Obesity - பருமன் எனும் பலத்த பிரச்னை!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
1. உடல் பருமன் என்றால் என்ன?
குழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்பும் சராசரி உடல் எடையோடு இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதிலிருந்து வேறுபட்டு எடை இருந்தால், அது 'ஒபிசிட்டி' என்று சொல்லப்படும் உடல் பருமன் ஆகும்.

2. உடல் பருமன் எதனால் எற்படுகிறது?
கலோரி அதிமுள்ள கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள், குறைவான உடல் உழைப்பு, தைராய்டு சுரப்பி பிரச்னை, ஜீன் மாற்றம், ஹார்மோன் குறைபாடுகள் உள்ளிட்டவற்றால் உடல் பருமன் ஏற்படும்.

3. பி.எம்.ஐ. எனப்படும் 'பாடி மாஸ் இண்டெக்ஸ்' சொல்வது என்ன?
ஒருவரது உடை எடையை கிலோ கிராமில் கணக்கிட்டு, அதை, மீட்டரில் கணக்கிடப்படும் அவரது உயரத்தின் இருமடங்கால் வகுக்கும் போது கிடைப்பதே பி.எம்.ஐ., எனப்படும். இம்மதிப்பு 20க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவு; 20 - 25 என்றால் சராசரி எடை; 25 - 30 என்றால் அதிக எடை; 30 - 40 என்றால் உடல் பருமன்; 40க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர்!

4. உடல் பருமன் என்பது நோயா?
ஏறக்குறைய அப்படித்தான்! பொதுவாக, உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடைதான்! நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள், முழுமையாக பயன்படுத்தப்படாமல், அப்படியே உடலில் தங்கிவிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் எடைதான் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது. அதனால், உடல் பருமன் என்பதும் நோய்தான்!

5. உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்?
ரத்த அழுத்தம், இதய படபடப்பு, கல்லீரல் பாதிப்பு, பித்தக் குறைபாடு, நீரிழிவு, மூட்டுவலி, மனச்சிதைவு, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடல் பருமனால் ஏற்படும். பெண்களுக்கு, மாதவிலக்கு பிரச்னை, மார்பகப் புற்றுநோய் மற்றும் இடுப்பு, கை, கால் மூட்டு வலி போன்றவையும் கூடுதலாக ஏற்படும்.

6. உடல் பருமன் ஏற்படாமல் இருக்க...?
எண்ணெய்யில் பொரித்த உணவுகள், நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. மாவுச்சத்து அதிகமுள்ள பொருட்களை உண்ணக் கூடாது. மதுபானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஒருவேளை, இத்தனையையும் தாண்டி உடல் பருமன் ஏற்பட்டு விட்டால், மருந்துகளால் மட்டுமே அதனை குறைக்க முடியாது. அதற்கு, உடல் உழைப்பு மிகவும் அவசியம். உடற்பயிற்சி மிக மிக அவசியம்.

7. மரபணுக்களால் வரும் குறைபாடுகள் உடல்பருமனுக்கு காரணமாகுமா?
சில குடும்பங்களில், அடுத்தடுத்த பரம்பரை பிள்ளைகள் அனைவருமே குண்டாக இருப்பர். அவர்கள் சாப்பிடுகின்றனரோ இல்லையோ, உடல் பெரிதாகிக்கொண்டே இருக்கும். அதிக கலோரிகளை எரித்து, உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு, அவர்களின் மரபணுக்கள் இயல்பிலேயே சக்தி குறைந்தவையாக இருக்கும்.

8. உடல் பருமன் மலட்டுத்தன்மையை உருவாக்குமா?
உடல் பருமனால், சமநிலையற்ற அல்லது ஒழுங்கற்ற முறையிலான மாதவிடாய் வரத் துவங்கும். இதனால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, 'ஈஸ்ட்ரோஜன்' சுரப்பதற்கு பதிலாக, ஆண்களுக்கான 'டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோன் அதிகளவு சுரக்கும். இது, இயற்கையாக கருவுறும் முறையை பாதிக்கும். சில சமயங்களில், கருவுறும் வாய்ப்பு இல்லாமலே கூட போகும்.

