Patient and allopathy doctor

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது.


‘அடுபாரா முட்டுங்கலிம்’என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தூங்கப்போனேன். டொக்ரர் எனக்கு முன் நின்றார். வெள்ளை கோட் அணிந்திருந்த உயரமான பெண்மணி, சுவர் ஓரமாக எலி ஓடுவதுபோல நினைத்துப்பாராத வேகத்தில் குடுகுடுவென ஓடினார். என்னைத்தான் இவ்வளவு நேரமும் அழைத்தார். நீண்ட நேரம் சப்பியதால் என் பெயர் அப்படி உருக்குலைந்து வெளியே வந்திருந்தது.


‘உங்கள் பெயர் என்ன மொழி?’ என்றார் டொக்ரர். தமிழ் என்றேன். ’அப்படியென்றால்?’ ‘இந்தியாவில் ஒரு மாநிலமே பேசும் மொழி. 70 மில்லியன் மக்கள்’என்றேன். ‘எனக்குத் தெரியவில்லையே’என்றார். ‘60 மில்லியன் மக்கள் மட்டுமே குஜராத் மொழி பேசுகிறார்கள்’என்ற உபரித் தகவலை அவர் கேட்காமலே சொன்னேன். இது தேவையில்லாதது. அவருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். கைக்குக் கிட்ட இருந்த ஊசியை எடுத்து புஜத்தில் குத்தி மருந்தைச் செலுத்தினார். அதற்குப் பிறகு என் வியாதியைக் கேட்டறிந்தார்.


எங்கள் இரண்டாவது சந்திப்பு இன்னும் மோசமாக இருந்தது. நான் அவருக்கு முன் கடுதாசி கவுணை அணிந்து கூச்சத்துடன் அமர்ந்திருந்தேன். மண்டையில் நீர் நிரப்பியதுபோல பாரத்தில் அதுபாட்டுக்குக் கவிழ்ந்து கிடந்தது. இரண்டு கையாலும் பிடித்துத் தூக்க வேண்டிய ஒரு தொக்கையான கோப்பை அவர் படித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து மருந்து மணம் வீசியது. எனக்கு நெஞ்சு திடுக்கென்றது. நான் வந்து ஆறு மாதம் ஆகவில்லை, இந்தக் கோப்பை நிறைத்து இத்தனை வியாதிகள் சேர்ந்துவிட்டனவே. பெருமைப்படுவதா இல்லையா என யோசித்தேன். ‘காலையில் எத்தனை வீடுகளுக்கு பேப்பர் போடுகிறீர்கள்?’ நான் பதில் பேசவில்லை. ‘இன்னும் சுப்பர் மார்க்கெட்டுகளில் பாரமான பெட்டிகளைத் தூக்கி அடுக்குகிறீர்களா?’ நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மருந்தை எழுதி என்னிடம் தந்து முழங்காலில் பூசச் சொன்னார். ‘தலை நோவுக்கு முழங்காலில் பூசினால் சரியாகிவிடுமா?’ என்று கேட்டேன். பின்னர்தான் தெரிந்தது வேறு யாருடையவோ கோப்பை அவர் அத்தனை நேரமும் பார்வையிட்டிருக்கிறாரென்று.


