Spiritual Informations - ஆன்மீக தகவல்கள்

datchu

New Member
#1
தேங்காய் உடைப்பது எதற்காக?

திருமணங்கள் போன்ற சுப காரியங்களிலும் கோயில்களிலும் பூஜைகளிலும் சமர்ப்பிப்பதில் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குவது தேங்காய். புது வீடு, வண்டி போன்றவை வாங்கும்போதும் நாம் உடைப்பது தேங்காயைத்தான். ஹோமங்கள் செய்யும்போது, ஹோமத் திரவியமாக பூர்ணாகுதியில் சேர்ப்பதும் இதைத்தான். தெருக்கள்தோறும் வீற்றிருக்கும் விநாயகருக்கு நாம் முதலில் அர்ப்பணம் செய்வதும் தேங்காய்தான். அதுவே பின்னர் பிரசாதம் என்று எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

தேங்காய் மூன்று கண்களைக் கொண்டதால், முக்கண் முதல்வனான சிவபெருமானின் நினைவைத் தருகிறது. அதன் மூலம், நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

மரத்திலிருந்து பறிக்கப்படும் தேங்காயை உரித்து, கொஞ்சம் மேல்புறத்தில் நார் வைத்து(குடுமியுடன்), உள்ளிருக்கும் ஓட்டுடன் வைத்தால் அது பார்ப்பதற்கு ஒரு மனிதனின் தலையைப் போன்றே தோன்றும். அதை இறைவனின் முன் உடைப்பது என்பது, நம் தலைக்கனத்தை சிதறச் செய்வதற்கு ஒப்பாகும். தேங்காய் உடைப்பதன் மூலம், நம் கர்வம் இறைவனின் முன் சிதறித் தெறிக்கிறது. அது சிதறித் தெறித்தால், வெளியே தெளிக்கும் தேங்காய் நீர், நம்முள் இருக்கும் மனப்பாங்கை (வாசனைகளை) வெளிப்படுத்துகிறது. இவ்வாறு, நம் கர்வம் தொலைத்து, தூய மனத்தை இறைவனுக்கு சமர்ப்பிப்பதைத்தான் தேங்காய் உடைப்பது வெளிப்படுத்துகிறது.
 

datchu

New Member
#2
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்?

திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம்.

இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.

எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்ரகத்துடன் வாழவைக்கும். தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கும்.

திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும்போது "இதன் மூலம் நான் கடவுளை எப்போதும் மனத்தில் இருத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும்போது, "ஸ்ரீயை நமஹ' என்றோ, "மகாலட்சுமியே போற்றி' என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது நலம் பயக்கும்.
 

datchu

New Member
#3
பூஜைக்கு உரிய மலர்கள் எவை?

விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு துளசி கூடாது.

சிவனுக்குத் தாழம்பூ கூடாது.

விஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை கூடாது.

லட்சுமிக்குத் தும்பை கூடாது.

சரஸ்வதிக்கு பவளமல்லி கூடாது.

துளுக்க சாமந்திப்பூ அர்ச்சனைக்கு ஏற்றதல்ல.

மலரை இதழ் இதழாக அர்ச்சனை செய்யக்கூடாது.

வாடிப்போன, அழுகிப்போன, பூச்சி கடித்த, முடி, புழு கொண்ட, காய்ந்த, நுகர்ந்த, தரையில் விழுந்த மலர்களை அர்ச்சனைக்கு உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால் துளசி, வில்வம் ஆகியவற்றை மீண்டும் உபயோகிக்கலாம். அன்று மலர்ந்த பூக்களை அன்றே உபயோகிக்க வேண்டும். விதிவிலக்கு தாமரை போன்ற நீரில் தோன்றும் மலர்கள். செண்பக மொட்டு தவிர, மற்ற மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், மருக்கொழுந்து, மருதாணி, அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை.
 

datchu

New Member
#4
பூஜையின்போது சாம்பிராணி ஏன்?

கோயில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போட்டு, புகைய விட்டு, இறைவன் சந்நிதியில் காட்டுவர்.

பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நம்முன் பூதாகாரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும்.

