

முதன்மைக் காரணிகள்
இந்தப் பரிணாம நோயின் இரண்டு முக்கியக் காரணிகள், உடலின் நடுப் பகுதியில் அதிகமாக ஊளைச்சதை போடுவது. இது ஆப்பிள் போன்ற வடிவத்தில் காணப்படும். உடல் நடுவில் ஏற்படும் தொந்தியை Central adiposity என்று கூறுவார்கள்.

ஒருவரது உடல் எடையின் கிலோ கிராமை, அவரது உயரத்தின் இரு மடங்கால் வகுக்கும்போது கிடைப்பதே BMI (பாடி மாஸ் இண்டெக்ஸ்) எனப்படும். இம்மதிப்பு 20-க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவு; 20 - 25 என்றால் சராசரி எடை; 25 - 30 என்றால் அதிக எடை; 30 - 40 என்றால் உடல் பருமன்; 40-க்கு மேல் இருந்தால் மிகப் பருமனானவர்!

இரண்டாவது, இன்சுலினை உடலில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலை. பாங்கிரியாஸ் என்ற கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உடலில் உள்ள திசுக்கள் இன்சுலினைப் பயன்படுத்துவது இல்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து இன்சுலினும் அதிகரிக்கிறது. கொழுப்பும் சேர்கிறது. மேலும் வயது, மரபணு, மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்றவை இதற்குக் காரணமாகின்றன.

சில குடும்பங்களில், அடுத்தடுத்த வாரிசுக் குழந்தைகள் அனைவருமே குண்டாக இருப்பார்கள். அவர்கள் சாப்பிடுகிறார்களோ, இல்லையோ உடல் பெரிதாகிக்கொண்டே இருக்கும். அதிகக் கலோரிகளை எரித்து, உடல் எடை கூடுவதைத் தவிர்க்க முடியாத அளவுக்கு, அவர்களுடைய மரபணுக்கள் இயல்பிலேயே சக்தி குறைந்தவையாக இருக்கும்.

அறிகுறிகள்
ரத்த அழற்சி ஏற்படும் தன்மை, சிறுநீரில் புரதம் போகும் தன்மை போன்ற பிரச்சினைகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்படுகின்றன. ஒருவருக்கு ரத்த அழுத்தம் 130/85-க்கு அதிகமாக இருந்தாலோ, 8 மணி நேரம் உணவருந்தாமல் இருந்துவிட்டுக் காலையில் எடுக்கும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100-க்கும் அதிகமாக இருந்தாலோ, வயிற்றின் சுற்றளவு ஆண்களுக்கு 40 அங்குலத்துக்கு மேலேயும், பெண்களுக்கு 35 அங்குலத்துக்கு மேலும் இருந்தாலோ, நல்ல கொழுப்பானது ஆண்களுக்கு 40-க்கு கீழே இருந்தாலோ, பெண்களுக்கு 50-க்கு கீழே இருந்தாலோ, டிரைகிளிசரைட்ஸ் எனும் மாவுக்கொழுப்பு 150-க்கு மேலே இருந்தாலோ உடல் பருமன் பிரச்சினை ஏற்படலாம். சிகிச்சையின் நோக்கமாக மாரடைப்பைத் தடுப்பது, நீரிழிவு நோய் வருவதைத் தடுப்பது, இவர்களுடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

பொதுவாக, உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடைதான்! நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள், முழுமையாகப் பயன்படுத்தப்படாமல், அப்படியே உடலில் தங்கிவிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் எடைதான் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. அதனால், உடல் பருமன் என்பதும் ஒரு நோய்தான்.

ரத்த அழுத்தம், இதயப் படபடப்பு, கல்லீரல் பாதிப்பு, பித்தக் குறைபாடு, நீரிழிவு, மூட்டுவலி, மனச்சிதைவு, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை உடல் பருமனால் ஏற்படும். பெண்களுக்கு, மாதவிலக்கு பிரச்சினை, மார்பகப் புற்றுநோய் மற்றும் இடுப்பு, கை, கால் மூட்டு வலி போன்றவையும் கூடுதலாக ஏற்படும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள், நொறுக்கு தீனி, இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. மாவுச்சத்து அதிகமுள்ள பொருட்களை உண்ணக் கூடாது. மதுபானங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

உடற்பயிற்சி அவசியம்
ஒருவேளை, இத்தனையையும் தாண்டி உடல் பருமன் ஏற்பட்டுவிட்டால், மருந்துகளால் மட்டுமே அதைக் குறைக்க முடியாது. அதற்கு, உடல் உழைப்பு மிகவும் அவசியம். உடற்பயிற்சி மிக மிக அவசியம்.