9. உடல் பருமன் இருந்தால் இதய நோய் வருமா?
நிச்சயம் வரும்! காரணம் உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம் வரும். அதைத்தொடர்ந்து, சர்க்கரை நோய் வரும். உடலில் சர்க்கரையும், ரத்த அழுத்தமும் இருந்தால் இதய நோய்கள் வர அதிக வாய்ப்புண்டு.

10. உடல் பருமன் குறைப்புக்கான மருந்துகள் பலன் தருமா?
அளவுக்கு அதிகமாக மருந்துகள் எடுத்துக் கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும் எனும் நிலையில், மருந்துகளால் உடல் எடை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. விளம்பரத்தில் காட்டப்படுவது போல், உடல் எடை குறைய வாய்ப்பில்லை!


- மருத்துவர் ம.வெங்கடேசன்,
உடல் பருமன்
அறுவை சிகிச்சை நிபுணர்.
 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
பருமன் எனும் பலத்த பிரச்னை!
எப்படி?

பெண்களுக்கு ஆயிரம் கவலைகள் என்றாலும், அவற்றில் முக்கியமான கவலை பருமனாகத்தான் இருக்கும். ஆரோக்கியத்தின் மீதான அக்கறை என்பதைவிட, உடல் தோற்றம் பற்றிய பிரச்னை என்பதால், பெண்களுக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது பருமன்.

இந்த பருமனுக்கான காரணிகள் என்னென்ன?

அந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகள் என்னென்ன?

பொதுமருத்துவர் சாதனா விளக்குகிறார்.


பருமன் என்று எதைச்சொல்கிறோம்?


‘‘பருமனுக்கு என்று பொதுவான அளவுகோல் எதுவும் இல்லை. ஒரு தனி மனிதரின் உடலமைப்பையும் உயரத்தையும் பொறுத்தே போதுமான எடையா அல்லது பருமனா என்பதை முடிவு செய்ய முடியும். இதைத்தான் Body mass index என்ற பி.எம்.ஐ. முறையின் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். பருமன் அதிகரித்துக் கொண்டிருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், ஒரு பொதுமருத்துவரிடம் சென்றாலே போதும்... அவர் சில கணக்குகளின் அடிப்படையில் கண்டுபிடித்துவிடுவார்.

18.5 என்ற அளவில் பி.எம்.ஐ. இருந்தால் போதுமான எடையில் இல்லை என்பதையும், 18.5 முதல் 24.9 வரை இருந்தால் அது சரியான எடை என்பதையும், 25க்கும் மேல் இருந்தால் அது அதிக எடை என்றும், 30க்கும் மேல் இருந்தால் பருமன் என்றும் கணக்கிடுவார்கள். உங்கள் பி.எம்.ஐயை நீங்களே கண்டுபிடிக்க இன்னொரு எளிய வழியும் இருக்கிறது. உங்கள் உயரம் 165 செ.மீ. இருந்தால் அதில் 100ஐ கழித்துவிடுங்கள்.
மீதமிருக்கும்65 என்பது உங்கள் எடையாக இருக்கலாம். ஆனால், 65 கிலோவுக்கு மேல் இருந்தால் நீங்கள் பருமனில் இருப்பதாக அர்த்தம். இது தோராயமான கணக்குதான்...’’

பருமன் எதனால் ஏற்படுகிறது?

‘‘உடலில் ஏற்படும் இந்த தேவையற்ற எடை மரபியல் சார்ந்த காரணங்கள், வாழ்க்கை முறைத் தவறுகள் என இரண்டு வழிகளில் ஏற்படலாம்.

இன்றைய காலகட்டத்தில் மரபியல் காரணங்களைவிட வாழ்க்கைமுறைத் தவறுகளால்தான் பருமன் அதிகம் ஏற்படுகிறது. ஒருநாளைக்கு 1,800 கலோரிகள் சராசரியாக நம் உடலுக்குத் தேவை. தேவைக்கும் அதிகமான கலோரிகளை நாம் சாப்பிட்டு, அந்த சக்தி செலவழிக்கப்படாமல் இருந்தால் அது கொழுப்பாக மாறி பருமனை ஏற்படுத்துகிறது. எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைவாக இருந்தாலும், உடல்ரீதியான போதுமான செயல்பாடுகள் இல்லாவிட்டால் பருமன் ஏற்படும்.

