Preventing Gestational Diabetes - கர்ப்ப கால நீரிழிவிலிருந்து தப்பு&#2

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கர்ப்ப கால நீரிழிவிலிருந்து தப்புவது எப்படி?
டயாபடீஸ் என்பது உங்கள் உடலில் உள்ள இன்சுலின் அளவும் சர்க்கரை அளவும் மட்டுமல்ல... உடலுக்குள் நீங்கள் என்ன போடுகிறீர்கள் என்பதையும் பொறுத்தது அது!
- ஜே கட்லர் (அமெரிக்க பாடிபில்டர்)ஹாலிவுட் நடிகை சல்மா ஹெய்க் உள்பட எத்தனையோ பெண்கள் கர்ப்பகால நீரிழிவால், கூடுதல் சுமையை சந்தித்திருக்கின்றனர். இதன் பின்னணி பற்றி அறிவது இப்பிரச்னையை எளிதாகச் சமாளிக்க உதவும்.நீரிழிவு என்ற வார்த்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் அதுவரை எந்தச் சம்பந்தமும் இருக்காதுதான்.

தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

*Gestational Diabetes Mellitus (GDM)
குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்
படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

*Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார்?25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.இதற்கு முக்கியமான காரணிகள்...

*குடும்பப் பின்னணியில் நீரிழிவு
*4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்
*திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை
*சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்
*பருமன், அதிக எடை
*முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்
*நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை
*அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு
*பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
*முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.
கர்ப்ப கால நீரிழிவின் பாதகங்கள்

*பருமன்
*அடுத்த கர்ப்ப காலத்தில் முன்கூட்டியே நீரிழிவு ஏற்படுதல்
*Glycosuria பிரச்னை
*குடும்பப் பின்னணியில் கர்ப்ப கால நீரிழிவு சேர்தல்.
பிறப்பு சார்ந்த அசாதாரண மாற்றங்கள்
*கார்டியாக் எனும் இதயக் கோளாறுகள்...
இதயத்தின் இடது, வலது வென்டிரிகிள்களைப் பிரிக்கும் சுவரில் பழுது, ஆக்சிஜன் அதிகமுள்ள ரத்தமும்
ஆக்சிஜன் குறைவான ரத்தமும் கலந்து பிரச்னை ஏற்படுதல். இது போன்ற இதயம் சார்ந்த பிரச்னைகள் அதிக அளவு உண்டாகும் அபாயம் உள்ளது.
*மத்திய நரம்பு மண்டலம்...
குழந்தையின் தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலத்தில் சிக்கல்கள் ஏற்பட 7.2% அளவு வாய்ப்பு உள்ளது.
*எலும்பு சார்ந்த பிரச்னைகள்...அன்னப்பிளவு, சீரற்ற உதடு மற்றும் முதுகுத்தண்டில் வளர்ச்சிப் பிரச்னைகள்.
*சிறுநீரகக் குழாய் அமைப்பில் குழப்பங்கள், இரட்டிப்பாக உருவாகுதல், சிறுநீரகங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ வளர்ச்சி அடையாமல் இருத்தல்...

*வயிறு, குடல் சார்ந்த பிரச்னைகள்...
மலக்குழாய் உருவாகாமல் இருத்தல் அல்லது தவறான இடத்தில் உருவாகுதல்.
*உறுப்புகள் சாதாரணமாக இருக்க வேண்டிய இடத்தில் உருவாகாமல் எதிரும் புதிருமாக அமைதல்.

பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

*கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.
*நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
*குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
*சிசேரியன் செய்ய வேண்டிய நிலை
*எடை கூடுதல்
*உயர் ரத்த அழுத்தம்
*கரு கலைதல்
*மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
*டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்
*வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
*ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
*நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
*கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
*கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

கருவில் ஏற்படும் பிரச்னைகள்


*பிறப்புநிலைக் கோளாறுகள்
*பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு
*மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
*மஞ்சள் காமாலை
*ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)
*பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்
*குறைப் பிரசவம்
*Hyaline membrane எனும் நுரையீரல் நோய்
*மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

கட்டுப்படுத்துவது எப்படி?

மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.
ஃபாஸ்ட்டிங் கில் ரத்த சர்க்கரை அளவு < 95 mg/dl.

(அதாவது, இரவு உணவுக்குப் பிறகு எதுவும் சாப்பிடாமல், காலையில் வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை பரிசோதிக்கப்
படும் போது 95 mg/dl என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.)

ஒரு மணி நேர போஸ்ட்பெரன்டியல் குளுக்கோஸ் அளவு < 140 mg/dl. (அதாவது, சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் எடுக்கப்படும்போது 140 mg/dl அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.)2 மணி நேர போஸ்ட்பெரன்டியல் குளுக்கோஸ் அளவு < 120 mg/dl.

(அதாவது, சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் எடுக்கப்படும்போது 120 mg/dl அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.)
இந்த அளவுகள் வீட்டிலேயே குளுக்கோமீட்டர் கொண்டு எடுக்கப்படும் போது வரும் அளவுகள் அல்ல... ஆய்வகத்தில் சிரையில் சிரிஞ்ச் மூலம் எடுக்கப்பட்டு சோதிக்கப்படும் பிளாஸ்மா அளவுகள். இந்த அளவீடுகளின் வரையறை கர்ப்பிணியைப் பொறுத்தும், ஆய்வக நெறிமுறையைப் பொறுத்தும், மருத்துவரால் மாற்றி நிர்ணயிக்கப்படக்கூடும்.

ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.வீட்டிலேயே சர்க்கரை அளவுபரிசோதித்தல்

*மருத்துவரின் ஆலோசனைபடி ஒவ்வொரு நாளும் குளுக்கோமீட்டர் பயன்படுத்தி ரத்த சர்க்கரை
பரிசோதனை செய்ய வேண்டும்.
*அளவீடுகளை ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும். மெமரி மீட்டர் பயன்படுத்துவது நல்லது.
*குளுக்கோமீட்டர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அளவை திருத்தல் (காலிபிரேஷன்) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அளவீடுகள் தாறுமாறாக இருந்தாலோ, வேறு குழப்பங்கள் இருந்தாலோ, உடன டியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். சரியான நேரத்தில் பெறப்படும் ஆலோசனையே நீரிழிவைக் கட்டுக்குள் வைத்து, உங்கள் கண்மணியை நல்ல முறையில் பெற்றெடுக்க உதவும்.

25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்கள், எடை அதிகம் கொண்டவர்கள், குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்கள் ஆகியோரே கர்ப்ப கால நீரிழிவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

தயக்கம் வேண்டாம்!


குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

*மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.
*குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக
அறிவுறுத்தப்படும்.
*கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்
விளக்கப்படும்.
*வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.
*அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.
*பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.
*எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.​
 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.