Panchathanthiram stories in tamil - பஞ்சதந்திரக் கதைகள்

Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#1
பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அந்த அரசன் சகல கலைகளிலும் வல்லவனாகவும் குடிமக்களின் குறை உணர்ந்து செங்கோலாட்சி புரிபவனாகவம் விளங்கினான். ஆனால் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கல்வியில் ஈடுபாடு அற்றவர்களாகவும், மூடர்களாகவும் இருந்தார்கள். நமக்குப் பின் இந்த ராஜ்ஜியத்தின் கதி என்ன என்ற கவலை அரசனைப் பிடித்துக் கொண்டது. இதற்கு என்ன செய்வது? பலமுறை யோசித்த அரசன் அரச சபையைக் கூட்டி பல சான்றோர்களையும் வரவழைத்தான். அவர்களிடம் மன்னன் தனது கவலையைச் சொன்னான். வந்திருந்த சான்றோர்களில் நீதிசாஸ்திரம் மட்டுமின்றி சகல சாச்த்திரத்திலும் வல்லவராக இருந்த சோமசன்மா என்பவர் எழுந்தார். அரசே! கவலைப் படாதீர்கள். நான் இவர்களுக்குத் தகுந்தமாதிரி கல்வியைப் புகட்டுகிறேன் என்றான். சோமசன்மா அரச குமாரர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முறைப்படி நீதி சாஸ்திரத்தை பஞ்சதந்திரக் கதையாகக் கூறத் தொடங்கினார். பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள். அவை மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரித்துவம் என்பனவாகும். அப்படிஎன்றால்? சிநேகத்தைக் கெடுத்துப் பகை உண்டாக்கல். சுகிர் லாபமானது தங்களுக்குச் சமமானவரோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல். சந்திவிக்கிரமாவது பகைவரை அடுத்துக் கெடுத்தல், அர்த்த நாசமாவது தன் கையில் கிடைத்தப் பொருளை அழித்தல், அசம்பிறேட்சிய காரித்துவமாவது ஒரு காரியத்தைத் தீர விசாரிக்காமல் செய்தல் என்று அர்த்தம். இக்கதைகளைக் கேட்டால் இவ்வுலக நடைமுறைகளையும் அதில் உண்டாகும் பிரச்சனைகளைச் சமாளிக்கிற விதங்களையும் தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி அரச குமாரர்களுக்கு நீதிக்கதைகளை போதிக்கத் துவங்கினார். அரசகுமாரர்களும் ஆர்வத்துடன் அந்தக் கதைகளைக் கேட்டு அப்படியே நல்ல போதனைகளைக் கதைவடிவில் கற்கத்துவங்கினார்கள். பஞ்சதந்திரக் கதைகள். இப்படித்தான் உருவாயின. அவற்றில் ஒவ்வொன்றாக இனி வரும் நாட்களில் பார்ப்போம். சரியா! நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.
 
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#2
நண்டு, கொக்கைக் கொன்ற கதை!

வசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் ஒரு கொக்கு தினசரி மீன் பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரி அதிக நேரம் காத்திருந்து மீனைப் போராடிப் பிடிப்பதால் கொக்கு சலிப்புற்றிருந்தது.


ஒரு நாள் கொக்கின் மூளையில் ஒரு யோசனை தோன்றியது. இந்த மீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம் விரும்பிய இடத்தில் கொண்டு போய் திண்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தது. அதற்கு ஒரு வஞ்சகமான திட்டமும் தயாரித்தது.

ஒரு நாள் கொக்கு வருத்தமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்கு நம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால் இது செயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன் முன் வந்தது.

“என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்”? என்றது. அதற்கு கொக்கு கூறிற்று "நான் மீனைகொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரியில்லை" என்றது.

“மனசு சரியில்லையா ஏன்”? என்றது மீன்.

‘அதையேன் கேட்கிறாய்..” என்று அலட்டியது கொக்கு.