Empty calories என்று சொல்லக்கூடிய பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் இன்று நம்மிடையே அதிகமாகிவிட்டது. இவற்றில் இருக்கும் அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு போன்றவை பருமனை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள்...

’’மருத்துவரீதியான காரணங்களாலும் பருமன் ஏற்படுமா?


‘‘நீரிழிவு, ஹைபோதைராய்டு, பாலிசிஸ்டிக் ஓவரி, ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வது, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புற்றுநோய்கள் போன்ற உடல்ரீதியான பிரச்னைகளின் அறிகுறியாகவும் பருமன் இருக்கும். பருமன் ஏற்படுவதாலும் இந்த நோய்கள் வரலாம். அதனால் தான், பருமனை உடனடியாக கவனியுங்கள் என்று சொல்கிறோம். பரம்பரை ரீதியான காரணங்களால் நமக்கு இந்த நோய்கள் ஏற்பட்டால் கூட உடல் எடையை சரியாகப் பராமரிப்பதன் மூலம் இந்த நோய்கள் வராமல் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட முடியும்...’’

பெண்களுக்கு பருமன்ஏற்படும் காலம் எது?

‘‘இன்றைய நிலைமையில் குழந்தைப் பருவத்திலேயே உடல் எடை அதிகமாகத் தொடங்கிவிடுகிறது. குறிப்பாக, 11 வயது முதல் 18 வயது வரையுள்ள வளர் இளம்பருவத்தில் ஏற்படுகிற பருமன் (Adoloscent Obesity) இந்தியாவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலம், கர்ப்ப காலத்தைத் தொடர்ந்த இரண்டு வருடங்கள்தான் உடல் எடை கூடும் காலமாக (Crucial period) இருக்கிறது.

கர்ப்ப காலத்தின்போது குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக நன்றாக சாப்பிடச் சொல்வார்கள். இந்த உணவுப்பழக்கம் குழந்தை பிறந்த பின்னும் தொடர்ந்துவிடுகிறது. உடற்பயிற்சியும் இருப்பதில்லை என்பதால் உடல் எடை அதிகமாகிவிடுகிறது. இதுதான் கவனமாக இருக்க வேண்டிய காலம்...’’

இன்றைய அவசர வாழ்வில் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லையே?

‘‘குழந்தையை கவனிக்க வேண்டியிருக்கிறது, வீட்டு வேலைகள், ஜிம்முக்கு போக முடியவில்லை என்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் விட நம் உடல்நலனுக்காக அரைமணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைத்தால் அது நிச்சயமாக முடியும். மோட்டிவேஷன் இல்லாததால்தான் மற்ற காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறோம்.

24 மணி நேரமும் வீட்டு வேலைகள் இருக்கப்போவதில்லை, ஜிம்முக்குதான் போக வேண்டும் என்று கட்டாயமும் இல்லை. கணவரிடமோ வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ குழந்தையைக் கொடுத்துவிட்டு எளிமையான நடைப்பயிற்சியை அரை மணி நேரம் மேற்கொண்டாலே போதும். பிரசவத்துக்குப் பிறகு அந்த இரண்டு வருட காலத்தில் முயற்சியை விட்டுவிட்டால் எதிர்காலத்தில் அந்தப் பழக்கத்தை மாற்றுவது கடினமாகி விடும்.’’

கஷ்டப்பட்டு பயிற்சிகள் செய்தாலும் எடை குறைவதில்லையே?

‘‘உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவதில்லை. நாளுக்கு நாள், மாதத்துக்கு மாதம், வருடத்துக்கு வருடம் என்று படிப்படியாகத்தான் உயர்கிறது. ஆனால், எடை குறைப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே மாதத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. ஒருவாரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, கண்ணாடி முன்பு நின்று பார்த்துவிட்டு எடை குறையவே இல்லையே என்று பலரும் மனம் தளர்ந்துவிடுகிறார்கள்.

அதன்பிறகு டயட் கட்டுப்பாடு, உடற்பயிற்சியை விட்டு விட்டு பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். இதுதான் எடையை குறைக்க முடியாததற்கு காரணம். ஆனால், எடை குறைகிற மாற்றங்கள் அப்படி உடனடியாக கண்கூடாகத் தெரியாது என்பதே உண்மை. இந்த இடத்தில்தான் கவனமாக இருக்க வேண்டும்.’’

