Reusable Cloth Napkins - ரீயூசபிள் காட்டன் நாப்கின்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ரீயூசபிள் காட்டன் நாப்கின்கள்...
செயறக்கை நாப்கின்களில் மறைந்திருக்கும் பயங்கரம்- கேதி வாக்லிங்

வெளிநாட்டுப் பெண்கள் நாகரிக விரும்பிகள்... அடுத்தவர் நலனில் அக்கறையற்றவர்கள்... சுயநலவாதிகள்... இப்படிப் பலருக்கும் பல பார்வைகள் உள்ளன. அத்தனையையும் நொறுக்கி, விதிவிலக்காக நின்று வியக்க வைக்கிறார் கேதி வாக்லிங். சிட்னியை சேர்ந்த கேதி இப்போது புதுச்சேரி ஆரோவில்லில் வசிக்கிறார். பெண்களின் மாதவிலக்கு காலத்து ஆரோக்கியத்துக்காக இவர் செய்கிற விஷயங்கள் பழையன புகுதல் ரகம். பிளாஸ்டிக்கும் பயங்கர ரசாயனங்களும் சேர்த்துத் தயாராகிற சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக, உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தைக் கொடுக்காத துணி நாப்கின் தயாரிப்பில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்!

அசுத்தம்னு நம்பப்படற அந்த ரத்தம்தான் ஒரு பெண்ணோட கருவுல உருவாகிற குழந்தைக்குப் பாதுகாப்பு!

‘‘பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆஸ்திரேலியாவுலேருந்து இந்தியா வந்தப்ப நான் சந்திச்ச முதல் பிரச்னை, சானிட்டரி நாப்கினை எப்படி டிஸ்போஸ் பண்றதுங்கிறதைத்தான். இருட்டான, ஒதுக்குப்புறமான ஒரு இடத்தைத் தேடி, அங்க மண்ணைத் தோண்டி, குழி வெட்டி, உபயோகிச்ச நாப்கின்களை உள்ளே போட்டு எரிக்கிறதுதான் தீர்வா இருந்தது. அடுத்தவங்களைப் பத்தி அக்கறை இல்லாம குப்பைத் தொட்டியில தூக்கிப் போட்டுட்டுப் போறவங்களுக்கு, அதை சுத்தப்படுத்தறவங்களோட நிலைமை தெரிய வாய்ப்பில்லை.

இங்க உள்ள பெண்கள் எல்லாம் இந்தப் பிரச்னையை எப்படித்தான் சமாளிக்கிறாங்கன்ற பெரிய கேள்வி என் முன்னால வந்தது. ஆஸ்திரேலியாவுல இருக்கிறப்ப வாஷ் பண்ணி மறுபடி உபயோகிக்கிற மாதிரியான ரீயூசபிள் நாப்கின்களை ஒரு கடையில பார்த்தேன். கிட்டத்தட்ட டிஸ்போசபிள் நாப்கின்களை போலவே இருந்தது. கலர்ஃபுல்லான காட்டன் துணியில செய்யப்பட்ட அதை, வழக்கமான நாப்கின் போலவே உபயோகிக்கலாம். அன்னிக்கே எனக்கான முதல் ரீயூசபிள் நாப்கினை வாங்கி உபயோகிச்சேன். முதல் நாளே அவ்வளவு சவுகரியமா ஃபீல் பண்ணினேன்.

இனிமேலும் டிஸ்போசபிள் நாப்கின்களை உபயோகிக்கிறது மூலமா, பூமிக்குக் கெடுதல் பண்ணக்கூடாதுங்கிற தீர்மானத்துக்கும் வந்தேன். 2000ல ஆரோவில்ல ரீயூசபிள் நாப்கின் தயாரிச்சு, விற்க ஆரம்பிச்சேன். 2007ல ‘ஆரோவில் வில்லேஜ் ஆக்ஷன் குரூப்’னு ஒரு என்ஜிஓ கூட சேர்ந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். அந்தப் பெண்களோட ஒர்க் பண்ணும் போது, சுற்றுச்சூழல் பிரச்னைகளைப் பத்தியும் பெண்கள் சந்திக்கிற தனிப்பட்ட பிரச்னைகளைப் பத்தியும் நிறைய விஷயங்கள் தெரிய வந்தது.

மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தற வழியைப் பத்தியும் யோசிச்சுதான் ‘இகோ ஃபெம்’ தொடங்கினோம். இந்த அமைப்பு அளவுல சின்னது தான். ஆனா, அது சமூகத்துல ஏற்படுத்திட்டிருக்கிற மாற்றம் ரொம்பப் பெரிசு...’’ - கேதியின் அக்கறையான அறிமுகப் பேச்சு ஆர்வம் கூட்டுகிறது.