"பரவாயில்லை சொல்லுங்களேன்' என்றது மீன். சொன்னால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றது மீன்.

மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தான் தெரியும்” என்றது.

“வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். இப்போது ஒரு மீனவன் இங்கே வரப்போகிறான்”, என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே" என்றது மீன்.. “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்” என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்கள் அனைத்தும் அதிர்ச்சியடைந்தன. அவை தங்களைக் காப்பாற்று மாறு கொக்கிடமே வேண்டின.

ஆனால் கொக்கு "நான் என்ன செய்வேன்? என்னால் மீனவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான், வேண்டுமானால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகிறேன். அதனால் எனக்கும் நல்ல பெயர் வரும். நீங்களும் பிழைத்திருப்பீர்கள்", என்றது மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“எங்கள் உயிரைக் காக்க நீங்களே உதவி செய்கிறேன் என்கிறீர்கள். அதன்படியே செய்யுங்கள்”, என்றன மீன்கள் எல்லாம் ஒருமித்த குரலில்.

கொக்குக்குக் கசக்குமா காரியம்?. நடைக்கு ஒவ்வொன்றாக குலத்திலிருக்கின்ற மீன்களை யெல்லாம் கௌவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்து.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

அந்த நண்டு கொக்கிடம் வந்து “வயோதிகக் கொக்கே! இந்த மீன்களையெல்லாம் எங்கே கொண்டு போகிறீர்களோ அங்கேயே என்னையும் கொண்டு போங்கள், என்னையும் மீனவனிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று கெஞ்சியது. நண்டு கெஞ்சுவதைப் பார்த்த கொக்கு அதன் மேல் இறக்கப்பட்டு நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை கண்டது நண்டு.

அதைப் பார்த்த நண்டுக்கு ஒரே அதிர்ச்சி.

வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் சட்டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? என்று நண்டு பயப்படத் துவங்கியது.உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் அதற்கு மூளை வேலை செய்தது. கொக்காரே! நீங்கள் என்மேல் இறக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். ஆனால் அங்கே என் உறவினர்கள் பலர் வரப்போகும் ஆபத்து தெரியாமல் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் உங்களுடன் வரத் தயார் செய்வேன்" என்றது நண்டு.

கொக்குக்கு ஒரே சந்தோஷம். இன்னும் நிறைய நண்டுகள் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து.

“அப்படியா, இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”. என்று கேட்டுக் கொண்டே பழைய குளத்திற்கு மீண்டும் நண்டைக் கொண்டு போனது.

குளத்துக்கு நேராக வரும்போதும் அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டுக் குளத்து நீரில் வீழ்ந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

குளத்தில் மிச்சம் இருந்த மீன்கள் பிழைத்துக் கொண்டன.

பாடம்: மீனைத் தின்பது தான் கொக்கின் குணமே என்னும் போது, கொக்கு மீன்களைக் காப்பதாகச் சொன்னதை மீன்கள் நம்பியிருக்கக் கூடாது. வாஞ்சக மனத்தான் உதவி செய்தாலும் அது அபாயத்தில் முடியும் ஆபத்துண்டு. எனவே ஒருவரை நம்பும் முன்பாக அவரது இயல்பான குணத்தை நன்கறிந்தே நம்புதல் வேண்டும் என்ற கதையை மந்திரியார் இளவரசர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

நமது பாரம்பரியக் கதைகளை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.
 
Last edited:
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#3
நான்கு நண்பர்கள் கதை!


அமராவதி நகரத்தில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை வறுமை மிகக் கொடுமையாக வாட்டியது. எனவே அவர்கள் தேஸாந்திரம் சென்று பிழைத்துக் கொள்ள முடிவெடுத்துப் புறப்பட்டார்கள். அப்படிச் சென்றவர்கள் ஒரு ஊரை அடைந்ததும் அங்கு சக்தி வாய்ந்த ஒரு யோகி இருப்பதாக அறிந்தார்கள்.