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

‘‘இன்று 70 சதவிகிதத்தினர் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பருமன் இவர்களுக்குத்தான் அதிகம் வருகிறது. அதிலும் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதும் முக்கிய காரணம். இவர்கள் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற சத்துகளை சரிவிகிதத்தில் உணவில் எடுத்துக்கொள்வதோடு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாட்டுகள் என உடல்ரீதியான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது அவசியம். இல்லாவிட்டால் நாளடைவில் இதயரீதியான பாதிப்புகள், பக்கவாதம், மூளை தொடர்பான பிரச்னைகள், ரத்த அழுத்தம், பாத நரம்புகளில் பிரச்னை, சிறுநீரகம், கண் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.’’

ஆண்களின் பருமனுக்கும்பெண்களின் பருமனுக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கிறதா?

‘‘பருமனால் ஏற்படும் பாதிப்புகளில் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. ஆனால், ஆண்கள் உடல் எடை கூடுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பெண்களுக்கு அது அழகு சார்ந்த விஷயமாகவும் இருப்பதால் பல குழப்பங்கள் வந்துவிடுகின்றன.

‘குண்டம்மா’ என்று குழந்தைகளே கிண்டலடிக்கும் நிலைமை, வெளியிடங்களுக்குக் கணவருடன் சென்றால் கணவருக்கு அக்கா போல் தோன்றுகிறோமோ என்று நினைத்துக்கொள்வது, நம் மீது கணவருக்கு அன்பு போய்விடுமோ என்ற பயம் என உளவியல் ரீதியான பல பிரச்னைகளுக்குப் பெண்கள் ஆளாகிறார்கள். அதனால், பெண்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.’’

ஒரே நாளில் எடை கூடிவிடுவதில்லை. ஆனால், எடை குறைப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே மாதத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது தவறு!

ஓர் எச்சரிக்கை!

சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்த கௌரி சங்கரின் மனைவி அமுதா. 35 வயதான அமுதாவுக்கு உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்று ஆசை. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் 3 லட்ச ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். வீடு திரும்பிய 15 நாட்களில் வயிற்றில் வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்குச் சென்று கேட்டபோது, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சீழ் வந்துகொண்டிருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் மீண்டும் இன்னொரு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார் அமுதா. ஆனாலும், வயிற்றுவலி குறையாமல் மேலும் அதிகமானதால் இன்னொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்திருக்கிறார்கள். அப்போதுதான் வயிற்றுக்குள் பஞ்சு வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் பிறகு 20 லட்சம் ரூபாய் செலவு செய்து அமுதாவின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

இப்போது உடல் உருக்குலைந்த நிலையில், வயிற்றில் டியூப் வழியாக திரவ உணவுகளை அமுதாவுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாய் வழியாக அமுதாவால் உணவு சாப்பிட முடியாது. இரண்டு குழந்தைகளின் தாயான அமுதா, ‘நான் தவறான முடிவெடுத்து விட்டேன்’ என்று இப்போது அழுது கொண்டிருக்கிறார். ஒல்லியாகும் ஆசை தவறில்லைதான். ஆனால், அதற்கு முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்!

உடல் பருமனைக் குறைக்க என்னென்னசிகிச்சைகள் இருக்கின்றன?


அழகு சிகிச்சை நிபுணர்நாராயண மூர்த்தி சொல்கிறார்...‘‘உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கவும் உணவு இரைப்பைக்குச் செல்லாமல் மாற்றுப் பாதையில் வெளியேறவும் Bariatric என்ற அறுவை சிகிச்சையை இரைப்பை குடலியல் சிகிச்சை மருத்துவர்கள் செய்வார்கள். அதன்பிறகு, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை அகற்ற Liposuction சிகிச்சையை அழகு சிகிச்சை மருத்துவர்கள் செய்வார்கள். கொழுப்பு அகற்றப்பட்ட பிறகு, உடலுக்கு வடிவம் கொடுக்க Body condouring என்ற முறையும் இருக்கிறது.

