Penmai Valentines Day Contest!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
நட்புக்களுக்கு வணக்கம்!

பிப்ரவரி மாதம் என்றாலே இளம் மனங்களில் ஒரு துள்ளல் வரும். ஏன் என்றால் காதலர் தினம் கொண்டாடப்படும் மாதம் அது தானே?

“காதல் காதல் காதல்... காதல் போயிற் காதல் போயிற்.... சாதல் சாதல் சாதல்”. என்றார் நம் பாரதி. இதன் மூலம் காதலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திலும் காதல் என்ற உணர்வு உண்டு. காதல் இல்லையேல் இப்பூமி வறண்ட பாலைவனம் தான்.

இத்தகைய சிறப்பு மிக்க காதலை பெருமைப்படுத்தும் விதமாக பெண்மை இந்த மாதச் சிறப்புப் போட்டியாக சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறது.

"ஆதலினாற் காதல் செய்வீர்!" இந்தத் தலைப்பில் கதையை எழுதி இங்கே பதியவும்.


விதிமுறைகள்:

  • ஒரு உறுப்பினர் ஒரு கதையை மட்டுமே பகிரவேண்டும்.
  • இங்கே போட்டிக்காக பதியப்பட்டிருக்கும் கதை உங்களின் சொந்த எழுத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட கதையாகவோ அல்லது வேறு தளத்திலிருந்து எடுத்துப் பகிரப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.
  • கதை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மட்டுமே இருக்கவேண்டும்.
  • கதையை இங்கே பகிர்வதற்கான கடைசி நாள்: பிப்ரவரி 28, 11:59 pm ist.
 

kirubajp

Friends's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 12, 2014
Messages
207
Likes
797
Location
திருவாரூர்
#3
ஆதலினாற் காதல் செய்வீர்!:eek:


இன்று காதலர் தினம், மெரினாவே காதலர்களின் பாத சுவடுகளை தூக்கி சுமந்து கொண்டு இருந்தது. அலைகளின் நடுவே எழும் ஓசைக்கூட காதலின் பரிபாசையாகவே ஒலித்துக் கொண்டிருந்தது.

நிறுத்தி கிடந்த படகின் அடியில் ஒற்றை ரோஜாவோடு அமர்ந்திருந்தான் சுரேந்தர். அந்த பூ அவனிடம் ஏதோ உறைப்பது போலவே இருந்தது. அதை பார்த்தபடி சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். சுரேந்தர் சொந்தமாக பீட்சா ஷாப் வைத்து உள்ளான், எம்.பி.ஏ கோல்டு மெடலிஸ்டு வேறு. அதிகமான தன்னம்பிக்கை உடையவன். அம்மாவின் செல்லப்பிள்ளை அம்மா தான் உலகம் என்று இருப்பவன். மணலை கையால் எடுத்து குவித்தபடி அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் வைலட் நிற சுடிதாரில் பெண் உருவம் ஒன்று நின்று கொண்டிருந்தது. தலையை தூக்கிப் பார்த்தான் குவிந்த அன்னிச்சை மலராய், சூரியனை மறைக்கும் பிறையாய் நின்று கொண்டிருந்தாள் சாதனா. சிறிதாக புன்னகை சிந்தினான், அவளும் அதே அளவு குறையாமல் புன்னகையை சிந்தினாள்.

“ரொம்ப லேட் ஆகிட்டா.. ஸாரி.” என்ற படி அருகில் அமர்ந்தாள். அவன் பரவாயில்லை என்பது போல் தலையை ஆட்டினான்.

“என்ன ரோஸ் சூப்பரா இருக்கு..” அவளிடம் நீட்டினான்.

“தேங்யூ..”

சுரேந்தர் சிரித்தபடியே அமர்ந்திருந்தான் . அவனை சிறிது நேரம் அப்படியே பார்த்த படி அமர்ந்திருந்தாள் சாதனா.

“எங்களோட காதல் ஆரம்பமாகி இதோட ஆறு ஆண்டு முடிவடைய போகுது. முதல் முதலா நான் சுரேந்தர எங்க பார்த்தேன். ம்ம்.. இதே கடற்கரையில தான். ஆனா அப்போ அவருக்கு நான் யாரோ

“விசாலி என்ன எதுக்கு இப்போ இங்க அழைச்சிட்டு வர உங்க இரண்டு பேருக்கும் நடுவுல நான் என்ன தூதா.”

“ஏய் சாதனா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஏதோ பதட்டமாவே இருக்கு, பேஸ் புக்குல பார்த்து பேசுனப்போ எனக்கு ஒன்னும் தெரியல, ஆனா பேஸ் பார்த்து பேசனும்னு நினைக்கிறப்போ ரொம்ப பயமா இருக்கு.”

“இந்த பயம் இருக்கவ ஏன் காதலிச்ச??”

“நீ என் கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும்னு நினைக்கிறேன்.”

“காதலையாவது நீ சொல்லுவியா இல்ல அதையும் நானே சொல்லவா.”

“இல்ல அதெல்லாம் நானே சொல்லிடுவேன்.”

“சாமர்த்தியம் தான்..” கொஞ்ச தூரம் நடந்து போனோம் கடற்கரையோரமாக சுரேந்தர் நின்னுகிட்டு இருந்தாரு. நல்ல அழகு, துருத்துரு பார்வை, கண்ணு தான் அதிகமா பேசுனது. நாங்க ரெண்டு பேரும் எதிர்ல போய் நின்னோம். அவரு எதுவுமே பேசல வெட்கப்பட்டு நின்னாரு. விசாலியும் அப்படி தான், ஆனா நான் சும்மா இருக்க முடியாதே எல்லோரோட காதலுக்கும் நடுவுல தூணாவும், தூதாவும் இருக்கது நண்பர்கள் தானே அதனால நானே ஆரம்பிச்சேன்.

“ஹாய் நான் சாதனா.. இவ விசாலி..” என்று கையை நீட்டினேன். அவரும் சிரித்துக் கொண்டே கையை நீட்டினார்.

“நீங்க சென்னை தானா, உங்க வீட்டுல எத்தனை பேரு, பீட்சா கடை நல்லா போகுதா, எங்க விசாலிய உங்களுக்கு பிடிச்சிருக்கா??”

கேள்வியை நானே தொடுத்து வைத்தேன். அவர் சிம்பிளாக தலையை அசைத்தார்.

“என்ன எதுவுமே பேச மாட்டேங்கிறிங்க, ஏன் நேர்ல பார்த்ததும் வாயடைச்சி போச்சா??” என்றேன்.

அவர் சைகையாலேயே தன்னால் பேச முடியாது என்பதை எங்களுக்கு உணர்த்தினார் அதே புன்னகை மாறாமல், ஆனால் என் விழியில் நீர் சுரந்தது. நான் திரும்பி விசாலியை பார்க்க அவள் திரும்பி நடந்து கொண்டிருந்தாள் நான் சுரேந்தரிடம் கையை காட்டிவிட்டு அவளை நோக்கி ஓடினேன்.

“ஏய் விசாலி ஏன் வந்துட்ட??”

“பின்ன, கைய ஆட்டி, கால ஆட்டியே பேச சொல்றியா??”

“என்ன விசாலி இப்படி பேசுற??”

“சாதனா சரியான ஃபிராடா இருப்பான் போல, இரண்டு மாசமா சாட் பண்றேன் ஒரு தடவை கூட தான் ஊமைன்னு சொல்லவே இல்ல.”

“நீ சாட்டு தான பண்ணுன வாய்ஸ் கால் பண்ணல இல்லையா?? அவரு நேர்ல சொல்லிக்கலாம்னு இருந்திருக்கலாம் இல்லையா?? அதுக்காக நீ மூஞ்சில அடிச்ச மாதிரி வந்துட்ட.”

“இங்க பாரு என்ன பத்தி உனக்கு தெரியும் நான் எப்போதுமே பேசிகிட்டே இருக்கவ, எனக்கு வரப்போறவரும் என்கூட சிரிச்சி பேசனும்னு தான் ஆசைபடுறேனே தவிர இந்த மாதிரி ஊமைய இல்ல. ஒரு காதலிக்கு ஆனந்தமே காதலன் சொல்ற ஐ லவ் யூங்கிற வார்த்தையில தான் இருக்கு. அதுவே அவரால சொல்ல முடியாது. நீ வா நம்ப போகலாம் முதல்ல போய் அன் ஃப்ரண்டு பண்ண போறேன்.” என்று வேகமாக நடந்தாள்.

நான் திரும்பி சுரேந்தர பார்த்தேன் இயல்பா கடல் அலைகளுல கால்கள நனைச்சபடி நின்னு கிட்டு இருந்தாரு.

அந்த நிகழ்வுக்கு அப்பறம் ஒரு வாரம் கழிச்சி நான் சுரேந்தர அவரோட கடையில போய் பார்த்தேன். அதே சந்தோஷம் மாறாம என்ன வரவேற்றாரு, விசாலி எப்படி இருக்கான்னு ஜாடையில கேட்டாரு. நான் மறைக்கனும்னு நினைக்கல நேர்ல சொல்லனும்னு தான் நினைச்சேன்னு ஜாடையில சொன்னாரு. அவரு கண்ணு பொய் சொல்லவே இல்ல அவரு கண்ணுகிட்ட இருந்து என்ன மறைக்கவே முடியல. “நான் காதலிக்கிறேன்னு சொன்னேன்“. அவரு சிரிச்சாரு, ஜாடையிலேயே இது சரிவராதுன்னு சொன்னாரு. “என்னோட குறைய பார்த்துட்டு வந்த உங்களோட அனுதாபம் எனக்கு வேண்டாம்.“

“அனுதாபமா எதுக்கு, நான் ஏன் உங்கமேல பாவம் பார்க்கனும். நான் என் பக்க காதல மட்டும் தான் சொன்னேன். உங்க மனசுல விசாலி இருந்தா சொல்லிடுங்க.” அவரு மறைக்கல.

“என்னோட மனசுல விசாலி தான் இருக்காங்க, அவங்களோட கேரிங்கான பேச்சி அவங்க மேலனா என்னோட காதல அதிகமாக்கிட்டு. திடீர்னு எந்த முடிவும் சொல்ல முடியாது.” கண் கலங்கினார்.

இந்த முடிவு தான் அவரு மேலனா என்னோட காதல அதிகமாக்குச்சி. அதுக்கப்பறம் ஒருவருஷம் வரைக்கும் நண்பர்களா தான் தொடர்ந்தோம். ஆனா காதல எப்படி மறைக்க முடியும், ஒரு வருஷம் கழிச்சி திரும்ப என்னோட காதல அவருகிட்ட சொன்னேன். அப்போ அவரு யோசிக்கவே இல்ல அவரு சொன்னது “என்னால பேசமுடியாது, உன்கிட்ட பேசி என்னோட காதல வெளிபடுத்த முடியாது, ஒன்னு மட்டும் நிச்சயமா சொல்ல முடியும் என்னோட வாழ்க்கையில நீ இருக்க வரைக்கும் உன்னோட சந்தோஷம் குறையாது.” அந்த உறுதி தான் இப்போ வரைக்கும் எங்கள நம்பிக்கையோட வச்சிருக்கு.

என்னோட வீட்டுல இன்னும் எங்க காதலுக்கு சம்மதம் சொல்லவே இல்ல. ஆனா சுரேந்தர் அம்மாவுக்கு நான்னா உயிரு அவங்கள பொருத்த வரைக்கும் நான் அவங்களோட ‘குலதெய்வம்‘ அடிக்கடி அவங்க சொல்ற வார்த்தை. எங்க வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டேன். அவரு எத்தனை வருஷம் வேணும்னாலும் காத்திருப்போம் பெத்தவங்க முக்கியம்னு சொல்லிட்டாரு.

இதோ ஆறு வருஷம் முடிஞ்சிட்டு எங்க உறுதி குறையல. அவரு இது வரைக்கும் எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னது இல்ல இத்தனை காதலர் தினம் கடந்தும் அவரோட காதல வார்த்தையால சொல்லி என்னோட காதல நான் கேட்டது இல்ல, பொய் கவிதைகள் கிடையாது, செல்ல வாக்குவாதம் கிடையாது, செல்லக் கோப வார்த்தைகள் கிடையாது, நீ தான் அழகென்று வாயுரை வார்த்தைகள் இல்லை, நீயே என் உலகென்று அவன் சொல்லி நான் கேட்டதும், கேட்க போவதும் இல்லை, ஆனாலும் என்னோட காதல் குறையவே இல்ல காதல் மௌனத்துல தான் அழகுங்கிறத எனக்கு புரிய வச்சிட்டாரு. என்னோட காதல் நிறையா?? குறையான்னு எனக்கு தெரியாது ஆனா நான் காதல் செஞ்சிகிட்டே இருப்பேன்.

இந்த இன்பத்தை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் ஆதலினாற் காதல் செய்வீர்!. இதோ அதே மௌனம் களையாம நாங்க எழுந்து நடக்கபோறோம் அவர் கை விரலின் இடைவெளியில் என் கைவிரல் நசுங்கிடும் வலி இன்பம். இருவரும் அதே புன்னகை மாறாமல் கடற்கரையில் நடை போட்டனர்.
 