அவரிடம் சென்று தங்களின் தீராத வறுமைக்கு ஏதாவது தீர்வு கூறும்படி கேட்கலாம் என்று தீர்மானித்தார்கள். உடனே அவரிடம் சென்றார்கள். யோகி இந்த நான்கு நண்பர்களையும் பார்த்து "யார் நீங்கள்? எம்மிடம் வரக் காரணமென்ன?" என்று கேட்டார்

நண்பர்கள் நால்வரும் தங்கள் குறைகளைக் கூறினார்கள். அடிகளே! நாங்கள் கொடிய வருமையால் துன்புற்றிருக்கிறோம். வறுமை போக்க பொருள் தேடி தேசாந்திரமாக புறப்பட்டுள்ளோம்" என்று கூறினர்.

மேலும் "நீங்களோ பெரிய யோகி. எங்கள் நால்வருக்கும் பொன்னும் பொருளும் கிடைக்கும் வழியைக் காட்டித்தாருங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று அருள்புரியுங்கள். இல்லையேல் இங்கேயே உயிர் விடுவோம்" என்று கெஞ்சினார்கள் அந்த நால்வரும்.

யோகிக்கு அவர்கள் மீது இரக்கம் உண்டானது. அவர் பொருள்கிடைக்க தான் வழி செய்வதாகக் கூறினார். பின் நால்வர் தலையிலும் பருத்தியாலான திரிசீலைகளை வைத்தார். “இதோ பாருங்கள்! இத்திரிசீலையைத் தலையில் வைத்தபடியே இமயமலையை நோக்கிச் செல்லுங்கள், போகும்போது எவன் தலையிலிருந்து திரிசீலை எவ்விடத்தில் விழுகிறதோ அவனுக்கு அவ்விடத்தில் பொருள் கிடைக்கும். அதாவது புதையல் கிடைக்கும்”, என்று கூறி அனுப்பினார்.

இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்நால்வரும் அத்துறவியின் ஆணைப்படி இமையமலையை நோக்கி நடந்தார்கள்.

சிலநாட்கள் நடந்திருப்பார்கள், ஒருவரின் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது. உடனே அவன் அங்கு தோண்டிப் பார்த்தான். செம்பு உலோகம் எக்கச்சக்கமாக இருந்தது. மகிழ்ந்துபோன அவன் மற்ற மூவரையும் பார்த்து “நீங்களும் வேண்டிய மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

ஆனால் அவர்களோ “முட்டாளாகப் பேசாதே. இதனால் நம் வறுமை எந்த அளவும் குறையாது. நீ வேண்டுமானால் கொண்டு போ" என்று கேலியாகக் கூறி வேகமாக நடக்கவும் செய்தனர். முதலாமவனோ தன்னால் இயன்ற அளவுக்குத் செம்பு உலோகத்தை எடுத்துக்கொண்டு தன் ஊர்நோக்கித் திரும்பிவிட்டான்.

மீதமிருந்த மூவரும் தொடர்ந்து சில மைல்கள் தூரம் நடந்திருப்பார்கள், மூவரில் ஒருவன் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது.

உடனே அந்தத் திரிசீலைக்குரியவன் அந்த இடத்தில் தோண்டினான். வெள்ளிக் கட்டிகள் ஏராளமாக இருந்தன. “நாம் இவைகளை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகலாம்”, என்றான் அந்த இரண்டாமவன்.

ஆனால் மற்ற இருவருக்கும் ஆசை அதிகமாகியது. முதலில் செம்பு பிறகு
வெள்ளி என்றால் இன்னும் போய்ப் பார்ப்போம். நமக்கு தங்கம் வைரம் என்று மேன்மேலும் கிடைக்கலாம் என்று எண்ணலாயினர். உடனே மீதமிருந்த இருவரும் வெள்ளிக்கட்டிகள் கிட்டியவனைப் பார்த்து “இது யாருக்கு வேண்டும்? இது நம் வறுமையை முற்றிலும் ஓட்டாது. நீ வேண்டுமானால் கொண்டு செல்”, என்று கூறி நடக்கலானார்கள்.