இன்று சாம்பிராணியை பெரும்பாலும் எல்லோராலும் உபயோகப்படுத்த முடிவதில்லை. எனவே, பாரம்பரியமான சாம்பிராணிக்குப் பதிலாக, இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் விதவிதமான ஊதுபத்திகள் மூலம் தூப ஆராதனையை இறைவனுக்குச் செய்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு விளக்கமாக அமைந்திருக்கிறது ஒரு சம்பவம்.

வைணவ ஆசார்யர் ஸ்ரீராமானுஜருடைய சீடரான கூரத்தாழ்வானின் திருமகனார் பராசர பட்டர். இவர் ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு வைணவ உலகின் தலைமைப் பொறுப்பில் திகழ்ந்தவர். இவர், தனது பிரபந்த உரை நிகழ்ச்சிகளின்போது மிகச் சிறந்த விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு முறை திருவாய்மொழிக்கான வியாக்கியானத்தை அளித்தபோது, பரிவதிலீசனைப் பாடி என்ற திருவாய்மொழிப் பாசுரத்துக்கு விளக்கமளித்தார். அந்தப் பாசுரம்...

""பரிவதில் ஈசனைப் பாடி

விரிவது மேவல் உறுவீர்

பரிவகை இன்றி நல்நீர்தூய்

புரிவதும் புகைபூவே''

-இறைவனுக்கு எந்தப் புகையும் பூவும் சமர்ப்பிக்கலாம். செதுகையிட்டுப் புகைக்கலாம், கண்டகாலிப் பூவும் சூட்டலாம் என்று உரை அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடரான நஞ்சீயருக்கு வருத்தம் ஏற்பட்டது. ""இறைவனுக்கு வாசனை மிகுந்த பூக்களும் புகையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாத்திரம் வகுத்திருக்கும்போது, நீங்கள் இப்படி உரை செய்யலாமா?'' என்று கேட்டுவிட்டார்.

அதற்கு பட்டர், ""இறைவன் ஒன்றும் எனக்கு இதைத்தான் நீ சூட்ட வேண்டும், காட்ட வேண்டும் என்று விதிக்கவில்லை... கண்டகாலிப்பூ சாத்துவதற்காகப் பறிக்கப் போனால், அதில் உள்ள முட்கள் பக்தனின் கையைப் பதம் பார்த்து

விடும். எனவே அடியார்கள் மீது கருணை கொண்டே அவற்றை வேண்டாம் என்று மறுத்தானே ஒழிய இறைவனுக்கு விருப்பமானது விருப்பமில்லாதது என்று எதுவும் இல்லை'' என்று விளக்கம் அளித்தார்.
 

datchu

New Member
#5
கோயில்களில் மணி ஒலிக்கச் செய்வது ஏன்?

கோயில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோயில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்?

சைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்' என்ற பிரணவ மந்திர ஒலியோடு நாதம் சிறிது சிறிதாகத் தேய்வதை நாம் உணரலாம். "ஓம்' என்ற ஓங்கார ஒலியின் சத்தத்தை எழுப்பி, நம் மனத்துள் நிறைவதால், நாம் மணியை ஒலிக்கச் செய்கிறோம். இறைவன் நாத வடிவமானவன் என்பர். அந்த வடிவத்தின் வெளிப்பாடே அகாரம் உகாரம் மகாரம் சேர்ந்த, அதாவது அ,உ,ம மூன்றின் கலவையான ஓம் என்பது. ஓம் ஒலியானது நம் மனத்தினுள் மோதும்போதே அதன் அதிர்வலைகள் நம் உள்ளத்தில் ஒரு வித நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்து, நல்ல சகுனத்தைக் கூட்டுகிறது. நன் நிமித்தத்தை வெளிப்படுத்துகிறது.