Last edited:

Aruna.K

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 15, 2016
Messages
1,251
Likes
2,194
Location
Palani
#4

ஆதலினாற் காதல் செய்வீர்

சென்னை சாலையில் அந்த வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ வழுக்கிக் கொண்டு சென்றது. வெளியில் என்ன வெயில் அடிக்கிறது என்பதை கொஞ்சம் கூட கணிக்க முடியாதபடிக்கு வண்டியின் ஏ.சி. சில்லிட வைத்தது.

துப்புரவாக துடைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தில் கண்களை பதித்திருந்தாள் தியா. தோள்வரைக்கும் சுருண்டிருந்த முடி முன் தினம் செய்த கர்லிங் காரணமாக அங்கங்கே சுருண்டு, அவளது நீள்வட்ட முகத்திற்கு அழகாய் பொருந்திப் போனது.

மங்கலான இளமஞ்சளும் எலும்பிச்சையும் கலந்தது போன்ற நிறத்தில் டிசைனர் சேலை. அதற்கு கான்ட்ராஸ்டாக அடர் பிங்க நிறத்தில் குந்தன் வேலைபாடுகளுடன் கூடிய முழுக்கை ரவிக்கை, கழுத்தில் ஏதும் அணியவில்லை.பதிலாக காதில் நீண்டு கழுத்து வரை தொங்கிய காதணி என ஒரு முக்கிய நடிகை எப்படி இருக்க வேண்டுமே அத்தனை சர்வலட்சணங்களும் அவள் முகத்தில் இருந்தன.

கார் அந்த டிராஃபிக் சிக்னலில் நின்றிருந்தது. சிக்னலைக் கடந்து எதிர்பக்கம் திரும்பினால், பிரஸ் மீட் நடக்கவிருக்கும் அந்த ஐந்து நர்சத்திர ஹோட்டல் வந்துவிடும். தியாவின் வாழ்வில் அன்று முக்கியமான தினம். தானாக முக்கியமானதாய் அமையாமல், இன்னொருவரால் முக்கியமாக்கப்பட்ட தினம். “இது தேவை தானா?” என்று மூளை ஆயிரமாவது முறையாக கேள்வி கேட்டது. சிக்னலில் இறங்கி ஓடிவிட்டால் என்ன என்று பைத்தியக்கார எண்ணம் தோன்றாமல் இல்லை.

தியாவின் எண்ணவோட்டத்தைக் கணித்தது போல, வெங்கட்டிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.

“வேர் ஆர் யூ தியா?”

“ஹோட்டல் ரீச் ஆகிட்டேன் வெங்கி..டூ மினிட்ஸ்.. ஐ வில் பி தேர்”

“ஃபைன்...ஐம் வெயிட்டிங்க அட் த லாபி.. சீயூ சூன்”

கார் அந்த ஹோட்டலின் வராண்டாவில் சின்ன குலுக்கலுடன் நின்றது. டிரைவர் இறங்கி வந்து கதவைத் திறக்கும் முன்னர், வெங்கட் அவனது பி.ஏவுடன் கதவருகில் நின்றிருந்தான்.

“யூ லுக் லவ்லி டியர்..யெல்லோ சூட்ஸ் யூ” என்றவாரே காரில் இருந்து கையைப் பிடித்து இறங்க உதவி செய்தான்.

ஹோட்டல் லாபியைக் கடந்து தயாராக நின்றிருந்த லிஃப்டில் ஏறிய பின்பும் தியாவிற்கு மனம் ஒப்பவில்லை. அவளது பேசாமடந்தை சுபாவம் வெங்கட்டையும் கவலை கொள்ளச் செய்தது.

“வாட் இஸ் இட் தியா? ஏன் அப்செட்டா இருக்க? டெல் மீ?”

“ஒண்ணும் இல்லை வெங்கி..ஜஸ்ட் நர்வெஸ்...”

“எதுக்கு டென்ஷன் ஆகற? நாம கல்யாணம் பண்ணிக்கப் போறதை அபீஷியலா பிரஸ்க்கு சொல்லறோம் அவ்வளவு தானே?”

“ம்ம்ம்...”

“கமான் சியர் அப் பேபி...” என்னும் போதே லிஃப்ட் ஆறாம் தளத்தில் நின்றது.

கண்களை கூசச் செய்யும் பிளாஷ் லைட்களும், குதர்கமாக கேள்வி கேட்கும் பத்திரிக்கைகாரர்களும் என்றைக்குமே தியாவுக்கு கொஞ்சம் அலர்ஜி தான்.

அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த மேஜையின் பின்னால், நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒன்றில் வெங்கட்டின் தந்தையும் திரையுலகில் பெரிய ஜாம்பவான் என பெயரெடுத்த ப்ரிடியூசர் சீனிவாசன் அமர்ந்திருந்தார். அருகில் அவரது துணைவியார், வெங்கட்டின் அம்மா, என் வருங்கால மாமியார், கழுத்தில் இரண்டு கை விரல் அளவு வைர நெக்லஸில் ஜெலித்துக் கொண்டிருந்தார், மீனாம்பாள்.
ஹாலின் உள்ளே நான் நுழைந்ததில் இருந்தே பல கண்கள் காமிரா வாயிலாக என்னை சர்வே செய்ய ஆரம்பித்திருந்தன. எப்படி நடக்கிறேன், எப்படி சிரிக்கிறேன் என்பதில் தொடங்கி எவ்வளவு சிரிக்கிறேன் என்பது வரை கவனிக்கப்படும்.

மேஜையின் பின்னால் அமர்ந்திருந்த இருவரும் என்னைக் கண்டதும் வாஞ்சையுடன் எழுந்து என்னைக் கட்டிக் கொண்டனர். மீனாக்ஷி அம்மாள் என்னை அவர் அருகில் இருந்த நாற்காலியில் அமர்த்திக் கொண்டார்.

வழக்கம் போல மேடையை தனதாக்கிக் கொண்டு வெங்கட் பேச ஆரம்பித்தான்.

“வெல்கம் எவ்ரிபடி... இன்னைக்கு உங்களை எல்லாம் பார்க்கறதுல ரொம்ப மகிழ்ச்சி... ஏஸ் எவ்ரிபடி நோஸ், நானும் ஆக்ட்ரெஸ் தியா ரவிச்சந்திரனும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு எடுத்திருக்கற முடிவை உங்ககிட்ட சொல்லத்தான் இந்த மீட்”
என்று வெங்கட் பேசி முடித்ததும், பலத்த கரவோசை எழுந்தது. அவனது அன்னையும் தந்தையும் பொதுவாக சிரித்தனர். நான் எனக்கே வழக்கமான ஒரு சின்ன உதட்டுப் புன்னகையுடன் முகத்தில் அமைதியை தேக்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

நிருபர்கள் தேவையான அளவு ஃபோட்டோக்களை க்ளிக்கியவுடன் அடுத்து கேள்விகளால் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல், புன்னகையுடன் வெங்கட் பதிலளித்துக் கொண்டிருந்தான்.

“உங்க லவ் ஸ்டோரி கொஞ்சம் சொல்லுங்க வெங்கட் சார்”

“சாரி..அது பர்சனல்...”

“எப்போ சார் கல்யாணம்?”

“கூடிய சீக்கிரத்தில..”

“கல்யாணத்துக்கு அப்பறம் சினிமால நடிப்பீங்களா தியா மேடம்” என்று நான் எதிர்பார்த்த எனக்கான கேள்வி கேட்கப்பட்டது.

“இப்போ கமிட் ஆகியிருக்கும் படங்களை கண்டிப்பா முடிச்சு குடுக்கனும். அப்பறமா நல்ல படங்கள் வந்தா யோசிக்கலாம்.” என்று மனப்பாடமாக வைத்திருந்த பதிலை சற்றே உணர்ச்சி கலந்து கூறினேன். நடிகை அல்லவா, இயல்பாக சிரிக்கவும், உண்மை போல பொய் கூறவும் சிறப்பாக கைவந்தது.

ஒருவாராய் கேள்விகள் முடிந்து அனைவரும் கலைந்து செல்லவும், வெங்கட்டின் பெற்றோரிடம் விடை பெற்று, என் காரில் ஏறி அமரும் வரையில் நெஞ்சத்தில் ஒரு குற்ற உணர்ச்சி படுத்தியது.

திருமணத்திற்குப் பின் நடிப்பதா வேண்டாமா என்று எந்த தீர்மானத்தையும் நான் இன்னமும் எடுக்கவில்லை. ஆனால் எனக்கு பதிலாக வெங்கட்டும் அவனது குடும்பமும் எடுத்திருந்தனர். காதலை கூறிய மறு தினமே வெங்கட் என்னிடம் தெளிவாகக் கூறியிருந்தான்.

“கல்யாணத்துக்கு அப்பறம் இந்த சினிமா சீரியல் எல்லாம் வேண்டாம் தியா. நம்ம ஃபேமிலிக்கு செட் ஆகாது..”

“நல்ல கதையா வந்தா யோசிக்கலாம் வெங்கட்..ஏன் அவசரப்பட்டு முடிவெடுக்கனும்..”

“இது அவசர முடிவெல்லாம் இல்லை தியா.. என் மனைவி இப்படி தான் இருக்கனும்னு ஒரு கனவு எனக்கு இருக்கு...”

“வெங்கட் அது வந்து...”

“தியா..ஒரு நடிகையா நீ சம்பாரிச்சது போதும். என் அந்தஸ்து சொத்து மதிப்பு இதெல்லாத்தும் ஈடா நீ எவ்வளவு வருஷம் நடிச்சாலும் பத்தாது...மேர் ஓவர், அப்பா அம்மா கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க”

“வெங்கட் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்..”

“தியா ப்ளீஸ்...இந்த டாபிக்கை விட்டுடு.. இதுல டிஸ்கஸ் பண்ண எதுவும் இல்லை..”

எப்போது பேச ஆரம்பித்தாலும் இதே விஷயத்தை வேறு வேறு வார்த்தைகளால் கூற ஆரம்பித்தான். இதோ இப்போது ப்ரெஸ் மீட்டில் நான் கூறிய பதிலுக்காக அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அடுத்த இரண்டு மாதத்தில் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துக் கொடுத்த கையோட திருமண நாள் நிட்சயிக்கப்பட்டது.

ஊரே பிரமித்துப் பார்க்கும் படிக்கு ஒரு திருமணம், அதனை மிஞ்சும் வகையில் வரவேற்பு என ஒரு நிமிடம் கூட நிற்க நேரமின்றி பம்பரமாக சுழன்றது காலம். திருமணம் முடிந்த கையோட லண்டனில் தேன் நிலவு, அடுத்த மாதமே கருவுற்று, என என் வாழ்க்கையில் என் கையை மீறிய நிறைய விஷயங்கள் நடந்து விட்டன.

திருமண வாழ்க்கை சிறப்பாகத்தான் சென்றது. பாசமான குடும்பம், காதல் கணவன், அழகாய் இரு குழந்தைகள் என என் ஐந்து வருடத்தில் என் வாழ்க்கையை வெளியே இருந்து பார்க்கும் எவருக்குமே பொறாமை படும் விதமாக இருந்தது. ஆனால் என்னில் இருந்த அந்த வெறுமை மட்டும் மறையவேயில்லை.

கடந்த வந்த பாதையையும், சுயமாக முடிவெடுத்து நானாக செயல்பட்ட என் சுதந்திர நாட்களையுமே எண்ணி மனம் உழன்றது என்னவோ உண்மை. குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும், கணவன் அலுவலகம் சென்றதுமே என்னை வந்து பிடித்துக் கொள்ளும் தனிமைப் பேய்.

என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கும் நிலைமையில் தான் ஷாப்பிங் சென்டரில் அந்த இயக்குனரை சந்திக்க நேர்ந்தது.

“தியா மேம்...தியா மேம் ப்ளீஸ்..ரெண்டே நிமிஷம் உங்ககிட்ட பேசனும்..ப்ளீஸ்” என்று பின்னால் வந்த முப்பதுவயது இயக்குனரை தவிர்க்க முடியவில்லை. அருகில் இருந்த பெரிய காஃபி ஷாப்பில் ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டேன்.

யாரும் பார்த்துவிடக்கூடாதே என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், இயக்குனர் என்ன சொல்கிறார் என்ற ஆர்வமும் என்னை உந்தியது.

“தேங்கியூ மேம்..உங்களை சந்திக்க கடந்த ஒரு மாசமா ட்ரை பண்ணறேன்.. வீட்டுக்கு கூட வந்தேன்..உங்களை பார்க்க முடியலை.. அதான் இன்னைக்கு உங்க காரை ஃபாலோ பண்ணி...”

“பரவாயில்லை..என்ன விஷயம்...சீக்கரமா சொல்லுங்க..”

“ஒரு ப்ராஜக்ட் மேம்... உங்களை மனசுல வைச்சு தான் கதையே எழுதினேன்.. ஒரு மணி நேரம் குடிங்க மேம்..கதை உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்...ஹிரோயின் சப்ஜெக்ட்... ப்ளீஸ் மேம்..” என்றார் கெஞ்சலாக.