இரண்டாமவன் அவ்வெள்ளிக் கட்டிகளை எடுத்துக் கொண்டு தன் ஊர்நோக்கித் திரும்பினான். சில மைல்கள் இருவரும் நடந்தார்கள்.

ஒருவன் தலையிலிருந்த திரிசீலை கீழே விழுந்தது. அவன் அங்கு தோண்டினான். பொன் கட்டிகள் புதையலாக இருந்தன. “நாமிருவருமே இதை எடுத்துக்கொண்டு ஊர் போய்ச் சேரலாம் வா”, என்றான் மூன்றாமவன் மற்றவனிடம்.

ஆனால் கடைசிக்காரனுக்கு இப்போது பேராசை தொற்றிக் கொண்டுவிட்டது. அவன் இன்னும் மேலே போய்ப் பார்க்க எண்ணினான். அதனால் அவன் தங்கக்கட்டி கிடைத்தவனிடம் அலட்சியமாக "இது யாருக்கு வேண்டும்? எத்தனை நாட்களுக்கு இது நம் வறுமையை போக்கும்? இன்னும் போனால் எனக்கு நவரத்தினக் குவியலே கிடைக்கும். நீ வேண்டுமானால் எடுத்துக் கொண்டு உன்னூர் போய்ச் சேர்" என்று துச்சமாகப் பேசிச் சென்றுவிட்டான்.

மூன்றாமவன் அத்தனைத் தங்கக் கட்டிகளையும் மூட்டை கட்டிக்கொண்டு தன் சொந்த ஊர் நோக்கித் திரும்பினான்.

முதலாமவனுக்கு செம்பு கிடைத்தது, இரண்டாமவனுக்கு வெள்ளி கிடைத்தது, மூன்ராமவனுக்கோ தங்கக் கட்டிகள் கிடைத்தது, அப்படிஎன்றால் நான்காவதாளான தனக்கு நவரத்தினங்கள் தானே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான்காவது ஆள் நடந்து கொண்டே இருந்தான் இமையமலையை நோக்கி. நடக்க, நடக்க அவனுக்குப் பசியும் களைப்பும் அதிகமாகி தடுமாறியது. அப்பொழுது அவனெதிரில் ஒருவன் எதிர்பட்டான். அவன் தலையில் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. உடலெல்லாம் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த நான்காமவன் அவனை நோக்கி நீ யார்? உன் தலைமேல் ஏன் சக்கரம் சுழல்கிறது? என்று கேட்டான். அப்படி கேட்கும்போதே அந்தச் சக்கரம் கேட்ட அந்த நான்காமவனான பேராசைக்காரன் தலைமேல் வந்துவிட்டது.

திடுக்கிட்ட அவன் “இதென்ன அநியாயம்? நான் கேட்கும்போதே உன் தலையிலிருந்தது என் தலைமேல் வந்து இந்தச் சக்கரம் சுற்ற ஆரம்பித்துவிட்டதே” என்று பதறினான்.

இதுவரை நான் இந்தச் சக்கரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு துயரப் பட்டுக்கொன்டிருந்தேன்.

இன்று காலை குபேரன் வந்து, ஒருவன் தலையில் திரிசீலையோடு வருவான், வருபவன் பேசுவான், பேசும்போது இந்தச் சக்கரம் அவன் தலைக்கு மாறி உனக்குச் சாபவிமோசனம் ஆகும் என்று கூறினான். அவன் கூறினபடி நீ வந்தாய். வந்து என்னை விடுவித்தாய். நான் வருகிறேன் என்று அவன் புறப்பட்டுப் போனான்.

"சரி எனக்கு எப்போது இதிலிருந்து விமோசனம் கிடைக்கும்" என்றான் நாலாமவன்.

"அடுத்த பேராசைக்காரன் வரும் போது" என்றான் விடுதலையானவன்.

பாடம்: பேராசை பெருநஷ்டம். நமக்கென்று கிடைக்கும் பொருளை வைத்து இன்புற்று வாழத் தெரியாதவன் எதையும் அனுபவிக்காமல் இருப்பதையும் இழந்து நிற்பான்.
 
