Pregnancy Care Tips - பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பத்து மாத பாதுகாப்பு டிப்ஸ்!


கர்ப்பிணிக்ளின் கனிவான் கவனத்துக்கு...
[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
தாய்மை!

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம்! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம்.

'கருவுறுதல்’ பற்றிப் பலர் சொல்லும் கட்டுக்கதைகளையும், பிரசவம் பற்றிய தவறான கண்ணோட்டங்களையும் உண்மை என நம்பும் பல பெண்கள், மகப்பேறு அனுபவத்தையே கொஞ்சம் திகிலோடுதான் எதிர்கொள்கிறார்கள்.

'கருத்தரித்தல்’ என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் பெண்களின் கருப்பையும் உடலும் எப்படித் தயாராகிறதோ, அதேபோல மனதளவிலும் தயாராக வேண்டும். நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கியமான சூழலும் ஊட்டமிக்க உணவுகளும், ஒரு பெண்ணுக்கு பிரசவத்தை இனிய அனுபவமாக மாற்றுகின்றன.

திட்டமிடுதலில் தொடங்கி, கருத்தரித்தல், பரிசோதனைகள், பிரசவம் வரையிலான 10 மாத கால 'பரவச அனுபவத்தை’ பாதுகாப்பானதாக மாற்ற இந்தக் கையேடு உதவும். ஒவ்வொரு மாதமும் தாய்க்கு நேரும் உடல் மாற்றங்களையும் குழந்தை அடையும் வளர்ச்சிகளையும் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி எளிமையாக, தெளிவாக விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மிருதுபாஷினி கோவிந்தராஜன்.
கருத்தரித்தலுக்கு முன்பு திட்டமிடுதல் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

தாய்மைப்பேறும் பிரசவமும் இனிய அனுபவமாக இருக்க வாழ்த்துகள்!குழந்தைக்குத் திட்டமிடுதல்

திருமணமானதும், தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்துத் தெளிவாகப் பேசித் திட்டமிட வேண்டும். கணவனும் மனைவியும் கலந்துபேசி மகிழ்ச்சியான மனநிலையில் ஒன்று கலந்து கருத்தரிக்கும்போதுதான் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பார்கள். குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரம், கணவன் - மனைவி உடல் நலம் அடிப்படையில் இந்தத் திட்டமிடுதல் இருக்க வேண்டும்.

'குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’ என்று தம்பதியர் முடிவுசெய்துவிட்டால், உடனே உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி, சில மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். முதல் மூன்று மாதங்களில்தான் குழந்தையின் உடல் உறுப்புக்கள் தோன்றுகின்றன. இந்தக் காலத்தில் தாய்க்கு எந்த உடல்நலப் பிரச்னைகளும் ஏற்பட்டுவிடக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அதற்கு மாத்திரை எடுத்துக்கொள்வதும், எடுக்காமல் இருப்பதும்கூட குழந்தையைப் பாதிக்கும்.

இருவரும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பி.எம்.ஐ. 25-க்குள் இருக்க வேண்டும். முட்டை மற்றும் விந்தணு தரத்துடன் இருக்க உடல் எடை கட்டுக்குள் இருப்பது அவசியம்.

சராசரி உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் கர்ப்பக் காலத்தில் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பது, சிசேரியன் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

தைராய்டு, சர்க்கரை, ருபெல்லா, சின்னம்மை, ஹெபடைடிஸ் பி, டி.பி., எச்.ஐ.வி. பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: ருபெல்லாவுக்கான தடுப்பு ஊசியை, ஒரு பெண் போட்டிருந்தால், அதிலிருந்து ஒரு மாதத்துக்கு தாய்மை அடையக் கூடாது.


அவசியம் தேவை... ஃபோலிக் அமிலம்!
கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தின் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது. குழந்தையின் மூளை, முதுகெலும்பு, நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம்.