“சார்...நான் நடிச்சு ஐஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு... இப்ப நடிக்கற ஐடியா கொஞ்சம் கூட இல்லை.. வேற நல்ல ஆக்ரெஸ் ட்ரை பண்ணுங்க..”

“மேம்..ப்ளீஸ்..கதையை ஒரு தடவை கேளுங்க... அப்பறமா டிசைட் பண்ணுங்க..ப்ளீஸ்...ஜஸ்ட் ஒன் அவர் கதையை மட்டும் கேளுங்க..”

முடியவே முடியாது என்று அப்போதே மறுத்திருக்கலாம். ஆனால் என்னுள் இருந்த நடிகை அதற்கு சம்மதிக்கவில்லை. கதையை கேட்பதில் என்ன போயிற்று என்று வாதாடியது. என் போறாத காலமோ என்னவோ,
“நாளைக்கு வந்து வீட்டில பாருங்க...” என்று மட்டும் உரைத்துவிட்டு ஷாப்பிங் செண்டரில் இருந்து கிளம்பினேன்.

மனம் முழுதும் பயம் வந்து அப்பிக் கொண்டது. வெங்கட்டிடம் எப்படி சொல்வது, நான் பாட்டில் வரச் சொல்லிவிட்டேனே, என்ன செய்யலாம் என்று ஒரு பக்கம் மூளை குடைந்தாலும், மறுபக்கம், எனக்கென்று வாழ்க்கை இல்லையா, தனிப்பட்ட ஆசைகள், குறிக்கோள்கள் இருப்பது தவறா என்று பெண்ணீயம் பேசத் தொடங்கிவிட்டது மனம்.

வெங்கட்டிடம் விஷயத்தைக் கூறிய போது, வெகுவாக ஆத்திரப்பட்டான். ஏற்கனவே இருந்த கோபதாபங்களைக் கூறி என்னைக் காயப்படுத்தினான். வார்த்தைகள் வலுக்கத் தொடங்கின. கூத்தாடும் புத்தி என்னை விட்டுப் போகாது என ஏசினான்.

வெங்கட்டின் மேல் இருந்த கோபத்தில் என் தன்மானம் தாக்கப்பட, கதையே கேட்காவிடினும் அந்த இயக்குனரின் படத்தில் நடித்தே தீருவது என்று முடிவு செய்துவிட்டேன்.

அடுத்த தினம் கதை கேட்ட போது நிஜமாகவே பிடித்திருந்தது. இயக்குனர் கதை சொல்லிய விதத்திலேயே படம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை எழுந்தது. வெங்கட்டை கலந்து கொள்ளாமல், படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த போது பரம திருப்தியாய் சந்தோஷமாக இருந்தது.

ஆனால் என் சந்தோஷம் அரை மணி நேரம் கூட நீடிக்கவில்லை. வீட்டில் வெங்கட்டால் ஏற்பட்ட கூச்சல், மாமனாரின் பாராமுகம், மாமியாரின் குத்தல் பேக்சு, என் பிள்ளைகளை எனக்கு எதிராக திருப்புவது என்று பல நிகழ்வுகள் நடந்தேறின.
முன்று மாதங்கள் இதே போல கசப்பாக சென்றன.

இதெல்லாவற்றையும் விட, என்னையும், அந்த புதுமுக இயக்குனரையும் சம்பந்தப்படுத்தி செய்திகள் கசியத் தொடங்கவும் நொந்து போனேன்.

செய்தியை கேள்விபட்ட இயக்குனர், “தியா மேம்..என்னால தான் உங்களுக்கு இவ்வளவு பிரச்சனையும்...அதுக்கு நானே ஒரு முடிவு சொல்லறேன்... என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க... அதுக்கு அப்பறம் நடிக்கறது, நடிக்காதது எல்லாமே உங்க விருப்பம்... யோசிங்க” என்று வேறு குழப்பினான். இந்த நெருக்கடியில் படவேலைகளை நின்று போனது.


என் குழந்தைகளின் கஸ்டடி கேட்டு கேர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். என்ன காரணத்தினாலோ மியூட்சுவல் கன்சர்ன் மூலம் விவாகரத்து தர வெங்கட் மறுத்துவிட்டான். முதல் இரண்டு ஹெயரிங்கிற்கும் வரவில்லை. இன்று மூன்றாவது ஹியரிங்க. கடைசியும் கூட.

மூன்று மாதங்கள் அவன் முகத்தைப் பாராமல், இன்று பார்த்த போது நெஞ்சம் பதறியது. கண்கள் தானாக குளம்கட்டிக் கொண்டன.

“எப்படி இருக்கீங்க வெங்கட்?” என்றேன் பகையை மறந்து. என்னிடம் வந்துவிடு என்று சொல்லமாட்டானா என்ற ஏக்கம் ஒரு பக்கம் நெஞ்சு வரையில் நிறைந்தது. வெங்கட் பதில் சொல்லவில்லை.

என்னிடம் பதில் சொல்லாவிடினும் நீதிபதியிடம் எனக்கும் சேர்ந்து பேசியிருந்தான்.

“எனக்கு தியாவை டைவர்ஸ் பண்ண எந்த காரணமும் இல்லை சார். இது அவ்வளவு பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லை. தியாவுக்கு எல்லாமே அவசர அவசரமா நடக்கனும். எதிலையும் நிதானம் இல்லை. எல்லாமே நடக்கனும் அதுவும் அப்பவே நடக்கனும். பேசி சரி செய்துக்கற விஷயம் இது. தானா மனசு மாறி வந்துருவான்னு நினைச்சது என் தப்பு.”

“எனக்கு மனைவி வேணும்கறத விடவும் என் குழந்தைகளுக்கு அம்மா தேவை. அவளுக்கு நடிக்கறது தான் இஷ்டம்னா எங்கிட்ட பேசி புரியவைச்சிருக்கனும். பிரிஞ்சு போறது முடிவில்லை சார். அவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன் சார். பிரியறதுக்காக இல்லை... இன்னைக்கு நான் விவாகரத்து குடுக்காத்து அவளுக்கு வருத்தமா இருக்கலாம். ஆனா ஒரு நாள் என்னை புரிஞ்சுக்குவா..அதுவரைக்கும் நான் வெயிட் பண்ணறேன்.” என்று என்றவன் என் முகத்தில் ஒரு சில நிமிடங்கள் கண்களை செலுத்தியவண்ணம் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

நீதிபதி வழக்கை ஒத்திவைத்து தீர்ப்பளித்தார். கோர்ட்டை விட்டு வாசலுக்கு வந்ததுமே, காத்திருந்தது போல பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். காமிராவில் ப்ளாஷ்கள் மின்னத் தொடங்கின.

“தியா மேம்.... இன்னைக்கு ஃபைனல் ஹியரிங்... டைவர்ஸ் கிடைச்சிருச்சா?”

“தியா மேம் குழந்தைக யார் கூட இருப்பாங்க? அப்பாவோடவா?”

“நீங்க நடிச்சிட்டிருந்த படம் நின்னுடுச்சே..அடுத்த படம் நடிப்பீங்களா?” என ஆளாளுக்கு என்னைக் குதறிக் கொண்டிருந்தனர்.

“தியா மேம்... உங்களுக்கும் இயக்குனருக்கும் நடுவில காதல்னு பேசிக்கறாங்களே அது உண்மையா?” இந்த ஒரு கேள்வி மட்டும் என்னை பதில் சொல்லத் தூண்டியது.

“இல்லை.... இயக்குனருக்கும் எனக்கும் நடுவில ஒன்னுமே இல்லை.”

“தியா மேம்..அப்ப வேற யாரையாவது காதலிக்கறீங்களா?”

என்று அடுத்த கேள்வி எழுந்தது. கோர்ட் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த என்னை டி.வி, மீடியா உட்பட, காரில் அருகில் நின்றிருந்த வெங்கட்டும் கவனித்துக் கொண்டிருந்தான். என் பதிலை தெரிந்து கொள்ளும் ஆவல் அனைவர் கண்ணிலும் மின்னியது.

கண்களை மூடி இந்த கேள்வியை உள்வாங்கிக் கொண்டேன். மெல்லிய ஆனால் தீர்கமான குரலில் பதிலுரைத்தேன்.

“ஆமாம்.”

“யாரை...யாரை..இயக்குனரையா?”

“என்னை... என் சுதந்திரத்தை... என் குழந்தைகளை, என் குடும்பத்தை முக்கியமா என் கணவரை...” இதை சொல்லிவிட்டு நிற்காமல் சென்று காரில் ஏறிக் கொண்டேன்.

என் காரில் இல்லை, காரின் அருகில் என் பதிலை உள்வாங்கியபடிக்கு நின்று கொண்டு, கண்கள் முழுக்க காதலை தேக்கிக் கொண்டு நின்றிருந்த வெங்கட்டின் காரில்.

நொடி தாமதிக்காமல், கார் கோர்ட் வளாகத்தைவிட்டு வெளியே சென்றது. காரில் ஏறிய நிமிடம், இருவரும் ஒரு வார்த்தையைக் கூறினோம்.

நான் சாரி என்றும், வெங்கட் லவ் யூ என்றும்.

காதல் என்பதன் முடிவு திருமணம் அல்ல.. திருமணம் ஒரு ஆரம்பம் மட்டுமே.

ஆதலால் காதல் செய்வீர் உங்கள் உறவுகளை, அவ்வப்போது உங்களையும், உங்கள் கனவுகளையும் கூட காதல் செய்தல் நலம்.


 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#5
"ஆதலினாற் காதல் செய்வீர்!"
=====================
அன்று 15.02.2017, புதன் கிழமை.

கோவையில் உள்ள அந்த பெரிய பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கெமிஸ்ட்ரி செய்முறை தேர்வு. மாணவர்கள் பள்ளி பேருந்தில் ஏறி விட்டார்கள். முதல்வர் வனஜாவும் , கெமிஸ்ட்ரி ஆசிரியை தருணாவும் மாணவர்களுடன் போகிறார்கள். ஆமாம் !!! அவர்கள் பள்ளி தேர்வு சென்டர் கிடையாது.

அவர்கள் செல்வபுரம் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

என்ன? எல்லா மாணவ மாணவியரும் முகத்தில் ஒரு டென்ஷன் களையோடு ??

இருக்காதா பின்னே...? இவ்வ்ளவு நாட்கள் படித்து குப்பை கொட்டியது எல்லாம் இன்று வெட்ட வெளிச்சமாகி விடுமே..... இன்று எழுதுவதற்கான மதிப்பெண்கள் அல்லவா அவர்கள் வாழ்வின் இறுதி வரை பேசும்???

ஆனால், இந்த ராகவ் முகத்தில் அசட்டுக் காலை காணப் படுகிறதே....? யாரைத் தேடுகிறான் அவன்? யாரை?? எல்லாம் அவன் மனம் திருடிய ரம்யாவைத் தான்.

ரெண்டு சீட்டுகள் முன்னாடி அமர்ந்து யிருந்த ராமயா, கையை ஆட்டி ஆட்டி அவள் தோழிகள் தமன்னா, சுஜனா , நயனா இவர்களுடன் மும்முரமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

ஆமாம்... ஏன் இந்த ரம்யா இன்று ராகவுக்கு ஒரு "பெஸ்ட் ஆப் லக்" கூட சொல்லவில்லை???
ராகவின் நெஞ்சம் கொதித்தது... ஆத்திரத்தில் குதித்தது.

இதோ பள்ளி வந்து விட்டதே....

அனைவரும் இறங்கினார்கள். அவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர். காலை மணி 11.45 மணி. வனஜா அனைவரையும் மதிய உணவு உண்ணச் சொன்னாள்.

உண்ணும் பொழுதும் இந்த ரம்யா ராகவ் பக்கம் திரும்பவே இல்லை. ராகவ் நினைத்து விட்டான்..".இன்று தேர்வு அம்போ.....என்ன இவள் இப்படி செய்கிறாள்?"

பிறகு, அனைவரையும் தேர்வு அறைக்கு முன் தருணவும், வனஜாவும் அமரச் செய்தனர். மதிய பேட்ச் என்பதால் 12.15 க்கு அவர்கள் தேர்வு லேப் க்குள் செல்ல வேண்டும்.

அப்போது சுஜனா, "மேடம், இந்த ரம்யா படிக்காம என்னமோ முணு முணுத்ததுகிட்டே இருக்கா"
என்றாள்.
வனஜா கனிவாக,"என்ன ரம்யா, என்ன பிரச்னை?" என்று கேட்டாள்.
ரம்யா, கண்களில் நீரோடு, "இந்த ராகவ் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுகிறான் மாம்... நேத்து வாலெண்டைன்ஸ் டே . னு சொல்லி ஒரு பெரிய கேட்பரிஸ் சில்க் சாக்லேட் கொடுத்து "லவ் யு" ங்கிறான் மாம்."

