Necessity of taking Scans-ஸ்கேன் ரிப்போர்ட்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஸ்கேன் ரிப்போர்ட்
தீபா
ரேடியாலஜி நிபுணர்
"க
ழுத்து வலிக்குதேனு டாக்டர்கிட்ட போனேன்... உடனே, ஸ்கேன் எடுக்கச் சொல்லிட்டார். சாதாரண கழுத்து வலி, தலைவலிக்குக்கூட இப்ப ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கு” என்று புலம்புவார்கள் பலர். உண்மையில் ஸ்கேன் என்பதன் மருத்துவப் பயன்பாடு என்ன? சின்னச்சின்ன உபாதைகளுக்குக்கூட ஸ்கேன் தேவையா என்ன?


“நாடி பிடித்து நோய்களைக் கண்டறிந்த காலத்தில், மனிதனைத் தாக்கிய நோய்களுக்கும் ஒரு வரைமுறை இருந்தது. இதனால், ‘இந்த நோய்... இப்படித்தான் வெளிப்படும்...’ என்று அப்போது வரையறுக்க முடிந்தது. ஆனால், இன்றோ காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரைக்கு கட்டுப்படா விட்டால், அது பன்றிக் காய்ச்சலா? பறவைக் காய்ச்சலா? டைபாய்டா? மலேரியாவா? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தாண்டி, உடலுக்குள் இருக்கும் உறுப்புகளுக்குள் என்ன நடக்கிறது என்பதையும் தாண்டி, உறுப்புகளின் ஒவ்வொரு செல்லிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

தேவை
உடலுக்குள் இருக்கும் உறுப்புகளையும் அந்த உறுப்புகளுக்குள் நடைபெறும் இயக்கத்தையும், 3-டி வடிவத்தில் வீடியோவாகவும், படங்களாகவும் ‘ஸ்கேன்’ காட்டிவிடும். அதன் பிறகுதான், அதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் முடிவுசெய்கின்றனர். விபத்து, மயக்கம், கட்டிகள், வயிற்றுக்கோளாறு என்ற அடிப்படையில் அவை பற்றி அறிய அல்ட்ராஸ்கேன், சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், ஆஞ்சியோகிராம், மேமோகிராம், பெட் ஸ்கேன் என பிரத்யேகக் கருவிகள் வந்துவிட்டன.

ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், துல்லியமாக நோயின் தன்மை, எந்த இடத்தில் உருவாகி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தக் காலத்தில் ஒருவருக்கு வயிற்றுவலி வந்தால், வயிற்றுக்குள் என்ன நடக்கிறது? ஏன் அவருக்கு வயிற்று வலி வந்தது என்பதைப் பார்க்க முடியாது. அவர் சொல்லும் ஒரு சில தகவல்களை வைத்து, ஒரு கணிப்பில் மருத்துவம் பார்க்கப்பட்டது. தற்போது ஸ்கேன்செய்து பார்ப்பதன் மூலம் அனைத்தையும் கண்டறிய முடியும்.

கட்டாயமா?
டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ‘தேவை’ என்ற நிலையில் ஸ்கேன் செய்து பார்த்துவிட வேண்டும். இல்லை எனில், ‘கட்டாயம்’ என்ற ஒரு நிலை வரும். அப்போது பார்க்கும்போது, நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் நோய் முற்றிவிடக்கூடும். மேலும், நோயின் வீரியமும் அளவும் குணப்படுத்த முடியாத நிலையை எட்டியிருக்கும்.

ஒரு சில ஆயிரங்களுக்காக, நமக்கெல்லாம் அந்த நோய் வராது என்று அசட்டுத்தனமாக இருந்துவிட்டால், அதன் பிறகு பல லட்சங்களையும் மிகப் பெரிய அவஸ்தைகளையும் அனுபவிக்க வேண்டி வரும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன்
கர்ப்பிணிகளுக்குச் செய்யும் ஸ்கேன், இரண்டு உயிர்களுக்கானது. எனவே, கூடுதல் கவனம் தேவை. கர்ப்பிணிகளுக்கு கதிர்வீச்சுப் பாதிப்பு இல்லாத அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மட்டுமே செய்யப்படும். கருத்தரித்த காலத்தில் இருந்து முதல் நான்கு வாரங்களுக்குச் செய்யப்படும் ஸ்கேன் மூலம், கரு சரியாகக் கருப்பையில்தான் உருவாகி உள்ளதா, அல்லது கருக்குழாயில் தங்கி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு, குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியவும், பாதிப்பு ஏதேனும் உள்ளதா என அறியவும் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தனை ஸ்கேன்தான் எடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது.