குழந்தை பெற்றுக்கொள்ள முடிவுசெய்துவிட்டால், ஆறு மாதங்களுக்கு முன்பே டாக்டரின் ஆலோசனையின்பேரில், ஃபோலிக் அமிலம் சத்து மாத்திரை சாப்பிடலாம். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், கரு நல்லபடியாக வளரவும், கருச்சிதைவைத் தடுக்கவும், குழந்தை எந்தக் குறையுமின்றி பிறக்கவும் உதவுகிறது.

ஆண்கள் புகைபிடித்தல், மதுப்பழக்கம் போன்றவற்றைக் கைவிட்டு ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு செய்யவேண்டியவை. கர்ப்பம் தரித்ததும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாற்றங்களையும் தெரிந்துகொள்வது, பல குழப்பங்களையும் பயத்தையும் போக்கும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
முதல் மும்மாதம்

முதல் மாதம்
கருத்தரித்தல்...

மாதவிலக்கு வந்த நாளில் இருந்து முதல் மாதம் தொடங்குகிறது. பொதுவாக 15, 16-வது நாளில் பெண்ணின் சினைப்பையில் இருந்து முட்டை வெளிப்படும். ஃபெலோபியன் குழாய் வழியே முட்டை பயணிக்கும்போது, ஆணின் விந்தணுவுடன் சேரும்போது, கருத்தரித்தல் நடக்கிறது.

முதல் மாதத்தின் இறுதியில், மிகமிகச் சிறு அளவில் கரு வளர்ச்சியடைந்துவிடும். சினைக் குழாய் (ஃபெலோபியன்) வழியே பயணித்து, கருப்பையை அடையும்.

கருப்பைக்குள் நுழைந்ததும், இந்தக் கரு இரண்டாகப் பிரியும். ஒன்று 'எம்ப்ரியோ’ (embryo) எனப்படும் சிசு. மற்றொன்று, நஞ்சுக்கொடி. இது, குழந்தைக்கும் தாய்க்குமான இணைப்பாக பிரசவம் வரை இருக்கும். எம்ப்ரியோவின் படிவங்கள்தான் குழந்தையின் உறுப்புகளாக வளர ஆரம்பிக்கும்.

கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

மாதவிலக்கு வருவது தவறி இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். கருவானது கர்ப்பப்பையில் தங்கும்போது, ரத்தக் கசிவு ஏற்படலாம். வயிற்றில் ஒருவித அழுத்தம் உணரப்படும். அதற்காகப் பயப்படத் தேவை இல்லை. மார்பகம் சற்று மென்மையானது போலவும், பெரிதானது போலவும் தோன்றும். சோர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி வரலாம்.

செய்ய வேண்டியவை:
முதலில், கர்ப்பம்தானா என்பதை வீட்டிலேயே எளிய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். இதற்கான 'டெஸ்ட் கிட்’ மருந்துக்கடைகளில் கிடைக்கும். கர்ப்பத்தை உறுதிசெய்யும் சோதனை முறையும் அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். கர்ப்பம் உறுதியானதும் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறவேண்டும்.
ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, தைராய்டு, ஆர்.எச். ஃபேக்டர், ரத்த வகை, இரும்புச் சத்து குறைபாடு மற்றும் ருபெல்லா கிருமித் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கண்டறியப்படும்.

சிறுநீரகப் பரிசோதனை மூலம் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, சிகிச்சைகள் அளிக்கப்படும்.

இதய நோய், தைராய்டு பிரச்னை போன்று வேறு உடல்நலக் குறைபாடு காரணமாக மாத்திரை மருந்துகள் ஏதேனும் எடுப்பவராக இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, அவற்றைத் தொடரலாம்.

தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற எந்தப் பிரச்னைகளுக்கும் சுய மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.

மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, ஃபோலிக் அமிலம், மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


சத்தான உணவுகளை நன்றாகச் சாப்பிட வேண்டும். இது, வயிற்றில் வளரும் கருவுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகளை இயற்கையான முறையில் அளிக்கும்.