அளவுக்கு அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும் எனும் நிலையில், மருந்துகளால் உடல் எடை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.

ஏழு முதல் எட்டு சதவீதம்வரை எடையைக் குறைப்பது, 500 முதல் 1000 கலோரியைக் குறைத்துச் சாப்பிடுவது, 60 நிமிடங்களுக்குக் கையை வீசி நடப்பது, கொழுப்பைக் குறைக்கும் உணவு வகைகள், எடையைக் குறைக்கிற உணவு வகைகள், உடற்பயிற்சி, தேவைப்பட்டால் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கிற மருந்துகள், உப்பைக் குறைவாக உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். புகைப்பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும். இந்த நோய் உள்ளவர்களுக்குக் காலின் ரத்த ஓட்டமும் குறைபடும். இந்த நோயை Insulin resistance syndrome என்றும் அழைப்பார்கள்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
ஆயுர்வேதச் சிகிச்சைகள்

ஆயுர்வேதத்தில் உணவைச் செரிக்கும் சக்திக்கு அக்னி, ஜாடராக்னி என்று பெயர். இந்த ஜாடராக்னி சரியாக வேலை செய்யாமல் மந்தமாக இருந்தால் உருவாகிற அன்ன ரஸமானது `ஆமம்’ என்ற ஒரு நச்சுத் தன்மையைப் பெறுகிறது.

சோம்பேறியாகப் படுத்துக்கொண்டிருப்பது, உட்கார்ந்து கொண்டிருப்பது, தயிர் சாப்பிடுவது, எப்போதும் தூங்குவது, பால் பொருட்களைச் சாப்பிடுவது, கரும்பு சார்ந்த பொருட்களைச் சாப்பிடுவது, வெல்லத்தால் செய்த பொருட்களைச் சாப்பிடுவது, புதிய அரிசியைச் சாப்பிடுவது ஆகியவற்றால் இந்த ரஸமானது நீர்பதம் (கிலேதம்) அடைந்து சரியான தாதுகளாக உருவெடுக்காமல் கொழுப்பாக மாறிவிடுகிறது.

இவ்வாறு கொழுப்பாக மாறிய நிலையில் அவர்களுக்கு எலும்புகள், மஜ்ஜை, விந்து போன்றவை ஆரோக்கியமானதாக உருவாவதில்லை. இவர்களுக்கு உடலில் அதிக வியர்வை ஏற்படுவதுடன் துர்நாற்றமும் இருக்கும். சிறிய வேலை செய்தால்கூட மூச்சு முட்டும், மார்புப் பகுதியிலும், இடுப்புப் பகுதியிலும் கொழுகொழு சதையும் காணப்படும்.

பெண்களுக்கு உடல் பருமனால், சமநிலையற்ற அல்லது ஒழுங்கற்ற முறையிலான மாதவிடாய் ஏற்படத் தொடங்கும். இதனால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, ‘ஈஸ்ட்ரோஜன்’ சுரப்பதற்குப் பதிலாக, ஆண்களுக்கான ‘டெஸ்டோஸ்டீரோன்’ ஹார்மோன் அதிகளவு சுரக்கும். இது, இயற்கையாகக் கருவுறும் முறையைப் பாதிக்கும். சில நேரம், கருவுறும் வாய்ப்பு இல்லாமலேகூட போகும்.

இந்த நோயைத் தணிப்பதற்குக் குரு அபதர்ப்பணம் என்ற முறையில் சாப்பிடவேண்டும், சாப்பிட்டால் பசி அடங்க வேண்டும். அதேநேரம் அந்த உணவால் உடலில் சர்க்கரையின் அளவு கூடக் கூடாது.