11 வாரம் 14வது வாரத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை அறியவும், 21 முதல் 24 வாரங்களுக்குள் குழந்தையின் முழு வளர்ச்சியை அறியவும், இறுதியாக 36 முதல் 38 வாரங்களுக்குள் தொப்புள் கொடி சுற்றியுள்ளதா, பனிக்குடத்தில் உள்ள நீரின் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை அறியவும் ஸ்கேன் அவசியம்.ஸ்கேன் வகைகள்
மேமோகிராம்: 40 வயதைத் தாண்டிய பெண்கள் கண்டிப்பாக, மேமோகிராம் சோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்களின் மார்புப் பகுதியில் சாதரணமாகத் தோன்றும் சிறிய கட்டிகளை, 1 எம்.எம் ஸ்லைஸ் வடிவத்தில் துல்லியமாகக் காட்டும் ஸ்கேன் இது. இதன் மூலம், அவை சாதாரணக் கட்டிகளா? புற்றுநோய்க் கட்டிகளா என்பதை அறிய முடியும்.

சி.டி ஸ்கேன்: மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க சி.டி ஸ்கேன் உதவுகிறது. மூளைக்குள் செல்லும் ரத்தக்குழாய்கள், அதற்குள் நிகழும் மாற்றம் போன்றவற்றை அறிய, இந்த ஸ்கேன் உதவுகிறது. விபத்துகளில் தலையில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சி.டி ஸ்கேன் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகிறது.
ஆஞ்சியோகிராம்: மூளை மற்றும் இதய ரத்தக் குழாயில் என்ன நடந்துள்ளது, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. வயதானவர்கள், உடல் பலவீனமானவர்களுக்கு இதயம் தொடர்பான சில சோதனைகளைச் செய்ய முடியாது. அவர்களுக்கு, ஆபத்பாந்தவன் இந்த ஆஞ்சியோகிராம்தான். இவற்றின் மூலம்தான், இதயம் மற்றும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்க்குள் ஏற்பட்டுள்ள அடைப்பு (ஸ்டினோஸிஸ்) மற்றும் விரிவு (அனியூரிசம்) ஆகியவற்றைக் கண்டறிய முடிகிறது.

எம்.ஆர்.ஐ ஸ்கேன்: கதிர்வீச்சு இல்லாமல், காந்தப் புலத்தை வைத்து செய்யப்படும் பரிசோதனை. இதன்மூலம் மூளையின் செய்திறனைக்கூட துல்லியமாக அறிய இந்த ஸ்கேன் பயன்படுகிறது. கர்ப்பிணிகளுக்குக்கூட பாதிப்பு இல்லாத ஸ்கேன் இது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம்.

பெட் ஸ்கேன்: இன்றைய தேதியில் பெட் ஸ்கேன்தான் இந்த உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. புற்றுநோய் மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. சி.டி., எம்.ஆர்.ஐ போன்றவற்றின் உதவியால், ஓர் இடத்தில் கேன்சர் தாக்குதல் இருப்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால், அது உடலின் எந்தெந்த இடத்தில் பரவி உள்ளது என்பதைக் கண்டறிய உதவுகிறது பெட் ஸ்கேன். எலும்பு, மூளை, நுரையீரல் போன்றவற்றில் பரவி உள்ள கேன்சர் செல்களைத் துல்லியமாக வெளிச்சம் போட்டுக்காட்டும். இதற்காக ‘ரேடியோ நியூக்ளியெட்’ என்ற மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து கேன்சர் செல்கள் எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் போய் படிந்துவிடும். அதன் பிறகு, ‘பெட் ஸ்கேன்’ செய்து பார்க்கும்போது, கேன்சர் செல்களில் படிந்துள்ள ‘ரேடியோ நியூக்ளியெட்’ பிரகாசமாக ஒளிர்ந்து, கேன்சர் பரவி உள்ள அனைத்து இடங்களையும் காட்டிக்கொடுத்துவிடும். அதுபோல், கேன்சருக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை, ஒருவரின் உடல் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டது என்பதை அறிய இன்டர்வெல் ஸ்கேன் பார்ப்பதற்கும் பெட் ஸ்கேன்தான் உதவுகிறது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.