நாம் கோயில்களில் பூஜா காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அதாவது, இறைவனுக்கு தீப தூப ஆரத்திகளை சமர்ப்பிக்கும்போது, நம் மனம் இறை இன்பத்தில் லயித்திருக்கவேண்டும். வெளி விவகாரங்கள் எதுவும் நம் மனத்தில் எழக்கூடாது. அதற்கு நாம் நம் ஐம்புலன்களில் ஒன்றான ஒலி உணரும் காதினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதாவது, பூஜை நேரங்களில் எவரேனும் ஒருவர், வேண்டாத பேச்சுகளைப் பேசலாம், அபசகுனமான வார்த்தைகளை வீசலாம், அல்லது யாரையேனும் கொடுஞ் சொற்களால் ஏசலாம். இவற்றைக் கேட்கும் ஒருவருக்கு, மனம் கட்டுப்பாடு இழந்து எங்கெங்கோ அலைபாயும். எனவே தான், பூஜை செய்யும்போது, இந்த விதமான சப்தங்களை அடக்கி ஒடுக்கும் பிரணவ ஒலியை ஒலிக்கச் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நம் மனத் திட்பத்தை அதிகரிக்கச் செய்யும் ஒன்றுதான் மணி அடித்தல் என்பதை உணர்வோம்.
 

datchu

New Member
#6
தோப்புக்கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலோ, ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைப்பார்கள். பரீட்சை நேரத்தில் பக்தி அதிகரித்து சில மாணவர்கள் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவதும் உண்டு. ஆனால் இப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை. அந்தப் பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

கடவுளின் முன்பு தோப்புக்கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக போடுவதில்லை. காதுமடல்களைப் பிடிப்பதுமில்லை; முழுவதுமாக கீழே குனிவதுமில்லை. அவசர உலகத்தில் தோப்புக்கரணம் கூட "அவசரக்கரண'மாக மாறிவிட்டது.

ஆனால் தோப்புக்கரணத்தின் மகிமையை அமெரிக்கர்கள் புரிந்துகொண்டனர். தோப்புக்கரணத்தை ஆராய்ந்த நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

தோப்புக்கரணம் போடும்போடு காதுகளைப் பிடித்துக் கொள்வதால், முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை கருவியின் உதவி கொண்டு ஆராய்ந்துள்ளனர். அதில் மூளையில் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. "ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தோப்புக்கரண பயிற்சியை தினமும் மூன்று நிமிடங்கள் செய்தால், வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது உடல்நலத்திற்கு ஏற்றது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

datchu

New Member
#7
பத்ர அர்ச்சனை என்று சொல்லப்படுவது என்ன? கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்? எவையெல்லாம் கூடாது?

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான் நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை என்பது பொருளாகும்.

கடவுளை இலைகளால் அர்ச்சனை செய்வதினால் இரண்டு நன்மைகள் ஏற்படுகிறது.
முதலாவது அர்ச்சனைக்கு பயன்படும் இலையை கொடுக்கும் மரமோ, செடியோ நன்கு
பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இயற்கையின் தன்மை
பாதுகாக்கப்படுகிறது. இரண்டாவது மனிதனது எண்ணங்கள் அவனது விரல் வழியாக பல
நேரங்களில் வெளியில் கடத்தப்படுகிறது. எண்ண கடத்திகளாக இருக்கும்
விரல்களால் தாவர இலையை தீண்டும் போது மனித எண்ணங்கள் இலையில் பதிந்து
விடுகிறது. இலையுனடைய இயற்கை தன்மை தான் பெற்ற பதிவுகளை பிரபஞ்சத்தோடு
உடனடியாக கலப்பது தான். இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் இறை
வழிபாட்டில் இலைகளையும், மலர்களையும் முக்கிய பொருளாக்கினார்கள்.

இனி எந்த தெய்வத்திற்கு எந்த இலை உகந்தது எது சரி இல்லாதது என்பதை பார்ப்போம். திருபாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாயகன் துளசி இலையால் மகிழ்வடைகிறான். ஆனால், ஆணும் பெண்ணும் சமம் என காட்ட உடலில் ஒரு பகுதியை பெண்ணுக்கு கொடுத்து உமையொருபாகனாக நிற்கும் பசுபதிநாதன் வில்வ இலையால் மகிழ்வடைகிறான். அண்ட பகிரெண்டமெல்லாம் திரிசூலத்தில் ஆட்டி வைக்கும் அன்னை பராசக்தி வேப்ப இலையாலும், கலை கடவுளான வாணி தேவியை நாவில் நிறுத்தி உயிர்களை எல்லாம் சிருஷ்டித்து கொண்டிருக்கும் பிரம்மன் அத்தி இலையாலும், பிரணவ வடிவாக திரும்பும் இடமெல்லாம் காட்சி தரும் கணபதி வன்னி இலையாலும், அருகம் புல்லாலும் மகிழ்வடைகிறார்கள்.