ஒவ்வொரு தடவையும் அவருக்கும் எனக்கும் இடையில் ஏதோ ஒன்று நடந்தது. ஒருமுறை பூட்ஸ் அரையடி ஆழம் புதையும் பனியில் நடந்து அவரிடம் போனேன். மூச்சை விட்டால் திருப்பி இழுக்க முடியவில்லை. சோதித்துவிட்டு ‘பால் குடிப்பதை நிறுத்துங்கள்’என்றார். நிறுத்தினேன். ‘தேநீரும் வேண்டாம்’என்றார். அதையும் விட்டேன். பின்னர் ‘கோப்பியைக் காட்டக் கூடாது’என்றார். அதையும் செய்தேன். எஞ்சியது தண்ணீர் ஒன்றுதான். அதற்கும் தடை வந்துவிடுமோ என அதிகம் நடுங்கியதால், வியாதி பெரிசாகத் தெரியவில்லை. இன்னொரு தடவை காதுகுத்துக்கு மருந்து கேட்டுப் போனேன். ‘தேங்காய் எண்ணெய் ஒரு சொட்டு காதுக்குள் விடுங்கள்’என்றார். 60 வருடங்களுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் அம்மா சொன்னதும் அதுதான். இந்த 60 வருடமும் மருத்துவம் அதே இடத்தில்தான் நிற்கிறது. கழுத்து வலி என்று போனால் பயற்றை வறுத்து டவலிலே உருளைபோலச் சுருட்டி அதற்குமேல் படுக்கச் சொல்கிறார். எந்த மருத்துவப் புத்தகத்தில் தேங்காய் எண்ணெய் என்றும் உருட்டி வைத்த பயறு என்றும் எழுதிவைத்திருக்கிறது.


எந்தச் சின்ன வியாதி என்று அவரைப் பார்க்கப் போனாலும் அந்தப் பகுதி உறுப்புக்குத் தேவைப்படும் அத்தனை பரிசோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து முடிப்பார். எக்ஸ்ரே, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ. என்று பெறுபேறுகள் வரும். அவற்றை கணினியில் உருட்டி உருட்டி மேலும் கீழும் தேடி ஆராய்வார். 4-ம் வகுப்பு மாணவனிடம்


8-ம் வகுப்புக் கணக்கைச் செய்யச் சொன்னதுபோல நெற்றியைச் சுருக்கி யோசிப்பார். சட்டென்று ஒரு வியாதியின் நுனியைக் கண்டுபிடித்து முன்னெப்போதுமே கேள்விப்பட்டிராத பெயரைச் சொல்லிக் கிலியூட்டுவார். இந்தச் சோதனைகள் இரண்டு மாதகாலமாக நடந்துகொண்டிருக்கும்போதே வியாதி தானாக நின்றுவிடும். இறுதியில் உங்களிடம் கேட்பார், ‘எதற்காக இத்தனை பரிசோதனைகள் செய்தோம்?’ அப்படிக் கேட்கும்போது உங்களுக்கு மருத்துவரிடம் ஏன் வந்தோம் என்பது மறந்துபோயிருக்கும்.


தடுப்பூசி போடப்போகும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் பெயரை நினைவூட்ட வேண்டும். அவர் மேசையில் இருப்பது உங்கள் கோப்புதான் என்பதைத் தலைகீழாகப் படித்து உறுதிசெய்வது நல்லது. தடுப்பூசிக் காலங்களில் வரவேற்பறையை நிறைத்து நோயாளிகள் குழுமியிருப்பார்கள். அறையை உலோக இருமல்கள் ஆக்கிரமித்திருக்கும். மருத்துவர் நின்ற நிலையில் தடுப்பூசிகளைப் போட்டுத்தள்ளுவார். என்னுடைய முறை வந்தது. நீண்ட சேர்ட் கைமடிப்பைச் சுருட்டிச் சுருட்டி புஜத்துக்கு மேல் ஏற்றியிருந்தேன். டொக்ரர் பஞ்சிலே ஸ்பிரிட்டைத் தோய்த்து தோளிலே பூசிவிட்டு ஊசியைச் செலுத்தினார். அந்த வேளை அவருக்கு குஜராத்திலிருந்து தொலைபேசி வந்தது. புதுவிதமான மொழியில் சத்தமாகப் பேசிவிட்டுத் திரும்பினார். நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். ஓர் ஊசி நிறைய மருந்தை எடுத்து என் தோள்மூட்டில் குத்த வந்தார். நான் வெலவெலத்துப்போய் எழுந்து நின்று, ஏற்கனவே அவர் குத்திவிட்டாரென்று சொன்னேன். அவர் நம்பவில்லை. அவரை ஏய்த்துவிட்டுத் தப்பியோடப் பார்க்கிறேன் என்று நினைத்தார். என்னைப் பார்த்தார். பின்னர் ஊசியைப் பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்க்கத் திரும்பியபோது நான் மறைந்துவிட்டேன்.