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#4
பாம்பைக் கொன்ற கீரியின் கதை

தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் ஒரு மாரப்பன் என்றொரு குயவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

தங்களுக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தைப்போக்க ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். இப்படி சிலகாலம் சென்றது. ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நீண்ட கால ஏக்கத்திற்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.

ஒருநாள் தண்ணீர் குடத்துடன் புறப்பட்ட சுந்தரி, கணவனிடம் “குழந்தை தூங்குகிறது. அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள், கீரி கடித்துவிடப் போகிறது”, என்று கூறிவிட்டுக் குளக்கரைக்குச் சென்றாள்.

குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்த குயவனுக்கு திடீர் தாகம் உண்டாயிற்று. அவன் தண்ணீர் அருந்த சமையலறைக்குள் சென்றான்.

அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் எங்கிருந்தோ வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. கீரி அதைப் பார்த்து விட்டது. அடுத்த வினாடி கீரி அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது.

அத்துடன் தன் எஜமானியின் வரவு நோக்கி தெரு வாசலருகில் நின்றும் கொண்டது.

தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள்.

அவள் கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் கடித்து விட்டது. அதனால் தான் அதன் வாயில் ரத்தம் சொட்ட நிற்கிறது என்று தவறாகப் புரிந்து கொண்டாள்.

நிலைமையைத் தீர ஆராயாமல் "அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டதே என்று ஆத்திரம் கொண்டு அடங்காக் கோபத்தோடு அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள்.

கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடினாள். குழந்தை தொட்டிலில் அப்படியே உறங்கிக் கொண்டுதான் இருந்தது.

பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.

"அடடா பாம்பைக் கொன்ற இரத்த்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே!" என்று கண்ணீர் விட்டுக் கதறத் துவங்கினாள்.

க்ஷனநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை உள்வாங்கிக்கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான்.


பாடம்: எந்தப் பிரச்சனையையும் தீர ஆராயாமல் அவசர புத்தியால் முடிவெடுத்தால் அது தவறாகிவிடும்.
 
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#5
தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்ற இரு இளைஞர்கள் நண்பர்களாயிருந்தனர். அவர்கள் வியாபாரத்திற்காக ஒர் நாள் பயணம் சென்றனர். வழியில் ஒரு காட்டில் அவர்களுக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதில் நிறைய தங்கக் காசுகள் இருந்தன.

தர்மபுத்தி துஷ்டபுத்தியிடம் "நாம் இருவரும் இதை சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். ஊர் திரும்பி மகிழ்ச்சியாக வாழலாம்" என்றான். ஆனால் துஷ்டபுத்திக் காரனோ வஞ்சகம் ஒன்றை நினைத்தான். அவன் தர்மபுத்தியிடம் "இப்போது இந்தப் புதையலை நாம் ஊருக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். தற்போது செலவுக்காக ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம். மீதியை இந்த மரத்தடியில் புதைத்து வைப்போம். பின்னர் தேவைப்படும்போது வந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினான்.

துஷ்டபுத்தியின் கெட்ட எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத தர்மபுத்தி அதற்கு ஒப்புக்கொண்டான். இருவரும் புதையலை மரத்தடியில் புதைத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தனர். துஷ்டபுத்தி தன் கையிலுள்ள காசுகளைச் சீக்கிரமே செலவு செய்து விட்டான். மரத்தடியிலுள்ள மொத்த காசுகளையும் தர்மபுத்திக்குத் தெரியாமல் தாமே எடுத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் வந்தது. அவன் காட்டுக்குச் சென்று மொத்த தங்கக் காசுகளையும் எடுத்து வந்தான்.