‘‘கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதவிலக்கு அனுபவங்கள் எப்படியிருக்குங்கிற ஆய்வை நடத்தினோம். பலருக்கும் மாதாந்திர சுழற்சியைப் பத்தின விழிப்புணர்வு இல்லாதது ஆச்சரியம் தந்தது. அந்த நாட்கள்ல அவங்க பட்ட கஷ்டங்களும் சமுதாயப் புறக்கணிப்புகளும் அசுத்த மானவங்கன்ற நினைப்பும் மேலோங்கி இருந்தது. அந்த நேரத்துல வெளியேறும் ரத்தம் அசுத்தமானதுங்கிற நம்பிக்கை அவங்க மனசுல ஆழமா பதிஞ்சிருந்தது. அசுத்தம்னு நம்பப்படற அந்த
ரத்தம்தான் ஒரு பெண்ணோட கருவுல உருவாகிற குழந்தைக்குப் பாதுகாப்புனு புரிய வச்சோம்.

மாதவிலக்கு நாட்கள்ல துணிகள் உபயோகிச்ச பழக்கத்துலேருந்து மாறி, டிஸ்போசபிள் நாப்கின்களை உபயோகிக்கிறது அவங்களுக்கு வசதியா இருக்கிறதைப் பத்தி தெரிய வந்தது. பெண்களோட மாதவிலக்கு நாள் சுகாதாரத்தை மேம்படுத்த இலவச நாப்கின் கொடுக்கற அரசாங்கத் திட்டம் பத்தியும் கேள்விப்பட்டோம். அத்தனையும் பிளாஸ்டிக் சேர்த்துப் பண்ணினது. அதுக்கான தயாரிப்புச் செலவும் பெரிசு. அதுக்கான மாற்றா ரீயூசபிள் காட்டன் நாப்கின்களை கொடுக்க முடிவு பண்ணினோம். ஆரோக்கியமான, செலவில்லாத, சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுத்தாத நாப்கின்கள் அவை.

இந்த ரீயூசபிள் நாப்கின்களை பத்தியும் அது பெண்களோட ஆரோக்கியத்தோட எந்தளவு சம்பந்தப்பட்டிருக்குங்கிறதைப் பத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய பேசறோம். இதை எப்படி உபயோகிக்கிறது, எப்படி அலசி, அடுத்த முறை உபயோகத்துக்குத் தயார்படுத்தறதுனு சொல்லிக் கொடுக்கறோம். சுற்றுச்சூழலைப் பத்தின அக்கறை உள்ள சில பெண்களாலதான் இதை ஏத்துக்க முடியுது. உபயோகிச்ச நாப்கின்களை அலசி மறுபடி உபயோகிக்கிறதுல நிறைய பெண்களுக்குத் தயக்கம் இருக்கு. இதுல தயங்கறதுக்கு ஒண்ணுமே இல்லை.

உள்ளாடைகளை அலசி உபயோகிக்கிற மாதிரிதான் இதுவும். குளிர்ந்த தண்ணீர்ல 30 நிமிஷம் ஊற வச்சா, ரத்தமெல்லாம் வெளியேறிடும். அதுக்குப் பிறகு அதை அலசித் துவைச்சு, வெயில்ல காய வைக்கணும். உங்களோட ரத்தத்தை சுத்தப்படுத்தறதுல தயக்கம் எதுக்கு? ஒருமுறை துணி நாப்கின்களை உபயோகிச்சுப் பழகிட்டாங்கன்னா, அதுல உண்டாகிற ஃபீலிங் மறுபடி அவங்களை டிஸ்போசபிள் நாப்கினை பத்தி யோசிக்கவே வைக்காது...’’ என்கிற கேதி, செயற்கை நாப்கின்களில் மறைந்திருக்கிற பயங்கரங்களையும் பகிரங்கப்படுத்துகிறார்.

‘‘டிஸ்போசபிள் நாப்கின்கள்ல பலவகையான பிளாஸ்டிக் கலவை இருக்கு. ஒரு டிஸ்போசபிள் சானிட்டரி நாப்கின் மண்ணோட மண்ணா மக்கிப் போக 800 வருஷங்கள் ஆகுமாம். ஒவ்வொரு பெண்ணும் சராசரியா தன்னோட வாழ்நாள்ல 125 முதல் 150 கிலோ வரையிலான நாப்கின்களை தூக்கிப் போடறாங்க. நாப்கின்கள் கண்ணைக் கவரும் வகையில வெள்ளையா இருக்கிறதுக்காக தயாரிப்பாளர்கள் சேர்க்கிற கெமிக்கல்கள் ஒவ்வொண்ணுமே பூமியைப் பதம் பார்க்கிறவை. டிஸ்போசபிள் நாப்கின்களை உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜியும் இன்ஃபெக்ஷனும் வருது. காரணம் அதுல யூஸ் பண்ற பிளாஸ்டிக் கிளப்பற அதிகபட்ச சூடு.