வேளமுகத்து விநாயகனுக்கு துளசி இலை பிடிக்காது. கங்கை தாங்கிய சிவபெருமானுக்கு தாழம்பூ, ஊமைத்தை எருக்க மலர் ஆகாது. ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமனுக்கு அட்சதை சரிவராது. தும்பை மலர் லஷ்மிக்கும், பவளமல்லி சரஸ்வதிக்கும் ஒவ்வாது. எல்லாம் சரி இலைகள் மனித எண்ணங்களை பிரம்பஜத்தில் கலக்கிறது என முதலில் சொன்னேன். அப்படி கலப்பதற்கு எந்த இலையாக இருந்தால் என்ன? இந்த கடவுளுக்கு இந்த இலை ஆகும். இது ஆகாது. என்பதுயெல்லாம் சுத்த அபத்தம் அல்லவா? என்று சிலர் யோசிக்கலாம். அவர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். சுவாமி விக்கரத்தை பிரஷ்டை செய்யும் போது மந்திர ஆவாகனம் செய்வது மரபு. மந்திரம் என்பது சப்த்த வகைகளின் அலைவரிசையாகும். அந்த அலைவரிசைகளுக்கு ஏற்ற அதிர்வுகளை கொடுத்தால் தான் விரும்பியதை அடையலாம். குறிப்பிட்ட மந்திர ஆவகனத்துக்கு ஏற்றவாறு மந்திர அலைவரிசைகளை சில இலைகளால் தான் செய்ய முடியும். அதனால் தான் நமது முன்னோர்கள் இன்ன தெய்வத்துக்கு இன்ன இலை ஆகாது என சொன்னார்கள்
 
Last edited:

datchu

New Member
#8
* இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் நம் வாழ்வில் கலக்கங்கள் தீரும்.

* நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும்.

* நல்லெண்ணையில் விளக்கேற்றினால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

* விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் வியக்கும் அளவிற்கு புகழ் கூடும்.

* இலுப்பை எண்ணையில் விளக்கேற்றினால் ஆரோக் கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

* தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் தடைகள் அகலும்.

* பஞ்சினால் ஆன திரியில் தீபம் ஏற்றினால் வாழ்வில் நல்ல காரியங்கள் நடைபெறும்.

* தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் பாவங்கள் விலகும்.

* வாழைத்தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் வாரிசுகள் உருவாகு
 

datchu

New Member
#9
சித்ரா பவுர்ணமி விரத பலன்


சித்ரா பவுர்ணமியில் அவரவர் விருப்பப்படி விரதம் இருக்கலாம்.
அம்மன் கோவில்களில் வழிபாடு செய்து கல்கண்டு சாதம், பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதால் சந்திரனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஜாதகத்தில் சந்திர திரை நடப்பவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து வர சகல யோகங்களும் உண்டாகும்.

பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் சித்ரா பவுர்ணமி நாளில் வழக்கமாகச் செய்யும் அபிஷேகங்களுடன் மருக்கொழுந்து இலைகளால் அர்ச்சிப்பதும் புண்ணிய பலன்களைத் தரும்,
 
#10
கங்கா ஸ்நான மகிமை!


நம்நாட்டில் ஷேத்திரத்தின் தல புராணங்களில், "கங்கை காசிக்கு சமமானது அல்லது காசியை விட உகந்தது" என்றே இருக்கும். இப்படி ஒரு ஷேத்திரத்தை மற்ற எந்த ஷேத்திரத்தோடும் ஒப்பிடாமல் காசியுடன் ஒப்பிட்டிருப்பதால், காசிதான், "ஷேத்திர ராஜா" என்று தெரிகிறது.


இதேபோல் எங்கே ஸ்நானம் செய்தாலும், "இது கங்கையைப் போல் புனிதமானது அல்லது கங்கையை விட விஷேசமானது" என்று சொல்வர். இதிலிருந்து, கங்கா ஸ்நானம்தான் ஸ்நானங்களிலேயே தலை சிறந்தது என்பது விளங்கும்.


"எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் செய்து, துளியாவது கங்கா தீர்த்தத்தை குடித்து, ஒரு தடவையாவது கிருஷ்ணருக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ, அவனுக்கு எமனிடம் விவகாரம் ஒன்றும் இல்லை..."என்று பஜகோவிந்தத்தில் சொல்கிறார் ஆதிசங்கரர். இந்த பஜகோவிந்த ஸ்லோகத்தின்படி கீதை, கங்கை, கிருஷணர் எமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி சம்பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள், "எம தீபம்" ஏற்றுகின்றனர்; தீபாவளியன்று எமனுக்கு தர்ப்பணமும் செய்ய வேண்டும்!
 
#11
குபேர பூஜையின் சிறப்பு!


தீபாவளி அன்றோ, அதற்கு மறுநாளோ, குபேர பூஜை நடத்த ஏற்ற நாட்கள். இந்த இனிய நாளில் குபேரனை வணங்கினால், செல்வ சிறப்பு தங்கியிருக்கும் என்பது ஐதீகம். உழைப்பவனை நோக்கியே குபேரன் அடியெடுத்து வைக்கிறான்.


குபேரனின் இரண்டு பக்கங்களிலும் சங்கநிதி, பதுமநிதி என்ற தெய்வங்கள் இருக்கின்றனர். இவர்கள் மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இருவர். இவர்கள் இருவரிடமும் ஏராளமான பொருட் செல்வம் இருக்கிறது. தன் பொருட்களை இவர்களிடம் ஒப்படைத்து வைத்திருக்கிறார் குபேரன். குபேரனை வணங்கும்போது இந்த சக்திகளையும் வணங்க வேண்டும்.


ராவணனின் சகோதரர் குபேரன். மிகச் சிறந்த சிவபக்தர். இதன் காரணமாகவே, குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக நியமித்து, குபேர பட்டணம் என்ற நகரையும் அமைத்துக் கொடுத்தார் சிவபெருமான். இந்த நகரில் உள்ள அழகாபுரம் என்ற அரண்மனை மண்டபத்தில் தாமரைப்பூ, பஞ்சு மெத்தை ஆகியவற்றின் மீது மீனாசனத்தில் அமர்ந்தார் குபேரன். ஒரு கை அபய முத்திரை காட்டி இருக்கும். கஷ்டப்படும் காலத்தில் கொடுத்து உதவுவதே அபய முத்திரையின் தத்துவம்.


குபேரனின் தலையில் தங்கக் கிரீடம் சூட்டப்பட்டிருக்கும். முத்துக்குடையின் கீழ் இவர் அமர்ந்திருப்பார். சங்க நிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். வலம்புரி சங்கு செல்வத்தின் அடையாளம், பதும நிதியின் கையில் தாமரை மலர் இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும், செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே குபேர பூஜையின் முக்கிய சிறப்பு.
 
#12
பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?

கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன
என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு

தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும்
அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான்
தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.

குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில்
பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப்
பலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.

நிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில்
எந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே
கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.
3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை
என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை
என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
Last edited:
#13
ஆன்மிக கேள்விகள், எட்டும் பதில்கள்!

1. இந்தியில் துளசிதாஸர் எழுதிய ராமாயணத்தின் பெயர்?

ராமசரித மானஸ்

2. ராமன் உதித்த ரகு குலத்தின் குரு யார்?

வசிஷ்டர்

3. சீதையை சந்திக்க ராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்றவர் யார்?

விஸ்வாமித்திரர்

4. இராமனுக்கு சீதையும், லட்சுமணனுக்கு ஊர்மிளையும் போல் பரதன், சத்ருக்னரின் மனைவி பெயர் என்ன?

பரதனுக்கு மாண்டவியும், சத்ருக்னனுக்கு சுருதகீர்த்தியும் மனைவியாக அமைந்தனர்.

5. இராவணனின் தம்பிகளில் மூத்தவன் யார்?

கும்பகர்ணன்

6. அக்ஷய குமாரன் என்பவன் யார்?

இராவணனின் இரண்டாவது மகன்

7. இராவணனின் அழிவுக்குக் காரணமாக அமைந்தவள் யார்?

அவன் சகோதரி சூர்ப்பனகை

8. சீதைக்கு அசோகவனத்தில் உதவி செய்த அரக்கி யார்?