கருத்தரித்த சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் வரை குமட்டல் நீடிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பிரச்னை மூன்றாவது மாதத்திலேயே நின்றுவிடும். சிலருக்கு கர்ப்பக் காலம் முழுவதுமே லேசான குமட்டல் இருக்கலாம்.

வெறும் வயிற்றில் இருப்பதும் குமட்டலை அதிகரிக்கச் செய்யும். காலையில் ஏதேனும் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.

குறிப்பிட்ட நேர இடைவெளியில் உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
இரண்டாம் மாதம்

குழந்தையின் வளர்ச்சிகுழந்தையின் ரத்த ஓட்ட மண்டலம் வளர்ச்சி அடையும். குழந்தையின் இதயம் துடிக்க ஆரம்பிக்கும். மூளை மற்றும் முதுகெலும்புத் தொடர்கள் வளர்ச்சி அடையத் தொடங்கும்.

குழந்தைக்கு- தலை, கண், காது உருவாகத் தொடங்கும். கைகளும் கால்களும் அரும்பும். கரு உருவாகிய ஆறாவது வாரத்தில், அதன் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் வளர்ச்சி அடையத் தொடங்கும்.

இந்த நேரத்தில் குழந்தையின் இதயம் நிமிடத்துக்கு 80 முறைக்கும் மேல் துடிக்கும்.


கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இந்தக் காலத்தில் சோர்வு, குமட்டல், மலச்சிக்கல், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை, உணவு மீதான வெறுப்பு, தலைவலி போன்றவை ஏற்படும்.

செய்யவேண்டியவை:
வாந்தி தொடர்ந்தால், உணவை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். அதிக மசாலா கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதிகமான சோர்வு ஏற்படும். நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
இந்த மாதத்தில் வயிற்றில் இருக்கும் கருவின் வளர்ச்சியைக்கொண்டு, பிரசவத் தேதியை மருத்துவர் கணக்கிடுவார்.
மூன்றாம் மாதம்
குழந்தையின் வளர்ச்சி

கரு உருவாகி எட்டு வாரங்கள் கடந்த நிலையில், எலும்பு செல்கள், மென்மையான கார்டிலேஜ் செல்கள் உருவாகும். இந்தக் காலத்தில் 'எம்ப்ரியோ’ வளர்ச்சி அடைந்து 'ஃபியூட்டஸ்’ என்ற நிலையை அடையும். குழந்தையின் முகத்தில்- மூக்கு, காது, உதடு, நாக்கு போன்றவை உருவாகும். ஈறுகளுக்கு அடியில் பற்களும் முளைக்க ஆரம்பிக்கும். கைகளில், விரல்கள் தோன்றும். கை விரல்களில் நகமும், உள்ளங்கையில் ரேகைகளும் உருவாகும். காலில்- பாதம், விரல்கள் உருவாகும். கையும், காலும் அசைய ஆரம்பிக்கும்.

இந்தச் சின்னஞ்சிறு குழந்தை சிரிக்கும், சிணுங்கும், கை விரலை சூப்பும், பனிக்குடத்தின் நீரை விழுங்கி, அதைச் சிறுநீராக வெளியேற்றும். (இந்தப் பனிக்குட நீர் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை முற்றிலும் மாற்றப்பட்டுவிடும்).

குழந்தையின் இதயத் துடிப்பை அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில் துல்லியமாகக் கேட்க முடியும். இப்போது, குழந்தை மூன்று இன்ச் உயரமும், கிட்டத்தட்ட 30 கிராம் எடையும் இருக்கும்.

கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:


குழந்தை வளர்வதால், இந்த மாதத்தில் தாயின் எடை, தோராயமாக இரண்டே கால் கிலோ அளவுக்கு அதிகரித்து இருக்கும். சிலருக்கு உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது. மனதளவில் 'நாம் கருவுற்றிருக்கிறோம்' என்ற எண்ணம், பரவசத்தை ஏற்படுத்தும். பொலிவும் வசீகரமும் அதிகரிக்கும்.