சிகிச்சை செய்துகொள்ள விரும்புபவரின் உணவுமுறை, உடல் செயல்பாடுகள், மருத்துவப் பரிசோதனைகள் என எல்லாவற்றையும் கவனமாகப் பரிசீலித்த பிறகுதான் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்வார்கள். அதனால் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகும் மருத்துவமனை தரமானதா, சிகிச்சை அளிக்க இருப்பவர் தகுதி பெற்ற மருத்துவரா என்பதை நன்கு தெரிந்து கொண்டுதான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சைக்குப் பிறகும் மருத்துவர்கள் சொல்லியிருக்கும் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றினால் பிரச்னை வர வாய்ப்பில்லை.’’​
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
பருமன் மருந்துகள்

பருமன் மருந்துகள்

சராசரி மனித வாழ்க்கை என்பது (Life Span) 80 ஆண்டுகள். ஆனால், இது நேர்க்கோடு போல 0 80 எனச் செல்வதில்லை. 40 வரை ஏறுமுகமும் 40க்குப் பிறகு இறங்கு முகமாகவும் இருக்கும். ஒவ்வொரு 10 ஆண்டுகால வாழ்க்கையும் பல உடல் மாற்றங்களை உள்ளடக்கியது.


40 ஆண்டுகள் வரை வளர்ச்சியின் உச்சமாகச் செல்வது, பிறகு தேய்மானமாக 80 நோக்கி இறங்குகிறது. 80க்குப் பிறகு வாழும் வாழ்க்கை போனஸ் வாழ்க்கை. இதில் 40 வயது வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளும் தாய்ப்பாலின் சக்தியைப் பொறுத்து அந்தந்த வயதுக்கு ஏற்ப, வளர்ச்சிக்கு ஏற்ற, உடல் உயரத்துக்கு ஏற்ற உணவு, சத்துகள், உடற்பயிற்சி, சுகாதாரமான சூழ்நிலை, பாரம்பரியம் என்பதைப் பொறுத்தே இது அமைகிறது.

பெரும்பாலானவர்களுக்கு எந்த ஒரு பெரிய உடல் நல பிரச்னையும் இன்றி உடல், மன வளத்தின் உச்சகட்டமான 40 வயதைத் தொட்டுவிட முடியும். அதற்குப் பிறகான வாழ்க்கை, விமானத்திலிருந்து குதிப்பதற்குச் சமமானது. பாராசூட்டுடன் குதிப்பது என்பது அந்த உயரத்திலிருந்து விழுவதை எப்படி ஒரு சுக அனுபவமாகவும் பாதுகாப்பான தாகவும் மாற்றுகிறதோ அவ்வளவு எளிதானது.

40 வயதுக்குப் பிறகு எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது பற்றி அறிவதே முதல்படி. ‘எனக்கு எதுவும் வராது’ என நினைப்பது, உடல் தரும் சிறுசிறு சிக்கல்களை உணராமல் இருப்பது, மருத்துவரை அணுகாமல் இருப்பது, தேவையான உடல் பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பது போன்றவைதான் குழப்பத்தின் ஆரம்பம்.

பெரிய இதய நோய் சிகிச்சை நிபுணராக இருந்தாலும், ‘காலையில் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்’ என்பது போன்ற செய்திகள் நமக்கும் பாடமாகும். 20 முதல் 40 வயது வரை நாம் எப்படி... என்ன சாப்பிடுகிறோம்?

உடற்பயிற்சியுடன் மன உளைச்சல் இல்லாத வாழ்க்கை வாழ்கிறோமா? இதுவே அந்த 40 வருட வாழ்க்கைக்கான அடித்தளம். 40 வயதுக்கு மேல் வருகின்ற நோய்கள் இப்போதெல்லாம் அதிக பணம் ஈட்டும் ஐ.டி. இளைஞர்களுக்கு 30 வயதுக்குள்ளாகவே மனஉளைச்சலுடனும் வேலைப்பளுவுடனும் வந்து சேர்கின்றன.

அதிக கொழுப்பு, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகள் பற்றிக் கொள்கின்றன. மருந்து, மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன உளைச்சல் இல்லாத வாழ்க்கையானது மருத்துவரின் ஆலோசனையை மீறும் பட்சத்தில் மாரடைப்பாகவோ, பக்கவாதமாகவோ மாறிவிடக்கூடும்.