விபீஷணனின் மகளான திரிசடை
 
Last edited:
#14
ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் அரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை

மனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த
பலவித ஒலிகளை பயன் படுத்துவான். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும்
குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள்.

பக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த அரஹரா கோஷம் செய்யப்படுகிறது.

கோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.

ஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது
தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக
சேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.
 
#15
யாருக்கு மீண்டும் மறுபிறவி கிடையாது…?


மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..


பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.


தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.
 
#16
மாதா,பிதா,குரு தெய்வம்! எப்படி...?

கைகளை கூப்பி வணக்கம் வைப்பது தீண்டாமையின் இன்னொறு வடிவம் என சில அறிஞர்கள் குறிப்பிடுவதை சுட்டிக் காட்டி அது தவறுதலான கருத்து என்று நாம் விளக்கி
இருந்தோம்

அதை படித்த பலர் பாராட்டுக்களை தெரிவித்தனர் அந்தப் பாராட்டு மொழிகளுக்கு நடுவில் தாய் தந்தை மற்றும் குருமாரை வணங்குவது கூட ஒருவித அடிமையுணர்ச்சிஅது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுப்படுகிறது அது உண்மையா இல்லையென்றால் அதன் நிஜப் பொருளென்ன? என்றெல்லாம் சிலர் கேட்டிருந்தனர் அவர்களுக்காக இந்தப்பதிவு

அம்மா நம்மை கருவில் சுமப்பதாக சொல்கிறார்கள். இந்த கரு சுமையை எல்லா பெண்களும் பெருமையாக பேசி கொள்கிறார்கள்.

பிள்ளையை சுமப்பதில் உள்ள சிரமத்தால் அன்னை புனிதமானவள் என்று கருதப்படுகிறாள்.

உண்மையில் நம் பிறப்பிற்கு அம்மா மட்டுமா காரணம்?

அப்பாவுக்கு அதில் பங்கே இல்லையா?

அப்படி சொல்லி விட முடியாது.

கருவறைக்கு வருவதற்கு முன்னால் அப்பாவின் அடிவயிற்றில் தான் நாம்
இருந்தோம். அவர் மட்டும் வீரியமிக்கதாக நம்மை வைத்து கொள்ளவில்லையென்றால் எத்தனையோ கோடி அனுக்களில் ஒன்றாக செத்து மடிந்து இருப்போம்.

ஆகவே நமது பிறப்பில் அப்பாவும், அம்மாவும் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள்.

உடலை தந்து அது வளர உயிரை தந்து, அளப்பெரிய ஆற்றலை தந்து வளர்க்கும் அவர்கள் கண்ணுக்கு தெரியும் கடவுள் என்றால் மிகையில்லை.

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உடம்பு எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அறிவும் ஞானமும் ஆகும்.

நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? எதுவாக ஆவோம்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் தெளிவை தந்து வாழ்க்கையை வளப்படுத்துவர்

குரு.

எனவே அவரும் பார்க்கப்படும் பகவான் ஆகிறார்.

இவர்களை வணங்குவதும் கடவுளை வணங்குவதும் ஒன்று தான் என நமது இந்து மதம் மட்டுமல்ல. உலகத்தில் உள்ள எல்லா மதமும் சொல்கிறது.
 
Last edited:
#17
புரட்டாதி மாத சிறப்புகள்

தனங்களையும் தானியங்களையும் அளிக்கக்கூடியது வர்ஷ ரிது. ஆறு ரிதுக்களில் முக்கியமான இந்த ரிதுவும் புரட்டாதி மாதத்தில்தான் வருகிறது. இம்மாதத்தில் விரதம் இருப்பது மிகச்சிறப்பு.

வேங்கடவனுக்குப் புரட்டாதியில்தான் பிரம்மோத்ஸவம். புனிதமான புரட்டாதி சனிக்கிழமைகளில் நெற்றியில் திருமண் இட்டு, திருமாலை வேண்டியபடியே, திருமாலுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவது வழக்கம்.

திருவேங்கடமுடையானின் திருநட்சத்திரம் – திருவோணம். மற்ற மாதங்களின் திருவோணத்தைவிட, புரட்டாதி திருவோணத்துக்கு முக்கியத்துவம் அதிகம். இந்நாளில்தானே தொண்டைமான் மன்னனுக்கு பெருமாள் காட்சியளித்தார்!