செய்யவேண்டியவை:

குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்கு சுத்திகரிக்கப்பட்ட (பதப்படுத்தப்பட்ட) பாலைப் பருகுவது நல்லது.
மருத்துவரின் ஆலோசனைப்படி, 13-வது வாரத்தில், 'டவுன் சின்ட்ரோம்’ உள்ளிட்ட மரபணு குறைபாடு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

வயிறு மற்றும் இடுப்புப் பகுதி பெரிதாகும் என்பதால், அதற்கு ஏற்ற ஆடைகளைத் அணிய வேண்டும். எலாஸ்டிக் தன்மையுள்ள ஆடையைப் பயன்படுத்தலாம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
நான்காம் மாதம்
குழந்தையின் வளர்ச்சி


நஞ்சுக்கொடி மற்றும் குழந்தையின் அனைத்து உறுப்புக்களும் தோன்றி இருக்கும். இப்போது இருந்தே சிசு பெரிதாகத் தொடங்கும். வெளிப்புற பாலின உறுப்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும்.

குழந்தை தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும். வெளிப்புறச் சத்தங்களைக் கேட்கத் தொடங்கும். பனிக்குட நீரில் சுற்றிச்சுற்றி வரும்.

குழந்தை ஐந்து முதல் ஆறு இன்ச் அளவுக்கு வளர்ந்திருக்கும். அதன் எடை, 110-120 கிராம் இருக்கும்.

கர்ப்பிணியின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
இந்த மாதத்தில் வயிறு பெரிதாகும். மெலிந்த தேகம் உடையவராக இருந்தாலோ, ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலோ, சிசுவின் அசைவை உணரலாம். இது கடைசியாக மாதவிலக்கு வந்ததில் இருந்து 16 வாரங்களுக்குப் பிறகு நிகழும்.


இந்த நேரத்தில், சருமத்திலும் மாற்றங்கள் தெரியும். ரத்தக்குழாய்கள் அதிக அளவில் வேலை செய்யும். ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக, சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படலாம். கருப்பைக்கு முன்பைக்காட்டிலும் இரண்டு மடங்கு ரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. சிறுநீரகத்துக்கு 25 சதவிகிதம் அதிகமாக ரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. எனவே, இதயம் அதிக அளவில் வேலை செய்யும்.

செய்யவேண்டியவை:

மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி வல்லுநர்களிடம் ஆலோசித்து, எளிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்க வேண்டும்.

தொடர் மற்றும் எளிமையான பயிற்சிகள் செய்வது, தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆரோக்கியத்தைத் தரும். நேரம் தவறாமல், சத்தான உணவைச் சாப்பிட வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் தொடர்ந்து நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்த, நல்ல புத்தகங்கள் வாசிப்பது, இனிமையான பாடல்கள் கேட்பது நல்லது. இது, வயிற்றில் வளரும் கருவுக்கு ஆரோக்கியமான உடல், மன வளர்ச்சியைக் கொடுக்கும்.ஐந்தாம் மாதம்
குழந்தையின் வளர்ச்சி


கைவிரலை சூப்பியது போதாது என்று குழந்தை கால் விரல்களையும் சூப்ப ஆரம்பிக்கும். குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம். முடி, கண் இமை, புருவம் வளர ஆரம்பிக்கும். குழந்தையின் இதயத் துடிப்பை சாதாரண 'ஸ்டெதஸ்கோப்’ மூலமாகவே கேட்க முடியும். குழந்தையின் எலும்புகள் வலுவடையத் தொடங்கும்.

எலும்பு மஜ்ஜைகள் உருவாக ஆரம்பிக்கும். இந்த எலும்பு மஜ்ஜையே, ரத்தச் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடையும். சிறுநீரகம் முன்பைக்காட்டிலும் அதிக ஆற்றலுடன் செயல்படும். குழந்தை, 8 முதல் 12 இன்ச் வளர்ந்திருக்கும். எடை கிட்டத்தட்ட அரை கிலோ இருக்கும்.

உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:
இது கர்ப்பக் காலத்தின் மையப் பகுதி. இதுவரை இருந்த குமட்டல், வாந்தி போன்றவை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இருப்பினும், சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல், செரிமானக் குறைபாடு போன்றவை மட்டும் நீடிக்கும். மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலி ஏற்படலாம். இடுப்பு எலும்புப் பகுதி தளர்வு பெறுவதால், இந்த வலி வழக்கமான ஒன்றுதான். வலி அதிகமாகவோ அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகவோ இருந்தால், டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக, பால் சுரப்பிகளில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு இந்த நேரத்தில் மார்பகத்தில் ஒருவகையான திரவம் சுரக்கலாம். இது, எதிர்காலத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கவலை வேண்டாம்.


செய்யவேண்டியவை:

குழந்தையின் உள்ளுறுப்புகளில் குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய, தலைமுதல் பாதம் வரை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இது அனாமலி ஸ்கேன் (anomaly scan) என்று அழைக்கப்படும்.

தாயின் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளைக் கண்டறிய, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும்.

செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உணவு உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. நார்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
ஆறாம் மாதம்
குழந்தையின் வளர்ச்சி

குழந்தைக்கு மேலும் இரண்டு உணர்வு அமைப்புகள் தோன்றும். ஒன்று- சுவை. மற்றொன்று- தொடுதல் உணர்வு. ஆண் குழந்தையாக இருந்தால், வெளியே உருவாகி இருந்த விதையானது (டெஸ்டிஸ்) அதன் இடத்தை நோக்கி நகரத் தொடங்கும்.

பெண் குழந்தையாக இருந்தால், இனப்பெருக்க மண்டலம் உருவாகும். குழந்தையின் நடுக்காது எலும்பு வலுவடையும். இதனால், செவித்திறன் மேம்படும். இன்னும் சில வாரங்களில் சுற்றிலும் எழும் சத்தத்துக்கு, குழந்தை பதில் அளிக்க ஆரம்பிக்கும். குழந்தையின் கண்கள் திறக்கும். இப்போது, குழந்தையின் உயரம் 11 முதல் 14 இன்ச் இருக்கும். எடை 400 முதல் 650 கிராம் இருக்கும்.


உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். குழந்தையின் அசைவுகளை தினமும் உணர முடியும். உடல் எடை அதிகரிப்பது உச்சத்தில் இருக்கும். நெஞ்சு எரிச்சல், முதுகுவலி, வெரிகோசிஸ் வெய்ன் போன்ற கர்ப்பக் காலத்தின் பின்பகுதி அறிகுறிகள் இப்போது தோன்ற ஆரம்பிக்கும்.

செய்யவேண்டியவை:
36-வது வாரத்துக்கு முன்பு பிரசவம் ஏற்படுவது குறைப்பிரசவம் (ப்ரீடேர்ம் லேபர்). இந்தக் காலத்தில் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதன் அறிகுறிகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்று விழிப்புடன் இருக்க வேண்டும். டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

ஏழாம் மாதம்
குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் மூளை வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இருள், வெளிச்சத்தை சிசு உணரும். தொடர்ந்து அசைவுகளை ஏற்படுத்தும். கல்லீரலும் நுரையீரலும் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும். குழந்தையின் நாக்கில் சுவை அரும்புகள் தோன்றும். குழந்தை 15 முதல் 17 இன்ச் உயரம் இருக்கும். 1.1 கிலோ முதல் 1.3 கிலோ எடை இருக்கும்.


உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

தூக்கமின்மை, மூச்சுத் திணறல், கால் வலி, உள்ளங்கை - பாதங்களில் நமைச்சல், வயிற்றுப் பகுதியில் தோல் விரிவாவதன் அடையாளம் தோன்றும். கர்ப்பப்பை, சிறுநீர்ப்பையில் அழுத்தம் கொடுப்பது அதிகரிக்கும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்னை ஏற்படும். முதுகு வலியும் ஏற்படும். மலச்சிக்கல், மூலம் ஏற்படலாம்.

