Pre menstrual syndrome- பெண்மையை புரிந்து கொள்ளுங்கள்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பெண்மையை புரிந்து கொள்ளுங்கள்!

பெண்ணின் உடல் ஒரு புதிர். பூப்பெய்தியது முதல் மெனோபாஸ் வரை அவர்களது உடலில் நடக்கும் ஹார்மோன்களின் அதிரடி ஆட்டத்தினால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஓராயிரம் பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.

சுற்றியுள்ள நபர்கள் பெண்களை புரிந்து கொண்டு அனுசரித்து நடந்து கொள்வதே அவர்களுக்கான முதல் சிகிச்சை என்றும் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி. ஆங்கிலத்தில் `ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்’ என அழைக்கப்படுகிற அந்தப் பிரச்னையின் பின்னணி, அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்க
மாகப் பேசுகிறார் அவர்.

`நேத்தி வரைக்கும் நல்லாத்தானே சிரிச்சுப் பேசிட்டிருந்தே... இன்னிக்கு ஏன் சிடுசிடுனு எரிஞ்சு விழறே... உனக்கென்ன பைத்தியமா?’ என்கிற கேள்வியை அனேக பெண்கள் அனேக வீடுகளில் எதிர்கொள்வதுண்டு. நேற்று வரை தான் அமைதியாக, அன்பாக இருந்ததும், இன்று அதற்கு நேரெதிராக இருப்பதும் அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் வேண்டுமென்றே அப்படி நடந்து கொள்வதில்லை. வழக்கமாக கோபமே வராத ஒரு விஷயத்துக்கு திடீரென கடுமையாக கோபப்படுவார்கள்.

எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களது உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்த ஹார்மோன் மாற்றங்கள் ஒரு பெண்ணின் அத்தனை நல்ல குணங்களையும் அப்படியே புரட்டிப் போட்டு விடும்.மாதவிலக்குக்கு ஒரு வாரம் முன்பிருந்தே பெண்களின் உடல் மற்றும் மனத்தில் ஏற்படுகிற மாற்றங்களை ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (பி.எம்.எஸ்) என்கிறோம். இது பூப்பெய்தியது முதல் மெனோபாஸ் வரை எல்லா வயது பெண்களுக்கும் வரும். 100 பெண்களில் 20 சதவிகிதத்தினருக்கு இந்த அவஸ்தை இருக்கிறது.

காரணமே இல்லாத மன அழுத்தம், தனிமைத் தவிப்பு, பாதுகாப்பற்ற உணர்வு, பயம், கோபம், எரிச்சல் என மனரீதியான மாற்றங்களுடன், மார்பகங்கள் கனத்துப் போவது, வயிற்று உப்புசம், தலைவலி, வாந்தி என உடலளவிலான மாற்றங்களையும் உணர்வார்கள். அவர்களுக்கே அது ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோமின் விளைவு என்பது தெரிந்திருக்காது.

கருமுட்டை வெளியேறுகிற போது புரொஜெஸ்ட்ரோன் என்கிற ஹார்மோனின் அளவு இயல்பு நிலையில் இருக்கும். இந்த ஹார்மோன் அளவு குறைகிற போதுதான் ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் பாதிப்பு தீவிரமாக இருக்கும். எனவேதான் மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பு இந்த அறிகுறிகள் தோன்றி, மாதவிலக்கு முடிந்ததும் தானாக மறைந்துவிடுகின்றன.

சிறு வயதிலிருந்தே அதிக மன அழுத்தத்திலும் தனிமையிலும் பாதுகாப்பற்ற உணர்விலும் வளர்கிற பெண்களுக்குத்தான் இந்த பி.எம்.எஸ். பிரச்னை மிக அதிகமாக இருக்கிறது. மனத்தளவில் உறுதியாக, தன்னம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் இருப்பதில்லை. இதைத் தவிர வைட்டமின் டி3 குறைபாடு உள்ள பெண்களுக்கும் பி.எம்.எஸ். பாதிப்பு இருக்கும். பி.எம்.எஸ்சின் அறிகுறிகள் ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் இருக்கும் என கணிக்க முடியாதபடிக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

இந்தப் பிரச்னைக்கான முதல் சிகிச்சை என்றால் ஓய்வு. அந்தக் காலத்துப் பெண்களில் யாருக்கும் பி.எம்.எஸ். பாதிப்புகள் இருந்ததாகத் தகவல் இல்லை. காரணம், அந்தக் காலத்தில் மாதவிலக்கின் போது பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அந்தத் தனிமையின் மூலம் அவர்களுக்கு உடல் மற்றும் மனத்துக்கு பூரண ஓய்வு கொடுக்கப்பட்டது.

அதைப் பத்தாம்பசலித் தனம் என நினைத்து உதறித் தள்ளியதன் விளைவே இன்று பெண்கள் மாதத்தின் எல்லா நாட்களிலும் ஓய்வின்றி, மன அழுத்தத்துடன் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே ஓய்வும் சத்தான உணவுமே முதல் சிகிச்சை. காபி, டீ கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.அடுத்தது அருகிலிருப்பவர்களின் புரிதல்.

இது அவர்களது இயல்பான குணமில்லை... பி.எம்.எஸ்சின் பாதிப்பினாலேயே அப்படி நடந்து கொள்கிறாள் எனப் புரிந்து கொண்டு அவர்களிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் உடல் வலிகளுக்கு மருத்துவரிடம் கலந்தாலோசித்து வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். சிறு வயதிலிருந்தே அதிக மன அழுத்தத்திலும் தனிமையிலும் பாதுகாப்பற்ற உணர்விலும் வளர்கிற பெண்களுக்குத்தான் பி.எம்.எஸ். பிரச்னை மிக அதிகமாக இருக்கிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.