வனஜா 'அது சரி. அதுக்கு இன்று தேர்வு தினத்தில் ஏன் முகம் தூக்கி வைச்சிகிட்டு? தேர்வுக்கு படி"
என்று சொல்ல,

ரம்யா "இல்லை மாம்.. நான் ஓ.கே சொல்லாட்டா,அவன் தேர்வில் தோற்பேன் என்கிறான்... எனக்கு டென்ஷன் ஆ இருக்கு மாம்" என்றாள்

வனஜா, "இங்கே பாரு மா.... காதல் என்பது ஒரு அற்புதமான உணரவு..... அது கண் போன போக்கிலே
உருவாவதல்ல... அவனை அழை. சிரித்துக் கொண்டு ,ஒரு பெஸ்ட் ஆப் லக் சொல்லி, தேர்வு எழுது. தேர்வுக்கு பின் நாம் பேசலாம்" என்றாள். பின் வனஜா கொஞ்ச தூரம் தள்ளிச் சென்று விட்டாள்.

ரம்யா "ராகவ்" என்று அழைத்தாள் .

ராகவுக்கு வானத்தில் பறப்பது போல் ஒரு உணர்வு.
ரம்யா "ராகவ், நால்லா படிச்சிட்டியா? பெஸ்ட் ஆப் லக்" என்று சொன்னாள்.
ராகவ்" தாங்க் யு....ரம்யா.... கண்டிப்பா உனக்காக நல்லா செய்வேன்" என்பர் சிரித்து அசடு வழித்தபடி சொல்லி அவன் இடத்திற்கு போனான்.

தேர்வு நேரம் வந்தது. அனைவரும் உள்ளெ சென்றனர். தருண தேர்வு லேப் க்கு உள்ளிலும், வஞ்ச தேர்வு அறைக்கு வெளியே அடுத்த பேட்ச் படிக்க வைத்தும் ரொம்ப பிஸி ஆகினர்.

தேர்வும் முடிந்தது. அனைவருக்கும் நல்ல மதிப்பெண்கள். !!!

பள்ளி பேருந்தில் ஏறி அவர்கள் பள்ளிக்கு அனைவரும் சென்றனர்.

அனைவரையும் ஒரு இடத்தில் குழும செய்த வனஜா :- "மாணவ மாணவியரே !! இந்த பதின்ம வயதில் அனைவருக்கும் தோன்ற கூடிய உணர்வு தான் காதல். இந்த உணர்வு ஒன்றும் தப்பானது அல்ல. ஆனால், வெளிப்படுத்தும் பக்குவம் இந்த வயதில் இருக்காது. நல்லபடியாக தேர்வுகள் எழுதி, கல்லூரி சென்று, ஒரு வேலை கிடைக்கும் வயது வந்தால் தான், மனதால் காதல் உண்மையா என்று ஆராயும் பக்குவம் வரும்.... அதனால், நாம் எல்லோரும் இப்போது நல்ல நண்பர்களாக, காதல் என்ற அன்பு உணர்வை பரிமாறிக் கொள்வோம். ஈர்ப்பு, நேசம், ஈடுபாடு எல்லாம் சகஜமே... கவலைப்படவோ, டென்ஷன் படவோ வேண்டாம்..." என்று பொதுவாக அறிவுரை கூறினாள்.

யாருக்கு புரிந்ததோ இல்லையோ அவள் அறிவுரை, ரம்யா, ராகவிற்கு நன்கு புரிந்தது....

"ஆதலினாற் காதல் செய்வீர்!" மானிடர்களே !!!... காதல் என்றால் அன்பு என்று சிந்தையில் புரிந்துக் கொண்டு....... காதல் யாருக்கும் யார் மீதும் வரலாம்..... உணர்வுகளை இதமாக, மயிலிறகாக
வெளிப்படுத்தினால் கலங்கி, அச்சத்தில் உறைய வேண்டாம்....சகஜமாக எடுத்துக் கொண்டு வாழ்வில் நல்ல நெறிப்படுத்த முயற்சிக்கலாம்.

காதல் ....
ரம்யமான உணர்வு ....
இயற்கையான உணர்வு....
எதையும் திணிக்கப் பார்க்காமல்
இதயம் தானாக உணரும் நல்லுணர்வு....

"ஆதலினாற் காதல் செய்வீர்!"... இந்த ராகவ் என்ற குழந்தையின் காதல் அவனுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தந்தால், காதலும் நல்லது தானே ???

**** ஆக்கம் ரா. கிரிஜா

 
Last edited:

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
718
Likes
2,019
Location
Chennai
#6
ஆதலினாற் காதல் செய்வீர்!

"மூஞ்சியப் பாரு! பெரிய இவன் இவன்!"

"ஏய்! அவன்! இவன்னு சொன்ன அவ்ளோதான்! பல்லத் தட்டி கைல குடுத்திருவேன்! மரியாதையாப் பேசுடீ!"

"மொதல்ல நீ மரியாதையாப் பேசு! நீ வாடீ போடீனன்னு பேசினா நானும் வாடா போடான்னு பேசுவேன்! நீ என் பல்லத் தட்டிக் கைல குடுக்கறதுக்கு முன்னாடி நான் உன் பல்லத் தட்டி உன் கைல குடுத்திருவேன்! ஜாக்கிரதை!"

"ச்சீப்பெ!"

"ச்சீப்பெ!"

அவளைத் தன் அக்கினிக் கண்களால் உறுத்து விழித்துவிட்டு அவன் தன் இடத்துக்குச் சென்று அமர்ந்தான்.

அவளும் அவனுடையது போன்ற அதே காரத்துடன் அவனை உறுத்து விழித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இது எதோ நடு நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நடுவே நடக்கும் உரையாடல் அல்ல!

அவன் - சந்துரு என்கிற சந்திரமௌலி; அவள் - பிரியா என்கிற பிரியங்கா!

இருவரும் தமிழகத்தின் பிரபல தனியார் செய்தி சேனலில் பணிபுரிகிறார்கள்.

சந்துரு கேமிராமேனாக இந்த நிறுவனத்தில் மூன்றாண்டுகளாகப் பணியாற்றுகிறான். பிரியா செய்தி வாசிப்பாளராக ஓராண்டாகப் பணிபுரிகிறாள்.

வந்த நாள் முதல் இவளும் அவனும் எதற்காகவது சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார்கள். இது இவர்களுக்கு வாடிக்கையென்றால் மற்றவர்களுக்கு வேடிக்கை!

ஒருநாள் அவன் அவளுடைய மேக்கப்பைப் பார்த்து கிண்டல் செய்வான்! அதுவும் அவள் செய்தி வாசிக்கும்போது கிண்டல் செய்வான். அதற்கு ஒரு சண்டை வரும்! மறுநாள் அவன் தன் மேலதிகாரியிடம் எதற்காகவாவது டோஸ் வாங்குவான்! அதைப் பார்த்து அவள் அவனை கிண்டல் செய்வாள்! அதற்கு ஒரு சண்டை வரும்!

'ஒருநாளில் எத்தனை கிண்டலடா! அதற்குத்தான் எத்தனை சண்டையடா!' என்று எல்லாரும் அவர்களை விவேக் பாணியில் கலாய்ப்பார்கள்.

தன்னுடைய இடத்திற்குப் போன பின்னரும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது! அவளை நினைத்தாலே அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. "சே! பொம்பளையா அவ? பிசாசு!" என்று மனதுக்குள் அவளை வசைபாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு தலைவலி மண்டையைப் பிளந்தது! ஆனால் தலைக்கு மேல் வேலையிருக்கிறதே! தன் உள்ளங்கைகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டான். ஒரு நிமிடம் கண்மூடி மனதை நிலைப்படுத்திக் கொண்டான். உடன் வேலை செய்யும் சந்திரிகா அவனருகில் வந்து நின்றாள். அவளும் செய்தி வாசிப்பாளர்தான். அவனுடைய தலைவலி மாயமாய் மறைந்தது போல இருந்தது. அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.

அவனுக்கு இது சரியா தவறா என்று புரியவில்லை! தன் மனம் தன்னிடம் இல்லை என்று அவன் உணரத் தொடங்கியிருந்தான். எப்போது இப்படி உணர்ந்தானோ அப்போதே எப்டியாவது அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிடனும் என்று முடிவு செய்தான். என்னிக்கு ப்ரபோஸ் பண்லாம்! ஹான்! நாளைக்கு காதலர் தினம்ல! நாளைக்கே சொல்லிடலாம்! ஆனா நான் பண்றது சரியா தப்பா? புரிலையே! ஆனா இந்த ஃபீலிங் ரொம்ப நல்லாருக்கு! என்று எண்ணியபடியே உற்சாகமாய்த் தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கினான்.

இவர்கள் இருவரையும் பார்த்த மற்றவர்கள் கண்ஜாடையால் பேசிக் கொண்டனர்.

பிரியாவோ அங்கிருந்து நகர்ந்த மாத்திரத்திலேயே அவனை மட்டுமல்ல, எதற்காக சண்டையிட்டோம் என்பதைக் கூட மறந்துவிட்டு வாசிக்க வேண்டிய செய்தித்தாட்களை கவனமாக அடுக்கத் தொடங்கினாள். அடுக்கிய செய்தித் தாட்களை எடுத்துக் கொண்டு நகரும்போது சந்துருவும் சந்திரிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்வது தெரிந்தது. மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். ம்.... இந்த லூஸுக்கு சிரிக்க கூடத் தெரியுது! ரெண்டு பேரும் அழகான ஜோடிதான்! சந்துரு - சந்திரிகா! பேர் பொருத்தம் கூட அழகாதான் இருக்கு! சூப்பர் ஜோடி! என்று நினைத்தபடியே சென்றாள்.

அன்றைய செய்தியில் ஏதோ ஒரு சாலை விபத்தைப் பற்றியும் அந்த விபத்தினால் உயிரிழந்தவர்கள் பற்றியும் ஒரு செய்தி இருந்தது. முகத்திலும் குரலிலும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் செய்திகளை வாசித்துவிட்டு வெளியே வந்தாள் பிரியா.

வெளியே அவளுடன் வேலை செய்பவர்கள் அந்த விபத்தைப் பற்றியும் அதில் உயிரிழந்தவர்கள் பற்றியும் மிகவும் வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தனர். எப்போதும் இது போல அவர்கள் பேசிக் கொண்டிருப்பது வழக்கம்தான்! அவளும் சென்று அவர்களுடன் சேர்ந்து கொள்வாள். இன்றும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

"ஒரே குடும்பத்திலர்ந்து நாலு பேர் செத்துப் போய்ட்டாங்க! எல்லாருமே பெரியவங்க! இவங்கள நம்பி எத்தன குழந்தை இருக்கோ?" என்றான் விமல்.

"ரெண்டு குழந்தைங்க! ஒரு பையன்! ஒரு பொண்ணு!" இது சந்துரு.

"ரொம்ப பாவம்தான்! அந்தக் குழந்தைகள் கதியென்னாகுமோ?" என்றாள் சந்திரிகா.

"யாராவது நல்ல மனசு இருக்கறவங்க அந்தக் குழந்தைகளை பாதுகாத்தா நல்லாயிருக்கும்!" என்றாள் ராகினி.

எல்லாரும் ஆளாளுக்கு எதையோ பேசினார்கள். பிரியா ஒன்றும் பேசாமல் இறுகிப் போய் இருந்தாள். ராகினி அவள் முகத்தைப் பார்த்துவிட்டு,

"என்ன பிரியா? நீ எதுவும் பேச மாட்டேங்கற?" என்றாள்.

"ம்ச்! ஒண்ணுல்ல!" என்றாள் பிரியா.

"ஏய்! என்னாச்சு! சொல்லுடீ!" என்றாள் சந்திரிகா.

"ஒண்ணுல்லன்னு சொல்றேன்ல!" என்று வெடுக்கெனக் கூறினாள் பிரியா.

இதைக் கேட்ட சந்திரிகாவுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டாள். இதைக் கண்ட சந்துரு,

"சில பேருக்கு என்ன ந்யூஸ் பாத்தாலும் மனசு இளகவே இளகாது! ஹூம்... என்ன செய்ய? மனசுன்னு ஒண்ணு இருந்தாதானே இளகறதுக்கு!" என்று தெளிவாக முணுமுணுத்தான்.

"ஏய்!" என்று சத்தமாக கூறி ஒற்றை விரலைக் காட்டி மிரட்டினாள் பிரியா! அவள் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது! ஆனால் அதற்கு மாறாக கண்கள் குளம் கட்டி, இதோ இப்போது கொட்டப் போகிறேன் என்பது போல அழத் தயாராக இருந்தது. அவனை உறுத்து விழித்துவிட்டு அங்கிருந்து விடுவிடுவென போய்விட்டாள்.

பிரியாவிடம் இந்த மாதிரி ஒரு ப்ரதிலிப்பை சந்துரு எதிர்பார்க்கவில்லை! எப்போதும் போல எதாவது சொல்லி சண்டை போடுவாள் என்று நினைத்தவன் அவளுடைய குளம் கட்டிய கண்களைக் கண்டு அதிர்ந்தான். அவளிடம் விவரம் கேட்பதற்குள் அவள் அங்கிருந்தே நகர்ந்துவிட்டாள். அவள் பின்னாலேயே தொடர்வதற்குள் அவள் காணாமல் போயிருந்தாள். அதுக்குள்ள எங்க போனா? சே! சரியான ராங்கிக்காரி! என்று நினைத்தான்.