குறிப்பு: இந்த மாற்றங்கள், அவரவர் உடல்நிலை, எடை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடலாம்.


செய்யவேண்டியவை:

பிரசவம் பற்றிய விழிப்பு உணர்வு இருப்பது நல்லது. இதற்கான வகுப்புகளில் பங்கேற்கலாம். பிரசவம் தொடர்பான புத்தகங்களை வாசிக்கலாம்.

பிரசவம் தொடர்பாக மற்றவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை நினைத்துப் பயப்பட வேண்டாம். ஒவ்வொருவரும் தன் கர்ப்பக் காலத்திலும், பிரசவத்திலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சற்று மிகைப்படுத்திச் சொல்வார்கள். எனவே, தெளிவான மனநிலை அவசியம்.

பிரசவத்தை எதிர்கொள்வது பற்றி, டாக்டர் சொல்லித்தந்த பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இது உங்களுக்கு இரண்டாவது குழந்தை என்றாலும், மீண்டும் டாக்டரிடம் பயிற்சி முறைகளைக் கேட்டுக்கொள்ளவும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
எட்டாம் மாதம்
குழந்தையின் வளர்ச்சிகுழந்தையின் மூளை நரம்பு மண்டலம் முதிர்ச்சி அடையும். 32-வது வாரத்தில், குழந்தையின் ஐந்து புலன்களும் செயல்பட ஆரம்பித்துவிடும். வயிற்றின் தோல் வழியே ஊடுருவும் வெளிச்சத்தை, குழந்தை உணரத் தொடங்கும். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கும். 32-வது வாரத்தில், 'ரேப்பிட் ஐ மூவ்மென்ட்’ எனப்படும் தூக்கத்தில் கண் அசைவு என்ற செயல் குழந்தைக்கு ஏற்படும். மிக ஆழ்ந்த தூக்கத்தின்போது, இந்தக் கண் அசைவு நிகழும். தினமும் குழந்தை தூங்குவதையும் விழித்துக்கொள்வதையும் விக்கலையும் உணர முடியும்.

குழந்தை 2.5 கிலோவும், 45 செ.மீ. உயரமும் இருக்கும்.

உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

பொய்ப் பிரசவ வலி அடிக்கடி ஏற்படும். இது உங்கள் கருப்பையின் தசைகள் உறுதியாவதற்காக உங்கள் உடல் மேற்கொள்ளும் தற்காப்புப் பயிற்சி. குழந்தையின் சுழற்சியை உணரலாம். சோர்வு, நெஞ்சு எரிச்சல், சிறுநீர், தூக்கம், மலச்சிக்கல், கால் வலி போன்ற பொதுவான பிரச்னைகள் ஏற்படலாம். பொய்வலி ஏற்படும்போது, நம் பாட்டி வைத்தியமான கைவைத்தியங்கள் கைகொடுக்கும்.

செய்யவேண்டியவை:

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை கண்டறியும் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்பு எலும்பில் அழுத்தம் அதிகரிக்கும். இதற்காக மருத்துவரின் ஆலோசனை பெற்று, பிரத்யேக உடற்பயிற்சி செய்ய வேண்டும். எளிய வீட்டு வேலைகள் செய்வது, நடைப்பயிற்சி போன்றவை பிரசவத்தை சுலபமாக்கும்.
ஒன்பதாம் மாதம்
குழந்தையின் வளர்ச்சி


குழந்தை இப்போது 46 செ.மீ. அளவுக்கு வளர்ந்திருக்கும். 2.7 கிலோவுக்கு மேல் இருக்கும். குழந்தையின் எடை என்பது, தாயின் உடல்நிலை, எடுத்துக்கொண்ட சத்தான உணவு மற்றும் மரபியல் சார்ந்து வேறுபடும்.