சில மாதங்கள் கழிந்தன. தர்மபுத்தி துஷ்டபுத்தியிடம் வந்தான். மரத்தடியிலுள்ள காசுகளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று அழைத்தான். இருவரும் காட்டிற்குச் சென்றனர். மரத்தடியில் தோண்டினர். அங்கே புதையல் பானையைக் காணவில்லை. காசுகளை துஷ்டபுத்திதான் எடுத்திருக்க வேண்டும் என தர்மபுத்திக்கு சந்தேகம் வந்தது. அவன் அதுபற்றி துஷ்டபுத்தியிடம் கேட்டான். துஷ்டபுத்தியோ தான் எடுக்க வில்லை என்று மறுத்தான். இறுதியாக தர்மபுத்தி அரசரிடம் சென்று வழக்கு தொடுத்தான்.

துஷ்டபுத்தி அரசரிடம் "அரசே! நான் நண்பனுக்குத் துரோகம் செய்பவன் அல்ல. காசுகளை நான் எடுக்கவில்லை. இதற்கு வனதேவதையே சாட்சி" என்றான்.

"வன தேவதை வந்து சாட்சி சொல்லுமா உனக்காக?" என்றார் அரசர்.

துஷ்டபுத்தியோ காட்டிற்கு சென்று வனதேவதையிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்றான். மறுநாளே கட்டுக்குச் சென்று பார்ப்போம் என்று அரசர் முடிவு செய்தார்.

அன்றைய இரவு வீட்டிற்கு வந்த துஷ்டபுத்தி தன் தந்தையை அழைத்தான். நடந்த அனைத்தையும் கூறினான். பிறகு தன் தந்தையையே வன தேவதை போல் நடிக்கத் தயார் செய்தான். அன்றிரவே ஒரு மர பொந்தில் தந்தையை ஒளிந்திருக்கச் செய்து அரசர் கேட்கும் போது தன் மகன் குற்றவாளி இல்லை என்று அசரீரி போல பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

மறுநாள் அரசரும் துஷ்டபுத்தி மற்றும் தர்மபுத்தி ஆகியோரும் காட்டை அடைந்தனர். வனதேவதையிடம் அரசர் கேள்வி கேட்டார். உடனே மரப்பொந்திலிருந்த துஷ்டபுத்தியின் தந்தை "நான் வனதேவதை பேசுகிறேன். என் பிள்ளை குற்றம் செய்யவில்லை. தர்மபுத்தி தான் திருடினான்" என்று அசரீரி போலக் கூறினார்.

அரசர் அந்த மரபொந்திற்கு அருகே சென்று சற்று நேரம் அமைதியாக சிந்தித்தார். அரசருக்கு சந்தேகம் வந்தது. தர்மபுத்தியோ அரசரிடம் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவும், உண்மையைக் கொண்டு வெளியே கொண்டு வர ஒரு யோசனை இருப்பதாகவும் கூறினான். அரசர் அவ்வாறே செய்யுமாறு தர்மபுத்தியை அனுமதித்தார்.

தர்மபுத்தி ஓடிச் சென்று காய்ந்த சருகுகளையும் குச்சிகளையும் திரட்டி வந்து, மரத்தடியில் போட்டு தீமூட்டினான். குபுகுபுவென தீப்பற்றிக் கொண்டது. தர்மபுத்தியின் செயலைக் கண்டு மன்னர் திகைத்தார்.


சற்று நேரத்தில் மரப்பொந்தில் ஒளிந்துகொண்டிருந்த துஷ்டபுத்தியின் தந்தைக்கு உடல் வெந்து போனது. மறுநொடியே மரப்பொந்திலிருந்து அவர் வெளியே குதித்தார்.

"மன்னா! ஏதோ பிள்ளைப் பாசத்தால் என் மகனுக்காக நான் தான் மரப்பொந்திலிருந்து வனதேவதை போல பேசினேன்" என்று உண்மையைக் கூறிவிட்டார். காசுகளைத் திருடியதோடு அல்லாமல் நண்பன் மீது பழியும் சுமத்திய துஷ்டபுத்திக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

நீதி: பேராசை பெருநஷ்டத்தையே தரும்
 
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#6
ஆப்பு அசைத்த குரங்கின் கதை!