எல்லோரும் கலைந்து சென்றனர். சந்துரு சந்திரிகாவின் அருகில் சென்றான். அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். இவன் தன்னருகில் வந்து நிற்பது தெரிந்ததும் அவள் நிமிர்ந்தாள். அவன் அவளைப் பார்த்து சிரித்தான். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

"மனசில ஒண்ணும் வெச்சிக்காத! அவ குணம்தான் நமக்குத் தெரியுமே!" என்றான்.

"அதுக்காக? நான் என்ன கேட்டுட்டேன்னு இப்டி எரிஞ்சி விழறா? பெரிய ராங்கிக்காரி!" என்று முறுக்கிக் கொண்டாள் சந்திரிகா.

"விடு சந்திரிகா! ராங்கி பண்ணிக்கட்டுமே! அவ எப்டியிருந்தா நமகென்ன?"

"ம்... !" என்று சமாதானத்துக்கு வந்தவள், சந்துருவைப் பார்த்து, "தேங்க்ஸ்!" என்றாள்.

"எதுக்கு?"

"என்ன சமாதானம் செய்ய வந்ததுக்கு!" என்று சொல்லி புன்னகைத்தாள்.

அவன் எதையோ சொல்ல வந்து பின் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டான்! அவள் என்னவென்று கண்களால் ஜாடையாகக் கேட்க அவன் ஒன்றுமில்லையென்று தலையாட்டினான். அவள் இப்போதும் புன்னகை செய்தாள். இன்னிக்கே சொல்லிடலாமா? மனதுக்குள் இன்னும் நேரம் வரலடா! என்று எண்ணிக் கொண்டான். பதிலுக்குப் புன்னகை செய்துவிட்டு நகர்ந்துவிட்டான்.

அன்றைய ஷிஃப்ட் முடிந்து அவர்கள் கிளம்பினர். சந்துருவும் கிளம்பி வாகனங்கள் நிறுத்துமிடம் வந்தான். ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு தன் ஹீரோ ஹோண்டாவை எடுக்கும்போது சந்திரிகாவும் பிரியாவும் தங்கள் வண்டிகளை எடுக்க வந்தனர். சந்திரிகாவைப் பார்த்து சிரித்துவிட்டு பிரியாவைப் பார்த்து முறைத்துவிட்டுக் கிளம்பினான்.


 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
718
Likes
2,019
Location
Chennai
#7
மறுநாள் உற்சாகமாக விடிந்தது சந்துருவுக்கு! இன்று காதலர் தினம்! இன்று தன் காதலை எப்படியாவது தன் மனம் கவர்ந்தவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். ஏற்கனவே தன் பெற்றோரிடம் கூறிவிட்டான். அவர்களும் இவனுடைய விருப்பதிற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

எப்போதும் போல டீசென்டாக உடுத்திக் கொண்டு வெளியே வந்தவனைக் கண்டு அவன் பெற்றோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

"ஆல் த பெஸ்ட்! சந்துரு!" அம்மாவும் அப்பாவும் ஒரே குரலில் கூறினார்கள்.

"தேங்க்யூமா! தேங்க்யூப்பா!" என்றான்.

"நல்ல ரிஸல்டோட வா!" என்று கூறி வழியனுப்பினர்.

"யா! டெஃபனட்லீ!" என்று கூறி தன் வலது கை கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டுக் கிளம்பினான்.

வழியில் ஒற்றை சிவப்பு ரோஜா ஒன்றை வாங்கிக் ஷோல்டர் பேகில் வைத்துக் கொண்டான். ஏற்கனவே தன் பேகில் வாங்கி வைத்திருந்த க்ரீட்டிங்க் கார்டை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

அலுவலகத்திற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டு உற்சாகமாக விசிலடித்தபடியே நடந்தான். உள்ளே நுழைந்து தன்னுடைய இடத்திற்கு வந்து அமர்ந்தான்.

நல்ல வேளை! இன்னும் அவள் வந்திருக்கவில்லை. மணி பார்த்தான். ஒன்பதேகால் ஆகியிருந்தது. இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கிறது! அவள் வருவதற்கு! என்று எண்ணிக் கொண்டான்.

தன்னுடைய கணிணியில் அவளுடைய புகைப்படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். இவனுடையது ஓரமான கேபின். யாராவது தன்னுடைய கணிணித் திரையை பார்த்துவிடுவார்களோ என்ற கவலை அவனுக்கில்லை.

ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். இவன் எப்போதுமே சீக்கிரம் வந்துவிடுவானாதலால் யாருக்கும் இவன் சீக்கிரம் வந்தது வித்தியாசமாகப் படவில்லை.

சரியாக ஒன்பதரை மணிக்கு அவள் உள்ளே வந்தாள். அவளுடன் மற்றொருத்தியும்! ஹா! இவ நேத்திக்கு அவளப் பத்தி கோவமாப் பேசினதென்ன? இப்ப ஒண்ணா வரதென்ன? இப்ப இவ எதுக்கு அவளோட ஒட்டிகிட்டு வரா? என்று அவனுக்குத் தோன்றியது.

பிரியாவும் சந்திரிகாவும் எதையோ பேசி சிரித்தபடி வந்தனர்.

சந்திரிகா சந்துருவைப் பார்த்து புன்னகைத்து, "ஹாய்! குட்மானிங்!" என்றாள்.

பதிலுக்கு அவனும் புன்னகைத்து, "குட்மானிங்!" என்றான்.

இருவரையும் பார்த்த பிரியா மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள். ஓ! இன்னிக்கு வேலன்டைன்ஸ் டே! இந்த லூசு இன்னிக்கு இவகிட்ட ப்ரபோஸ் பண்ணப் போறானா?! சூப்பர்! என்று எண்ணிக் கொண்டாள்.

சந்துரு சந்திரிகாவிடம் குட்மானிங் சொல்லிவிட்டு பிரியாவைப் பார்த்தான். அவள் ஒன்றும் பேசாமல் தன் வேலையை ஆரம்பிக்க ஆயத்தமானாள்.

"ஹூம்! சில ஜென்மங்களுக்கு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாது!" என்று முணுமுணுத்தான்.

"ஹலோ! என்ன முணுமுணுக்கற! எதுனாலும் மூஞ்சிக்கு நேரா சொல்லணும்!" என்றாள் பிரியா. மனதுக்குள், இவன் என்னை இங்கேந்து வெரட்டிட்டு அவகிட்ட ப்ரபோஸ் பண்ணணும்னு துடியா துடிக்கறான்! அதெப்டி விடுவேன். என் கண்ணு முன்னாலதான்டா நீ அவ கிட்ட ப்ரபோஸ் பண்ணணும்! நீ அவ கிட்ட வழியறத நான் பாக்க வேணாம்! அப்பதானே உன்ன காலம் முழுசுக்கும் ஓட்ட முடியும்! நல்ல சான்ஸ விடுவேனா! டேய் சந்துரு! நீ இன்னிக்கு காலிடீ!? என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.

அவர்களுக்குள் சண்டை ஆரம்பமானது!

அன்று முழுக்க அவன் பிரியாவிடம் எதற்காகவாவது வம்பிழுத்துக் கொண்டேயிருந்தான். அவளை அங்கிருந்து வெளியேற்றினால்தான் தன்னால் தன் காதலைச் சொல்ல முடியும் என்று நினைத்தான். அவளோ நகர்வேனா என்று அமர்ந்திருந்தாள்.

எதையாவது சொன்னா எழுந்து போவான்னு பாத்தா இவ இன்னிக்குன்னு பாத்து உக்காந்த இடத்த விட்ட நகர மாட்றாளே! பிசாசு! ஆயிரமாவது முறையாக அவளை மனதுக்குள் திட்டித் தீர்த்தான்.

இன்றைக்கு செய்தி வாசிக்க பிரியா, சந்திரிகா இருவரும் சென்றனர்.


மணி பதினொன்று தாண்டி, பன்னிரெண்டைத் தொடவிருந்தது.

சரியான பிசாசு! இன்னிக்குன்னு பாத்து இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா ந்யூஸ் ரீடிங்க்கு போகணுமா? பாத்ரூம் போகும்போது கூட ஒண்ணா போறாங்களே! இவளுக்கு வரும்போதுதான் அவளுக்குமா வருமா! சே! இன்னிக்குன்னு ரெண்டும் ஒண்ணா ஒட்டிகிட்டு திரியுதுங்களே! எப்டியாவது தனியா மாட்டுவா! போய் ப்ரபோஸ் பண்லாம்னு பாத்தா விட மாட்றாளுகளே! ஏண்டீ இப்டி என்ன சோதிக்கறீங்க? என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

அதற்குள் அவனுடைய பெற்றோரிடமிருந்து நாலு முறை போன் வந்துவிட்டது! அவளிடம் சொல்லி விட்டாயா? ரிஸல்ட் என்ன? பாஸா? ஃபெயிலா? என்று!

"அப்பா! இன்னும் எக்ஸாமே எழுதல! கடுப்பேத்தாதீங்கப்பா! வெய்ங்க! எதுவானாலும் இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள சொல்லிடறேன்!" என்று எரிந்து விழுந்தான்.

பிரியாவுக்கு இவன் தவிப்பு ஜாலியாக இருந்தது. தவிடா! தவி! அடடா! என்னமா ஃபீலிங்க் காட்றான்! டேய்! இன்னிக்கு என்னோட நாள்டா! நான் இத உனக்கு விட்டுக் குடுத்திருவேனா? நான்தான்டா இன்னிக்கு ஒருநாள் உனக்கு பாஸ்! உன்ன வெச்ச்ச்சி செய்வேண்டா! என்று தன் பற்களை கடித்து மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். பிற்காலத்தில் இதற்காக இவன் தன்னிடம் எப்படி அடங்கிப் போவான் என்று கற்பனை பண்ணிக் கொண்டு அதை நினைத்து நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

சந்துருவுக்கு இருப்பு கொள்ளவில்லை. சரி! நாமே சந்திரிகாவை வெளியே போகச் சொல்லி சொல்லிவிடலாம் என நினைத்து அவளருகில் சென்றான்.

பிரியா எதோ கேட்பது போல சந்திரிகாவின் அருகில் வந்தாள். சந்துரு முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

பிரியாவுக்கு சிரிப்பாக வந்தது. விஷமமாகச் சிரித்தபடி தன்னுடைய இடத்துப் போனாள்.

மதிய உணவுக்கு சிலர் எழுந்து சென்றனர்.

ம்ஹூம்! இனிமே தாங்க முடியாது! ரோஸ் வேற வாடிடும்! யார் இருந்தாலும் பராவாயில்ல! தனியா சொல்ல சான்ஸே இல்ல! எல்லார் முன்னாடியும் வெச்சுதான் சொல்லணும்! பரவால்ல! சொல்லிட வேண்டியதுதான். என்ன? கொஞ்ச நாள் கலாய்ப்பானுங்க! பரவால்ல! காதல்ல இதெல்லாம் சகஜம்! ரைட்டுடா சந்துரு! கெட் ரெடி! என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டு எழுந்தான். தன் பையிலிருந்து க்ரீட்டிங்க் கார்டையும் ஒற்றை ரோஜாவையும் எடுத்துக் கொண்டான்.

ம்! பய புள்ளைக்கு தகிரியம் வந்திடுச்சி! எல்லார் முன்னாலயும் ப்ரபோஸ் பண்ணப் போறான்! பிரியா! செல் போன தயார் பண்ணிக்கோ! அவன் வழியறத கிளியரா வீடியோ எடுக்கணும்! அப்பதான் பயல ஓட்ட முடியும்! என்று நினைத்தபடி பிரியா தன் செல் போனை தயார் செய்து கொண்டாள்.

சந்துரு எழுந்து கையில் க்ரீட்டிங் கார்டுடனும் ஒற்றை ரோஜாவுடனும் சந்திரிகாவை நோக்கி நடக்க பிரியாவும் சந்திரிகாவை நோக்கி நடந்தாள்.

சந்திரிகாவின் அருகில் சென்று அவளிடம் பேச்சு கொடுக்க முனையும் போது பிரியா அவனருகில் வந்து நிற்க, சந்துரு ஒரு நிமிடம் தயங்கினான்.

சந்திரிகா, "என்ன ரெண்டு பேரும் வந்திருக்கீங்க! என்ன விஷயம் சந்துரு!" என்றாள்.

"ஒண்ணுல்ல! நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கலாம்னு வந்தேன்! ஆனா மொதல்ல இவருதானே வந்தாரு! இவரே சொல்லட்டும்! அப்றம் நான் சொல்றேன்!" என்றாள் பிரியா.

"சொல்லுங்க சந்துரு!" என்றாள் சந்திரிகா.

சந்துரு தயக்கமாக பிரியாவைப் பார்க்க அவளோ குறுநகை பூத்தபடி நின்றிருந்தாள்.

சந்திரிகாவும் சந்துரும் திடீரென்று இப்படி நிற்பதைப் பார்த்து மற்றவர்கள் இவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் தொண்டையை செருமிக் கொண்டான்.

