Somatotropin Growth hormone

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சோமடோட்ரோபின் வளர்ச்சி ஹார்மோன்

ட்டு வயது சிந்து படிப்பில் படுசுட்டி. ஒரு நாள் தன் அம்மாவிடம் “எப்பம்மா நான் உங்களை மாதிரி பெரிசா ஆவேன்?” எனக் கேட்க, “இன்னும் கொஞ்சம் வயசானா, நல்லா வளர்ந்துடுவ கண்ணு” என்றார். “வயசு ஆக ஆக உயரம் அதிகமாகுமாம்மா?” சிந்துவின் அடுத்த கேள்வி இது. “அப்படி இல்லைம்மா... இன்னும் 10 வருஷம் வரைக்கும் நீ நல்லா உயரமா வளருவ. அதுக்கு அப்புறம் வளர்ச்சி அவ்ளோதான்” என்றார். “ஏன் அதுக்கப்பறம் வளர முடியாதா?” என்று விடாமல் கேள்வி கேட்டுத் துளைக்க, சிந்து அம்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா?

சிந்துவின் கேள்விக்குப் பதில் சொல்ல, சோமடோட்ரோபின் (Somatotropin) என்கிற வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone) பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தை பிறக்கும் போதே, உடலில் வளர்ச்சி ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து, வாழ்நாள் முழுக்க உடலில் சுரந்துகொண்டே இருக்கும். இந்த ஹார்மோன், குழந்தை பிறந்தது முதல் 18 மாதங்கள் வரை வேகமாகவும், பருவ வயதில் மிக வேகமாகவும், அதிக அளவும் சுரக்கும். இதனால் 18 வருடங்கள் வரை உயரமான வளர்ச்சி இருக்கும். அதில், ஆண்கள் 16-18 வயது வரையிலும், பெண் குழந்தைகள் பூப்படைந்த பிறகு, இரண்டு, மூன்று வருடங்கள் வரையிலும் நன்றாக வளருவார்கள். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், பெரும்பாலும் வளர்ச்சி நின்றுவிடும்.


வளர்ச்சி ஹார்மோன் உயரமாக வளருவதற்கு மட்டுமின்றி, தசை வளர்ச்சி, கொழுப்புச் சத்தை உடலில் பரவலாக்குதல், வளர்சிதை மாற்றம், கார்போஹைட்ரேட், புரதச்சத்தை உடலில் செரிக்கச் செய்வது, எலும்புகள் வளர்ச்சிக்குத் துணைபுரிவது, உடல் உறுப்புகளின் சீரான வளர்ச்சிக்கு உதவுவது முதலான வேலைகளைச் செய்கிறது.

குழந்தைப் பருவத்தில் இருந்து 18 வயது வரை எலும்புகள் வேகமாக வளரும். இந்தக் காலத்தில் வளர்ச்சி ஹார்மோன் சரியாகச் சுரக்காமல் போனால், எலும்பு வளர்ச்சி குறைவாக இருக்கும். சில குழந்தைகளுக்கு வளர்ச்சி முற்றிலும் நின்றுவிடவும் வாய்ப்பு உள்ளது. பிறந்த குழந்தைக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், உடலில் சர்க்கரைச் சத்துக் குறைவு ஏற்படும். வளரும் பருவத்தில் ஹார்மோன் குறைந்தால், இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியில் தடை ஏற்படும். பருவ வயதுக்கு உரிய மாற்றங்கள் உடலில் வராது. சிலருக்கு உயரம் மட்டும் குறைவாக இருக்கும்.



பெரியவர்களுக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், புரதச்சத்து, மாவுச்சத்து ஆகியவற்றை செரித்தலில் குறைபாடு ஏற்பட்டு, உடல் எடை அதிகரித்தல், எலும்புத் தேய்மானம் உட்பட பல்வேறு பிரச்னைகள் வரும்.

எதனால் சீராகச் சுரப்பது இல்லை?
நம் மூளைப் பகுதியில் உள்ள, பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வளர்ச்சி ஹார்மோன் சுரக்கிறது
.


ஹைப்போதலமஸ் சுரப்பியில் இருந்து, வளர்ச்சி ஹார்மோனைத் தூண்டக்
கூடிய ஹார்மோன் ஒன்றும், வளர்ச்சி ஹார்மோனைக் கட்டுபடுத்தும் ஹார்மோன் ஒன்றும் சுரக்கின்றன. தலையில் அடிபட்டாலோ, பிட்யூட்டரி சுரப்பி, ஹைப்போதலமஸ் சுரப்பி போன்றவற்றில் கட்டி முதலான பாதிப்புகள் ஏதேனும் இருந்தாலோ, வளர்ச்சி ஹார்மோன் சீராகச் சுரக்காது. சிலருக்கு மரபணுக் குறைபாடு காரணமாகவும், வளர்ச்சி ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படலாம். மேலும், தலைப் பகுதியில் அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதன் காரணமாகவும் வளர்ச்சி ஹார்மோன் சரியாகச் சுரக்காமல்போகலாம்.