ஒரு காட்டுப் பகுதியில் குரங்கு ஒன்று வெகுநாட்களாக வசித்து வந்தது. அது மிகவும் சேட்டைக்கார குரங்காக இருந்தது. பின் விளைவுகளை எண்ணாமல் மிகுந்த குரும்புத்தனம் செய்யும் குரங்காக இருந்தது.

அந்த குரங்கு வசித்த மரத்தடியில் ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்குள் இருந்தது அவன் குடிசை. மரங்களை வேட்டிவருவது, கோடரியால் பிளப்பது, துண்டுகளாக்கி பக்கத்து கிராமங்களுக்குக் கொண்டு விற்று அதைக்கொண்டு குடும்பம் நடத்துவது என அவனது அன்றாட வேலை. அன்று அப்படித்தான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். களைப்பு வந்து அடிமரத்தைப் பாதியளவு பிளந்திருந்த அப்பிளவுக்கு இடையில் ஒரு மரச்சக்கையை (ஆப்பு) வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

விறகு வெட்டியின் செயலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்த குரங்கு அவன் சென்றவுடன் கீழே இறங்கி வந்தது.

விறகு வெட்டி விட்டுச் சென்ற மரத்துண்டின் மீதேறி பிளவுப்பட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் அமர்ந்து கொண்டது. தனது வால் மரத்துண்டின் பிளவில் இருப்பதை அது அறியவில்லை. பின் தனது குறும்பு வேலையைச் செய்ய ஆரம்பித்தது. ஆப்பாக செருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது.

திடீரென்று அந்த ஆப்புத்துண்டு குரங்கின் கையோடு வந்துவிட்டது. உடனே பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது. பிளவுக்குள் தொங்கியிருந்த வால் நசுங்க குரங்கு அலறியது. ஓய்வாக உள்ளே இருந்த மரவெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் குரங்கு வலி தாங்காமல் பரிதாபமாக மாண்டு போனது.

பாடம்: 'பின்' விளைவுகளை ஆராயாமல் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது.

நமது பாரம்பரிய கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையே ஆகும்.
 
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#7
காக்கை பாம்பை கொன்ற கதை


ஒரு பெரிய மரம். அதில் ஆணும், பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு காக்கை இடும் முட்டைகளை யெல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.

பலநாட்கள் இப்படியே கழிந்தன! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கருனாகத்தைக் காக்கை என்ன செய்ய முடியும்?, அதற்காக விட்டுவிட முடியுமா, விடலாமா?.

ஒரு நரியாரிடம் ஆலோசனை கேட்டது. நரி சரியான யோசனை ஒன்றைச் சொன்னது. ” அந்தப்புரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்துக்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளைக் கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்கள் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டு விடு என்றது”.

காக்கை தாமதிக்கவில்லை. பறந்தது அந்தப்புரத்துக்கு. பார்த்தது அரசகுமாரியின் நகைகளை. ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.

அங்கு இருந்த அரசகுமாரியின் தோழிகள், ஆ! காக்கை முத்துமாலையைக் கொத்திட்டுப் போகுது என்று கத்தினர். உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள். காக்கை மெதுவாக அவர்கள் கண்ணில் படும்படியே பறந்தது. அவர்கள் அருகில் வந்ததும் பார்க்கும்படி அந்த முத்துமாலையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டது.

உடனே சேவகர்கள் தம் கையிலிருந்த ஈட்டிகளால் அந்தப் பொந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள். சேவகர்கள் முத்துமாலையுடன் அரன்மனை நோக்கிச் சென்றார்கள். சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

நீதி: விவேகத்தோடு கூடிய வேகமே வெல்வதற்கு வழி!
 
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#8
[h=2]ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா?[/h]

ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.
 
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#9
பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு!

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
"ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.
பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்
 
Joined
Jul 13, 2012
Messages
41
Likes
55
Location
Trichy
#10
நேர்மை உயர்வு தரும்

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.

ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.