ம்! அப்டிதான்! தொண்டைய சரி பண்ணிக்கோ! கெட் ரெடி! என்று மனதுக்குள் கூறினாள் பிரியா. தன் செல் தயாரா என பார்த்துக் கொண்டாள்.

"வெல்! ஆக்சுவலா உன்னப் பாத்ததும் எனக்கு பிடிக்கல! ஆனா பாக்கப் பாக்க ரொம்ப பிடிச்சிருச்சி! என்னோட வாழ்க்கைய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் உயிர்ப்போட வெக்கிற! இது.... இந்த உயிர்ப்பு என் வாழ்நாள் முழுசும் எனக்கு வேணும்! ஐ லவ் யூ! ஐ வான்ட் டு மேரி யூ! வில் யூ மேரி மீ!" என்று ஒரு காலை மண்டியிட்டு மற்றொரு காலை மடக்கி கைகள் இரண்டையும் அகல விரித்து ஒற்றை ரோஜாவையும் க்ரீட்டிங் கார்டையும் அவளிடம் நீட்டி அவளை அண்ணாந்து நோக்கி தன் காதலை தெளிவாகச் சொன்னான்.

இதைக் கேட்ட சந்திரிகா சிரித்தாள். மற்றவர்கள் ஹோ வென கோஷமிட்டனர்.

பிரியா அதிர்ந்தாள். ஏனெனில் இந்த வார்த்தைகளை சந்துரு பிரியாவைப் பார்த்துதான் சொன்னான்.

"நீ..... நீ.... என்ன உளற்ர..... அவளப் பாத்து சொல்ல வேண்டியத என்னப் பாத்து ஏன் சொல்ற?" என்று குரல் தந்தியடிக்கக் கூறினாள்.

"ஏன்னா அவர் உன்னதான் லவ் பண்றார்! அத உன்கிட்ட சொல்லதான் காலைலேந்து மனுஷன் தவியா தவிக்கறார்! நீதான் கண்டுக்கவே மாட்றயே!" என்றாள் சந்திரிகா!

"என்ன?" என்று அதிர்ந்தாள் பிரியா.

"என்னது என்ன?" என்று சிரித்தான் சந்துரு.

"ஆனா நீ ..... நீங்க... அவளப் பாத்துதானே எப்ப பாத்தாலும் சிரிப்ப..... ம்ச்.... சிரிப்பீங்க.....என்னப்பாத்து எப்பவும் மொறைக்கதானே செய்வ..... ஐயோ.... செய்வீங்க....."

"ஹலோ! ஹலோ! நீ எப்பயும் போல என்னை நீ! வா! போன்னே சொல்லு! அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு! அப்றம் என்ன கேட்ட? அவளப் பாத்து சிரிச்சிட்டு உன்னப் பாத்து மொறப்பேன்னா? ஏன்னா உன் மேல எனக்கு எல்லா உரிமையும் இருக்குன்னு நான் நெனச்சதுனாலதான்! அதனாலதான் உன்கூட உரிமையோட சண்ட போடுவேன்! உன்னத் திட்டுவேன்! மொறைப்பேன்! எக்ஸெட்ரா.... எக்ஸெட்ரா...... எக்ஸெட்ரா...." என்று சொல்லி அவள் கைகளைப் பிடித்து அதில் அந்த ஒற்றை ரோஜாவையும் க்ரீட்டிங்க் கார்டையும் வைத்தான்.

"ஆனா... நீ ..... அவளதான் லவ் பண்றன்னு ... நான் நெனச்சேன்." என்றாள் பிரியா. அவளுக்கு வாய் குழறியது போல இருந்தது.

"அப்டி நீ நெனச்சா அதுக்கு நானா பொறுப்பு!"

"ஹூம்.... ஆனா....." என்று அவள் இழுத்தாள்.

"யெஸ் பிரியா! என் கூட நீ ஒவ்வொரு முறை சண்டை போடும்போதும் எனக்கு நீ என்னை கொஞ்சறது மாதிரிதான் தோணும்! உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! உன் கூட சண்ட போட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! உன்னால எனக்கு நிறைய நாள் தலைவலி வந்திருக்கு! ஆனா நீ என்னோட செல்லமான குட்டிப் பிசாசு! நீ எனக்கு ஒரு சுகமான தலைவலி! இந்த குட்டிப் பிசாசு எனக்கு வேணும்! இந்த குட்டிப் பிசாசு குடுக்கற இந்த சுகமான தலைவலி எனக்கு காலம் முழுக்க வேணும்!" என்றான் அவன் தன் கண்களில் தன்னுடைய காதலைத் தேக்கி வைத்துக் கொண்டு.

"அவர் தன்னோட காதல உன்கிட்ட சொல்லிட்டார்! நீ பதிலுக்கு என்ன சொல்லப்போற?" என்று சந்திரிகா கேட்டாள்.

"அவதான் ஏற்கனவே சொல்லிட்டாளே சந்திரிகா!" என்றான் விமல்.

"ம்! நான் .... நான் எப்ப சொன்னேன்?" என்று அவசரமாக மறுத்தாள் பிரியா.

ஏற்கனவே ஏற்பட்ட அதிர்ச்சியில் மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது! இப்போது சந்திரிகாவும் இப்படிச் சொன்னதும் நிலை தடுமாறி விழப் போனவளை சந்துரு தன் மேல் தாங்கிக் கொண்டான். ஒரு நிலையில் இல்லாததாலோ என்னவோ அவள் இதை உணரவேயில்லை!

"நீ அவர் சொன்னதக் கேட்டு கோவப் படல! அழல! ஆனா உளற ஆரம்பிச்சுட்ட! உனக்கு வாய் குழறுது! நீன்னு சொல்லி நீங்கன்னு மாத்தினதும், சிரிப்பன்னு சொல்லி சிரிப்பீங்கன்னு மாத்தினதும், செய்வன்னு சொல்லி செய்வீங்கன்னு மாத்தினதும்! நடு நடுல ம்ச்! ஐயோன்னு சொல்லிகிட்டதும்..... எல்லாத்துக்கும் மேல இப்ப இவர் மேல இப்டி சாஞ்சி நிக்கறதும் உனக்கும் சம்மதம்ன்னு அர்த்தமில்லாம வேற என்னவாம்!" என்று சொல்லி சிரித்தாள் ராகினி.

அப்போதுதான் அவள் தன்னுடைய நிலையை உணர்ந்தாள் அவசரமாக விலக முற்பட, அவன் அவளைத் தன் கைவளையத்துக்குள்ளேயே வைத்துக் கொள்ள முற்பட, ஒரு செல்லச் சிணுங்கலுடன் அவனிடமிருந்து நகர்ந்தாள்.

"ம்.... ஆனா..... " என்று பிரியா இழுக்க,

"ஏய்! பிரியா! சந்துரு உனக்கு பர்ஃபக்ட் மேட்ச்! ஒத்துக்க!" என்றான் விமல்.

ஆனாலும் பிரியாவுக்கு குழப்பமாக இருந்தது போல!

"பிரியா! நோ மோர் கன்ஃப்யூஷன்! யூ போத் ஆர் க்ரேட் காம்பினேஷன்!" என்றாள் ராகினி விளம்பர பாணியில். இதையெல்லாம் பார்த்த விக்டர்

"டேய்! என்னடா நடக்குது இங்க?" என்று அங்கலாய்த்தான்.

"தோழர்களே! இதோ என் தேவதை! இன்று செல்வி பிரியங்காவாக இருப்பவள் இன்னும் சில தினங்களில் திருமதி பிரியங்கா சந்திரமௌலியாக பதவியுயர்வு பெறவிருக்கிறார்கள்! அந்த நிகழ்வுக்காக விரைவில் உங்கள் அனைவருக்கும் ஒரு பார்ட்டி தரப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்றான் சந்துரு!

நண்பர்கள் எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

"டேய்! இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல! எப்பப் பாத்தாலும் அவகிட்ட சண்ட போட்டுட்டு, இப்ப வந்து தேவதை! திருமதி சந்திரமௌலி! அப்டீன்னெல்லாம் சொல்றது கொஞ்சம் கூட நியாயமே இல்ல!" என்று குறைபட்டான் அந்த ப்ருஹ்ஸ்பதி விக்டர்!

"யேய்! என்னா? அவ இவங்கற? மரியாத! மரியாத குடுத்து மரியாத வாங்கு!" என்று பிரியா விக்டரிடம் எகிர,

சந்துரு, மனதுக்குள் இவளே இப்பதான் நான் சொன்னதக்கேட்டு சண்ட போடாம யோசிக்க ஆரம்பிச்சிருக்கா! அதுக்குள்ள இந்தக் கொசுத் தொல்ல தாங்கலையே! என்று நினைத்தபடியே பிரியாவைப் பார்த்து,

"ஐயோ! அம்மா! பரதேவதே! நீ வா! நமக்கு நெறைய வேலை இருக்கு! நான் எப்பலேர்ந்து உன்ன லவ் பண்ண ஆரமிச்சேன்! எங்க பேரண்ட்ஸ் என்ன சொன்னாங்கன்னு எல்லாம் உனக்கு தெரிய வேண்டாமா? நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண வேண்டாமா?" என்று அவளிடம் கொஞ்சிக் கொண்டே, தன் நண்பர்களைப் பார்த்து, "டேய்! அந்தக் கொசுவ அடிங்கடா!" என்று சொல்லிவிட்டு அவளை அங்கிருந்து தள்ளிக் கொண்டு சென்றேவிட்டான்.

"டேய்! விக்டர்! இந்த சீரியல் இந்த எபிஸோடோட முடிஞ்சு எண்ட் கார்ட் போட்டாச்சு! நீ சேனல மாத்து! பக்கத்து சேனல்ல புதுசா ஹிந்தி டப்பிங் சீரியல் ஆரமிச்சிருக்காங்க! அதப் போய்ப் பாருடா! போ! போ! கௌம்பு! காத்து வரட்டும்!" என்று விமலும் ராகினியும் அந்த விக்டரை ஓட்டினார்கள்.

"என்னம்மா! நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா!" என்று விக்டர் குறைபட,

"டேய்! போடா! போ! போ!" என்று ராகினி விக்டரின் முன்னால் நின்று ஜெயம் பட நாயகி சதா ஸ்டைலில் ஒற்றைக் கையை நேராகத் தூக்கி தலைக் குனிந்து சொன்னாள்.

இதைப் பார்த்த நண்பர்கள் அனைவரும் தங்கள் கைகளைத் தட்டி ஹோ வென்று கோஷமிட்டுச் சிரித்தபடி கலைந்தனர்.

சந்திரிகா, செல்லமாகச் சிணுங்கியபடி செல்லும் பிரியாவையும் அவளை தன் கொஞ்சல் வார்த்தைகளால் சமாதானம் செய்தபடி செல்லும் சந்துருவையும் பார்த்து சிரித்தாள். இதப் பாக்கதானே காலைலேந்து வெய்ட் பண்றேன்! லாங் லிவ் போத ஆஃப் யூ மை ஃப்ரண்ட்ஸ்! என்று மனதாற வாழ்த்தினாள்.

ஓராண்டுக்குப் பிறகு....

"ஏய்! மெதுவா நடடீ! பிள்ளைக்கு எதுனா ஆச்சு! அவ்ளோதான்! நீ காலிடீ!"

"த்தோடா! பொண்டாட்டி மேல இல்லாத அக்கர! புள்ள மேல வந்திடிச்சோ! அடங்குடா! நான் மெதுவாதான் நடக்கறேன்! ரொம்ப ஓவரா பண்ணாத!"

"நானாடீ ஓவரா பண்றேன்! நீதான் ஸீன் போட்டுகிட்டு திரியற!"

"அடப்பாவி! நானாடா ஸீன் போடறேன்?"

"ஆமா! எப்பப் பாத்தாலும் டேய்! அங்க வலிக்கிதுடா! இங்க புடிச்சி இழுக்குதுடான்னு நீ தானே சொல்ற! நானா சொன்னேன்!"

"ச்சீப்பெ!"

"ச்சீப்பெ!"

அவள் அவனை முறைத்துவிட்டு தன்னுடைய இடத்தில் அமர்ந்தாள். அவனும் தன்னுடைய இடம் சென்று அமர்ந்தான்.

அரை மணி நேரம் கடந்திருக்கும்! அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆறுமாத கர்ப்பத்தை சுமந்து கொண்டிருந்தாள். அதன் காரணமாக கால்கள் க்ராம்ப்ஸ் வந்து இழுத்தது. அவன்தான் சொன்னானே! ஸீன் போடுவதாக! அதனால் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டாள். ஆனால் அவன் கண்டு கொண்டான்! எழுந்து வந்து ஒரு சிறிய ஸ்டூலை அவளருகில் வைத்து அவளுடைய கால்களைத் தூக்கி அதன் மீது வைத்துவிட்டு அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். அவள் கண்கள் குளம் கட்டியது.