என்ன சிகிச்சை?
வளர்ச்சி ஹார்மோனுக்கு, பிரத்யேக ஊசி மட்டுமே தீர்வு. வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் மட்டுமே, இந்த ஊசி பலனளிக்கும். ஒருவருக்கு ஆறு வயதில் வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் கண்டுபிடித்துவிட்டால், தொடர்ந்து ஹார்மோன் ஊசி செலுத்துவதன் மூலம், அவரது இயல்பான உயரம் வரை வளரவைக்க முடியும். இதற்கு அதிகம் செலவு ஆகும். மேலும், மருத்துவரின் பரிந்துரைப்படி, இந்த ஹார்மோன் ஊசியை தினமும் இரவு நேரத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். முறையான மருத்துவப் பரிசோதனை செய்து, இயல்பான வளர்ச்சியைவிட, குறைவாக உடல் வளர்ச்சி இருந்தால் மட்டுமே, இந்த ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவர் பரிந்துரை இன்றி, இந்த வகை ஊசிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

வளர்ச்சி ஹார்மோன் சீராகச் சுரக்க என்ன செய்வது?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, நிறைய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உறக்கம், இவை வளர்ச்சி ஹார்மோன் சீராகச் சுரக்க உதவும். வளர்ச்சி ஹார்மோனைத் தூண்ட, எந்த வகை உணவுகளும் உதவாது. ஆனால், வளர்ச்சி ஹார்மோன் உடலில் சீராகச் செயல்பட, சரிவிகித உணவு அவசியம்.
உடற்பயிற்சி செய்யும்போது, வளர்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். உடற்பயிற்சி, சரிவிகித உணவு இவைதான் உடல் வளர்ச்சிக்குத் தேவை. ஒருவர் பருவ வயதில் நன்றாக உடற்பயிற்சி செய்தால், நல்ல உயரத்தை அடைய முடியும். பள்ளி செல்லும் குழந்தைகள், நன்றாக மைதானத்தில் ஓடி விளையாடினாலே, சீரான உயரத்தில் வளர முடியும். வளர்ச்சிக்காக, செயற்கையான பவுடர்கள், மாத்திரை, மருந்துகளை சுயமாக உட்கொள்வது கூடாது. மருத்துவர் பரிந்துரையின் பேரில் இவைகளை உண்பதே நல்லது.

[HR][/HR]
சில சந்தேகங்கள்!
“வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால், மூளை வளர்ச்சி குறைவாக இருக்குமா?”
கண்டிப்பாக இல்லை. உடலின் வளர்ச்சி மூளை வளர்ச்சியைத் தீர்
மானிக்காது. மற்றவர்களைப் போலவே அறிவுத்திறனோடு இருப்பார்கள்.

“வளர்ச்சி ஹார்மோன் சுரப்பது குறைந்தால், செக்ஸ் பிரச்னை வருமா?”
பொதுவாக வளர்ச்சி ஹார்மோன் குறைவாக இருந்தால், ஆண் குழந்தைகளுக்கு ஆண் உறுப்பு வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும். பெரியவர்களுக்கு எதனால் வளர்ச்சி ஹார்மோன் குறைவு ஏற்படுகிறது என்பது முக்கியம். பிட்யூட்டரி சுரப்பியில் ஏதேனும் பிரச்னை எனில் செக்ஸ் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
[HR][/HR]

“எனக்கு வயது 26. உயரம் 153 செ.மீ. நல்ல உயரமாக வளரவேண்டும் என்று ஆசை. நான் வளர்ச்சி ஹார்மோன் ஊசியைப் போட்டுகொண்டால் 175 செ.மீ அளவுக்கு வளர முடியமா?”

“எலும்பு வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம். எலும்பில் எபிசைசிஸ் என்று ஒரு பகுதி இருக்கிறது. இது முழுமையாக வளர்ந்துவிட்டால், அதன் பிறகு வளர்ச்சி இருக்காது. ஒருவர் முழுமையாக வளர்ச்சி அடைந்துவிட்டாரா என்பதை, அவரின் மணிக்கட்டில் இருந்து கை விரல்கள் வரைக்கும், முழுமையாக எக்ஸ் ரே எடுத்தால் தெரிந்துவிடும். எலும்பின் அடர்த்தி, வயது ஆகிய காரணிகளைவைத்து, வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதா என அறியலாம். நீங்கள் பருவ வயதில் சோதனை செய்து, ஹார்மோன் ஊசி சிகிச்சை எடுத்து இருந்தால், ஒருவேளை நீங்கள் 156-159 செ.மீ வரை வளர்ந்து இருக்கலாம். உங்கள் வயதுக்கு இனிமேல் ஹார்மோன் ஊசி செலுத்தினாலும், நீங்கள் வளர வாய்ப்பு மிக மிக குறைவுதான். நீங்கள் சராசரி உயரத்தில் இருக்கிறீர்கள். குள்ளம் கிடையாது. எனவே, தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறியுங்கள்.”
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.