அது மட்டுமில்லாம இந்த நாப்கின்கள்ல சேர்க்கற பிளீச், கேன்சருக்கு காரணமான தன்மைகளையும் அதிகப்படுத்தும். யூஸ் அண்ட் த்ரோ நாப்கின்களை டாய்லெட்ல ஃபிளஷ் பண்றதால, டாய்லெட் அடைச்சுக்கும். பாதாள சாக்கடைக்குள்ள இறங்கி சுத்தப்படுத்தறவங்களும் நம்மளைப் போல மனுஷங்கதானே... எந்தவித பாதுகாப்பும் இல்லாம உள்ளே இறங்கி சுத்தப்படுத்தற அந்த நபர்களுக்கு பல பயங்கரமான இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு, உயிர்க்கொல்லி நோய்களும் தாக்குதுங்கிறது உங்கள்ல எத்தனை பேருக்குத் தெரியும்?

துணிகளால செய்யப்படற நாப்கின்களை வீட்லயே தையல் மெஷின் வச்சுத் தச்சிடலாம். 75 முறை வரைக்கும் வாஷ் பண்ணி மறுபடி மறுபடி உபயோகிக்கலாம். துணி நாப்கினா, டிஸ்போசபிள் நாப்கின் அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சுமா, வெளியில போற பெண்களுக்கு சரிப்படுமானெல்லாம் நிறைய கேள்விகளை எதிர்கொள்றோம். டிஸ்போசபிள் நாப்கின்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாதவை இவை. அதிகமா உறிஞ்சும். வெளியில கசியாது. எரிச்சல், அரிப்புனு அலர்ஜியை தராது. பகல்ல உபயோகிக்க, இரவுத் தேவைக்குனு இதுலயும் அவங்கவங்க தேவைக்கேத்தபடி நிறைய அளவுகள் இருக்கு.

‘பேட் டு பேட்’னு ஒரு ஸ்கீமை அறிமுகப்படுத்தியிருக்கோம். எங்களோட இன்டர்நேஷனல் கஸ்டமர்ஸ் டொனேட் பண்ற துணி நாப்கின்களை அரசுப் பள்ளிகள்ல படிக்கிற மாணவிகளுக்கு இலவசமா தர்றதுதான் ‘பேட் டு பேட்’ ஸ்கீம். அதோடு, துணி நாப்கின்களுக்கு செலவழிக்க வசதியில்லாத பெண்களுக்கு என்.ஜி.ஓ. சுய
உதவிக் குழுக்கள் மூலமா குறைஞ்ச விலையில சப்ளை பண்றோம். இதுவரை நாங்க 34 ஆயிரம் துணி நாப்கின்களை வித்திருக்கோம். இது கிட்டத்தட்ட
40 லட்சம் டிஸ்போசபிள் நாப்கின்களை ஓரங்கட்டியிருக்கு.

‘பேட் டு பேட்’ ஸ்கீம் மூலமா பலனடை யற பள்ளி மாணவிகள், இந்த நாப்கின்களை உபயோகிக்கிறது மூலமா வழக்கமான பீரியட் டென்ஷனோ தர்மசங்கடங்களோ இல்லாம ஆரோக்கியமான உடல், மனநிலைக்கு மாறியிருக்கிற தகவல் எங்களோட வெற்றிக்கான ஒரு அறிகுறி. ‘பீரியட்ஸ் டைம்ல துணி உபயோகிக்கிறது பழைய ஃபேஷன், சுத்தமில்லாதது’ங்கிற எண்ணத்தை மாத்தற எங்களோட பயணம் முழு வெற்றியை அடைய கொஞ்சம் டைம் எடுக்கும். இந்தியால மட்டுமில்லை...

உலகம் முழுக்கவே மாதவிடாய்ங்கிறது சமூகம், கலாசாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், மதம், பாலினப் பிரச்னைகள்னு பல விஷயங்களோட சம்பந்தப்பட்டதா இருக்கு. அதுல சட்டுனு மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. ஆனா, முடியும். நாங்க எங்களோட தயாரிப்பைத்தான் வாங்கணும்னு சொல்லலை. ‘பிளாஸ்டிக்கும் கெமிக்கலும் கலந்த டிஸ்போசபிள் நாப்கின்களுக்கு உங்களோட ஆரோக்கியத்தை பலி கொடுக்காதீங்க’னுதான் சொல்றோம்.