"நோ பேபி! உன் கண்லேந்து ஒரு சொட்டு கூட கண்ணீர் வரக் கூடாது! என் காதல் சரியா தப்பான்னு யோசிச்சிகிட்டிருந்த நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி இந்த குளம் கட்டின கண்ணப் பாத்துதான் என் காதல் சரீன்னு புரிஞ்சிகிட்டேன்! அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்! ரோட் ஆக்ஸிடென்ட்ல பெத்தவங்கள இழந்த சோகத்த நெஞ்சில வெச்சிருந்தாலும் எப்பவும் எல்லார்கிட்டயும் உற்சாகமா இருக்கற உன்ன, நான் உற்சாகமா வெச்சிக்கணும்னு! இந்தக் கண்லேந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வர விடக் கூடாதுன்னு! நான் இருக்கேண்டா உனக்கு! நோ வொரீஸ்!" என்று கூறிக் கொண்டே அவள் கால்களை மெதுவாக நீவி விட ஆரம்பித்தான். அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.

இதோ சந்துருவும் பிரியாவும் கணவன் மனைவியாக அதே அலுவலகத்தில் அதே செல்லச் சண்டைகளுடன் .... செல்லச் சிணுங்கல்களுடன்..... கேலி கிண்டல்களுடன்..... வாழ்க்கை அவர்களுக்கு தினம் தினம் சூடான செய்திகளுடன் காலையில் கையில் வரும் நாளிதழாக.... சுவாரசியமான கதைப் புத்தகமாக .... அறுசுவை விருந்தாக.... அழகான கவிதையாக ......... ஆழமான காதலாக.... இருவரும் ஒருவராக உணரத் துவங்கிவிட்டார்கள்.

வாழ்க்கை பல அனுபவங்களை நமக்கு அள்ளி அள்ளி வழங்குகிறது! அவை நமக்கு சுவராசியமானவையா இல்லை கசப்பானவையா என்பதெல்லாம் நமக்குப் புரிய வேண்டாமா? அதற்கு காதல் செய்ய வேண்டும்! ஆதலினால் காதல் செய்வீர் நண்பர்களே!♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

 
Last edited:

dhanya krishna priyai

Friends's of Penmai
Joined
Oct 19, 2016
Messages
258
Likes
675
Location
Thiruvannamalai
#8
ஆதலினாற் காதல் செய்வீர்

அப்பா என்னை மன்னீசிடுங்க, என்னாலதான் உங்களுக்கு
"ஹார்ட் அட்டாக்" வந்து இப்படிப் படுத்து இருக்கிங்க என்று மனதினுள் கவலைப் பட்டு கொண்டிருந்தால் ராதா.

அம்மாவின் நிலையோ அதற்கு மேல் இருந்தது.அப்பாவின் நிலை ஒரு புறம் என் மீதான கோபம் மறுபுறம்.அழுது அழுது சோர்ந்து போய் இருந்தார்.

என் மீது என்ன தவறு என்று எனக்கு இன்னும் புரியவே இல்லை.இதுவரை ஐம்பது பேர் என்னைப் பெண் பார்த்து விட்டுச் சரி வராது என்று சென்று வீட்டனர்.அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

உனக்குப் பின் உன் தங்கையும் கல்யாண வயதில் இருக்கிறாள்.அவளை கரை சேர்க்க வேண்டாமா.உனக்கே இப்படி இழுத்துக் கொண்டிருந்தாள் எப்படி என்று புலம்பிக் கொண்டிருந்தார் அம்மா.

இதற்கு மேலும் பொறுமை இல்லை என்னிடம் இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்க.என் கண்ணணை பார்த்து இதற்கு ஒரு முடிவு எடுக்கப் புறட்டேன்.

எப்பொழுதும் போல் அவனுக்கு என்ன "முகத்தில் அவ்வளவு புன்னகையை பூசிக் கொண்டு அழகாக நின்றிருந்தான்".அவனைப் பார்த்ததும் என் கவலை அனைத்தும் மறைந்துவிட்டது.

இப்படியே சிரித்து கொண்டிருந்தால் எப்படி?என்னால் இதற்கு மேல் உன் சோதனையை தாங்க முடியாது என்று கண்ணீர் மல்க நின்றேன்.அதற்கும் அதே புன்னகை பதிலாய்.அவனையே பார்த்து கொண்டிருந்தேன்.

நேரம் செல்வது புரிய அவனிடம் இதுவே கடைசி முறை நான் உன் முன் அழுவதாக இருக்க வேண்டும்.என் சோதனை அனைத்தும் தீர்த்துவை என்று அந்த நவநீத கண்ணணிடம் வேண்டினேன்.கோயிலை விட்டு வெளியே வரும் பொழுது என் சோதனை அனைத்தும் நீங்கியதாய் ஒரு நிம்மதி.

வீட்டு வாசலில் நுழையும் பொழுதே அப்பாவின் மலர்ந்த குரல்.எனக்கு ஒரே ஆச்சரியம் என்ன என்று உள்ளே சென்றால் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி.எனக்கும் அது தொற்றி கொள்ள என்ன என்று கேட்டேன் முக மலர்ச்சியோடு.உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் என் தங்கை.

அப்படியே என் முகம் வாடிவிட்டது.எப்பொழுதும் போல் இதுவும் முடியப்போகிறது என்று நினைத்துக் கொண்டே தயாராகச் சென்றேன்.

அம்மா வந்து அழைத்துச் சென்றார் மாப்பிள்ளைக்கு காபி கொடுக்க.அறையில் இருந்து வெளியே வந்தேன் யாருமே இல்லை எங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணண் தான் அப்பாவிடம் பேசி கொண்டிருந்தார்.

காபி கொடும்மா என்று அம்மா சொன்னதும் தான் புரிந்தது அவர் தான் மாப்பிள்ளை என்று.அவர் என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

ஒரே வாரத்தில் கோவிலில் எங்கள் திருமணம் நடந்தேரியது.அன்று இரவு தனிமையில் நானும் அவரும் மௌனமாக அமர்ந்து கொண்டிருந்தோம்.

நானே பேச தொடங்கினேன்.எனக்குத் தெரியும் மற்றவர்களைப் போல் என் மீது காதல் கொண்டு நீங்கள் திருமணம் செய்யவில்லை.

ஏன் அப்படிச் சொல்கிறாய் ராதா?

"ஒரு சோக புன்முறுவலோடு இந்த நொண்டியை வேண்டாம் என்று அனைவரும் சொல்லியும் நீங்கக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களே அது என் மீது உள்ள பரிதாபத்தால் தானே".

நான் இந்த வீட்டிற்கு வந்த முதல் நாளே உன்னைப் பார்த்தேன்.பார்த்த நொடியே உன்மீது காதல் கொண்டேன் ராதா.அதற்குப் பிறகு உன் பொறுமை,கனிவு,அன்பான உள்ளம்,புன்னகை பூசிக் கொண்ட முகம்,பட்டாசு போல் அதிரடி பேச்சு எல்லாவற்றிலும் என்னை உன்னிடம் இழந்தேன்.

அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன் இந்த கண்ணணுக்கு ஏற்ற ராதை நீதான்.இவை அனைத்திற்கும் முன்பு உனக்கு ஊனம் என்பது என் கண்ணில் தெரியவில்லை தெரியவும் தெரியாது.

கண்ணில் நீரோடும் ஏக்கத்தோடும் அனாதையாக வளர்ந்த எனக்கு உன்னுடைய மொத்த காதல்,அன்பு,பாசம் அனைத்தும் எனக்கு மட்டுமே தருவாயா ராதா.

எனக்கு இருக்கும் குறையை மறைத்து என்னிடம் அன்பிற்காக ஏங்கி நிர்க்கும் உங்களை என் உயிர் போனாலும் காதலித்து கொண்டு தான் இருப்பேன் என்று அவனைக் கட்டி கொண்டாள்.

உடலில் ஊனம் உள்ளவர்களுக்குக் காதல் கனியைச் சுவைக்கும் பாக்கியம் கிடைக்கும்.மனதில் ஊனம் உள்ளவர்களுக்கே காதல் எட்டாக் கனி."ஆதலினாற் காதல் செய்வீர்".
 

Divya Divi

Citizen's of Penmai
Joined
Oct 15, 2016
Messages
517
Likes
593
Location
Kanchipuram
#9
ஆதலினாற் காதல் செய்வீர்

கல்லூரிக்கு கிளம்பிய மைவிழி தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள், எப்போதும் பயந்த சுபாவமும் மருண்ட விழிகளும் கொண்ட மைவிழிக்கு பதிலாக அன்று நிமிர்வும் தன்னம்பிக்கையும் கொண்ட மைவிழி கண்ணாடியில் தெரிந்தது கண்டு தான் தானா இது என்று அவளுக்கே அவளைக் குறித்து ஆச்சர்யமாக இருந்தது. தன்னை சரிபார்த்துக்கொண்டு, அன்று தன் வகுப்பில் எடுக்க வேண்டிய செமினாருக்கு தேவையான குறிப்புகளையும், புத்தகங்களையும் எடுத்து வைத்தாள்.நேற்று இந்த நேரம் செமினார் பற்றி அவள் பயந்த பயம் என்ன இன்று ஆர்வமாக கிளம்புவது என்ன, அந்த ஆர்வத்திற்கு காரணமான சிவாவை நினைக்கும் போதே மைவிழி முகத்தில் புன்னகை மலர்ந்தது.

வகுப்பிற்குள் நுழைந்ததும் முதலில் சிவாவை தேடினாள், இன்னும் வந்திருக்கவில்லை, எனவே மற்ற தோழிகளுடன் அரட்டை அடித்தபடியே செமினார் குறிப்புகள் மேல் பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தாள். ஆசிரியர் வரும் நேரமும் ஆகிவிட்டது, நேற்று பக்கம் பக்கமாக வசனம் பேசிவிட்டு இதோ செமினார் ஆரம்பிக்க போகும் இந்த நிலையிலும் வராத சிவாவை நினைத்து எரிச்சலாக வந்தது.

ஆசிரியர் வகுப்பிற்குள் வந்ததும், மைவிழியை பார்த்து செமினாருக்கு தயாராகுமாறு கூறி விட்டு அட்டெனன்ஸ் எடுக்க தொடங்கினார். மைவிழியும் கடைசி நிமிட ஆயத்தமாக குறிப்புகள் மீது பார்வையை ஓட்டிகொண்டிருந்தாலும் மனது சிவாவை தான் நினைத்துக் கொண்டிருந்தது. அப்போது சிவசங்கரி என்ற ஆசிரியரின் குரலை தொடர்ந்து பிரெசென்ட் மேம் என குரல் வந்த திசையை நோக்கி ஆர்வமாக திரும்பினாள். அங்கே சிவா என அழைக்கப்படும் சிவசங்கரியும் இவளைப்பார்த்து புன்னகை சிந்தியவாறே ஆல் தி பெஸ்ட் என விரலை உயர்த்தி காட்டினாள்.

ஆசிரியர் மைவிழியை செமினார் எடுக்க அழைத்தார். வழக்கம் போல பயந்து செமினார் எடுக்க மாட்டேன் என மைவிழி ஆசிரியரிடம் கூறுவாள் என எதிர்பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம். ஆசிரியர் அழைத்த உடன் தைரியமாக சென்று அனைவருக்கும் புரியும் படி அழகாக செமினாரை முடித்தாள்.

வகுப்பு முடிந்ததும் மைவிழி நேராக சிவசங்கரியிடம் தான் சென்றாள். “தேங்க்ஸ் டி” என்று சிவாவிடம் பேசி கொண்டிருந்த மைவிழியை அதற்குள் அனைவரும் சூழ்ந்து கொண்டு, “சூப்பர், கலக்கிட்ட டி”, என பாராட்டினர். “செமினார்னு சொன்னாலே பயப்படுவியே இன்னைக்கு எப்படி பயப்படாம எடுத்த?”, என அனைவரும் கேட்டகவும் மைவிழியும் நேற்று நடந்ததை கூற தொடங்கினாள்.

செமினாரை நினைத்து பயந்து கொண்டு லைப்ரரி அருகே யோசனையில் அமர்ந்திருந்த மைவிழியிடம் ”ஏய், மைவிழி ஏன் டி இங்க தனியா இருக்க எல்லாரும் லைப்ரரில இருகாங்க வாடி போலாம்”,என்றாள் சிவசங்கரி

மைவிழி,”இல்ல டி செமினார நினைச்சா கொஞ்சம் பயமா இருக்கு அதுதான் என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்”

சிவா, ” எங்களுக்கு எதாவது புரியலனா நல்லா புரியற மாதிரி சொல்லிக்கொடுப்பியே அதையே அங்கயும் செய்ய வேண்டியதுதானே இதுக்கு ஏன் உனக்கு பயம்?”

மைவிழி, “நீங்க எல்லாம் என் ப்ரண்ட்ஸ் அதனால தயக்கம் இல்லாம உங்க முன்னாடி பேச முடியுது, ஆனா எல்லார் முன்னாடியும் எப்படி டி?”

சிவா, “ உன் பிரச்சனை என்னன்னு எனக்கு புரிஞ்சிடுச்சி டி, உன் பிரச்சனைலேர்ந்து நீ வெளிய வரணும்னா நீ காதலிக்கணும்”

மைவிழி, ”என்ன டி சொல்ற செமினாருக்கும் காதலிக்கறத்துக்கும் என்ன சம்பந்தம்?”