40 வயதுக்கு மேல் ஆரம்பிக்கிறது ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’. உடலில் கொழுப்பு அதிகமாகி, ரத்தத்திலிருக்கும் நல்ல கொழுப்புகளை குறைத்து, கெட்ட கொழுப்பு வகைகளைக் கூட்டி, ரத்தக்குழாய்களில் கொழுப்புப் படலங்களாக (Atherosclerotic plaques) படரச் செய்கிறது. அதனால் ரத்தக்குழாய் சுவர்களில் ஏற்படும் மாற்றத்தால் ரத்தக்கொதிப்பு நோய் உருவாகி, அதை படலங்கள் அடைக்குமானால் மாரடைப்பு, மூளையில் வாதம் போன்றவை ஏற்படும். இதற்கான ஆரம்ப அறிகுறியே மெட்டபாலிக் சிண்ட்ரோம். எடை (BMI), ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, கொழுப்பு என பரிசோதனைகளை செய்து, அம் முடிவுகளை பாதுகாப்பான எல்லைக்குள் லட்சியமாக்கு(நிஷீணீறீ)பவர்களுக்கு நோய் வருவதைத் தள்ளிப் போடலாம்.

G Glucose ***.....(70 110140)
O Obesity BMI<26<29
A Anti Hypertensive efforts Bp<140/90
L Lipid profile
HDL>40
LDL<100
Trid<150


பருமன் என உடலில் கூடும் கொழுப்பின் அளவையே கூறுகிறோம். பருமனை அளவிட Bro Cas INDEX
முறை ஒரு எளிதான கணக்கு. இது பெரியவர்களுக்கு மட்டுமே. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. BMI அளவீடுகளும் அதன் வரையறைகளும் உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்டவை அதன் அட்டவணை,

18-25.9 - ஆரோக்கியமான எடை
25-29.9 - அதிகப்படியான எடை
30-34.9 - உடல்
பருமன் கிளாஸ் - 1
35-39.9 - உடல்
பருமன் கிளாஸ் - 2

40 (அல்லது) அதற்கும் மேல்-உடல் பருமன் கிளாஸ் - 3 (அல்லது) தீவிரமான பருமன்.4 உங்களது பிஎம்ஐ அளவீடு சரிதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் சோதனை செய்து கொள்ளுங்கள்.

*ஒரே மாதத்தில் அதிகப்படியான எடையைக் குறைப்பது என்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். நடைமுறை சாத்தியம் கொண்டதாக பார்த்துக் கொள்ளுங்கள். எந்த உணவைக் குறைக்க வேண்டும்? எதைக் கைவிட வேண்டும்? உணவிலுள்ள சத்துப் பொருட்கள் என்னென்ன? நமக்கு எவ்வளவு சக்தி தேவை? சமச்சீர் உணவு என்ன? எத்தனை வேளைகள் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக அறிந்து செயல்பட வேண்டும்.

*நடைப்பயிற்சி, நீச்சல், ஜாக்கிங், ஷட்டில் போன்றவை எடையைக் குறைக்க பெரிதும் உதவும். எப்போதும் பயிற்சிக ளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும்.

*மனிதனின் இரைப்பை ஒரு எலாஸ்டிக் பலூன் போன் றது. இரைப்பை ஏற்கனவே விரிந்த அளவுக்கோ, அதை விட அதிகமாகவோ விரியும் போதே அந்த நிலையை அடைந்தால்தான் சாப்பிட்ட ஒரு திருப்தி நமக்கு ஏற்படும். அதனால் உணவைக் குறைக்கும் அளவுக்கு பதிலாக காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகாயை வேக வைத்தும், பச்சையாகவும் எடுத்துக் கொள்ளலாம். பழம் அவசியம் என்றாலும், குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீராலும் இரைப்பையை நிரப்ப முடியும்.

*பருமனை தடுத்தாலே 40 வயதுக்கு மேல் வரும் அனைத்து உபாதைகளிலிருந்தும் விடுபடலாம். உணவை மென்று சுவைப்பதன் மூலம் மூளை, உணவு உண்பதை நன்றாக அறிய வைக்க முடியும். உணவில் அரிசி பதார்த்தங்களாக மாவுச் சத்தைக் குறைப்பதன் மூலம் பருமனைக் கட்டுக்குள் வைக்க முடியும். கண்டிப்பான உடற்பயிற்சி - ஒரு கிலோமீட்டருக்கு 11 நிமிடம் என தினசரி 45 நிமிட நடைப்பயிற்சி எல்லா நோய்களையும் விரட்டி விடும்.

எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்குக் கூட வருடாவருடம் 600 கிராம் முதல் 1கி.கி. வரை எடை கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பருமன் கூடும்போது கொழுப்பு உடலின் எல்லாப் பகுதிகளிலும் பெருகுவது போல ரத்தக்குழாய்களில் பெருகி படரும் போதுதான் ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவை மட்டுமல்ல... எடை தாங்க முடியாமல் மூட்டுவலி, முட்டித் தேய்மானம், இடுப்பு வலி போன்றவையும் ஏற்படுகின்றன.

*வலிநிவாரணி மாத்திரையால் வலி குணமாவது போல, எடை குறைக்கும் மாத்திரைகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. சில மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் டயட் மற்றும் உடற்பயிற்சியுடன்தான் பலன் அளிக்கின்றன. ஆகவே, மருந்துகள், பொடிகள், தேன் என எதுவும் பருமனைக் குறைக்க வேலை செய்யாது.

*கடுமையான பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (BMI>40) அறுவை சிகிச்சையே தீர்வாகிறது. லேப்ராஸ்கோபிக் கேஸ்ட்ரிக் பைபாஸ், லேப்ராஸ்கோபிக் கேஸ்ட்ரிக் பேன்டிங் ஆகிய இரு சிகிச்சை முறைகள் இப்போது பின்பற்றப்படுகின்றன.

*இப்பிரச்னை வராமல் தடுக்க 30 வயதிலிருந்தே வாழ்க்கை நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து, உணவையே மருந்தாக முயற்சிக்கலாம். எப்படி ஆண் வழுக்கைக்கு மருந்துகள் இல்லையோ, உடல் பருமனைக் குறைக்கவும் மருந்துகள் இல்லை. பருமனை தடுத்தாலே 40 வயதுக்கு மேல் வரும் அனைத்து உபாதைகளிலிருந்தும் விடுபடலாம். ஒல்லிபெல்லி ஆக மருந்தே கிடையாது!

பருமனைக் குறைக்க உதவுவதாக சொல்லப்பட்ட Sibutramine மற்றும் Lorcaserin இரண்டு மருந்துகளும் வாபஸ் பெறப்பட்டன. இவற்றில் Lorcaserinல் தலைவலி, களைப்பு, வாந்தி உள்ளிட்ட பக்க விளைவுகளுடன், மனநலப் பிரச்னை களும், இதயக் கோளாறுகளும் ஏற்படுவதாக தெரிந்ததால் வாபஸ் பெறப்பட்டது. பருமனை குறைப்பதில் எஃப்.டி.ஏ மற்றும் இ.எம்.ஏவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருந்து Orlistat மட்டுமே.

இது கொழுப்பு கிரகிக்கப்படுவதைக் குறைக்க உதவுகிறது. இதை எடுத்துக் கொள்வதால் மட்டுமே ஒட்டுமொத்த பருமனையும் உதறித் தள்ளி விட்டு, ஒல்லிபெல்லியாகி விட முடியாது. கடுமையான உடற்பயிற்சி, கூடவே உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றுடன் இந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளும் போது 3 சதவிகித எடைக் குறைப்புக்கு மட்டுமே இது உதவும். 100 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு 3 சதவிகித எடைக் குறைப்பு என்றால் வருடத்துக்கு வெறும் 3 கிலோ மட்டுமே குறைய முடியும்!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
ஏன் உடல் குண்டாகிறது

ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

1. மன அழுத்தம்,

2.மரபியல் காரணிகளான ஜீன்,

3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,

4.ஒழுங்கற்ற செரிமானம்,

5.அதிகமாக சாப்பிடுதல்,

6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,

7.சுறுசுறுப்பின்மை,உழைப்பின்மை,

8.உடற்பயிற்சி இல்லாமை,

9.உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,

10.சரியான தூக்கமின்மையும்,

11.அதிகளவு கொழுப்பு,சர்க்கரை(சாதம்)உணவுகளைசாப்பிடுவதாலும்,

12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவையும் காரணமாகின்றன.

13.நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது,

14 .தேவையற்ற நேரங்களில் தேனீர் அருந்துவது,

15. உடலில் தேவையற்ற கழிவுபொருட்கள் அதிகமாக சேர்ந்து இருப்பதும் உடல் எடை கூடுவதற்கான காரணமாகும்.


 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.