உங்க உடம்புலயும் உங்க ஆரோக்கியத்துலயும் உங்களைவிடவா வேற ஒருத்தருக்கு அக்கறை இருந்துட முடியும்? யோசியுங்க...’’ யோசிக்க வைக்கின்றன கேதியின் வார்த்தைகள்!அடுத்தவங்களைப் பத்தி அக்கறை இல்லாம குப்பைத் தொட்டியில தூக்கிப் போட்டுட்டுப் போறவங்களுக்கு, அதை சுத்தப்படுத்தறவங்களோட நிலைமை தெரிய வாய்ப்பில்லை...
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
உங்கள் நாப்கின் பாதுகாப்பானதா?

டாக்டர்.டி.ரமணி தேவி

ஒரு பெண் பூப்பெய்துவதில் தொடங்கி மெனோபாஸ் எனும் மாதவிலக்கு நிற்கும் வரை சுமார் 17,000 நாப்கின் பேட்களை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஒரு சர்வே.


'சானிட்டரி நாப்கின்களிலும் உடலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களையே வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், சானிட்டரி நாப்கின் வந்த ஆரம்ப காலத்தில், நாப்கின் தயாரிக்கப் பயன்படும் காட்டன், க்ரீம் நிறத்தில்தான் இருக்கும். அதை வெண்மை

யாக்க 'டயாக்சின்’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. டயாக்சின்
மிகக்குறைந்த அளவே


சேர்க்கப்பட்டாலும் அது ஆபத்தானதுதான். இந்த ரசாயனம் உடலில் ஒட்டிக்கொள்ளக்கூடியது. உடலினுள் நுழையும் இந்த ரசாயனம், ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும். இடுப்புப் பகுதியில் வீக்கம், சினைப்பைப் புற்றுநோய், நோய் எதிர்ப்புச் சக்தியை பலவீனமாக்குவது, குழந்தையின்மைக்கான வாய்ப்பை அதிகரிப்பது போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நாப்கின்கள் தயாரிக்கும் போது, செயற்கை நறுமணப் பொருட்களையும் வாசனை பொருட்களையும் சேர்க்கிறார்கள். இவை மாதவிலக்கின்போது ரத்தத்தில் கலந்து பிறப்புறுப்புப் பகுதியில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.
நாப்கினை அதிக நேரத்துக்கு மாற்றாமல் இருக்கும்போது அதில் பாக்டீரியா உருவாகி வயிற்றுப்போக்கு, வாந்தி, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, குளோரின் ஃப்ரீ பேட்களை பயன்படுத்தலாம். இதில் டயாக்சின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். மேலும், நாப்கின்களின் கவர் மீது 'அன் பிளீச்டு ஒன்’ என்ற முத்திரை இல்லாத நாப்கின்கள் அனைத்தும் டயாக்சின் பிளீச்சிங் செய்யப்பட்டு வந்தவையே. எனவே, நாப்கின் வாங்கும்போது இந்த முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.


நாப்கின்னின் மேல்பகுதி சருமத்தில் படக்கூடியது என்பதால், அது பருத்தியால் ஆனதாக இருப்பது மிகமிக அவசியம். சானிட்டரி நாப்கின்களுக்கு வாலன்டரி தரக் கட்டுப்பாடு சான்றிதழ் ஐ.எஸ்.ஐ. 5405 பெற்றிருக்க வேண்டியது அவசியம். டயாக்சின் இல்லாத நாப்கின்கள் இ்ப்போது அதிகம் வரத்தொடங்கியுள்ளன. இந்த வகை நாப்கின்கள் மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும்.

பாலிகுளோரினேட்டடு டைபென்சோடையாக்சின் (Polychlorinated dibenzodioxins), பாலிகுளோரினேட்டடு டைபென்சோ ஃபியூரான் (Polychlorinated dibenzofurans) போன்றவை சுற்றுப்புறச் சூழ்நிலைக்குக் கேடு செய்யக் கூடியவை என்பதால், தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுபற்றிய விழிப்பு உணர்வு பெண்கள் மத்தியில் மிகக் குறைவே.

நாப்கினைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதேபோல அதை அப்புறப்படுத்துவதிலும் கவனம் தேவை. நாப்கின்களை ஒரு சிறிய பேக்கில் போட்டு டிஸ்போஸ் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய மென்ஸ்டுரல் கப்ஸை (Menstrual Cup) பயன்படுத்துவதன்மூலம் நாப்கின்களில் இருக்கும் டயாக்சின் எமனிடம் இருந்து விடைபெறலாம். நல்ல தரமான மென்ஸ்டுரல் கப்களின் விலை ரூபாய் 700 இருக்கும்' என்றார்.

இனி நாப்கின் பயன்படுத்தும்போது இதெல்லாம் ஞாபகத்துல வெச்சுக்குவீங்கல்ல?
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
நல்ல மற்றும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.