சனிக்கிழமை விரதத்தோடு, திருவோண நாளிலும் வீட்டிலேயே பெருமாள் விக்கிரகம் அல்லது படத்துக்கு சந்தன- குங்குமம் இட்டு, அட்சதை தூவி, நைவேத்தியம் படைத்து வழிபடலாம். வாய்ப்பிருந்தால் மாவிளக்கேற்றியும் வழிபடலாம்.

புரட்டாதி மகாளய அமாவாசையும் மகத்துவம் பெற்றது. முன்னோர்களை வழிபட வேண்டிய நாள்.

கருடாழ்வாரை வணங்குவதும் புரட்டாதியில் முக்கியத்துவம் பெறுகிறது. கல்வியும் ஞானமும் அருளப்படும்.

அமாவாசை அன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, தயிர்சாத நைவேத்தியம் செய்து வழிபடலாம். எளியவர்களுக்கு ஆடை தானம் செய்யலாம்.
 
#18
‘ஐ’ யை மீட்ட ஐயன்

பல தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்து என்ற முறையில் மறைந்து போய் விட்டன. உயிரெழுத்தில் ஒன்றான ‘ஐ’ என்ற எழுத்திற்கும் சீர்திருத்த எழுத்து முறையால் ஆபத்து வந்தது. அது போயிருந்தால் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 ல் இருந்து 11 ஆகி இருக்கும். ஆனால். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதற்கு புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

அமரர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக, எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்த நேரம், இது பற்றி பேச வாரியார் சுவாமிகள் முதல்வரை பார்க்கச் சென்றார். வாரியார் தம் அலுவலகத்திற்கு வந்ததை கேள்விப்பட்ட முதல்வர், வராண்டாவிற்கே ஓடோடி வந்தார். “சுவாமிகள் சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே” என்று சொன்னார்.

வாரியார் சுவாமிகள் சொன்னார்: “அப்பா! ஒரு ஆர்டர் போட்டு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தாயே. அதில் மறைந்து போன ஏனைய எழுத்துக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
ஆனால் ‘ஐ’ என்பது மிகப் பெரிய சிறப்பெழுத்து”

“ஐ என்பது தமிழில் ஒர் எழுத்து மட்டுமல்ல; ஓரெழுத்தொரு மொழி. அரசன், திருமகள், கடவுள் ….. என்று பலபொருள் ஒரு மொழி அது. ஒரு பாடல் சொல்கிறேன் கேள்:

“குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்”

இதில் தனிவேலை நிகழ்த்திடலும் என்பது தனிவேல் + ஐ நிகழ்த்திடலும் என்று பிரிந்து பொருள் தரும். தனிவேல் உடைய கடவுளாகிய முருகப் பெருமான் நிகழ்த்திடலும் என்று பொருள்.”

“இந்த ‘ஐ’ என்பதை நீ எடுத்து விட்டாயே!
இனி இதற்கு நான் என்ன பொருள் சொல்வது?” என்று கேட்டார்.

முதல்வர் எம்.ஜி.ஆர் உடனே ‘ஐ’ எழுத்து மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று மறு ஆணை போட்டார். அதனால் ‘ஐ’ என்ற எழுத்து தப்பியது. இதை மீட்டுக் கொண்டு வந்தவர் வாரியார் சுவாமிகள்.
 
#19
ஏகாதசி ஒரு சக்தியே!


விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, "ஏகாதசி' என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி அவள் உற்பத்தியான தினத்தில் உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப் பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார்.


விரத முறை:


ஏகாதசிக்கு முதல் நாளும், மறுநாள் துவாதசியன்றும் ஒரு வேளை மட்டுமே உண்டு, ஏகாதசியன்று நிர்ஜல ஏகாதசியாக அனுஷ்டிப்பது மிகவும் சிறந்தது. இவ்விதம் இருக்க முடியாதவர்கள் சாத்விகமான பானங்கள் பருகலாம். அதற்கு அடுத்த படியாகப் பழங்கள், பால் சாப்பிடலாம். அப்படியும் பசி தாங்காதவர்கள், ஒரு வேளை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, ஒரு வேளை பால், பழத்தோடு இருக்கலாம். அது தான் கடைசி அதமம்.
 