37-வது வாரத்தில், குழந்தையின் நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்கும். மூச்சுவிடுதல் பயிற்சியைக் குழந்தை செய்யத் தொடங்கும். ஆண் குழந்தை எனில் விதையானது, விதைப்பையை நோக்கி நகர்கிறது.

பெண் குழந்தை எனில், பெண் பிறப்புறுப்பு வளர்ச்சி அடைகிறது. குழந்தையைச் சுற்றிப் பாதுகாப்பாக இருந்த மெல்லிய ரோமங்கள் மற்றும் தோலைச் சுற்றி இருந்த மெழுகு போன்ற அமைப்பு மறைந்துவிடும்.

40-வது வாரத்தில், குழந்தை வெளிவரத் தயாராகிவிடும். எந்த நிலையில் வெளியேற வேண்டும் என்பதையும் குழந்தையால் உணர முடியும்.


உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

குழந்தை வெளியேற வசதியாக இடுப்புப் பகுதியைத் தளர்த்தும் பணியில் உடல் ஈடுபடும். இதற்கான ஹார்மோன் சுரந்து, இடுப்பு எலும்பு மற்றும் மற்ற மூட்டுப் பகுதியிலும் தளர்வை ஏற்படுத்தும்.

தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். மார்பகத்தில் பால் சுரக்க ஆயத்தமாகும். பனிக்குடம் உடைந்ததும் பால் சுரக்க ஆரம்பித்துவிடும். குழந்தை, இடுப்புப் பகுதியை நோக்கி நகர்வதால், மூச்சுவிடுவது கொஞ்சம் எளிதாகும்.

எப்போது பிரசவம் ஏற்படும் என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டே இருக்கும்.

செய்யவேண்டியவை:

நன்கு ஓய்வெடுக்க வேண்டும். குழந்தையின் அசைவை உற்றுக் கவனிக்க வேண்டும். அசைவு குறைவதுபோல் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பிரசவத்தை எளிமையாக்க, சொல்லிக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.


பிரசவ வலி:கருப்பையின் தசைகள் இறுகும். இது குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து ஏற்படும். பின்னர் இது நீடித்தும், கடுமையானதாகவும் இருக்கும். முதுகின் கீழ்ப்பகுதியில் வலி ஏற்படும். பிறப்புறுப்பில் ரத்தக் கசிவுடன் கூடிய திரவம் வெளிப்படும். பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும். வலி ஏற்பட்டதுமே, மருத்துவமனைக்குச் சென்றுவிடுதல், பிரசவ நேர அவசரநிலையைத் தவிர்க்க உதவும்.

கர்ப்பக் கால உணவுப் பழக்கம் சில குறிப்புகள்:

வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவைக்காட்டிலும் 300 கலோரிகள் கூடுதலாக எடுத்தாலே போதும்.

கொழுப்புச் சத்தும் தேவையானதுதான். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை, குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். ஒரு நாளைக்கு 70 கிராம் என்ற அளவுக்கு உணவில் எண்ணெய் சேர்க்கலாம்.

கர்ப்பக் காலத்தில் இரண்டு வகையான தாது உப்புகள் மிகவும் அவசியம். ஒன்று கால்சியம், மற்றொன்று இரும்பு. கர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு 50 மடங்கு அதிகரித்துவிடுவதால், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு, இரும்புச் சத்து மிகமிக அவசியம்.

இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக்கொள்வதனால்கூட மலச்சிக்கல் ஏற்படலாம். இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இரும்புச் சத்து அதிகம் உள்ள வால்நட், பேரீச்சம்பழம் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். பால், மோர், தயிர் போன்ற பால் பொருட்களில் இதைப் பெறலாம். காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்களில் உள்ள காஃபின் என்ற பொருள், கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுக்கும். எனவே, அவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது. பாலில் பாஸ்பரஸும் உள்ளது. இதுவும் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் அவசியம்.