ஒரு வருட காலமாக என் உடம்பைத் தேமல் போல ஒன்று பிடித்திருந்தது. பலவிதக் களிம்புகளைத் தந்தார். ஒருவிதமான பவுடரைப் பூசச் சொன்னார். ஒன்றுக்குமே பயன் கிடைக்கவில்லை. தேமல் பாட்டுக்கு இனப்பெருக்கம் செய்தது. ஒருநாள் அவரைப் பார்க்கப் போனபோது சோளத்தைப் பட்டுப்போல அரைத்துப் பூசச் சொன்னார். ‘நாளுக்கு எத்தனை தரம்?’ சொன்னார். ‘எத்தனை நாள் தொடர வேண்டும்?’ ‘வியாதி மாறும்வரை’. ‘சாப்பாட்டுக்கு முன்னரா பின்னரா?’ ‘எப்பவும் பூசலாம்’என்றார். என்ன ஆச்சரியம்! ஒரு வார காலத்திலேயே வியாதி குணமாகிவிட்டது. அப்படியாயின் ஏன் அந்த மருந்தை அவர் ஒரு வருடம் முன்னரே தரவில்லை.


இது மருந்துக் கடையில் கிடைக்காது. சுப்பர் மார்க்கெட்டில்தான் வாங்கலாம். விற்பனைப் பெண்ணிடம் இதை எதற்குப் பாவிப்பார்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார், ‘ஆடைகளை இஸ்திரி பண்ணும்போது சோளமா கரைத்த தண்ணீரைத் தெளித்தால் உடுப்புகள் விறைப்பாக நிற்கும். அல்லது சூப் செய்யும்போது அதைக் கெட்டியாக்கவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்’என்றார். சலவைக்காரர்களும் சமையல்காரர்களும் மட்டுமே உபயோகப்படுத்தும் ஒரு பொருள் எப்படி மருந்தானது? எந்த மருத்துவப் புத்தகத்தில் இப்படி எழுதிவைத்திருக்கிறது. இவர் எழுதும் மருந்துகளை வாங்குவதற்கு அடிக்கை பலசரக்குக் கடைக்குப் போக வேண்டிவருகிறது. இப்பொழுது வீட்டிலே கடலை எண்ணெய், பாசிப் பருப்பு, புதினாக் கீரை, மைதா மாவு, இஞ்சிக் கிழங்கு, காளான், கருப்பட்டி என்று சகலவிதமான பொருள்களையும் சேமித்து வைத்திருக்கிறோம். அடுத்த வியாதிக்கு என்ன எழுதுவாரோ? எதற்கும் தயாராக இருப்பது நல்லது.

dissent


.நோயாளிகள்,உடலாலும் உள்ளத்தாலும் நொறுங்கி போனவர்கள்.
நொறுங்கியவர்களின் பலஹீனம் நவீன மருத்துவத்தின் பலம்
.தக்காளியில் இதய நோய்க்கான தீர்வு உண்டு
நமக்கு கற்ப்பிக்கும் ஒரே பாடம் அலோபதி எனப்படும் மேற்க்கத்திய மருத்துவம் முறையாக கற்ப்பிக்க படவில்லை .
கற்றவர்களில் எல்லோரும் அனுபவம் தேடி அலைகிறார்கள்.
அதனால் பாதிக்கப்படுவது வழியற்ற நோயாளிகள்.

மருத்துவத்தை சிறப்பாக பார்த்துக்கொள்வதைவிட மருத்துவத்துக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பதே சிறப்பு!

courtesy--;"the indhu"
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. விந்தையாகவும் இருக்கிறது. அந்த ஆங்கில மருத்துவரும் அவருடைய மருந்து அளிக்கும் திறமையும் மிகவும் வினோதமாக இருந்தது. சுவையான பகிர்வுக்கு நன்றி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.