#20
இறைவன் கொடுத்த கொடை!

உலகம் அன்றும் இன்றும் அமைதிக்காகவே ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இறைமகன் இயேசு தனது சீடர்கள் வழியாக "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல (யோவான் 14:27)'' என்று தான் விரும்பி நமக்காக சிலுவை சாவை ஏற்கு முன் கூறினார்.

பின்பு தாம் உயிர்த்த பின்பும் தனது அன்பு சீடர்கள் குற்றப்பழி உணர்வில் அஞ்சியிருப்பதை அறிந்தவரான இயேசு அவர்களிடம் ""உங்களுக்கு அமைதி உரித்தாகுக (யோ 20:19)'' என்றார். ஏனெனில் இயேசுவை கைது செய்த நாள் முதல் சீடர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து போய் இயேசுவை விட்டு ஓடிப்போய் விட்டனர். காரணம், எங்கே தங்களையும் அடித்து இழுத்துக்கொண்டு போய் சிலுவையில் அறைந்து கொன்று விடுவார்களோ என்று அஞ்சி நடுங்கிப் போயிருந்தார்கள். குறிப்பாக யூதர்களான மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள், சதுசேயர்களுக்கு பயந்து அவர்களின் கண்ணில் படாமலிருக்க தொலைவிலுள்ள ஊர்களில் பூட்டிய அறைக்குள் பதுங்கியிருந்தார்கள்.

வெளித் தெரியாமல் அச்சம் கலந்த நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தபோதுதான் உயிர்த்த ஆண்டவர் திடீரென அவர்கள் முன் தோன்றினார். மூடிய அறைக்குள் தோன்றியதோடல்லாமல் அவர்களிடம் ""உங்களுக்கு அமைதி உரித்தாகுக'' என்று பேசவும் செய்தார். ""நான் பூதமோ, பேயோ அல்ல; என் கை கால்களை பாருங்கள். அதன் காயங்களை பாருங்கள். சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்ட இயேசு நானே; இப்போது உயிருடன் எழுப்பப் பெற்று உங்கள் முன் நிற்கிறேன்'' என்றார்.

மேலும் "தோமா' என்ற தோமையார் என்ற சீடர் நம்பாமலிருந்ததை கண்டுணர்ந்த இயேசு அவரிடம் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைக் காண்பித்து "உனது விரலை விட்டு சோதித்துப் பார்த்துக்கொள். ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார்.அப்போது தோமா ""நீரே என் ஆண்டவர்; நீரே என் கடவுள் என்று கண்ணீர் மல்க அறிக்கையிடுகின்றார். அதற்கு இயேசு மறுமொழியாக "நீ கண்டதால் நம்பினாய்; காணாமல் நம்புவோர் பேறு பெற்றோர் என்றார் (யோவான் 20:19-29)''.இந்த நிகழ்வின் மூலம் சீடர்களின் குற்றப் பழி உணர்வைப் போக்கி அவர்களின் பயத்தை நீக்கி விட்டு, "உங்களுக்காகவும் உலக மாந்தர் அனைவருக்காகவும் இறந்த நான் மீண்டும் உங்களோடும் உலக மாந்தர் அனைவரோடும் இணைந்து வாழ வந்துள்ளேன்'' என்று உறுதிபடக் கூறுகின்றார்.

"அஞ்சாதே! ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன் (எசா 43:5)'' என்று கூறுகின்ற ஆண்டவர் மேலும் ""நான் ஆண்டவர்; என்னையின்றி வேறு மீட்பர் இல்லை (எசா 43:11)'' என்று எசாயா இறைவாக்கினர் வழியாக நம்பிக்கை வார்த்தையை நமக்குள் விதைக்கின்றார்.

உயிர்த்த ஆண்டவர் தருகின்ற அமைதி உலகு சார்ந்த அமைதி அல்ல, போர்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, இயற்கை சீற்றங்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, நமது உள்ளம் சார்ந்த அமைதி. அதையே இறைவன் நமக்குக் கொடையாக வழங்குகின்றார்.
ஆண்டவர் கொடுத்த அமைதியின் மூலம் நமது வாழ்வை அச்சங்களற்றதாக ஐயங்களற்றதாக மாற்றி சந்தோஷம் அடைவோம்.