சிவா, “சொல்லறேன் கேளு, முதல்ல நீ உன்னையும் உன் திறமையையும் காதலிக்கணும், உனக்கே உன்ன பிடிக்கலைனா வேற யாருக்கு உன்ன பிடிக்கும்?, நீயே உன்ன பத்தி தாழ்வா நினைக்கறத நிறுத்து, உன்ன நீயே தாழ்வா மதிப்பிட்டா மத்தவங்க பார்வையும் அப்படித்தான் இருக்கும். இவங்க கேலி பண்ணுவாங்க, அவங்க கிண்டல் பண்ணுவாங்க அப்டின்னு நினைச்சிக்கிட்டு நீயே பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் வளர்த்துகிட்டு இருக்க, உன் குறைகளையும் நினைச்சி தாழ்வு மனப்பான்மைய வளர்த்துக்காத அதை மாத்த முயற்சி பண்ணு, பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் ஒதுக்கி வைச்சிட்டு உன் திறமைய முதல்ல நீ நேசிக்கணும் அப்போ தான் அதை வெளிய கொண்டுவர முடியும். நாம முதல்ல நம்மை உயர்வா நினைக்கனும் அப்போதான் மத்தவங்க அது மாதிரி உயர்வா நினைப்பாங்க. அதனால நீ முதல்ல உன்னையும் உன் திறமையையும் காதலி, உன்னை பத்தி உயர்வா நினை தன்னால பயமும் தாழ்வு மனப்பான்மையையும் குறையும்” என்று நீண்ட அறிவுரையை மைவிழிக்கு வழங்கினாள்.

இந்த நீளமான விளக்கத்தை கேட்ட பின் மைவிழியும் கொஞ்சம் தெளிந்தாள். இன்று செமினாரையும் தைரியமாக எதிர் கொண்டு தன் திறமையை நிரூபித்தாள். மைவிழி போல நாமமும் நம் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் தகர்த்து திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும், ஆதலினாற் உங்களையும் உங்கள் திறமையையும் காதல் செய்வீர் மக்களே...
 
Last edited:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,298
Likes
25,806
Location
Sri Lanka
#10
ஆதலினாற் காதல் செய்வீர்...

அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். கதிரவன் வந்து தழுவி எழுப்பும்வரை எழுந்திருக்கமாட்டாள் கஸ்தூரி. வழமைபோல் யன்னலை திறந்து திரைச்சீலைகளை இழுத்துவிட்டு சென்றிருந்தாள் தாய் புனிதா.

கதிரவனின் தழுவலில் விழி மலர்ந்தவள் இயற்கையின் விளையாட்டில் தன்னையே மறந்துவிட்டாள்... முதல் நாள் இரவு இதழ் விரித்த மல்லிகை நறுமணம் வீசிக்கொண்டிருக்க, வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிட்டு முத்தமிட்டு தேனருந்தி பறந்து திரிகின்றன. மொட்டுவிரித்த றோஜாக்கள், செவ்வந்தி, செவ்வரத்தை என சிறிய பூந்தோட்டம் ஒன்று விரிந்திருக்கிறது அவளது அறையின் யன்னலருகே. தேன் சிட்டுக்களின் ஆரவாரம், வண்டுகளின் ரீங்காரம் இன்னிசையாய் காதுகளில் ஒலிக்க பிரமிப்புடன் ரசிக்கத் தொடங்கினாள் கஸ்தூரி.

ஆதவனுடன் சல்லாபிக்கும் மலர்கள், மலர்களோடு உறவாடும் புள்ளினங்கள், இதமாக தழுவி உயிர் கொடுக்கும் தென்றல், அப்பப்பா இயற்கையின் கள்ளம் கபடமில்லா காதலை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியவில்லை...

நடப்புக்கு திரும்பியவளை தந்தையின் நினைவுகள் ஆக்கிரமித்துக்கொண்டன...
மகளுக்கு ஒழுக்கத்துடன் தன்னம்பிக்கையை வளர்த்து சொந்தக்காலில் நிற்கும்வரை கூடவே துணையாயிருந்தவர் கடமை முடிந்தது என்று மாரடைப்புடன் சென்றுவிட்டார்.
இயற்கையை ரசிக்க கற்றுத்தந்த தந்தை. அதில் காதலைக் காட்டிய தாய்...
சிந்தனை விரிகிறது...
மனிதர்களும் மாசு மறுவற்று காதலிக்கக் கற்றுக்கொண்டால் உலகம் எவ்வளவு அழகானதாக மாறிவிடும்...
பெற்றவரிடம் அன்புக் காதல், உற்றார் உறவினரிடம் பாசக் காதல், நண்பர்களிடம் நட்புக் காதல், காதலன் காதலியிடம் - கணவன் மனைவியிடம் காமம் கலந்த காதல், இயற்கையிடம் ரசனைக் காதல், இறைவனிடம் பக்திக் காதல்... எவ்வளவு அழகானது...

அட... சட்டென்று நினைவு வர துள்ளி எழுந்தாள் கஸ்தூரி. இன்னும் இரு தினங்களில் காதலர் தினம் வருகிறதே. நண்பர்களின் அன்றைய மாலை கடற்கரை சந்திப்பில் நிச்சயம் செந்தூரன் தனது காதலை சொல்லிவிடுவான்... அம்மாவின் சம்மதம் கண்டிப்பாக கிடைக்கும்...
நம்பிக்கையுடன் எழுந்து காலைக்கடன்களை முடித்தவள் தாயை நாடிச் செல்கிறாள்...
"அம்மா! காலை வணக்கம்". கட்டியணைத்து முத்தமிட்டவுடன் பதில் கிடைக்குமுன், "அம்மா, நான் உங்களை காதலிக்கிறேன்".
புனிதாவின் முகம் கேள்விக்குறியுடன் பார்க்க...
"அம்மா, காதலன் காதலி, கணவன் மனைவிக்கிடையே பிறக்கும் அன்புக்கு மட்டும்தான் காதல் என்ற பெயரா... நான் உங்கள்மீது கொண்டது அன்புக் காதல்..."
"என்ன, எனக்கே பாடம் நடத்துகிறாயா..." செல்லமாக மகளின் கன்னத்தில் தட்டி தன் வேலைகளில் மூழ்கிவிட்டாள் புனிதா.

அன்று காதலர் தினம், காலை 8 மணி. அழகிய மஞ்சள் நிற பருத்திச் சேலையில் செவ்வந்திப் பூப்போல தயாராகிவிட்டாள் கஸ்தூரி.
"அம்மா, போய்ட்டு வர்ரேன்" என்று தனது இரு சக்கர வண்டியை நோக்கிச் செல்ல, உள்ளிருந்து "சாப்பாட்டு பெட்டி எடுத்தியாம்மா..." என்ற தாயின் குரல் துரத்திக்கொண்டு வந்தது.
"எடுத்திட்டேன்மா... வர்ரேன்மா..." என்று அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள்.

செந்தூரன்... ஒரே கல்லூரியில் வேறு வேறு பிரிவில் படித்தவர்கள். கணிணி துறையில் செந்தூரன், கணக்கியல் துறையில் கஸ்தூரி. சிற்றுண்டிச் சாலையில் முதல் பார்வை பரிமாற்றம். அன்று மாறனின் முதற்கணை தொடுக்கப்பட்டு இருவருக்குமிடையே காந்த அலைகள் உருவாகிவிட்டன. நண்பர்களோடு நண்பர்களாக பழகினர்.

தங்களிடையே உருவான ஈர்ப்பு தெரிந்தும் இருவருமே வௌிப்படுத்த விரும்பவில்லை. கல்வியை சிறப்பாக முடித்து நிலையான ஒரு நல்ல பதவியில் அமர்வதே தற்போதைய இலட்சியம் என்றும் அதுவரை வேறு சிந்தனை தனக்கு இல்லை என்றும் நண்பர்களிடையே கூறிய செந்தூரனின் விழிகள், கஸ்தூரியிடம் சொன்னதோ வேறு. அவளும் புரிந்து, காத்திருத்தலுக்கு தன்னை தயார்படுத்திவிட்டாள்.

காத்திருத்தல் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இருவருமே நல்ல பதவிகளில் இடம்பிடித்துக்கொண்டனர். இருவரது சந்திப்பும் நண்பர்களுடனேயே தொடர்ந்துகொண்டிருக்கிறது.

செந்தூரனின் நினைவுகளுடன் கஸ்தூரி ஒழுங்காக அலுவலகம் வந்து சேர்ந்தாள். காலை தேநீர் இடைவேளையின் போது கைபேசியில் அழைத்தாள் சிநேகிதி கார்த்திகா.
"கஸ்த்தூ, இப்போதான் விமலன் சொன்னான், புதிதாக இருவர் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளப்போகிறார்களாம். யார் தெரியுமா... செந்தூரனின் அத்தை பெண்கள் இருவர், சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார்களாம்... அவர்களில் ஒருத்தி அவனை கொத்திக்கொண்டு போய்விடுவாள் என்று எதிர்பார்க்கிறார்களாம். அழகில் அவர்களுக்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டவேணும். அதனால நாங்கள் எல்லோரும் அழகுக்கு மெருகேற்றி வருவோம். அப்புறம் உனக்கு சொல்லல என்றிடாதே. வைக்கட்டுமா" என்று பதிலை எதிர்பாராமல் அணைத்துவிட்டாள் கைபேசியை மட்டுமல்ல அவள் ஏற்றிய காதல் தீபத்தையும்தான்.

எப்படி வீடு வந்து சேர்ந்தாளோ தெரியவில்லை. வழமைக்கு மாறாக மதியமே வாடிய மலராக வந்தவளை கவலையுடன் பார்த்த புனிதா,
"என்னம்மா, வேலை அதிகமா... ரொம்பவே களைப்பாக தெரிகிறாயே..."
"ஆமா, தலை வலிக்கிறது அம்மா. சிறிது தூங்கி எழுந்தால் சரியாகிவிடும். ஒரு மணி நேரம் என்னை தொந்தரவுசெய்ய வேண்டாம்..." என்று முறுவலித்து தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

"மனமே அமைதிகொள். என் பார்வையில்தான் கோளாறு. தவறாக நினைத்து கற்பனையை வளர்த்தவள் நான். செந்தூரன் எனக்குரியவன் அல்ல. மனமே ஏற்றுக்கொள். போட்டியும் பொறாமையும் வேண்டாம். ஒரு தலையாய் காதலை வளர்த்தவள் நான். ஏமாற்றப்படவில்லை. புரிந்துகொள் மனமே... அவன் ஒரு நல்ல நண்பன். அவ்வளவுதான்." என உருப்போட்டுக்கொண்டிருந்தாள்.

"அம்மாவுக்கு சொல்லுமுன் அறிந்தது கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம். என் மகிழ்வுக்காகவே வாழும் அம்மா. அம்மாவை மகிழ்வாக வைத்திருக்கவேண்டியது எனது கடமை. வேதனைப்பட்டு என்னை வருத்திக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை." என்று நினைத்தவள், தந்தை சொல்வதை நினைவுகூர்ந்தாள்...
"கடவுள் தந்த அழகிய வாழ்க்கை, மகிழ்வோடு வாழ்வதற்கே. வெற்றி தோல்வி, ஏற்றம் இறக்கம், இன்பம் துன்பம் எல்லாம் சேர்ந்ததே வாழ்க்கை. தேவையான சந்தர்ப்பங்களில் புரிதலும் விட்டுக்கொடுத்தலும் வாழ்வில் மகிழ்வை அழைத்துவரும்."

பலவாறாக சிந்தித்து மனதை வென்றுவிட்டாள் கஸ்தூரி. அன்பு, பாசம், நேசம், காதல், பக்தி, ரசனை இவற்றோடு தீய பண்புகளையும் உருவாக்குவது நம் மனம்தான். அதை நம் கட்டுக்குள் வைத்து, எல்லாம் நன்மைக்கே என்று குறை நிறைகளோடு வாழ்க்கையை காதலிக்க தாய் கற்றுத்தந்தது வீண்போகவில்லை.

பட்ட காயத்திற்கு காலமே மருந்தென்ற நம்பிக்கையுடன் மனதை தேற்றிக்கொண்டு, எழுந்துவிட்டாள் கஸ்தூரி வாழ்க்கையை காதலிக்க... கடற்கரை சந்திப்புக்கும் ஆயத்தமாகிவிட்டாள் புதுப்பொலிவுடன்...

ஆதலினாற் காதல் செய்வீர் வாழ்க்கையை
மகிழ்வுடன் இருப்பீர் வாழும் காலம்...


பின்குறிப்பு
- தனது அத்தை பெண்களென செந்தூரன் அழைத்து வந்தது இரு சிறுமியரை என்பதும், நண்பர்களின் அதீத கற்பனையே அவனது திருமணம் என்பதும், காதலர் தினத்தன்று செந்தூரன் தனது காதலைச் சொல்லி கஸ்த்தூரியை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ததும் வேறு கதை.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine February 2018. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.