இதற்கு low glycemic index என்று சொல்லக்கூடிய சிறுதானிய உணவு வகைகள் மிகுந்த பலன் அளிக்கின்றன. அரிசியைக் குழைத்து வடிப்பதற்குப் பதில் முக்கால் பாகம் வெந்தவுடன் வடிக்க வேண்டும். சம்பா, கேப்பை, கம்பு, பயறு, கேழ்வரகு போன்றவை மிக்க பலனளிக்கின்றன.

கொள்ளுப் பொடியைத் தேய்த்துக் குளித்தல், தேவையற்ற கொழுப்பை அகற்ற உதவுகிறது. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணம் 10 கிராம் எடுத்துத் தினமும் இரண்டு நேரம் தேனுடன் சேர்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். வேங்கையின் நடுப்பகுதியைக் கஷாயம் வைத்து 60 மி.லி. வீதம் எடுத்து, அதில் திரிபலா மாத்திரை 4 சேர்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். மலையில் இருந்து உருகி வரும் 81 சத்துகளைக் கொண்ட பல்விக் ஆசிட் என்ற சிலாஜித், கொழுப்பை அகற்றுவதில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் லோகப் பஸ்பம், லோகாஸவம் போன்றவை கொழுப்பை அகற்றுகின்றன. கோரைக்கிழங்கு சூரணம் கொழுப்பை அகற்றுவதில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் கோரைக்கிழங்கு, கொட்டம், மஞ்சள், மரமஞ்சள், வசம்பு, அதிவிடயம், கடுகரோஹிணி, கொடுவேலி, ஆவில் என்ற புங்கம் வேர், கடுக்காய் எனும் கூட்டு சேர்ந்த லேகனீய கணம் மிகச் சிறப்பான மருந்து.
கொழுப்பைக் குறைப்பதில் குக்குலு மரத்தின் பிசின் சிறந்து விளங்குகிறது. வாயுவிடங்க சூரணம் 3 கிராம் இரண்டு நேரம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும். காலை வேளையில் குளிர்ந்த நீரில் தேன் சேர்த்துச் சாப்பிடுவதும் கொழுப்பைக் குறைக்கப் பயன்படுகிறது.

சித்த மருத்துவத்தில் நத்தைச்சூரி சூரணம் என்ற மருந்து இதற்கு நல்ல பலனைத் தருகிறது. அளவைக் குறைத்துச் சாப்பிடுதல், பழங்களைச் சாப்பிடுதல், குறைந்த அளவில் நான்கைந்து முறையாகச் சாப்பிடுதல், மூச்சுப் பயிற்சி செய்தல், சூரிய நமஸ்காரம் செய்தல், நடைப் பயிற்சி போன்றவை நல்ல பலன் அளிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் நல்லெண்ணெய்க்கு, மெலிந்தவரை பருக்கச் செய்யும் தன்மையும், பருமனாக உள்ளவரை மெலியச் செய்யும் தன்மையும் உண்டு. திப்பிலி சேர்த்த நீர் மோர் தேவையற்ற கொழுப்பை அகற்றுவதில் தலைசிறந்து விளங்குகிறது.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
எடையைக் குறைக்கும் கைமருந்துகள்

முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை, மாலை சாப்பிடலாம்.

துளசி இலைச் சாற்றைச் சூடாக்கி சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.
சாப்பாட்டில் அடிக்கடி புடலங்காயைச் சேர்த்துக்கொள்ளவும்.

இலந்தை மர இலையைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடிக்கவும்.

சிறிதளவு கொள்ளைச் சுத்தம் செய்து ரசம் வைத்து, அதனுடன் இந்துப்பு (பாறை உப்பு) கலந்து தினமும் 3 வேளை குடித்து வரலாம். உடல் மெலிவதுடன் உடல் பலமும் அதிகமாகும்.

ஓமத்தை நன்கு வறுத்துப் பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட எளிதில் உடல் எடை குறையும்.

அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கித் தேனில் குழைத்துத் தினமும் சாப்பிட்டுவரலாம்.

கல்யாண முருங்கைப் பொடியைத் தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கும்.

சிறிதளவு மோர், கேரட் ஆகியவற்றை அரைத்துத் தினமும் குடித்துவந்தால் உடல் இளைக்கும்.

வாழைத் தண்டு சாறு, பூசணிச் சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில், ஏதாவது ஒன்றைக் குடித்துவர உடல் எடை குறையும்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.