Single Parenting is not much difficult-சிலுவையல்ல... சிங்கிள் பேரன்டிங்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]சிலுவையல்ல... சிங்கிள் பேரன்டிங்![/h]ஒற்றை நிலா
கற்றை கனா
நித்தம் வினா!‘அம்மா எங்கே?’, ‘என் அப்பாவுக்கு என்னாச்சு?’, ‘அவுங்க வரவே மாட்டாங்களா?’ என்பது போன்ற வலிக்கும் கேள்விகளால் கனக்கும் சில குழந்தைகளின் வாழ்க்கை. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் அவர்கள்! இருப்பது ஒருவரா, இருவரா என்பது முக்கியமில்லை. குழந்தைக்கு மிகச் சரியான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டால் தத்தித் தாவி, எழுந்து நடந்து, துள்ளித் திரிந்து இயல்பாக சிகரம் தொடுவார்கள் குழந்தைகள்.

சிங்கிள் பேரன்டிங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை விளக்குகிறார் குழந்தைகள் மருத்துவ நிபுணர் அருணா விண்ணரசி. ‘‘ஒரு குழந்தை தாய், தந்தை இருவருடனும் வளர்ந்து வரும் காலத்தில் இருவரில் ஒருவரை இழப்பது மிகப் பெரிய சோகம். அது, விபத்துக்கு ஈடான தாக்கத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்கிவிடும். சில குழந்தைகள் மட்டுமே அந்தச் சூழலுடன் அனுசரித்து வாழக் கற்றுக் கொள்கிறார்கள். கல்வியில் கவனக் குறைவு, மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவதில் சிக்கல், தூக்கம் இன்றி தவித்தல், பிரிந்து போனவர் திரும்ப வருவார் என நம்புதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள்.

பெற்றோர் விவாகரத்து பெற்ற குடும்பங்களில் குழந்தைகள் இழந்த அன்புக்காக ஏங்கும் நிலையைப் பார்க்கலாம். பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கவும் இன்றைக்கு வாய்ப்பிருக்கிறது. எப்படி இருந்தாலும் சிங்கிள் பேரன்ட் முதலில் எதிர்கொள்வது பொருளாதார பிரச்னை.

குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிப்பது, அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது என ஒவ்வொரு விஷயத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெற்றோரில் ஒருவரை இழப்பதால் அடையும் உளவியல் சிக்கலில் இருந்து குழந்தை வெளிவரவும் மற்றவர்களுடன் கலந்து பழகச் செய்யவும் குழந்தையை தயார்படுத்த வேண்டியதும் முக்கியம்.

சிங்கிள் பேரன்டிங்கில் குழந்தையை எதையும் செய்ய விடாமல் பெற்றோரே செயல்படுவது, தான் எதற்கும் உபயோகம் இல்லாதவனோ, தன்னால் எதையும் செய்ய முடியாதோ என்ற எண்ணத்தை குழந்தைக்கு உருவாக்கிவிடும். வாழ்வை எளிதாகவும் இனிதாகவும் நகர்த்திச் செல்ல குழந்தையுடன் விவாதித்து திட்டமிடலாம். வேலைகள், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்களில் அனுபவத்தை உருவாக்கலாம்.

பண்பாடு, நன்னடத்தை போன்ற விஷயங்களை குழந்தையுடன் சேர்ந்து பெற்றோரும் கடைபிடிப்பது அவசியம். குழந்தையின் விருப்பத்துக்கு முதலிடம் அளித்தல், எந்த விஷயத்தையும் மனம் திறந்து பேச வாய்ப்பளித்தல், மற்றவர்களுடன் எளிதில் கலந்து பழகுதல் போன்ற திறன்களை மேம்படுத்த வேண்டும்.

குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தில் அவர்களுக்காக, அவர்களுடன் மட்டும் நேரத்தை செலவழிக்க வேண்டும். வெளியிடங்கள் மற்றும் உறவுகளுடன் இருக்கும் போது பாதுகாப்பில் கவனம் செலுத்தவும் கற்றுத்தர வேண்டும். விவாகரத்து செய்து கொண்ட பெற்றோராக இருந்தால் இருவருக்குள்ளும் இருக்கும் மனக்கசப்பையும் விரோத மனப்போக்கையும் குழந்தைகள் மனதில் விதைக்கக் கூடாது. குழந்தையிடம் இருவருமே சமமான அளவில் அன்பு செலுத்தி, பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் நேரடியாக பேசிக் கொள்வதற்கு பதிலாக குழந்தையை தகவல் பரிமாறும் சாதனமாக மாற்றக் கூடாது. ஒருவர், மற்றவரின் தவறைப் பெரிதுபடுத்தி குழந்தையின் மனதில் எதிர்மறை பிம்பத்தை உருவாக்குவதைத் தவிர்க்கலாம். வெறுமையைத் தவிர்க்க, பிரிந்த பின்னாலும் பெற்றோர் குழந்தையை அடிக்கடி சந்திக்கலாம்.

குழந்தையின் வளர்ச்சி, கல்வி, தனித்திறன் மேம்பாடு, எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டு உதவலாம். ‘தொலைவில் இருந்தாலும் நான் உன்னை வெறுக்கவில்லை’ என்ற உறுதியை குழந்தைக்கு அளிக்கலாம்.

சிங்கிள் பேரன்ட், ‘தாயாகவும் தந்தையாகவும் இருந்து நானே பார்த்துக் கொள்வேன் என்று களத்தில் இறங்க வேண்டாம். பிரிந்து சென்ற உறவை குழந்தைகள் முன்னிலையில் தரம் தாழ்த்திப் பேசாதீர்கள். அவர்கள், பெற்றோரிடம் இருந்து அக்கறையுடன் கூடிய கவனிப்பையும் அன்பையுமே எதிர்பார்க்கிறார்கள். அன்புக்குப் பதிலாக கேட்பதை எல்லாம் வாங்கித் தருவது அவர்களை தவறாக வழிநடத்தும்.

நிதி நிலைக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடுதல், சேமித்தல், ஒரு பொருள் தேவைதானா என யோசித்து வாங்குதல் இப்படி வாழ்வின் அடிப்படைத் திறன்களை ஒவ்வொரு செயலின் மூலமாகவும் உணர்த்தி வளர்க்கலாம். குழந்தை சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். உணர்வுகளைப் புரிந்து கொண்டு தேவையான நம்பிக்கையை அளிக்க வேண்டும். எதற்காகவும் கட்டாயப்படுத்தக் கூடாது. வீட்டுச் சூழலை குழந்தை புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துக் கூற வேண்டும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல், நேர மேலாண்மை, நிதியைத் திட்டமிடுதல் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளில் குழந்தையை கலந்து கொள்ளச் செய்யலாம். இது போன்ற இடங்களில் பிரச்னைகளில் இருந்து வெளிவர சிறந்த ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகள் சமூகத்தின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வார்கள்... தங்களுக்கான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்ளவும் தயாராகி விடுவார்கள்.

குழந்தை, பெற்றோரில் ஒருவரை இறப்பின் மூலம் இழந்திருக்கலாம். இந்தச் சூழலில் குழந்தையின் புரிதலுக்கு ஏற்ப விஷயங்களை சொல்ல வேண்டும். நம்பிக்கையை வரவழைத்து, அன்பின் வழியாகத்தான் மனதின் காயங்களுக்கும் மருந்து போட முடியும். மெல்லத் தேறி வரும் போது குழந்தையிடம் இருக்கும் திறன்களை கண்டறிந்து மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கலாம்.

‘சிங்கிள் பேரன்டிங் என்பது பெரிய பிரச்னை அல்ல. உன்னைப் போல் வளர்ந்த பலர் சாதித்திருக்கிறார்கள் என்கிற உதாரணங்களை குழந்தைக்கு அறிமுகம் செய்யலாம். மெல்ல மெல்ல குழந்தையின் மனதில் நம்பிக்கையை உயர்த்துவதன் மூலம் வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை உணர்த்தலாம்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.