Natural herbal black dye

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,715
Likes
2,572
Location
Bangalore
#1
இயற்கை டை!
''டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரிச் செடி இலைகளைப் பயன்படுத்தினால்... எந்தக் கவலையும் இல்லாமல், கருகரு முடியோடு கலக்கலாமே!'' என்று சொல்லும் கடலூர் அன்னமேரி பாட்டி, அவுரி சாயம் தயாரிக்கும் முறையையும் அழகாக எடுத்து வைத்தார். இதோ அவர் சொல்லும் இயற்கை டெக்னிக்! அவுரி இலை - 50 கிராம்,
மருதாணி இலை - 50 கிராம்,
வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்,
கறிவேப்பிலை - 50 கிராம்,
பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை...
இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்).
அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.
கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும்.
இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம்.
நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.
இளநரையைத் தவிர்க்க...
சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியம். எல்லா வகையான நட்ஸ் வகைகளையும், இரவே ஊறவைத்து, மறுநாள் சாப்பிடவேண்டும். அவற்றில் வைட்டமின் இ இருப்பதால், சருமத்துக்கும் முடிக்கும் மிகவும் நல்லது. தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும். முளைக்கட்டிய பயறு, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்கள், காய்கறிகள், பழங்கள் அதிகமாகச் சாப்பிடவேண்டும்.
ஹெட் மசாஜ்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை இளஞ்சூடாகக் காய்ச்சி, இரு கைவிரல்களாலும் எண்ணெயைத் தொட்டு, முடியின் வேர்க்கால்களில் படுவது போலச் சிறுசிறு வட்டங்களாகத் தேய்க்கவும். விரல்களால் தலையின் எல்லாப் பகுதிகளையும் லேசாக அழுத்திவிடவும். இதனால், தலையின் எல்லாப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். முடி நன்றாக வளர்வதுடன் நரைப்பதும் தள்ளிப் போகும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தனியே எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். அல்லது, கற்றாழை ஜெல்லை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறியதும் சீயக்காய்த்தூள் போட்டு அலசவும்.
செய்யவேண்டியவை
'ஹேர் டை’ உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய ஹேர் டை பாக்கெட்டுடன் டாக்டரைச் சந்திக்கவேண்டியது அவசியம்.
உடனடியாக நிறம் மாற்றும் 'இன்ஸ்டன்ட் டை’ வகைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
'பக்கத்து வீட்டில் சொன்னாங்க, ஃப்ரெண்ட் யூஸ் பண்ணினாங்க’ என்றெல்லாம் தாமாகப் போய் ஹேர் டை வாங்கி உபயோகிக்கவே கூடாது. ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளும் பிராண்டு, மற்றவருக்கு ஏற்காமல் போகலாம்.
உபயோகிக்காமல் இருக்கும் 'ஹேர் டை’யை, 'வீணாகப் போகுதே’ என்று எடுத்துத் தலையில் தடவிக்கொள்வதும் ஆபத்தானது. அதனால் மோசமான பின்விளைவுகள் உண்டாகலாம்.
தலையில் பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எப்போதுமே தலைக்குச் சாதாரணத் தண்ணீரையே ஊற்றலாம். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.
முடிந்தவரை ஷாம்பூ வகைகளைத் தவிர்த்து, சீயக்காய், அரப்புத்தூள் போட்டுக் குளிக்கவும்.




 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.