அனைத்து வைட்டமின் மற்றும் தாது உப்புகள் எளிதில் கிடைக்க பச்சைக் காய்கறிகள், நார்ச் சத்துள்ள உணவுகள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவில் ஒன்றரை கப் வேகவைத்த காய்கறி அல்லது ஒரு கப் பச்சைக் காய்கறியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால், சோடியமும் தேவைப்படுகிறது. எனவே, உப்பை முற்றிலும் தவிர்க்காமல், குறைத்துக்கொள்வது நல்லது.

ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது, செரிமானப் பிரச்னையைச் சரிசெய்ய உதவும். இரண்டு கப் பால் குடித்துவிட்டோமே என்று தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டாம்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
செக்ஸ் தப்பா?

'கர்ப்பக் காலத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா? இது குழந்தையைப் பாதிக்குமா?' என்பதுத£ன் பெரும்பாலான தம்பதிகளுக்கு ஏற்படும் சந்தேகம்.
வயிற்றில் இருக்கும் குழந்தை, பனிக்குடம் மற்றும் பனிக்குட நீரால் சூழ்ந்து, மிகவும் பாதுகாப்பாக இருக்கும். பெண் கருவுற்றிருக்கும்போது தாம்பத்திய உறவுகொள்வதால் எந்த வகையிலும் கருவைப் பாதிக்காது. ஆனால், சில எச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

கர்ப்பப்பையில் நஞ்சு மிகவும் கீழ் இறங்கி உள்ளதாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தாலோ, கர்ப்பக் காலத்தில் உதிரப்போக்கு, பனிக்குட நீர்க்கசிவு, இதற்கு முன்னர் கருச்சிதைவு, குறை மாதத்தில் பிரசவ வலி ஏற்படும் அபாயம் இருந்தாலோ, தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டாம். இந்தப் பிரச்னை எதுவும் இல்லாதவர்கள் தாராளமாக தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். கர்ப்பக் காலத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளுதல், சுகப் பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிப்பதாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கர்ப்பக் கால சர்க்கரை நோய்

டாக்டர் கருணாநிதி,
சர்க்கரை நோய் மருத்துவர், சென்னை

கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய். நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை நம்முடைய உடல் திசுக்கள் பயன்படுத்தும்படி செய்கிறது. கர்ப்பக் காலத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது.

கிட்டத்தட்ட இந்த அத்தனை ஹார்மோன்களும் இன்சுலின் செயல்பாட்டைப் பாதித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதையே கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்கிறோம்.பொதுவாக, கர்ப்பக் காலத்தின் 20-வது வாரத்தில் இது ஏற்படும். பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு இது மறைந்துவிடும். பெரும்பாலான கர்ப்பக் கால சர்க்கரை நோயை ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

25 வயதைக் கடந்தவர்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் ஆரம்பத்திலேயே இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். கருத்தரித்த பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்வது மிகமிக அவசியம்.

கருத்தரித்த 24-வது வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள்ளாக 'இனிஷியல் குளுகோஸ் சேலன்ஜ்' டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் 'குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்' செய்துகொள்ள வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் சர்க்கரையைத் தவிர்க்க, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உணவில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரி குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#8
நல்ல ஒரு தொகுப்பு லக்ஷ்மி @chan .

இந்த மாதிரி தமிழில் கர்ப கால குழந்தை வளர்ச்சி பற்றிய தகவல்களை சில தோழிகள் , இங்கே கேட்டிருக்கிறார்கள்.
இந்த தொகுப்பு எங்கோ புதைந்து விடாமல் இருக்க இந்த வலைதளத்தில் , pdf ஆகவோ, sticky thread ஆகவோ, இல்லை வேறு வழியோ செய்து, தேவையானோர் பார்வையில் படுவது போல் வைத்தால் பலருக்கு உபயோகமாக இருக்கும்.

இந்த வேண்டுகோளை @jv_66 @sumathisrini @Penmai Support Team உங்கள் முன் வைக்கிறேன்.
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.